தந்தை பெரியாரின் தொலைநோக்கு – 9

பிப்ரவரி 16-28

 

விந்து வங்கி பற்றி அந்த காலத்திலே கூறியவர் தந்தை பெரியார் !

கடவுள்

இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப்படாமல் இருக்க மாட்டார்கள்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால், சிறியோர்களுக்குப் போதிக்கப்பட்டு காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவமுமாகும். ஆதலால், இனிவரும் உலகத்தில் கடவுளைப்பற்றிப் பேசுகிறவர்களும் காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்துவிடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும். ஏனெனில், கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது ஓர் அவசியம் இருந்தால்தான் நினைப்பான் – சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்துவிடுவதாகவும், சகல தேவைகளுக்கும் மனிதனுக்குக் கஷ்டப்படாமல் பூர்த்தி யாவதாகவும் இருந்தால், எந்த மனிதனுக்கும் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ, நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்? மனிதன் உயிரோடு இருக்கும் இடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால், விஞ்ஞானத்துக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமில்லாத மோட்சம் ஒன்றை ஏன் கருதுவான்? அதற்கு ஏன் ஆசைப்படுவான்? தேவை அற்றுப் போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும் என்பது அறிவின் எல்லையாகும். விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே காரணம்தானே இருந்து வருகிறது. அக்காரணம் என்ன? காரணபூதமாய் இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞானிக்குச் சுலபத்தில் அற்றுப்போன விஷயம். நம்முடைய வாழ்வில், நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். இதுவேதான் உலகத் தோற்றத்துக்கும், உலக நடப்புக்கும் கொள்ளவேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்கான ஒரு காரியத்திற்கும் தேவை இல்லாத கடவுளை எவனும் வணங்கமாட்டான்.

மோட்சம் – நரகம்

புதிய உலகத்தில், மோட்சம், நரகத்துக்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில், மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றா விட்டாலும் இனிவரும் சந்ததிகள் இந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும், இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டிவரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய், வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்றும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

நம்மால் என்ன ஆகும்? அவனன்றி ஓரணுவும் அசையாதே என்று வாய் வேதாந்தம் பேசமாட்டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க, நாம் எப்படி உழைக்கவேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ணமாகவும் இருக்கும் என்றோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள். சுய சிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும். மனித அறிவீனத்தால்  விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள். அவர்களின் தொண்டு மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்த வண்ணமாகவே இருக்கும். சுய சிந்தனைக்கு இலாயக்கற்றவர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் – வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பவர்கள் இன்றைய மக்களிலே பலருக்கு, பழைமையிலே இருக்கும் மோகம், அறிவையே பாழ் செய்துவிடுகிறது. புதிய உலகத்தோற்ற வேகத்தைத் தடை செய்துவிடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்புகளால் இலாபமடையும் கூட்டம், புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரனின் ஞானசூன்யம் சுயநலக்காரரின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல், வேலை செய்வோரே, இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும். அந்தச் சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்யவேண்டுமென்று வாலிபர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வரவேண்டி இதை முடிக்கிறேன்.

விந்து வங்கிபற்றி அக்காலத்திலேயே சிந்தித்தவர்!

நல்ல உடற்கட்டும், அழகும், உடல்நலமும் உள்ள ஆண்களின் விந்து சேகரிக்கப்பட்டு, விந்துக்கு உரியவர் பற்றிய விவரம் அதனுடன் இணைக்கப்படுகிறது.

விந்து தானம் பெறுபவர்கள் அந்த விவரங்களைப் படித்து தங்களுக்குத் தேவையான விந்தைத் தேர்வு செய்வர். இதுபற்றி அக்காலத்திலேயே பெரியார் தொலை நோக்கோடு கருத்துக் கூறியுள்ளது வியப்பிற்குரியதாகும்.

மாடுகளுக்கு சினை பிடிக்கச் செய்ய நல்ல பொலி மாடுகளைத் தேர்வு செய்து அதன் விந்து மூலம் நல்ல கன்றைப் பெறுவதுபோல, நல்ல ஆண்களைத் தேர்வு செய்து அவர்களின் விந்து மூலம் பிள்ளைகளைப் பெற்று வளமான பிள்ளைகளை பெறும்நிலை எதிர்காலத்தில் வரும்!

யாருக்கு பிறந்தாய் என்பதில் மானம் (பெருமை) இல்லை!

உலகத்தில் எவரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து இக்கருத்தைச் சொன்னார் பெரியார்.

உலகில் எவரும் ஒருவரை இழிவுபடுத்த வேண்டும், கேவலப்படுத்த வேண்டும் என்றால், அவரின் பிறப்பை தப்பாகச் சொல்வது வழக்கத்தில் பல நூறு ஆண்டுகாலமாய் இருந்து வருகிறது. இதுபற்றி பெரியார் 60 ஆண்டுகளுக்கு முன்பே என்ன சொன்னார் தெரியுமா?

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

மனிதனுக்கு மானமே தேவை

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *