(இயக்க வரலாறான தன்வரலாறு – 197)

மார்ச் 01-15

குட்டிமணி, ஜெகன்  தூக்குத் தண்டனையை எதிர்த்து
தி.க., தி.மு.க. கண்டனக் கூட்டங்கள்!

24.08.1982 அன்று சென்னை மயிலை கபாலீஸ்வரர் “கோயில் முன் நடந்த வேண்டுகோள் அறப்போரின்போது நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

இந்தப்பிறவி இழிவை ஒழிக்கத்தானே தந்தை பெரியார் கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் போராடினார். உலகிலேயே எந்த நாட்டிலாவது பிறக்கும்பொழுதே இழி மக்களாய்ப் பிறக்கின்றனரா? இந்து மதம் பிறந்த இந்த நாட்டில்தானே இந்தப் பிறவி இழிவு.

உலகிலேயே இந்த நாட்டில்தானே உழைக்காதவன் உயர்சாதி, உழைக்கின்றவன் கீழ்சாதி!

தமிழனுடைய ஒவ்வொரு உரிமையும் போராடித்தானே பெறப்பட்டு இருக்கிறது. அன்று வைக்கம் வீதிகளிலே நடக்க உரிமையைப் போராடி வாங்கிக் கொடுத்தார் தந்தை பெரியார்.

“உண்டிச் சாலைகளிலே பார்ப்பனர்க்கு ஒரு இடம், இதராளுக்கு வேறொரு இடம்’’ என்று இருந்ததே, அதனை எதிர்த்துப் போராடியவரும் தந்தை பெரியார்தான்!

படித்த வக்கீல்களுக்கிடையேகூட வேற்றுமை இருந்தது. அண்மைக்காலம் வரை வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் (ஙிணீக்ஷீ கிssஷீநீவீணீtவீஷீஸீ)கூட பார்ப்பானுக்கு என்று தனித் தண்ணீர்ப் பானை இருந்ததுண்டு. இவை எல்லாம் மாற்றப் பெற்றது எப்படி? தந்தை பெரியார் போராட்டத்தால்தானே! உழைப்பால்தானே!

தோழர்களே! நம்முடைய உரிமை ஒவ்வொன்றும் போராடிப் பெறப்பட்டவை தானே தவிர உயர்சாதிப் பார்ப்பனரின் காருண்யத்தாலோ, மனமாற்றத்தாலே அல்ல! அல்ல!

அன்றைக்கு நடக்க உரிமை, கற்க உரிமை, உத்தியோக உரிமைகளுக்கு எப்படி போராடினோமோ, அதுபோலவேதான் இன்றைக்குப் பார்ப்பானுக்கு கோயில் கருவறைக்குள் நுழைய இருக்கும் உரிமை நமக்கும் வேண்டும் என்று போராடுகிறோம் என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை தந்தை பெரியார் அவர்கள் வென்று எடுத்த செய்திகளையே அன்று விளக்கிப் பேசினேன். இறுதியாக மாவட்டத் தலைவர் திரு.எம்.கே.காளத்தி நன்றியுரை ஆற்றினார்.

மம்சாபுரம் சம்பவத்திற்குப் பிறகு எனது உடல்நிலை முழு அளவுக்கு _ பழைய நிலைக்கு  நல்ல வண்ணம் இன்னமும் தேறவில்லை என்பதை விளக்கி கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘விடுதலை’யில் 27.08.1982 அன்று முக்கியத் தகவல்களைத் தெரிவித்து இருந்தேன்.

