தந்தை பெரியாரின் தொலைநோக்கு – 10

மார்ச் 01-15

உருவம் பார்த்து பேசும் சாதனம்

“கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப் பட்டிருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும் படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும்’’ என்று அய்யா அவர்கள் இனிவரும் உலகம் நூலில் சொல்லுகின்றார்.

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிக் கொள்ளலாம்

வெளிநாட்டுக்குப் போய்தான் நாம் பேச வேண்டும் என்பதற்கு அவசியமே இல்லை. அதை மாற்றி அமைத்து விட்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஒருவருக்கொருவர் அந்தந்த நாடுகளில் இருந்தே பேசிக் கொள்ளக்கூடிய அளவில் அறிவியல் சாதனங்கள் வளர்ந்துவிட்டன.

இலண்டனில் இருக்கிறவர் அவர் அறையில் உட்கார்ந்து கொள்கிறார். சிங்கப்பூரில் இன்னொருவர் இருக்கிறார். இவர் இவருடைய அறையில் உட்கார்ந்து கொள்வார். அதே மாதிரி வாஷிங்டனில் இருக்கிறவர் அவருவடைய அறையில் உட்கார்ந்து கொள்கிறார். அதே மாதிரி நம்முடைய நாட்டில் _ டில்லியில் இருப்பவர் அவருடைய அறையில் உட்கார்ந்து கொள்கிறார். இப்படி நான்கு பேர், ஆறு பேர் அவரவர்களுடைய அறைகளில் உட்கார்ந்து பேசலாம். நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்று இவர் கேட்பார். இல்லைங்க. இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொல்லுவார். இவைகளை எல்லாம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் காணலாம்.

பணம் – நேரம் மிச்சம்

வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பணம் மிச்சம், நேரம் மிச்சம், அழைப்பு மிச்சம். இன்றைக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் வந்துவிட்டது என்று ஒரு பெரிய தத்துவமாகச் சொல்லுகின்றார்கள். அதே மாதிரி ஒரு வீடியோ மூலம் ஆசிரியர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். அதைப் பல டி.வி மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கேட்பார்கள்.

உணவு – ஒரு சிறு குப்பியில்…

அடுத்து அய்யா அவர்கள் சொல்லுகின்றார். “உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டு விடும்’’ என்று சொல்லுகின்றார்.

பைக்குள் மாத்திரைகள்

இந்த மாதிரி வந்துவிட்டால், இது ரொம்ப வசதிங்க. நாம் சாப்பிட இவ்வளவு தூரம் போக வேண்டுமே. அதுவும் சர்க்கரை நோய் இருந்தால் நேரத்திற்குச் சாப்பிட வேண்டுமே. நாம் வீட்டுக்குப் போய் சாப்பிட வேண்டு மானால் எத்துணை மணிக்கு மீட்டிங் முடியும்? இப்படி எல்லாம் நினைக்கின்றோம். இப்பொழுது அந்தப் பிரச்சனையே இல்லை. நம்முடைய பைக்குள் மாத்திரைகளை வைத்துக் கொண்டால் ஒரு பத்து பேருக்குச் சாப்பாடு கொடுக்கலாம்.

இது எப்படி _ வருமா? வெறும் மருந்து சாப்பிடுகிற மாதிரியா என்று கேட்டால் ஆமாம். இது ஏற்கெனவே வந்தாகி விட்டதே. விண்வெளிப் பயணம் போகிறவர் எல்லாம் என்ன நம்மூரில் புளிச் சோறுக் கட்டிக் கொண்டு போகிறார்களா? இல்லை எலுமிச்சம் பழம் சோறு கட்டிக் கொண்டு போகிறார்களா? நம்மாட்கள் எங்கே போனாலும் ஊறுகாய் கேட்பார்கள். ஊறுகாய், வடாம், அப்பளம் இருக்கிறதா என்று விண்வெளியில் செல்கிறவர்கள் கேட்கிறார்களா? பார்ப்பனர்கள் போஜனப் பிரியர்கள். அவர்களுக்கு வேலையே கிடையாது.

இன்னும் கி.மு. புத்தி போகவில்லையே

அதைவிட, நம்முடைய பெண்களின் நிலையை எடுத்துக் கொண்டு பாருங்கள். நம்முடைய பெண்களுக்கு மாவாட்டுவது குறைந்திருக்கிறது. மிக்சி வந்துவிட்டது. இன்னும் சில பேர் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் அம்மியில் அரைக்கிறமாதிரி டேஸ்ட் வராதுங்க. ஏனென்றால் கி.மு. புத்தி அது. அம்மியில் அரைக்கிற மாதிரி டேஸ்ட் வேண்டுமாம். அதே மாதிரி மிளகாயோ, மல்லியோ உலக்கையில் இடித்து வைத்தால்தான் நல்ல டேஸ்ட்டாக இருக்குமாம். பெண்களுக்கு இது எவ்வளவு சங்கடம்? ஆகவேதான் அய்யா அவர்கள் இதைப்பற்றி ரொம்ப அழகாக சொல்லியிருக்கின்றார்.

மிகப் பெரிய பாடப் புத்தகம்

இன்றைக்குப் போர்க் களத்திற்கு இராணுவ வீரர்கள் போகிறார்கள். அவர்கள் எல்லாம் பைக்குள் உணவை வைத்துக்கொண்டால் தீர்ந்து போய்விட்டது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் எல்லாம் உணவில் எப்படி மாறுதல்கள் வரும் என்று இப்பொழுது எழுதுகிறாக்ள். இந்த மாதிரி கருத்துக்களை அய்யா அவர்கள் 55 வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கின்றார்கள். ஆகவே, தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது புது உலகத்தை நோக்கிப் போகக்கூடிய சிந்தனை. பெரியாரியல்தான் புது உலகத்தினுடைய மிகப் பெரிய பாடப் புத்தகமாக அமையப் போகிறது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

கணினி வந்தால் வேலையிழப்பு வராது! அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும்!

வங்கிகளில் கணினியைக் கொண்டு வந்தார்கள். 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாகக் கணினியை வங்கிகளில் புகுத்தினார்கள். உடனே கம்யூனிஸ்டு நண்பர்கள், முற்போக்குச் சிந்தனையுள்ள நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கணினி வந்தால் பல பேருக்கு வேலை போய்விடும். ஆகவே இதனை எதிர்க்க வேண்டும் என்று எழுதினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், என்னை அழைத்து, உடனே நீங்கள் விடுதலையில் எழுதுங்கள்; கணினியை எதிர்க்கக் கூடாது; கணினி வந்தால் வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். அது தவறு; அது வந்தால்தான் வேலைவாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதுங்கள் என்று சொன்னார்.

ஆனால், இன்றைக்குக் கணினிதானே உலகத்தில், எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறது.

ஆகவே, பெரியாருடைய தொலை நோக்கு என்பதிருக்கிறதே, அது வெறும் அறிவின் கூர்மையைக் காட்டுவதற்காக அல்ல; சமுதாயத்தை முன்னேற்றப் பாதையிலே கொண்டு வருதல்வேண்டும்; சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவரும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற மிகப் பெரிய தொலைநோக்கு ஏற்பாடுகளாகும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *