நூல்: காந்தியடிகளின் இறுதிச் சோதனை (1947- 48 காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்)
தொகுப்பாசிரியர்: தேவ.பேரின்பன்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
பக்கங்கள்: 124, விலை: ரூ.35/-
காந்தியடிகளின் இறுதிச் சோதனை
1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் திரிகூடராசப்பர், நாமக்கல் கவிஞர் ஆகியோரால் வெளியிடப்பட்டது தமிழ் “ஹரிஜன்’’ _ காந்தியடிகளின் வாரப் பத்திரிகை. அது காந்தியடிகள் நடத்திய ஹரிஜன் பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பாகவே வெளிவந்தது.
இந்த ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளாகும். இந்தியா இரு நாடுகளாகப் பிளவுபடுத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் அரசியல் விடுதலை கிடைத்தது. இந்த ஆண்டுகளில் மதக் கலவரம் தீப்பற்றி எரிந்தது. விடுதலை பெற்றுத் தந்த தேசியம் மதவெறித் தீயால் பொசுங்கிச் சாம்பலாகிவிடும் பேரபாயம் எழுந்தது.
மதவெறியர்களின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்த வல்லார் யார்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் மலர்ந்து வரும் தேசத்தைப் பாதுகாப்பது எங்ஙனம்?
மதவெறி தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எதிரானது; இந்திய தேசத்துக்கு எதிரானது.
நாடே விடுதலை விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது காந்தியடிகள் தனியராய் _ காலுக்குச் செருப்பணியாமல் _ பற்றி எரிந்து கொண்டிருந்த நவகாளிக்கும் _ பீகாருக்கும் பயணம் மேற்கொண்டார். அது அவர் கொண்ட கடைசிச் சோதனையாகும்-.
நவகாளியில் முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்கினார்கள்; பீகாரில் இந்துக்கள் முஸ்லிம்களைத் தாக்கினார்கள். பல நாட்கள் _ பல நூறு மைல்கள் கிராமம் கிராமமாகக் காந்தியடிகள் நடந்தே சென்று முகாம் அமைத்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். உண்ணாவிரதம் இருந்தார். மதவெறி மோதல்களைத் தணிப்பதில் வெற்றியும் கண்டார்.
அவர் காலடியில் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அமைதி வாழ்வுக்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தியடிகள் பத்திரமாக டில்லி திரும்பினார்.
டில்லி கலவரங்கள் அவரது உண்ணாவிரதத்தால் நிறுத்தப்பட்டன. 1948 ஜனவரி 25 _ அவரது கடைசி உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், சில நாட்களில் ஜனவரி 30 _ தேசப்பிதா காந்தியடிகள் இந்துமத வெறியனால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்.
இஸ்லாமிய மதவெறி அவரது அஹிம்சைக்கு நவகாளியில் பணிந்தது. ஆனால், இந்து மதவெறி டில்லியில் அவரது உயிரை எடுத்துக்கொண்டது. வரலாற்றின் மிகப் பெரிய துயரச் சம்பவம் இது.
மதச்சார்பின்மைதான் இந்தியா சுதந்தர நாடாக இருப்பதற்கும் _ வளர்வதற்குமான ஒரே அடிப்படை என்ற லட்சியத்துக்காகக் காந்தியடிகள் தனது உயிரைத் தியாகம் செய்தார். லட்சியத்துக்கான உயிர்த்தியாகம் உயரியது.
காந்தியடிகள் மாபெரும் வரலாற்று மனிதர். அவரது வாழ்க்கை பிரமிப்பூட்டக்கூடியது. இந்திய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்–.
இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் அவரது அரசியல் லட்சக்கணக்கான இந்திய கிராமங்களுக்கும் எட்டியது. அதன் உண்மையான அர்த்தத்தில் தேசமே அவரைத் தேசப்பிதா என ஏற்றுக்கொண்டது.
காந்தியடிகளின் கொள்கைகளிலும் போராட்ட முறைகளிலும் உடன்பாடு கொள்ளாதவர் நிறையவே உண்டு. காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளும் ஏதாவதொரு கட்டத்தில் அவரை ஏற்காதவர் உண்டு. நேரு, நேதாஜி தொடங்கி ராஜாஜி வரைகூட இந்த வரிசையில் சேர்கின்றனர். காங்கிரஸ் இயக்கத்துக்கு வெளியே அவரைக் கடுமையாகப் பல நியாயமான காரணங்களுக்காகவே சாடிச் சமர் புரிந்தவர் உண்டு. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கம்யூனிஸ்டுகள் எனப் பலரைச் சொல்ல முடியும். காந்தியடிகளின் பொருளாதாரக் கொள்கை, சாதி பற்றிய நிலை, போராட்ட முறை, தத்துவ அணுகுமுறை போன்ற பலவற்றிலும் முரண்பட்ட நிலைகள் உண்டு. அவை தொடரும்.
ஆனால், காந்தியடிகளைக் கம்யூனிஸ்டுகளோ, பெரியார் இயக்கமோ, அம்பேத்கர் இயக்கமோ மொத்தமாக நிராகரித்துவிட முடியாது.