28.08.1982 அன்று “ஆதிசங்கரர் சிலை விவகாரம் பார்ப்பனச் சூழ்ச்சியே!’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டு அதில், “திருச்சி திருவாணைக்காவல் கோயிலுக்குள் ஆதிசங்கரர் என்ற சங்கராச்சாரியார் சிலையை வைத்துவிட, காஞ்சி சங்கராச்சாரியார் சில வாரங்களுக்கு முன்பு பெருத்த முயற்சி செய்ய அங்கே உள்ள தமிழர்களான சைவ பக்தர்கள் _ இது முறைகேடு. இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று மறுத்து தங்களது பலத்த எதிர்ப்பினைக் கிளப்பியதும் அவர்கள் அந்நேரத்தில் அம்முயற்சியை விட்டுவிட்டு இப்போது மீண்டும் அதில் குறியாய் இருப்பதாகத் தெரிகிறது என்பதை பார்ப்பனர் புரட்டு எப்படிப்பட்ட இமாலயப் புரட்டு என்பது இந்த ஒன்றின்மூலமே உணர்வுள்ள தமிழர்களுக்கும் உண்மையான சைவர்களுக்கும்  நன்றாக விளங்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டேன்.
இலங்கையில் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ்வீர இளைஞர்கள் குட்டிமணி, ஜெகன் ஆகியோர் தூக்கிலிடுவதைக் கண்டித்து, 28.08.1982 அன்று தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம், தி.மு.க. கழகத் தோழர்கள் கறுப்புச் சின்னம் அணிந்து கண்டனக் கூட்டங்களை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நானும் தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் கலந்துகொண்டோம். கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “தமிழ் இளைஞர் களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை அவர்கள் தந்த வாக்கு மூலத்திலிருந்து எடுத்துக்காட்டி உரையாற்றினேன். தன்னலமற்ற தியாகத்திற்கு அற்பணித்துக் கொண்டிருக்கும் அந்த வீரம்மிக்க இளைஞர்களைப் போல நமது இளைஞர்களும் உணர்வுபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.’’

கலைஞர் பேசுகையில், “இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் உச்சகட்டமாக குட்டிமணி, ஜெகன் ஆகிய இரண்டு வாலிபர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காட்டு மிராண்டிக் காலத்திற்கு முன்பு நடக்காத அளவுக்கு சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம், சென்னை புரசையில் உள்ள மாணிக்கம் (செட்டித்) தெருவில் நடைபெற்றது. ஆர்.டி.சீத்தாபதி எம்.எல்.சி., தலைமையில் நடைபெற்றது. கழகத் தோழர்கள், திமுக தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

30.08.1982 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் நூற்றாண்டு விழா பெரியார் திடலில் சிறப்போடு நடைபெற்றது! விழாவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன் அனைவரையும் வரவேற்று எழுச்சிமிகு உரையாற்றினார். திரு.வி.க. அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் சில பிரச்சினைகளில் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், அது கருத்துப் போர்களாகவே நடந்ததே தவிர தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த நண்பர்களாக விளங்கினர் என்பதை எடுத்துக்காட்டி _ அப்படிப்பட்ட ஒற்றுமை தமிழர்களிடையே வளர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார். கோயில்களில் அவரவர் தாய்மொழிகளில் வழிபாடு நடத்த வேண்டும் என்று திரு.வி.க. அவர்கள் வலியுறுத்திய கருத்தை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று கலைஞர் கேட்டுக் கொண்டார்.

விழாவில் நான் உரையாற்றும்போது, திராவிடர் கழகம் திரு.வி.க. அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறது என்று சொன்னால், உரிமையோடு அதைச் செய்கிறது. அதற்கு முழுமுதற் காரணம் என்ன என்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்பதை இந்தியன் யூனியன் முஸ்லீக் தலைவர் அப்துல் சமது அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

“சுயமரியாதை இயக்கம் பிறந்தது என்று சொன்னால் அதற்குத் தாயாக நான் இருந்தேன். தந்தை பெரியார் அவர்கள் தந்தையாக இருந்தார்கள்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு _ அது தந்தை பெரியார் வீட்டிலேயே வளரக்கூடிய பிள்ளையாக சுயமரியாதை இயக்கம் இருந்தது என்று சுட்டிக் காட்டியதை இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

“பெரியாருக்கும் எனக்கும் உள்ள நட்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, அது 35 வருடங்களுக்கு மேற்பட்டது. ‘வைக்கம் வீரர்’ என்பதை இந்த அடியேன் கைப்பேனாதான் சூட்டியது ‘திருவாங்கூரில் தீண்டாமையை ஒழிக்க மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்ற பெரியாருக்கே அந்தப் பெருமை. ஆனால், அந்தப் பெருமை யாருக்குப் போயிற்று.’’

