துறையூர் க.முருகேசன்
“ஏண்டி செல்லம்மா! எங்கடி போனாள் மாலதி? நான் எத்தனை நாள் சொல்லிருப்பேன். அந்த நாய வீட்ட விட்டு வெளிய அனுப்பாதடி. அவளால நம்ம குடும்பமானமே, கப்பலேறுதுன்னு… கேட்டியாடி? நேத்து சாய்ந்தரம் நாலுமணி போல அவளும், அந்த கீழத் தெரு முத்தான் மகன் கணேசனும், ஒன்னா உட்கார்ந்து சினிமா பார்த்துகிட்டு இருந்தத நம்ம சுப்பையா மாமா கண்ணாலப் பார்த்து இருக்குறார். ஒரு கலர் சோடாவ வாங்கி இவன் பாதியாவும், அவள் பாதியாவும் குடிச்சாங்களாம். அந்த பண்ணாடி சாதி நாய் வந்து இவள காதலிக்கிறதாடி? வரட்டும். அவள ஒரே வெட்டா வெட்றேன்!’’ என்ற வீரப்பனின் கண்கள் இரண்டும் கோவைப்பழமாக சிவந்து இருந்தது, கருத்த உடம்போடு அவன் வைத்திருந்த கடா மீசையும், கோபத்தில் அவன் ஆடிய ஆட்டமும், காளி கோயில் பூசாரி கணக்கா காட்சியளித்தது.
வீரப்பனின் வீரா வேசத்தைக் கண்ட செல்லம்மா எதுவும் பேசாமல் மூலையில் போய் ஒண்டிக் கொண்டாள். அவள் ஒண்டிக் கொண்டாலும் அவள் மனம் லப்டப் சத்தத்துடன், பழைய காலங்களை அசை போடத் தொடங்கியது. கிட்டத்தட்ட இருபது வருடத்திற்கு முன்னால், இதே வீரப்பன் அதே பண்ணாடி சாதியைச் சேர்ந்த முத்தாயி என்ற வயசுப் பிள்ளையை, கரும்புக் காட்டுக்கு தூக்கிட்டுப் போயி, கதறக் கதற கற்பழித்ததால், அவள் மானம் ரோஷம் தாங்காமல் தூக்கு மாட்டி செத்தது. அந்த சம்பவத்தால, அந்த சாதிக்காரங்க, தடியும் கம்புமா வீடு தேடி வந்து இவனைக் கொல்ல வந்தது. ஊருல அதிக ஜனக்கட்டு கொண்ட வீரப்பனின் சாதிக்காரங்க நியாயம், அநியாயத்தைப் பற்றி கவலைப்படாமல் சாதிக்காரனை காப்பாத்தனும்னு, அந்த பண்ணாடி சாதிக்காரங்கள ஓட ஓட விரட்டியது, அந்தக் கொலைக்கு பயந்து தலைமறைவானவன் ஐந்து வருடம் கழித்து, நல்ல பிள்ளையாட்டம் வந்து செல்லம்மாவைப் பெண் கேட்டது, ஆயிரம் தப்பு செஞ்சாலும் ஆம்புள ஆம்புளதான்னு, அவன் அயோக்கியத்தனத்தக் கண்டுக்காம, அவன் சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு செல்லம்மாவை அப்பனும் ஆத்தாவும் கட்டிவச்சது, எந்தவித களங்கத்துக்கும் ஆளாகாத செல்லம்மாவை, கட்டுன நாள் முதல் இது நாள் வரை குடித்துவிட்டு வந்து மயிரை வளைத்துப் போட்டு அடிப்பது என்ற பழைய நினைவில் அவள் மூழ்கி இருந்தாலும், அவள் மனம் வேறு விதமாகவும் சிந்திக்க ஆரம்பித்திருந்தது. என்ன இருந்தாலும் நம்ம சாதியில ஒரு ஆம்பள இவளுக்கு கிடைக்கலயா? அந்த பண்ணாடி சாதிக்காரப்பயல்தான் கிடைத்தானா? என்ற சாதிக் கண்ணோட்டமும் அவள் நெஞ்சில் அசைபோட்டது.