காந்தியடிகளின் நீண்ட நெடிய போராட்டத்தில் எதை நிராகரித்தாலும் மதவெறிக்கு எதிரான அவரது ‘கடைசிச் சோதனை’யை நிராகரிக்க முடியாது. மதவெறிக்கு எதிரான அவரது லட்சியப் போராட்டம் இறுதியில் அவரது உயிரையே பலி கொண்டபோது தந்தை பெரியார் இந்தியாவுக்குக் ‘காந்திதேசம்’ எனப் பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.
இன்று மதவெறியர்களின் அட்டூழியமே தேசிய அளவில் அரங்கேறுகிறது. மதவெறியே மறுபடியும் தேசியமாக்கப்படுகிறது. இந்துத்துவா தேசியம் ஆட்சியிலிருக்கும் வன்மம் மிகுந்த பாசிசமாக உருவெடுத்து வருகிறது.
1992_பாபர் மசூதி இடிப்பு இயக்கமும் அதனை ஒட்டிய மதவெறிக் கலகங்களும் இந்து முஸ்லிம் தீவிரவாத நடவடிக்கைகளும் கோத்ரா ரயில் எரிப்பும் அதனை ஒட்டிய இந்து வெறியர்களின் திட்டமிட்ட இனப்படு கொலையும், இவை போன்ற எண்ணற்ற துயரங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் உருவான இந்தியாவை இல்லாமல் ஆக்கிவிடுவதற்கான சவால்களாக எழுந்துள்ளன.
இந்திய மக்களை மதவெறியர்களாக்கும் முயற்சியில் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும், ஆன்மிகம் போதிக்க வேண்டிய மடாதிபதிகளும் அணிசேர்ந்து செயல்படுகின்றனர்.
இந்தியச் சிந்தனையை இந்துச் சிந்தனையாக _ சரியாகச் சொன்னால் இந்துத்துவச் சிந்தனையாக மாற்றக் காரியங்கள் நடந்து வருகின்றன. பாசிசத்தின் உருவாக்கம் கண் முன்னே நடந்தேறி வருகிறது.
மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதன் மூலமாகவே இந்தியா என்ற நாட்டின் தேசியத்தை வலுப்படுத்த முடியும். போலி மதச் சார்பின்மைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இந்து மதத்தின் மரபில் இல்லாத வன்மப் பண்புகளையும், சனாதன இந்துச் சமூகக் கட்டமைப்பை நிலைநாட்டும் தன்மைகளையும் ஒருங்கிணைத்து ஒரு போலி இந்து மதம் அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் உருவாக்கப்படுகிறது.
இந்துத்துவா தீயவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உண்மையான இந்துக்களின் கடமையாகவே எழுந்துள்ளது.
1947-48 ஆண்டுகளின் காலத்தைக் காட்டிலும் ஆழமான – ஆபத்தான மதவெறி செயல்படுகிறது. இதனை எதிர்த்த போராட்டம் மிக விரிந்த தளத்தில் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மை – பெரும்பான்மை மோதல், சாதி எதிர்ப்பு – சாதிய மோதல் எனவெல்லாம் இந்தப் போராட்டம் குறுகிச் சிதைந்து போய்விடக் கூடாது. இது மத நம்பிக்கையாளருக்கும் நாத்திகருக்கும் இடையிலான போராட்டமும் அல்ல.
நடைபெறும் போராட்டம் இந்தியா பற்றியது; எத்தகைய இந்தியா இந்திய மக்களுக்கு வேண்டும் என்பது பற்றியது. மிகுந்த வெறியோடு உருவாக்கப்படும் இந்துத்துவ இந்தியா இந்திய மரபுக்கும் பண்புகளுக்கும் எதிரானது; இந்தியாவைத் துண்டு துண்டாக உடைத்துவிடக் கூடியது. அறிவியல் யுகத்தின் சனாதன மேட்டுக்குடி சாம்ராஜ்யத்தை உருவாக்கவே இந்துத்துவாவாதிகள் பாடுபடுகின்றனர்.
அதற்காக, மத அடிப்படையில் வெறிகொண்ட இந்துவாக மக்களைத் திரட்ட மக்களின் ‘கடவுள் நம்பிக்கை’ என்ற உணர்வைக் களவாடிப் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.
அதற்குரிய வகையில் புதிய சாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. காஞ்சி மடாதிபதி தொடங்கி அனைத்து வகை மதத் தலைவர்களும் அணி திரட்டப்படுகின்றனர். அனைத்துச் சாதிகளும் பிராமணீய இந்துத்துவாவுக்காகக் கத்தி எடுக்கத் தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு புதிய சவால்.
இந்தச் சவாலை எதிர்கொள்ளக் காந்தியடிகள் தேவைப்படுகிறார்.
காந்தியடிகள் மிகச் சிறந்த ராமபக்தர்; மிகச் சிறந்த தேசபக்தர். இவை இரண்டும் ஒன்றானவர். நம்பிக்கையாளராக இருந்து அவர் நடத்திய கடைசிப் போராட்டம் தொடர்கிறது.
1946, 47, 48ஆம் ஆண்டுகளில் அவரது அஹிம்சை சோதனைக்குள்ளானது; தனது கடைசிக் காலத்தில் தனது அஹிம்சைக் கோட்பாட்டைத் தீவிர பரிசீலனைக் குட்படுத்தினார்.
காந்தியடிகளின் வழக்கமான பிரார்த் தனைகள்கூட அரசியல் நிகழ்ச்சிகளாயின. பஜனைகளில் குரான் வாசிக்கக் கூடாது என்ற குரல் எழுந்தபோது காந்தி ராமபஜனையோடு குரானை இணைத்து வாசித்துத் தனது பிரார்த்தனையை நடத்தினார்.
மதவெறிக்கு எதிரான அவரது போராட்டம் இன்றைய பாசிச கட்டத்திலான மதவெறிக்கு எதிரான போராட்டத்துக்குப் பேருதவி புரிவதாகும்.
1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற ஆண்டு. அந்த ஆண்டில் மதவெறிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தை அறிவதும் பயில்வதும் அவசியமாகின்றன.
1947_48 ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிகையில் வெளிவந்த காந்தியடிகளின் கருத்துக்களை _ மதவெறிக்கு எதிரான அவரது போராட்டத்தை இச்சிறுநூல் எடுத்துக்காட்டுகிறது. இவை தமிழ் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
காலத்தின் கட்டாயம், அவசியம் கருதித் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழகம் இந்த முயற்சியை வரவேற்று ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
“தமிழ் ஹரிஜன் _ இதழ்கள் என் தந்தையார் எனக்களித்த செல்வங்களில் ஒன்று. அவர் அந்நாளில் காந்தியர். இது நாள் வரை தமிழ் ஹரிஜன் இதழ்களைப் பாதுகாத்து அளித்துதவிய என் தந்தை புலவர் மு.தேவராயன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– தேவ.பேரின்பன்
விடுதலை நாள் கொண்டாட்டத்தில்
பெரியாரைப் போல காந்தியாருக்கும் விருப்பம் இல்லை!
காந்தியடிகள் புது டில்லியில் ஜூலை மாதம் 20ஆம் தேதி செய்த பிரார்த்தனைப் பிரசங்கத்தில் கூறியதாவது:-_
“நீங்கள் இப்பொழுது பேசுவது ஜனங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்று சில நண்பர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லு கிறார்கள். தாங்கள் வாழ்நாள் முழுவதும் எந்தச் சுதந்திரத்திற்காகப் போர் செய்தீர்களோ அது இப்பொழுது தலைவாசலில் வந்து காத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் சுதந்திரமில்லாமல் பொருளாதாரச் சுதந்திரமோ அற ஒழுக்கமோ ஏற்பட முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆதலால் அரசியல் சுதந்திரம் வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்தோஷப்படாம லிருப்பதேன் என்று கேட்கிறார்கள்.
இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையுண்டு. ஆனால், நான் சத்தியாகிரகி, சத்தியத்தையே பேச வேண்டியவன். அதனால் என் மனதில் இல்லாததைக் கூற முடியாது. இந்தியா இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி நான் வருந்தாமலிருக்க முடியாது. நான் கூறுவது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லை என்றால் அது என்னுடைய குற்றமன்று. பால் சிந்திப்போனால் அதற்காக அழுவதில் பயனில்லை என்று நான் உங்களுக்குக் கூறியிருக்கிறேன். நான் தீமையை எதிர்த்துக் கலகம் செய்பவன். வாழ்நாள் முழுவதும் போர் செய்து வருபவன். அதிலேயே பேரின்பத்தைக் காண்பவன். என்னுடைய ஆன்மா ஒரு நாளும் தோல்வியடைந்ததில்லை. என்னால் அழ முடியாது. பிறரையும் அழும்படி செய்ய முடியாது. நவகாளியில் கஷ்டப்படுபவருடைய அழுகையை மாற்றி உயிரும் பொருளும் இழந்ததற்காக வருந்தவேண்டாம் என்று கூறுவதற்காகவே அங்கே சென்றிருந்தேன். சத்தியாகிரகி தோல்வியை அறிய மாட்டார். உங்களுடைய தலைவர்கள் தவறு செய்திருக்கலாம். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. தேசத்துக்கு நன்மை செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். நீங்களும் சந்தோஷப் படுகிறீர்கள். நான் அதைக் கெடுக்க விரும்பவில்லை. ஆகஸ்டு 15ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கலந்துகொள்ளலாம். காங்கிரஸ் சபை ஒரு ஜனநாயக ஸ்தாபனம்.
அதனால் அது யாரையும் தம்முடைய இஷ்டத்துக்கு மாறாக நடக்கும்படி ஒருநாளும் கட்டாயப்படுத்தாது. பிரிட்டிஷார் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். தங்கியிருக்கும் சிலர் நம்முடைய சொற்படி நடக்கக்கூடிய ஊழியர்களாகவே இருப்பார்கள். அதிகாரமானது நம்முடைய கைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு டொமினியனில் இருந்தபோதிலும் என்றைக்குச் சகோதரர்களைப்போல் வாழ்வார்களோ அன்றுதான் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நன்னாளாகும்.