தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்த இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று வந்திருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி ச.செந்தமிழ் யாழினி. இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்திலுள்ள செருவங்கி என்கிற சின்னஞ்சிறிய கிராமத்தைச் சார்ந்தவர்.
எளிமையான தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த செந்தமிழ் யாழினி கிராமத்தில் நடக்கும் கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளை விரும்பிப் பார்ப்பாராம். விளையாட்டில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த செந்தமிழ் யாழினியை இறகுப் பந்து விளையாட்டில் சேர்த்து விட்டிருக்கிறார் இவரது அப்பா. இவருக்குள் மனப்பாடத் திறன் அதிகம் இருப்பதை உணர்ந்து பிறகு, சதுரங்கப் பயிற்சி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாது தன் மகள் சதுரங்க விளையாட்டிலுள்ள பல நுணுக்கங்களை அறிந்துகொள்ள வசதியாக சர்வதேசச் சதுரங்கப் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இப்படி தொடங்கிய இவரது சதுரங்கப் பயணம் இன்று தேசிய அளவிலான இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு தங்கப் பதக்கங்களாக தொடர்கிறது.
2013இல் கார்ல்சன்_ஆனந்த் இடையிலான சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டி சென்னையில் நடந்தபோது மாணவ சதுரங்க வீரர் என்ற முறையில் அரசு அனுமதியோடு பார்வையாளராய் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்வு தந்த ஊக்கமே யாழினிக்கு நாமும் சாதிக்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியிருக்கிறது. பிறகு கடுமையான பயிற்சியை எடுத்துக்கொண்டு அந்தக் கல்வியாண்டில் முதல்முறையாக ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.
சதுரங்கப் போட்டியில் (சிறீணீssவீநீணீறீ, ஸிணீஜீவீபீ, ஙிறீவீtக்ஷ்) என மூன்று வகையான விளையாட்டு முறைகளிலும் உலக மதிப்பீடு பெற்றிருக்கிற செந்தமிழ் யாழினி தன் வெற்றி குறித்துக் கூறு கையில், தற்போது தங்கம் வென்ற தேசிய சதுரங்கப் போட்டியில் தமிழ்நாடு அணிக்குத் தங்கத்தை உறுதி செய்வதாக அமைந்த மகாராஷ்டிரா அணியுடனான போட்டியில் என்னைப் போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய என் அணியில் இடம் பெற்றிருந்த சி.எம்.சம்யுக்தா, கே.கிருத்திகா, ஏ.ஹர்சினி, கே.வைசாலி ஆகியோருடன் இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றதோடு,
“பெண் குழந்தைகள், விளையாட்டுப் பயிற்சி பெறுவதிலும், போட்டிகளில் கலந்து கொள்வதிலும், பயண நேரங்களின்போதும் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றைக் களைந்தெறிய அரசு முன்வர வேண்டும்.
தொடர்வண்டிப் பயணங்களின்போது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை இணைய வழியில் பெற வழி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பேருந்துகளிலும் விளையாட்டு வீரர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்சிகள் அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் எத்தனையோ திறமையுள்ளவர்களால் இந்தியா ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும்! என்று தமிழக அரசுக்கு செந்தமிழ் யாழினி கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
சாதித்த தனக்காக எதையும் அரசிடமிருந்து கேட்காமல் இளந்தலைமுறைக்காக யோசித்த செந்தமிழ் யாழினியின் கோரிக்கையை தமிழக அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதோடு மேலும் பல சாதனைகளைப் படைத்து எதிர்காலத்தில் ‘க்ராண்ட் மாஸ்டர்’ பட்டத்தையும் உலகக் கோப்பைப் பட்டத்தையும், செந்தமிழ் யாழினி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறோம்!