எப்படியும் மாலதி வருவாள். தீட்டிய அறுவாளுடன் நிற்கும் இந்த சண்டாளன் கீழ்சாதிக்காரனை தீண்டிய நாய் நம்ம குலத்துக்கே ஆகாது! என பொலி போடாமல் விடமாட்டான். அப்படியே, இவனுக்கு பிள்ளைப்பாசம் கண்ணை மறைச்சாலும், ஊர்க்காரன் சும்மா விடமாட்டான். கீழ்சாதி நாய்க்கு படுக்கை விரிச்சவளை இன்னும் விட்டு வச்சிருக்கிறான்னு உசுப்பேத்துவான். இந்த ராத்திரி மட்டும் அந்த சிறுக்கிபுள்ள வீடு வராம இருந்தா, விடிஞ்சதும் வேறு ஏற்பாடு பண்ணலாம் என்று செல்லம்மாவுக்கு பலவாறு யோசனை ஓடியது.
விடிவதற்குள் செல்லம்மாளின் வீடுதேடி, சாதித் தலைவர்களும் நாட்டாண்மையும், ஒருவர் மாற்றி ஒருவரா வந்து குசலம் விசாரித்துக் கொண்டே இருந்தனர். நாட்டாண்மை வந்தார், “நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா செல்லம்மா?’’ என்று செல்லம்மாளை வேறு ஓரக்கண்ணால் பார்த்தார். “நேற்று சுப்பையா சித்தப்பா சினிமாக் கொட்டாயில பார்த்ததா சொன்னாக. அவன் இவள் வேல செய்யுற மில்லுல சூப்பர்வைஸரா வேலை பார்க்குறானாம். ஞாயிற்றுக் கிழமைங்கறதால சினிமாவுக்கு வந்தானாம். இந்த சிறுக்கிப் பிள்ளயும் சினிமாவுக்குப் போயி இருக்குது. கொட்டாயில இடம் காலி இல்லாதனால அவன் பக்கத்துல ஒரு இடம் காலியா இருந்ததாம், இருட்டுல உட்கார்ந்துட்டாள். இடைவேளையில பார்த்தப்பதான் அவனாம். ஏதோ ஒரு மில்லுல வேலை செய்யுற பழக்கதோசத்துல சோடா வாங்கிக் கொடுத்தானாம். ஒரு சோடாவ ரெண்டு பேருமே சேர்ந்து குடிக்கலயாம், அந்த சுப்பையா மாமா என்னமோ மாத்தி சொல்றார்’’ என்றாள் செல்லம்மா நாட்டாண்மையிடம்.