எவ்வளவு அருமையான வரலாற்று வரிகளில் நீண்ட காலத்திற்கு முன்னாலே நடந்த இருட்டடிப்புகள் இதை திரு.வி.க. அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.

“பெரியாரது வீரத்தியாகம் எனது வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. எனக்கு பெண்டு பிள்ளைகள் இல்லை. நான் செத்துப்போனால் எனக்காக அழுகின்ற ஒரு நண்பர் இருந்தால் அவர் பெரியார் இராமசாமியாகத்தான் இருக்க முடியும்’’ என்று திரு.வி.க. அவர்கள் அந்தக் கூட்டத்தில் சொன்னார்கள்.

“நாயக்கர் சுமயரியாதை’’ எனது தன்மான இயக்கத்திலிருந்து பிறந்தது. அதற்கும் இதற்கும் தொன்னூறு பங்கு ஒற்றுமை, பத்து பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாததும் எங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணம். நாயக்கரின் இயற்கை ஜஸ்டிஸ் கட்சியில் பங்குகொள்ளச் செய்யவில்லை’’ என்று திரு.வி.க. கூறியவற்றை எடுத்துக்கூறி திரு.வி.க.வுக்கும் தந்தை பெரியாருக்கும் உள்ள கருத்து ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் நூற்றாண்டு விழாவில் எடுத்துக் கூறினேன்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ராமநாதன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். திரு.வி.க.வுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் இருந்த நட்பு உணர்வையும் பேராசிரியர் படம் பிடித்துக் காட்டினார். “திரு.வி.க.வின் தொண்டுக்கு நானே சான்றாக இருக்கிறேன்’’ என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் திரு.வி.க. அவர்களாலேயே தனக்கு நல்ல மொழி அறிந்துகொள்ளும் ஆற்றல் வளர்ந்தது என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து (கம்யூனிஸ்ட் கட்சி) நாகை முருகேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரு.வி.க. கருத்துகள் பாடநூலில் இடம்பெற வேண்டும் என்று ஏ.கே.ஏ.அப்துல் சமது எம்.பி. அவர்களும் கேட்டுக் கொண்டார்கள். பொதுமக்கள் உள்ளிட்ட தி.க., திமுக தோழர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

“இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே நீடிக்கும்; இந்தி அவர்களது விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட மாட்டாது’’ என்பது அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்கள் தந்த வாக்குறுதிகள்தான். இந்தி திணிப்பு எதிர்ப்பு தென்நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏற்படும்போதெல்லாம் வடபுலத்திலுள்ள காங்கிரஸ்காரர்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளோர் அத்தனைப் பேரும் கூறுவது வாடிக்கை.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்  தொலைக்காட்சியில் ஏற்கனவே இருந்த தமிழ் நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னுக்கோ பின்னுக்கோ தள்ளி ஒன்றரை மணி நேரம் இந்தி நிகழ்ச்சி காட்டிடும் ஏற்பாட்டினை அதுவும் டெலிவிஷன் வைத்துள்ளவர்கள் கொஞ்சம் ஓய்வுடன் நிம்மதியுடன் எப்போது பார்ப்பார்களோ அந்த நேரத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்ற ஒரு(காரணத்தை)

க் கூற வைத்து ஒளிபரப்புவதை தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தொலைக்காட்சியில் செய்யப்படும் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 15இல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதனை 04.09.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டத்திற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அனைத்து தமிழ்ப் பெருமக்களும் இதில் சாதி, சமய, கட்சிக் கண்ணோட்டமின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்நாட்டுத் தலைநகர மக்களை மிகுந்த வணக்கத்துடன் வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

