1933இல் வேலூர் போலீஸ் பயிற்சி மய்யத்தில்…

மார்ச் 01-15

காவல்துறை பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறும் போலீஸ்காரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆணையிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு பார்ப்பனர்கள் வலியுறுத்திய நிலையில் பார்ப்பனர்களைக் கண்டித்து தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்.

“போலீசுக்கு ஆள்களைச் சேர்த்து பயிற்சி கொடுத்துவரும் வேலூரில் உள்ள போலீஸ் சிப்பாய்களை அவர்களது மேல் அதிகாரி யானவர் எல்லா போலீஸ்காரர்களும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவேண்டும் என்று சொன்ன தற்காக உடனே இரண்டு  மேல்ஜாதிக்கார  போலீஸ்காரர்கள் ராஜினாமா செய்து விட்டார்கள், என்றும் இதைப்பற்றி சட்ட சபையில் கேள்விகேட்டு அந்த அதிகாரிமீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் ‘சுதேசமித்திரன்’ என்னும் ஒரு  தேசியப் பத்திரிகை 11.-03.-1933ந்தேதி தனது நிரூபர் பெயரால் ஒரு நீண்ட வியாசம் எழுதி இருக்கின்றது.

இந்தக் காரியம் ஒன்று சுதேசமித்திரனின் தேசியத்திற்கு விரோதமானதாக இருந்திருக்க வேண்டும், அல்லது பொது ஜனங்களுக்கே  இது ஒரு விரோதமான காரியமாய் இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ராணுவத்தை இந்த ஜனங்களைக் கொண்ட இந்திய மயமாக்கலாமா? என்பது தான் நமது கேள்வி. இதுசமயம்  வேலூர் போலீசார் வெட்டிசாதம் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேறியாய் இருக்கின்ற சமயமானதால் இரண்டு போலீஸ்காரர்கள் ராஜினாமாக் கொடுத்து விட்டதினால் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை. தவிரவும் இந்த சமயம் பழசு போனால் புதுசு தானாக வரக்கூடிய சமயமுமாகும். ஆனால் யுத்தத்துக்கு தயார் செய்யப்பட்ட ஒரு நெருக்கடியான சமயத்தில் இம் மாதிரியான ஒரு நிலைமை. அதாவது ஒரு யுத்தத்துக்கு போன இடத்தில் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு ராணுவ அதிகாரி அந்தப்படி உத்தரவு போட்ட உடன் இந்த இந்திய மயமாக்கிய போர்வீரர்கள் (வேலூரில் செய்தது போலவே) உடனே ராஜினாமாக் கொடுத்து விடுவார்களேயானால் யுத்தத்தின் தன்மை என்னவாய் முடியும் என்பதை சற்று இந்திய தேசியவாதிகளும், இந்திய சட்டசபை பிரதிநிதிகளும், தேசியப் பத்திராதி பர்களும் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

இந்தியன் என்பவனுக்கு ஒவ்வொரு வருணத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் சாப்பாட்டில் ருசி வேறு, சமையல் செய்வதில் பக்குவம் வேறு, சமையல் செய்வதற்கு சமையல்கரனுடைய ஜாதி வேறு, சமையல் செய்ய வேண்டிய இடம் வேறு சமைக்கப்பட வேண்டிய சாமான்கள் வேறு, சாப்பிடுவதற்கு இடம் வேறு என்று இப்படிப்பட்ட அநேகமான? வேறு வேறுகள் வேண்டுமானால் பிறகு இதற்குத் தகுந்த மனச்சாட்சிகளும் வேறு வேறு வேண்டுமானால் இதை விசாரித்து நடவடிக்கை நடத்தி நீதி செலுத்த சட்டசபை மெம்பர்களும் வேறு வேறு  வேண்டியிருக்கு மானால் இவை சாத்தியப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சாத்தியப்பட்டாலும் இந்த யோக்கியதை கொண்ட ராணுவத்தை யுடைய ஆட்சி உருப்படி ஆகுமா? என்று கேட்கின்றோம்.

ஒரு மனிதனுடன் கூட இருந்து உண்ணுவதால் தனது யோக்கியத்தை கெட்டுபோய் விடுகின்றதென்று ஒருவன் தனது உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடுவதும் இதை விசாரித்து இந்தப்படி உத்தரவு போட்ட மேலதிகாரியின் மேல் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தேசியப்பத்திரிக்கை எழுதுவது மானால் இந்த நாட்டுக்கு ஒரு சுயராஜ்யம் வேண்டுமா? அல்லது இந்த நாட்டை நான் கொல்லையில் நெருப்பு வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டு பாலைவனமாக ஆக்கிவிட வேண்டுமா? என்று தான் கேட்கின்றோம். அந்நிய ஆட்சி இருக்கும்போதே ஏற்கனவே இந்த நாட்டை ஜமீன்தாரர்களும், சோம்பேறி களான பார்ப்பனர்களுமே ஆளுகிறார்கள். இனி சுயாட்சி என்பது கிடைத்து தட்டிப் பேசவே ஆளில்லாத நிலையில் சாட்சிக்குக்கூட ஒரு அந்நியன் இங்கில்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடுமானால் இந்த நாட்டு உழைப்பாளி மக்களின் கதி, தாழ்த்தப்பட்ட மக்களின் கதி என்ன ஆவது என்பது தான் நமது கவலை. இந்த நாடு சமதர்ம நாடு ஆகவேண்டுமானால், இந்த நாட்டில் முதலாளிகளையும், மேல்ஜாதிக் காரர்கள் என்னும் சோம்பேறிகளையும் காப்பாற்றும், பாதுகாக்கும் அரசியலும், மற்றப் பாதுகாப்புகளும் அடியோடு அழிக்கப்பட வேண்டுமானால் ராணுவத்தை இந்திய மயமாக்குவது என்பது ஒருநாளும் கூடாத காரியமேயாகும். இந்திய மயமாக்க வேண்டும் என்று சொன்னவுடனே வகுப்புவாரி உரிமை வந்தே தீரும். ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு சிப்பாய் ராணுவ அதிகாரி ஏற்பட்டே தீரும். அதிலும் கூட இப்போதைய போலவே சூழ்ச்சிக் காரர்களும், தந்திரக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களும் அதிகமான எண்ணிக்கை ஸ்தானங்களை எப்படியாவது கைப்பற்றியே தீருவார்கள். இவர்கள் எப்பொழுதும் உழைப்பாளிகள் மேலும், பாட்டாளிகள்மேலும் சமதர்மத்துக்கு வாதாடுபவர்கள் மேலும் தான் இவர்களது துப்பாக்கியையும், மிஷின் பீரங்கிகளையும் திருப்புவார்களே ஒழிய ஒரு நாளும் ஏழைகளை வஞ்சித்து அவர்களது உழைப்பைக் கொள்ளை கொள்கிறவர்கள் மீதும் அவர்களை அடக்கி வைத்திருப்பவர்கள் மீதும் திருப்பவே மாட்டார்கள். ஆதலால் இந்த நிலையில் இந்தியா ஒரு நாளும் சமதர்ம நாடாக முடியவேமுடியாமல் போய்விடும்.

– தந்தை பெரியார், ‘குடிஅரசு’ 19.3.1933
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *