ஆசிரியர் பதில்கள்

மார்ச் 01-15

இராணுவத்தை  இந்து மயமாக்க  ஆர்.எஸ்.எஸ் தலைவர்  பாஹ்வத் முயற்சி!

கே:        “தமிழ்நாடு பெரியார் மண் அல்ல, ஆண்டாள் மண்’’ என்று தமிழிசை கூறுவது பதவியைக் காத்துக் கொள்ளவா?
                   –         -மா.திருவேங்கடம், பட்டாளம்

ப:    ஏற்ற பாத்திரத்திற்கேற்ற வசனம் பேசித்தானே ஆகவேண்டும். பாவம், தமிழிசை!

 

கே:    போர் என்று வந்தால் ராணுவத்தைவிட, ஆர்.எஸ்.எஸ். மூன்றே நாளில் தயாராகிவிடும் என்று அதன் தலைவர் மோகன் பாஹ்வத் கூறி இருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
            – தா.காவேரி, சேலம்

ப:    ‘ஹிந்துத்வா’ பற்றிய நூலில் வி.டி.சவர்க்கர்‘Hinduise Military, Militarise Hindus’ ’ என்று எழுதியுள்ளார்! ‘இந்துக்களை ராணுவமாக்கு, ராணுவத்தை இந்து மயமாக்கு’. அதனை ஒத்திகைப் பார்க்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் முயலுகிறார் போலும்! ஏன் இராணுவத்தின் சூப்பர் தலைமைத் தளபதியாக அவரையே அறிவித்து விடலாம்!

 

கே:    அடுத்த இருபது ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள் பாடம் நடத்தும் நிலை உருவாகும் என்று குஜராத் கணிதவியல் நிபுணர் சசிரஞ்சன் யாதவ் கூறி இருப்பதை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
    –         -சீத்தாபதி, தாம்பரம்

ப:    விஞ்ஞான முன்னேற்றம் மட்டும் பார்க்கிறார். ‘மனித வளத்தின்’ முன்னேற்றம், வளர்ச்சி, வாழ்வு எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.

 

கே:    “சமஸ்கிருதத்தை விடவும், தமிழ்மொழிதான் மிகவும் தொன்மையானது, இனிமையானது’’ என்று பிரதமர் மோடி கூறியது பற்றி?
               –     -ஆ.கிருஷ்ணமூர்த்தி, மாமல்லபுரம்

ப:    பலே! பலே! எப்படி கஷ்டப்பட்டு கண்டு பிடித்துள்ளார் பார்த்தீர்களா? அவரது அரிய உண்மை விளக்கத்திற்கு நன்றி!

 

கே:    தமிழகம், ‘பயங்கரவாத இயக்கங்களுக்குப் பயிற்சி மய்யம்’ என்ற பி.ஜே.பி. பொன்.இராதாகிருஷ்ணனின் சாடல் சரியா?       –    
      ——-கி.மாசிலமாமணி, மதுராந்தகம்

ப:    ‘சொந்தப் பரிவாரமான தொகாடியாவே, என்னை என்கவுன்டர் செய்து விடுவார்களோ?’ என்று பயந்தே மருத்துவமனைக்கு ஓடினேன் என்று கூறினார். அதைவிடக் கொடுமையானதா பயங்கரவாதம்?

 

கே:    மஹாசிவராத்திரியில் ஆதியோகி சிவன் சிலைக்கு அருகில் அமர, வரிசைப்படி கங்கா-_ரூ.50,000, யமுனா_ரூ.-20,000, நர்மதா_ரூ.-5,000, கோதாவரி_ரூ.1,000, மண்தரையில் உள்ளூர் காவிரி_ரூ.500 பக்தி வியபாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                             – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    அதற்கு ஜி.எஸ்.டி., வருமான வரி எதுவும் கிடையாத கொள்ளை லாப குபேர பக்தி வியாபாரம். மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் துணையோடு.

 

கே:    “பிரதமர் மோடி சொல்லித்தான் அ.தி.மு.க அமைச்சரவையில் சேர்ந்தேன்’’ என்கிறார் ஓ.பி.எஸ். பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!
–  க.காளிதாஸ், காஞ்சி

ப:        பாவம் பூனைக் குட்டிதான் எவ்வளவு காலம் சாக்கு மூட்டைக்குள்ளே இருக்கும்? அதனால்தான்!

 

கே:    உ.பி.யில் சாமியார் அரசு தாக்கல் செய்த ரூ.4.28 லட்சம் கோடி பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கீடு ரூ.500 கோடி! கும்பமேளாவுக்கு ரூ.1,526 கோடி! பார்ப்பன அரசின் பச்சை துரோகத்தைப் பற்றித் தங்களின் கருத்து?
 – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    கல்வியா _ யாருக்கு வேண்டும்? பக்திதானே முக்கியம். அட மண்டூகங்களே? ஆட்சி அழகு ஒரு கேடா?

 

கே:    பா.ஜ.க.வுடன் ரஜினி கூட்டணி சேர வேண்டும்’ என்று ‘துக்ளக்’ ஏடு கூறுவது எதனைக் காட்டுகிறது?
 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

ப:    ஆசை வெட்கமறியாது. அந்த ‘அய்யர்’ எதையும் அறியார் என்பதையே காட்டுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *