தந்தை பெரியார்
பேரன்புள்ள தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே! நம் நாட்டில் வழக்கமாகப் பெரும்பாலும் நடைபெற்று வரும் திருமணங்கள் யாவும் பெண்களை அடிமைப்படுத்தவும், ஜாதி இழிவை நிலைநிறுத்தவும், நம் மடமையை வளர்க்கவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவேதான், அதை மாற்றி நம் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டுமென்று கருதித் தான், நாங்கள் இதில் கலந்து கொள்கிறோம். மற்றப்படி பார்ப்பானைக் கூப்பிடுவது போல இது ஒரு சடங்கு என்று எண்ணியோ அல்லது அவர்களை விட நாங்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலோ எங்களை அழைத்து நடத்தப்படுவதல்ல.
நண்பர் சபாரத்தினம் அவர்கள் இப்பகுதியில் செல்வாக்குள்ளவர் என்பதோடு, செல்வவானும் ஆவார். நாட்டில் இதுபோன்ற செல்வவான்கள் அனைவரும் தங்களை மற்றவர்கள் மிகப் பெரிதாக மதிக்க வேண்டுமென்பதற்காகப் பார்ப்பானைக் கூப்பிட்டு அவன் சொல்லியபடி யெல்லாம் நடந்து கொள்வதோடு, பாட்டுக் கச்சேரி, சதிர், புராண காலட்சேபம் என்று அது, இதை வைத்து மக்களின் நேரம், பணம், அறிவு இவற்றைப் பாழாக்குகின்றனர். இதனால் நேரம் பணம் இவை பாழாவதோடு, நம் மடமையை மேலும் வளர்க்கவே அவை பயன்படுகின்றன. அங்கு வந்திருக்கும் 1,000 பேரில் ஒருவன் கூட அங்கு நடக்கும் சங்கீதக் கச்சேரியால் சங்கீத ஞானம் பெறுவதில்லை. ஏதோ தலையை ஆட்டிவிட்டுப் போய் விடுவான். அதுபோலன்றி நண்பர் சபாரத்தினம் அவர்கள் எங்களை அழைத்ததற்காக அவரைப் பாராட்டுவதோடு நன்றி கூறிக் கொள்கிறேன்.
நாங்கள் வந்து பேசுவதன் பலன் என்னவென்றால், மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். அறிவிற்கேற்ற இதுபோன்ற முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
மிருகங்களுக்கு, ஜீவன்களுக்கில்லாத உயர்ந்த அறிவைப் பெற்றவன் மனிதன். அந்த அறிவை அவன் எல்லாக் காரியங்களிலும் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும். அந்த உயர்ந்த அறிவைப் பயன்படுத்தும் காரணத்தால்தான் வெளி நாட்டிலுள்ள மனிதன் விஞ்ஞானத்தில் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைகின்றான்.
நம் நாட்டிலே அந்த உயர்ந்த அறிவைப் பயன்படுத்த முடியாத வகையில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் முன்னோர் பழக்க வழக்கம் என்று இவை யாவற்றையும் சொல்லி, அறிவை தடை செய்து விட்டனர் இந்த 1965-ஆம் ஆண்டிலே வாழும் மனித அறிவிற்கு சக்தி இல்லையென்றால், 100, 1,000, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்தவனுக்கு என்ன சக்தி இருந்திருக்க முடியும்?
முன்னோர்கள், வேதத்தைக் கண்டு பிடித்தவர்கள், புராணத்தை எழுதியவர்கள், உபநிஷத்தை உண்டாக்கிய வர்கள், கடவுளைக் கண்டு பிடித்தவர்கள், கடவுளுக்கு மேல் சக்தி பொருந்தியவர்கள், ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள், தெய்வ சக்தி பொருந்தியவர்கள் என்று கருதி அவர்கள் பின்னால் நாமும் சென்றால், நம் அறிவு காட்டு மிராண்டிக் காலத்திற்குத் தானே போகும்? இவற்றை யெல்லாம் உதறி குப்பையில் தள்ளிவிட்டு, விஞ்ஞானிகளின் பின்னால் சென்றதால் தானே, இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் 1,000, 2,000 லைட்டுகள் எரிகின்றன! மணிக்கு 5 மைல் வேகத்தில் கட்டை வண்டியில் சென்று கொண்டிருந்தவன், இன்று 30, 50, 100 மைல் வேகத்தில் ரயில், மோட்டார், ஆகாயக் கப்பல்களில் செல்கிறான். இன்னும் இதுபோன்ற எத்தனையோ புதுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் நம் முன்னோர்கள், மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், தெய்வ சக்தி பொருந்தியவர்களா கண்டுபிடித்தார்கள்? இதுபோல அறிவு வளர்ச்சி அடைந்து வரும் இந்த 1965-இல் இராமாயணம் இருக்கலாமா? பாரதம் இருக்கலாமா? வியாசன் என்ன சொன்னான்? வால்மீகி என்ன சொன்னான்? நாரதன் என்ன சொன்னான்? என்று கேட்பது அறிவுடைமையாகுமா?
சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு திருகாணியைக் கொண்டு வந்து கொடுத்தால், அதை உரைக் கல்லில் உறைத்துப் பார்த்து, அதை நிறுத்துப் பார்த்து, அதன் விலையை அறிந்து கொண்டு -வந்தவன் ஒழுங்கானவனா, நல்லவனா, திருடனா என்று இவ்வளவையும் ஆராய்ந்து, அதன் பின் அதை வாங்குகிறான், இதைத் தான் அறிவு என்பது. இதையே மனிதன் எல்லாக் காரியங்களிலும் பயன்படுத்த வேண்டும். கடவுள் என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? அதன் குணம் செய்கைகள் யாவை? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நமக்கு எதற்காகக் கடவுள், புராணம், இதிகாசம் என்பனவற்றை யெல்லாம் ஆராய வேண்டும். அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும்.
இப்படி அறிவு கொண்டு சிந்தித்தால் எதுவுமே நிற்காது. பின் எது நிற்குமென்றால் ஒழுக்கம் தான் மிச்சமிருக்கும். ஆகையால் தான் மனிதன் தன் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நம்மிடம் உள்ள கடவுள்களில் ஒரு கடவுள் கூட யோக்கியமான கடவுள் இல்லை. கொள்ளையடித்ததும், கொலை செய்ததும், பிறன் மனைவியைக் கையைப் பிடித்து இழுத்ததும், பிற பெண்களின் கற்பைக் கெடுத்ததும் தானே நம் கடவுள் கதை. இதைப் படித்துத்தான் நம் தமிழறிஞர்கள் என்பவர்கள் வயிறு வளர்க்கின்றனர். நம்மிடம் இருக்கும் கடவுள்களில் எந்தக் கடவுள் ஒழுக்கம், நாணயம், நேர்மை நிறைந்ததாக இருக்கிறது?
பாரதக் கதையை எடுத்துக் கொண்டால், ஒரு பெண் கோவாப்ரேட்டிவ் முறையில் 5 பேர்களை அனுபவித்ததாகவும், அதுவும் போதாமல் இன்னொரு வனையும் நினைத்தாள் என்றும் இருக்கிறது! இராமாயணம், தன் மனைவி கற்பிழக்க வேண்டுமென்பதற்காக வலிய இராவணனோடு அனுப்பியது. இப்படி எந்தக் கதையை எடுத்தாலும் ஒரே ஆபாசம்.
நம்மைப் பற்றிச் சொல்லக் கூடியது எது? நமக்காக ஏற்பட்ட சாஸ்திரம் எது? என்றால் ஒன்றுமே கிடையாது. மற்ற உலகிலுள்ள அனைவருக்கும் ஒரே கடவுள் தான் உண்டு. உனக்கு மட்டும் ஏன் ஆயிரக்கணக்கான கடவுள்? இங்கு இந்தக் கடவுள்களையெல்லாம் உற்பத்தி செய்தவன் பார்ப்பான்.
தோழர்களே! மேல்நாட்டான் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கிறான். பெண் உட்கார இடமில்லாமல் நின்றால் எழுந்து கொண்டு, பெண்ணுக்கு உட்கார இடம் கொடுக்கிறான்.
இங்குத் திருமணம் செய்து கொள்கிறவன், தனக்கு ஒரு வேலைக்காரி என்று பெண்ணை நினைக்கிறான். அந்தப் பெண்ணும் இவன் நமக்கு எஜமான், நாம் அவனுக்கு அடிமை என்று நினைக்கிறது. பெற்றோர்களும் அப்படியே வேலைக்காரியாகவே பெண்ணைக் கருதுகின்றனர். இது மாற வேண்டும். பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும். எல்லாக் காரியங்களிலும் ஆண்களோடு சமமாக இருக்க வேண்டும். 100 உத்தியோகம் இருக்கிறதென்றால், அதில் பகுதி 50 உத்தியோகம் பெண்கள் பார்க்க வேண்டும். நான் அயல்நா டெல்லாம் சென்றிருக் கின்றேன். அங்குப் பெண்கள் தான் அதிகம் பேர் உத்தியோகம் பார்க்கின்றனர்.
மணமக்கள் தங்களின் வருவாய்க்குள் செலவு செய்து மிச்சம் பிடிக்கவும் வேண்டும். ஆடம்பரமான வாழ்வு நடத்தி கடனாளியாகக் கூடாது. அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அதையும் நல்ல முறையில் வளர்க்க முடியாமல் சங்கடப்படக் கூடாது. ஒன்றிரண்டு குழந்தைகளைப் பெற்று, அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். மேலும், மூட நம்பிக்கையான காரியங்களில் ஈடுபட்டு தங்களின் பணம், நேரம், அறிவு இவற்றைப் பாழாக்கிக் கொள்ளாமல், அறிவு வளரும்படியான காரியங்களில் ஈடுபட்டு, தங்களின் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தங்களால் இயன்ற உதவிகளைச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும்.
(8.9.1965 அன்று வடசேரியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 19.9.1965.