06.09.1982 அன்று குடியரசுத் தலைவராக ஜெயில்சிங் அவர்கள் பொறுப்பை ஏற்றதிற்கு நாம் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தோம். அதற்கு நன்றிக் கடிதம் திரு.ஜெயில்சிங் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். அதில், “தங்களுடைய நல்வாழ்த்து, நாடு எனக்குத் தந்துள்ள கடமைகளை நம்பிக்கையோடு நான் நிறைவேற்றுவதற்கு உதவிடும் என்று நம்புகிறேன். வாழ்த்துகளுடன் ‘ஜெயில்சிங்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07.09.1982 அன்று திருச்சி ‘பெல்’ பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அய்யா_அண்ணா அவர்கள் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் பெரியார் நகரின் ‘பெல்’ ஊரக மனமகிழ் மன்றத்தில் மானமிகு கோ.ராசு அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் “சமுதாய நீதி’’ என்ற தலைப்பில் ஜக்பால் சிங் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டதாவது: “தமிழ்நாட்டில் சமுதாய நீதிக்காக உரிமைக் குரல் கொடுக்கும் தலைவர் வீரமணி’’ என்று குறிப்பிட்டுப் பேசினார். மக்கள் மனிதர்களாக வாழத் துவங்கியது தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் தோன்றிய பின்னால்தான், இந்த இரண்டு பேருக்கும் என்றும் நாம் நன்றி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

நான் மிகப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய தலைவர் வீரமணி, திராவிடர் கழகம் இவற்றின் மூலமாக இந்த நாட்டிலே ஒரு சமுதாய, பொருளாதார புரட்சியைப் படைக்க முடியும். வேறு யாராலும் படைக்க முடியாது. நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று  திராவிடர் கழகம் என்பது ஒரு அரசியலிலே தேர்தலிலே பங்கு வகிக்கிற இயக்கமாக  இல்லாமல் இருக்கின்றது என்ற வகையிலும் நான் திராவிடர் கழகத்தை நினைத்துப் பெருமைப்படுகின்றேன். இந்த நாட்டிலே ஒரு சமுதாய, பொருளாதாரப் புரட்சியை உருவாக்க வேண்டும், சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதிலே உண்மையான ஈடுபாடு கிடையாது. மாறாக இங்கே இருக்கின்ற மிகத் தெளிந்த வீரர், உறுதியான வீரர் வீரமணி அவர்களுக்கு மட்டுமே உண்மையான அந்த ஈடுபாடு இருக்கின்றது.

எனவே, நாட்டிலே இருக்கின்ற ஒரே தலைவர் வீரமணி என்று கூறிக்கொள்வதிலே நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறினார்கள். விழாவில், ஏராளமான கழகத் தோழர்கள், அரசு ஊழியர்கள், ‘பெல்’ நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அடைவதாக இருந்தது.

விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினேன். அப்போது அன்போடு, அடக்கத்தோடு, ஆனால் உறுதியோடு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாறுதல் என்பதை நீங்கள் யாரும் தடுத்துவிட முடியாது. அந்த மாறுதல் வரத்தான் செய்யும். எவ்வளவு விரைவிலே வரும் என்பதற்கு அடையாளம்தான் _ விரைவிலே வந்திருக்கிற அந்த நாடாளுமன்றக் குழு என்பதை நீங்கள் அருள்கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடப் பாரம்பரியம் என்று பேசக்கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. அய்யா, அண்ணா பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கின்ற ஒருவர் முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கின்றவர் _ அவர் என்ன பேசுகின்றார்? இந்தத் தத்துவத்திற்கு நேர் எதிரிடையான தத்துவத்தைப் பேசுகின்றார்.

இந்த இடஒதுக்கீடு சமூகநீதிக்கு, சமூகநீதி தத்துவத்திற்கே விரோதமாகப் பேசுகின்றார். நாம் இப்போது எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். மத்திய அரசோடு போராடுவதா? அல்லது மாநில அரசோடு போராடுவதா? எவ்வளவு சிக்கலான நிலை தமிழனுக்கு?

தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது என்று சந்திரஜித் யாதவ் பேசுகிறார், ஜக்பால் சிங், காஷ்யப் பேசுகிறார். இன்னும் பீகாரிலே இருக்கிற டி.பி.யாதவ் மற்றும் பலபேர் பேசுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே அண்மைக் காலத்திலே வகுப்புரிமை பற்றி ஏற்பட்ட நிலை என்ன? எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமஉரிமைப் பிரச்சினை என்று வரும்பொழுது தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அவர்களுக்குரிய பங்கை அனுபவிக்க விடவேண்டாமா?