செல்லம்மாவின் வசீகர தோற்றத்தைப் பார்த்து நாட்டாண்மைக்கு செல்லம்மாவின் முகம்தான் மனதில் ஏறியதே தவிர, செல்லம்மாள் சொன்ன வார்த்தைகள் மனதில் ஏறவில்லை. செல்லம்மாவை பார்த்துக் கொண்டே சொன்னான் நாட்டாண்மை, “செல்லம்மா நல்லதோ கெட்டதோ உன் பொண்ண இப்ப கண்ணால பார்த்தா உன் புருஷன் மட்டுமில்ல. நம்ம சாதிக்காரப் பயலுல எவனோ ஒருவன் அவள பொலி போட்ருவான். நான் தடுத்தாலும் முடியாது. அதுக்கு ஒரு யோசனை இருக்குது. நீயும் நானும் மனசு வச்சாதான். உன் மக உயிருக்கு ஆபத்தில்லை. பேசாம அவள ஒரு ரெண்டு மாசத்துக்கு காதும் காதும் வச்ச மாதிரி ஒரு நூறு மைலுக்கு அப்பால் உள்ள உங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பிடு. அதுக்குள்ள இந்த வெறிபுடிச்ச பொடுசுங்க. முத்தான் மகன் கணேசனை பொலி போட்டுட்டானுங்கன்னா, உன் மக தப்பிச்சாள். அப்புறம் உடனே குருடோ கிழமோ, நம்ம சாதியில பார்த்து ஒருத்தனுக்கு கட்டி வச்சுடலாம். அதனால நான் சொன்னத மட்டும் மனசல வச்சுக்கிட்டு இறங்கு தாயி. நான் வாரேன். பித்து புடிச்ச பெனாதிப்பய, அதான் உன் புருஷன், அவன் போதையிலேயே மிதக்குறான். அவன்கிட்ட மட்டும் எதுத்து பேசாத. அவன் பக்கத்துலயும் நிற்காத.நம்ம காரியம் முடியறதுக்குள்ள உன்ன பொலி போட்டுறப் போறான்’’ என்ற நாட்டாண்மையின் சூசகம் புரியாமலேயே தலையாட்டினாள். நாட்டாண்மைக்கும் ஒரு திருப்தி. இவ்வளவு சீக்கிரம் செல்லம்மாள் நம்ம பேச்சுக்கு இணக்கம் கொடுத்துட்டாளேன்னு.
யாருக்கும் தெரியாமல், காரியத்தில் இறங்க செல்லம்மாள் ஆயத்தமானாள். வேறு சாதிக்காரி, மாலதிக்கு நெருங்கிய தோழியை புடிச்சு, நாட்டாண்மை சொன்ன அத்தனை விஷயத்தையும் பக்குவமா மாலதிகிட்ட சொல்லச் சொல்லி, வழிச்செலவுக்கு ஐந்நூறோ ஆயிரமோ கொடுத்து கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ள இருக்குற இடத்தவிட்டு காலிபண்ண சொன்னாள். அவளும் மாலதிகிட்ட போய் உள்ள நிலைமையைச் சொல்லி உடனே புறப்பட ஏற்பாடு பண்ணினாள்.
நேரா கணேசனிடம் சென்ற மாலதி, “நம்ம காதல் என் சாதிக்காரப் பயலுக்கு முழுவதும் பரவிடுச்சு. அந்த சுப்பையா கிழவன் ஊர் முழுவதும் தண்டோராப் போடாத குறையா பரப்பிட்டான். இனி நாம் அவனுங்க கண்ணுல தென்பட்டோம்னா இரண்டு பேரையும் பொலி போட்டுடுவானுங்க. இனி நாம தப்பிக்கவே வழி இல்லை. ஆனாலும், ஒரு நாள் வாழ்க்கையானாலும், உன் கையால தாலி ஏத்துகிட்டு, உன்னால சுகம் கண்டு, நீயே என் புருஷன் என நிரூபிச்சுட்டு, சாவேனே தவிர, உன்ன மறந்துட்டு, உன்ன –இழந்துட்டு என் சாதியில உள்ள கிழத்தையோ குடிகார நாயையோ கட்டிக்கிட்டு வாழ்வேன்னு மட்டும் நினைக்காத. வேண்டிய காசு இருக்குது என்னோடு புறப்படு’’ என்றாள். காதலிக்காக எதையும் இழக்கத் தயாரான கணேசன், தாய் தந்தையை பத்திரமாக தன் அக்கா வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக அனுப்பிவிட்டு, தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, மாலதியோடு ஊரை விட்டு புறப்பட்டான்.
விடிந்ததும் நாட்டாண்மையும், ஊர் முக்கிய தனக்காரனும், செல்லம்மா வீட்டிற்கு வந்து, “என்ன செல்லம்மா நான் சொன்னபடிதானே நடந்தது?’’ என்று கேட்டான். “நீங்க சொன்ன மாதிரியே காரியத்தை முடிச்சுட்டேன் மாமா. அவள வேலூருல இருக்குற என் அண்ணன் வீட்டுக்கு அனுப்பிட்டேன். எங்க அண்ணன் வேலூருல ஒரு விறகுக்கடையில வேலை செய்றான். என் அண்ணன் மகன் மூத்தவனுக்கு சன்னிவந்து ரெண்டுகாலும் இழுத்திடுச்சு நடக்க முடியாது. அவனுக்கு ஊரு உலகத்துல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. அதனால அவனுக்கு இந்தக் சிறுக்கி பயபுள்ளய கட்டி வச்சுடலாம். மக செஞ்ச தப்ப மனசுல வச்சுக்கிட்டு, அந்த குடிக்காரப்பய நேத்துல இருந்து ஒரே குடியா கெடக்குறான். தீட்டி வச்ச அறுவாள கையில புடுச்சபடியே மல்லாந்து படுத்துக் கிடக்குறான்’’ என்றாள் நாட்டாண்மையிடம் செல்லம்மாள்.
இதுதான் தனக்கு சாதகமான நேரம் என்பதைப் புரிந்துகொண்ட நாட்டாண்மை, “சரி செல்லம்மா! இனி உன் உயிருக்கு ஆபத்தில்லை. நான் அடக்கி ஆண்டுக்கிறேன். அந்த கணேசன் பய இனி அதோ கதிதான். அவன என்னால காப்பாத்த முடியாது. அப்படியே காப்பாத்தினாலும், பிறகு உன் பொண்ணுக்கு அவப் பெயர்தான் வரும். அதனால வேற ஒரு காரணத்துக்காக அவன பொலி போட்ட மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம். நான் சொன்னதை மறந்துடாத’’ என்று சொன்னவன் ஊர் முக்கியகாரனை வெளியே அனுப்பிவிட்டு, “ராத்திரி எத்தனை மணிக்கு நான் வரட்டும்?’’ என்று செல்லம்மாளிடம் காதோடு காதாகக் கேட்டான். விஷயம் இவ்வளவுதானா? நாட்டாண்மையின் நரிப்புத்தியைப் புரிந்துகொண்ட செல்லம்மாள், “உண்ணு ஊரடங்குனதுக்குப் பிற்பாடு ஒத்தக் கண்ணுக்கும் தெரியாம வா மாமா’’ என்றாள்.
அன்று இரவு ஊர் அடங்கியது. செல்லம்மாள் சொன்னது ஞாபகத்திற்கு வந்த நாட்டண்மை, அதற்காகவே பிரத்யேகமாக தைக்கப்பட்ட சட்டையை எடுத்து மாட்டினான். வேட்டியைக் கட்டினான். உடலுக்கு ஏத்த வாசனை தைலத்தை உடல் முழுக்க தேய்த்துக் கொண்டு பூனைப் பாய்ச்சலில் செல்லம்மா வீட்டிற்குப் புறப்பட்டான்.
அந்த நேரத்தில் ரயிலேறி ஊர்வந்த ஒருத்தன் கணேசனும் மாலதியும் வடக்கே போகும் ரயிலில் ஏறியதாகவும், அவன் அதைப் பார்த்ததாகவும் ஊரில் தண்டோரா போட்டுவிட்டான். ஊரும் ஜனங்களும் ஒன்று திரண்டு அறுவாள், தடியோடு கணேசன் வீட்டிற்கு ஓடினார்கள். அப்பொழுது அந்த சேரியில் கண்டவர்களை யெல்லாம் தடியாலும் கம்பாலும் தாக்கிவிட்டு, அந்த சேரியை நாசம் செய்துவிட்டு கணேசன் வீட்டிற்கு ஓடினார்கள். வீடு காலியாக இருந்ததால் இருப்பதை சுருட்டிக்கொண்டு வீட்டிற்கு தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
தனக்கு சாதகமான நேரம் என்பதால் செல்லம்மா வீட்டிற்குள் நுழைந்த நாட்டாண்மை, வீரப்பனின் போதை மயக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு செல்லம்மாளிடம் நெருங்கி அவள் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு, அவள் கன்னத்தை வருடினான். ஒரு நிமிடம் நிதானித்துக் கொண்ட செல்லம்மாள், சட்டென விலகி வீரப்பனின் கையில் இருந்த அறுவாளை எடுத்து ஓங்கி ஒரு போடு போட்டாள் நாட்டாண்மையின் கழுத்தில். கழுத்தறுபட்ட நிலையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலைமையில் நாட்டாண்மை கிடக்கும் பொழுதுதான் அவன் காது கேட்கும்படி கொட்டித் தீர்த்தாள்.
“ஏண்டா சண்டாளா! இந்நேரம் நான் உனக்கு முந்தானையை விரிச்சிப் படுத்திருந்தா, பண்ணாடிகூட படுத்திருந்த என் மகள் படுசுத்தமா ஆகி ஈருப்பாளாடா? இங்க சாய்ஞ்சு கிடக்குறானே குடிகாரப்பய, ஒரு கன்னிப் பெண்ணையே துவம்சம் செய்து அவள் துடிக்கத் துடிக்க தூக்கு மாட்டி சாகும்படி செஞ்சானே அவனுக்கு என்ன தண்டனைய கொடுத்தீங்க? உன் சாதி ஆம்புளைங்க ஒரு தாழ்ந்த சாதிக்காரிகிட்ட போனா பாவமில்லை. அவள் செத்தாலும் கவலையில்லை. ஆனா அந்த தாழ்ந்த சாதிக்காரன் உன் சாதிக்காரன் பிள்ளயத் தொட்டா, தீட்டு. உடனே அறுவா எடுக்க வேண்டியது, அவன பழி வாங்க வேண்டியது. பாதிக்கப்பட்டவ வீட்டுல உன் போன்ற பச்சோந்திப் பயலுக்கு அவ அக்காளோ அம்மாவோ முந்தானை விரிச்சா, பாதிக்கப்பட்டவ புனிதமாகிடறா. சாதிய பிரிச்சு வச்ச அந்தக் காலத்துலயே உயர்ந்த சாதிக்காரிகிட்ட தாழ்ந்த சாதிக்காரன் போனாலும், தாழ்ந்த சாதிக்காரிகிட்ட உயர்ந்த சாதிக்காரன் போனாலும், அவுங்கள சண்டாளன்னு ஒதுக்கி தனி சாதியா வச்சானுங்களே தவிர, உங்க மாதிரி கொலைகாரக் கூட்டமா அலையலடா! உங்க மாதிரி சாதி வெறிபுடிச்ச பயக இருப்பதாலதாண்டா மற்ற சாதிக்காரன் காரித் துப்புறான்! ஏண்டா என் பொண்ணு மாலதி உன் சாதிக்காரன் விந்துக்குத்தான் பிறந்தாளான்னு உனக்குத் தெரியுமாடா? அந்த ரகசியம் பிள்ளை பெத்த தாய்க்கு மட்டும்தாண்டா தெரியும். என் மாதிரி ஊருக்கு ஒரு சிறுக்கி அறுவா எடுத்தான்னா, உன் மாதிரி சாதிப்பித்தும், பெண் பித்தும் பிடிச்ச, மானங்கெட்ட பயலுங்க ஒருத்தன்கூட இருக்க மாட்டான்டா. இனி எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும், தாங்கிக்க தயாரா இருக்குறேன். இந்த ஊரைப்பிடிச்ச சனியன் ஒழிஞ்சது’’ என்று செல்லம்மாள் பேசிய பேச்சு பாதி உயிராகக் கிடந்த நாட்டாண்மையின் நெஞ்சில் எப்படிப்பட்ட எண்ணங்களை உண்டாக்கியதோ…?