என்ன சொல்கிறார், “சமபந்தி’’ போஜனத்துக்குப் பேசுகிறார். சமபந்தி போஜனமே அவர்களை சமத்துவம் உண்டாக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் நாடகம்.

அந்த ஒருநாள் நாடகத்தையாவது ஒழுங்காக நடிக்க வேண்டாமா? அங்கே போய் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இடஒதுக்கீடே இருக்கக் கூடாது. ரிசர்வ் தொகுதியே இருக்கக் கூடாது என்பதுதான் என் சொந்தக் கருத்து என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று விடுகிறேன்’’ என்று சொல்கிறார்.

இப்படியெல்லாம் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் பேசியதை எடுத்துக்காட்டி விளக்கி உரையாற்றினேன். 08.09.1982 திருக்கடையூரில் நடைபெற்ற கலைமதி_ நாகநாதன், மாதவி_பன்னீர்செல்வம், அறிவுக்கொடி_குஞ்சுமணி ஆகிய மூன்று வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை நிறைவேற்றி வைத்து உரையாற்றினேன்.

அய்யா இல்லை என்றால் இந்தத் தன்மான திருமண அமைப்பு நமக்கு கிடைத்திருக்காது. நாமெல்லாம் அடிமைகளாகத் இருந்திருப்போம். நாமெல்லாம் மானத்தை அடகு வைத்தவர்களாகத்தான் மணவிழாவிலே இருந்திருப்போம். அய்யா அவர்கள் உருவாக்கித் தந்ததின் விளைவாகத்தான் இந்த மணவிழா இவ்வுளவு எளிமையாக நடைபெறுகிறது என்று கூறிவிட்டு மணமக்களை வாழ்த்தினோம். முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் சட்ட வடிவம் தந்தார்.

இன்னும் சிறப்பான மகிழ்ச்சி என்னவென்றால் மூன்று திருமணங்கள் இங்கே நடைபெற்றதுதான். நான் மேட்டூரில் குறிப்பிட்டேன். நாம் கழகக் குடும்பங்க ளெல்லாம் ஒன்று என்பதால் சிக்கனத்தைக் கருதி பத்துப் பதினைந்து திருமணங்களை ஒன்றாக வைத்து, அதை “திருமண மாநாடு’’ என்றே நடத்தினால் திருமணத்திற்கும், திருமண மாநாட்டுக்கும் ஆகும் செலவு சிக்கனமாக அமையும் என்று சொன்னேன்.

அந்த அளவுக்குச் சிந்திக்கா விட்டாலும், இங்கே மூன்று திருமணங்களை நடத்துகிறார்கள் என்று சொல்லும்போது, இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறினேன். வந்திருந்த அனைவரையும் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று உரையாற்றினார். மணவிழாவைப் பாராட்டியும் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியும் திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, மயிலாடுதுறை டாக்டர் ஆர்.பாலு எம்.பி.பி.எஸ்., மயிலாடுதுறை என்.வடிவேலு, தஞ்சை மாவட்ட திமுக துணை செயலாளர் மோகன்தாஸ், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

09.09.1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் “மகராஜன் குழு’’ என்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகமங்கள் தடையா என்பதை ஆராய்ந்து அறிக்கை தந்த குழுத் தலைவரான மகராஜன் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். கழகத்தின் சார்பில் அனுதாபத்தையும் தெரிவித்துத் திரும்பினேன்.

பெரியகுளத்தில் வெற்றிபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் அவர்களது திடீர் மறைவு காரணமாக அத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை அடுத்து “பெரியகுளம் தேர்தலும் திராவிடர் கழக ஆதரவும்!’’ என்ற தலைப்பில் திமுகவை ஆதரித்தும், தமிழ்நாட்டின் நலன் காக்கும் திமுகவை வெற்றிபெறச் செய்வது ஒவ்வொரு உண்மைத் தமிழரின் உயிர்க் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

10.09.1982இல் காமராஜ்_சுசாதா, அன்பரசன்_எஸ்.வளர்மதி, வி.சுப்ரமணி_எம்.வளர்மதி ஆகியோரின் மணவிழா வ.ஆற்காடு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கே.கே.சின்னராசு இல்லத்தில் என்னுடைய தலைமையில் சிறப்புற நடந்தது.

கவிஞர் குடியரசு, கவிஞர் பொன்னடியான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கே.சின்னராசு, எம்.கே.எஸ்.மணி, மாநில மகளிர் அணித் தலைவி க.பார்வதி ஆகியோர் வாழ்த்துரைக்குப் பின் குயில்தாசன் நன்றி கூறினார். வ.ஆற்காடு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.டி.கோபால் பேசுகையில், தந்தை பெரியார் வழிநின்று பிற்படுத்தப்பட்டவர் களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், தினமும் பலநூறு மைல்கள் கடந்து இரவு பகலாக உழைத்து வருபவர் நம் கழகப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டார்கள்.

மணவிழாவில் நான் உரையாற்றும்போது சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனர்கள் வந்து நடத்தும்போது என்னென்ன சடங்குகள் இருக்குமோ அந்த சடங்குகள் எல்லாம் இடம்பெற்று பின்னர் சடங்குகள் மட்டும் இருந்து பார்ப்பனர்கள் இடம்மாற்றம் செய்து இருந்தனர். அதையும் அய்யா அவர்கள் படிப்படியாக வரட்டும் என்று அனுமதித்து அவர்களிடமே தேவையற்ற முட்டாள்தனமான செய்கைகளை விளக்கி திருத்தச் செய்திருக்கிறார்.

எனவே, அப்படிப்பட்ட காலங்களைக் கடந்து இன்று தோழர் சின்னராசு அவர்கள் நாங்கள் வரவேண்டும் என்று நினைத்தார். எது வசதியான நாள் என்று கேட்டார்கள். நான் இந்த நாளை வசதி என்று கூற, அவர்களுக்கு காலம் குறுகியிருந்தாலும் ஏற்றுக் கொண்டார்கள். நமக்கெல்லாம் வசதியான நாளை ஏற்றுக்கொண்டு மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கும் வகையில், கெட்ட நேரம் என்று கருதும் ‘ராகு காலத்தில்’ நடைபெறுவதாகும்.

மற்றொரு சிறப்பு _ இங்கு மூன்று மணவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உரையாற்றினேன். விழாவில் மக்கள் பெருமளவிற்கு கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் _ “அரசு வழக்குரைஞராக’’ப் பணியாற்றிய திரு.ஜி.வெங்கடசாமி அவர்களை எம்.ஜி.ஆர் அரசு எவ்விதக் காரணமும் இன்றி திடீரென அப்பதவியிலிருந்து விலக்கியுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிக்கும் கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

இதனை நான் கண்டித்து 26.09.1982 அன்று “எம்.ஜி.ஆர் ஆட்சி _ அரசாங்கப் பிளீடரை நீக்கியது நியாயமா?’’ என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

49 வயதான திரு.ஜி.வெங்கடசாமி அவர்கள், “கவர்மென்ட் பிளீடர்’’ பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதாவது தக்க நியாயமான காரணம் கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதுகுறித்து (22.9.1982) ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளியிட்டுள்ள செய்தி மூலமே இத்தகவல் வெளியானது!

கவர்மெண்ட் பிளீடரையே பதவி விலக்கம் செய்து உத்தரவிட்ட அப்பதவியின் கவுரவத்தையும் மரியாதையையும் குறைக்கும் தமிழின விரோதப் போக்கினையே தனது ஆட்சியின் லட்சியமாக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

“தமிழினமே, உன் கதி இப்படியா ஆக வேண்டும்?’’ என்று கேள்வியை எழுப்பி, அந்த அறிக்கையில் கண்டனத்தைத் தெரிவித்தேன்.

பின்னாளில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றார்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *