அய்யாவின் அடிச்சுவட்டில்..

பிப்ரவரி 16-28

(இயக்க வரலாறான தன்வரலாறு – 196)

இதனைத் தொடர்ந்து, என் மீது நடந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் 23.07.1982 அன்று அனைத்துக் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கிழக்கு சென்னை மாவட்டத் தலைவர் எம்.கே.காளத்தி தலைமை  தாங்கினார். கழகத் தோழர்களும் திமுக., முஸ்லீம் லீக், இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து 24.07.1982 அன்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், “கழக குடும்பத்தினருக்கு’’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில், “மருத்துவ நிபுணர்கள் கட்டளைக்கு இணங்க சிகிச்சையும் ஓய்வும் பெற்று வருகிறேன். தனிப்பட்ட எந்தப் பார்ப்பானும் நமக்குப் பகைவர்கள் அல்ல, தஞ்சை மாநாட்டிற்கு மருத்துவ நிபுணர்கள் அனுமதி பெற்று கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்தத் தருணத்தில் கழகக் குடும்பங்கள் கட்டுப்பாடு காக்கும். இராணுவம்போல் காவல்துறையினர் காட்டும் உத்வேகம் ராஜபாளையத்திலும் காணப்பட வேண்டாமா? என்று பொதுமக்கள் கேட்க இனி ஆரம்பிப்பார்கள். காலிகள், ‘ கொலை முயற்சியாளர்கள் எவரும் இன்றுவரை கைது செய்யப்படவே இல்லை. தகுந்த அடையாளம், சாட்சியம் சொல்லியும்கூட’  என்ற நிலை மாற வேண்டாமா? எனது மரண சாசனம் தஞ்சை மாநாட்டில் அறிவிக்கப்படும்.  அய்யாவின் இறுதி ஆணையை ஏற்கையில், எனது இறுதிப் பயணம் நடந்தால் அதைவிட வேறு பேறு எனக்கு, நமக்கு ஏது?’’ என்று வினா எழுப்பி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

 

24.07.1982 அன்று இரவு மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர், புலவர் கோவிந்தன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தேவராசன் ஆகியோரும் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகத் தோழர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் மருத்துவமனை யிலிருந்து 26.07.1982 அன்று  முக்கிய அறிக்கையை விடுத்திருந்தேன்.

“நியாயங்களும் நீதிகளும் மக்கள் மன்றத்தில் என்றும் கிடைத்தே தீரும். அதிகார போதை பலருக்கு கண்ணை மறைக்கலாம் என்றாலும் அது நிரந்தரமல்ல.

நாமோ என்றென்றும் அதைச் சுவைக்க மறுப்பவர்கள், ‘திராவிட ரத்தம் சிந்தியது’ என்றாவது ஒப்புக்கொள்ளும் நிலை இருக்கிறது.

மீண்டும் திராவிட ரத்தம் சிந்தக்கூடாது, “திராவிட ரத்தம்’’ மட்டுமல்ல, மனிதகுல ரத்தம் எதுவுமே காரணகாரியமின்றி சிந்தக் கூடாது என்ற மனிதாபிமான இயக்கம் அல்லவா? நமது அறிவு ஆசான் கண்ட தனிப்பெரும் இயக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் ஆணை என்னவென்று பலருக்குத் தெரியாது. ஆனால் இன எதிரிகளுக்குத் தெரியும்.

“நான் சுயமரியாதைக்காரன்; நான் எவரையும் அடிக்க மாட்டேன்; ஆனால், என்னை யாராவது அடித்தாலோ, அடிக்கத் தூண்டினாலோ அவர்களால் கொல்லும் வேளையில் சாவேன்’’ என்பதே ஆகும். இந்த நிலைக்கு திராவிடர் கழக இராணுவம் தள்ளப்பட்டால் நாடு என்னவாகும்? இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்று பல கருத்துகளை கழகத் தோழர்களுக்கு தெரிவித்து அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

திருச்சியில் 28.07.1982 அன்று முதல் அமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் நிருபர்கட்கு பேட்டி அளித்தபோது அதில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நம்மால் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வு மனிதாபிமானம், உண்மையான திராவிட பாரம்பரியப் பற்று ஆகியவைகளை உடைய அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.

இதனை நான் கண்டித்து மருத்துவமனை யிலிருந்து, “யாருக்கு உபதேசிக்கிறார் முதல்வர்?’’ என்ற தலைப்பில் நீண்டதோர் அறிக்கை 29.07.1982 அன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தேன்.

அதில், கேள்வி: தமிழ்நாட்டில் சட்டம்_ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எண்ணுகின்ற நிலைமை மத்திய அரசுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று வருத்தப் படுவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எம்.ஜி.ஆர்: “பெரியார் எந்த சந்தர்ப்பத்திலும், வன்முறையை, ஜாதி உணர்வைத் தூண்ட வில்லை. ‘பூணூலை அறுப்போம்’ என்று சொன்னாரே தவிர அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை.

ஆனால் இப்போதுதான் பூணூலை அறுக்கிற நிகழ்ச்சி நடக்கிறது. எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுகின்ற நிலைமையையும் பார்க்கிறோம்.

பிராமணர்கள் வெளியே நடமாட மாட்டார்கள் என்றுதான் பெரியார் சொன்னார். ஆனால், பிராமணர்கள் தாக்கப்படுகின்ற நிகழ்ச்சியை நாம் காண்கிறோம்.

காந்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் என்றைக்குமே வன்முறையை நம்புவது இல்லை. ஜனநாயகத்தைத்தான் நம்பினார்கள். ஆகவேதான் இவர்களுக்கு கூறிக் கொள்வதெல்லாம் எக்காரணம் கொண்டும் வன்முறையில் ஈடுபடாதீர்கள். இதனால் உங்களுக்கு மக்களிடம் இருக்கின்ற செல்வாக்கு குறையுமே தவிர பெருகாது. ஜனநாயகத்தில் அச்சுறுத்தல், ஆபத்து விளைவித்தல், சைக்கிள் செயினைக் காட்டிப் பயமுறுத்தல் ஆகியவை திராவிடப் பாரம்பரியத்திற்கு ஒத்துக் கொள்ளாத ஒன்றாகும்.’’ (ஆதாரம்: ‘தினத்தந்தி’ சென்னைப் பதிப்பு, 29.07.1982, பக்கம் 2)

நமது பதிலாக, நமது முதல்வர் ஒரு வேடிக்கையான பாஷ்யகர்த்தா ஆவார்? அவரது விளக்கங்களையும், வியாக்யானங்களையும், புரிந்துகொள்வதற்கே ஒரு புதிய அறிவு, மேலான அறிவு நம்மைப் போன்ற சிற்றறிவு படைத்தவர்களுக்குத் தேவைதான் என்ற போதிலும் முடிந்தவரைக்கும் அவரது ஆராய்ச்சி நிறைந்த பதில்கள் பற்றி சற்று ஆராய்வோம்.

“தந்தை பெரியார் அவர்கள் பூணூலை அறுக்கத்தான் சொன்னாரே தவிர, பிராமணர்களைத் தாக்கவா சொன்னார்?’’

“தந்தை பெரியார், பிராமணர்கள் வெளியே நடமாட மாட்டார்கள் என்றுதான் சொன்னாரே தவிர, இப்போது பார்ப்பதைப் போல் பிராமணர்களைத் தாக்கவா சொன்னார்?’’ என்று கேட்கிறார் முதல்வர். பார்ப்பனர்களே, இதன் உட்பொருள் என்ன? இதன் சரியான அர்த்தம் என்ன?

திராவிடர் கழகம் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றாலும் அன்றைய காங்கிரசு அரசு, உள்துறை போலீஸ் அமைச்சகராக இருந்த திரு.பக்தவச்சலனார், அன்றைய மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு இணங்க தந்தை பெரியார் அவர்கள் பேசாததைப் பேசியதாக சுறுக்கெழுத்துக் குறிப்பிலேயே மாற்றிவிட்டு தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களைக் குத்தச் சொன்னார், வெட்டச் சொன்னார் என்று திருச்சி, கரூர்_ பசுபதிபாளையம், குளித்தலை ஆகிய மூன்று ஊர்களில் பேசினார் என்று கூறி கொலைத் தூண்டல் செக்ஷன்களைப் போட்டு மூன்று ஆறுமாதம் என்று ஒன்றரை ஆண்டுகால தண்டனை வழங்கியது. நமது முதல்வருக்குத் தெரிய நியாயமில்லை. ஏனெனில் அப்போது அவருக்கு திமுகவிலும் அதிக ஈடுபாடு இல்லாதபடியால்!

அய்யா காலத்தில்தான் திருச்சி தில்லை நாயகம் படித்துறையில் பார்ப்பனர்கள் பூணூல் அறுக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் புகார்கள் எழுப்பப்பட்டன என்ற விவரமும் முதல்வருக்குத் தெரியாது என்றே நினைக்கிறோம்.

பட்டுக்கோட்டையில் என்ன நடந்தது என்பதை முதல்வர் அவரது சக அமைச்சர் அருமை நண்பர் திரு.எஸ்.டி.எஸ். அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுவதுதான் நல்லது!

எவரும் பெரிய பொறுப்புக்கு வந்துவிட்ட நிலையில் சரியான தகவல்களைக் கூறவேண்டும்; முடியாத பட்சத்தில் மவுனத்தின் மூலமாவது தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

“பார்ப்பனர்கள் தாக்கப்படுவதை நாம் என்றுமே விரும்பியதில்லை, ஆதரித்ததுமில்லை. மாறாக, வன்மையாகக் கண்டித்தே வருகிறோம். கழகக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் விரோதமான செயல் என்றே கூறி வருகின்றோம். இதை பிரபல பார்ப்பன ஏடுகளின் நிருபர்கள் அறிவார்கள்’’ என்று முதல்வருக்குப் பதில் அளித்து அந்த அறிக்கையில் விரிவாக விளக்கி மருத்துவமனை யிலிருந்தே வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், பல அமைப்புகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

01.08.1982 அன்று கருநாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் அன்றைய இ.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான திரு.பசவலிங்கப்பா அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வழிமறிக்கப்பட்டு, மோசமாக நீங்கள் தாக்கப்பட்டீர்கள் என்ற செய்தி எனக்குத் தெரியவந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் அந்தக் கடிதத்தில், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது ஒரு ஆங்கில எழுத்தாளர் சொன்னார், “மிகவும் நல்லவர்களாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து?’’ என்று! அந்தப் பழமொழிதான் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது. லட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, பெரியாரின் தத்துவங்களை ஓய்வு _ ஒழிச்சல் இல்லாமல் நீங்கள் பரப்பி வருகிறீர்கள் என்று குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள். இதனை 7.8.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் ஆங்கிலத்தில் உள்ள கடிதத்தின் தமிழாக்கம் அப்படியே வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கழக குடும்பத்தினருக்கு “தஞ்சையில் சந்திப்போம்!’’ என்று குறிப்பிட்டு முக்கிய அறிக்கை ஒன்றை 09.08.1982 அன்று வெளியிட்டிருந்தேன். அதில், அய்ய £வின் ஆணையை தலைமே ற்கொண்டு தஞ்சையில் திட்டமிடுவோம்!

சாதி ஆணவத்தின் முதுகெலும்பு முறியப் பாடுபட போராட்ட களம் காணத் துடிக்கும் கருஞ்சிறுத்தைகளே! இனமானக் காவலர்களே தஞ்சைக்கு வாருங்கள்! குடும்பம் குடும்பமாக வாருங்கள்! என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தொலைக்காட்சிகளில் (டெலிவிஷனில்) 15.08.1982 முதல் இந்தித் திணிப்பினை மிக வேகமாக அமுல்படுத்த முனைவதை அறிந்து தமிழ்மக்கள் மிகவும் வேதனை அடைய வேண்டியவர்களாக உள்ளதோடு தமிழ்ப் பெருமக்களுக்கு இதுதான் இவ்வாண்டு “சுதந்திர தினப் பரிசு’’ போலும்! நாள் தவறாமல் ஒரு மணி நேரம் இந்தி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படப் போகிறதாம். எனவே, இதனைக் கண்டித்து 11.08.1982 அன்று ‘விடுதலை’யில் கண்டனத்தை பதிவு செய்து இருந்தேன்.

தஞ்சை திலகர் திடலில் 14.08.1982 அன்று நடைபெறும் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசு ஆணை கோரி போராட்ட விளக்க மாநாடு’’ குறித்து 12.08.1982 அன்று கழக தோழர்களுக்கு மாநாட்டின் பொறுப் பாளர்களுக்கு கழகத்தின் கட்டுப்பாடு குறித்தும் விளக்கி முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தேன். அதில், முதலமைச்சரின் திருச்சி பேட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் பேச்சுகள் அவரது உண்மை உள்ளத்தை _ உருவத்தை காட்டுவதாக அமைந்தன. அடித்தவனை விட்டுவிட்டு அடிபட்டவனைக் கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்தால் ஒரு காவல்துறை அதிகாரியின் பணி எப்படியோ அப்படித்தான் இதில் கழகத்தின் மீது பழிசுமத்திய நமது முதலமைச்சர் பேச்சுகளும் இருந்தன! எனவே, நமது கழகத் தோழர்கள் மிகுந்த இராணுவ, கட்டுப்பாட்டுடன், பேரணி, மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டேன்.

தஞ்சை திலகர் திடலில் 14.08.1982 அன்று நடந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசு ஆணை கோரி நடந்த போராட்ட விளக்க மாநாட்டின் முக்கிய சிறப்புரையை ஆற்றினேன், அறப்போர் விளக்க மாநாட்டில் என்னுடைய வாழ்நாளில் இவ்வளவு நாள் இடைவெளியில் இத்தனை நாள் மேடைகளில் பேசாமல் இருந்த தென்பது _ வெளியிலே இருந்த போதல்ல _ சிறைச் சாலையிலே ‘மிசா’விலே ஓராண்டுக் காலம் இருந்தபோதுதான் பேசாமல் இருந்திருக்கிறேன்.

ஆனால், சிறைச் சாலையிலேகூட தோழர்களோடு பேசியிருக்கிறேன், பேசாமல் இருந்ததில்லை. இன்றைய தினம் உங்கள் முன்னாலே நிற்கிற நான், உணர்ச்சி வயப்படக்  கூடாது என்று உங்களுக்குச் சொல்ல வருகின்ற நான், இன்று மாலையிலே இங்கே அமர்ந்திருந்தபோது பல்வேறு உணர்ச்சிகளை எல்லாம் மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றாலும் தந்தை பெரியாரிடத்திலே பயின்ற ஒரு மாணவன் என்ற முறையிலே _ கசப்பானதாக இருந்தாலும் _ உங்களாலே எளிதிலே செரிமானித்துக் கொள்ளமுடியாத கருத்துக்களாக நான் சொல்லப் போகும் கருத்துகள் இருந்தாலும் _ நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற மரியாதை உண்மையாக இருக்குமானால் நான் தாக்கப்பட்டது குறித்து நீங்கள் படுகின்ற வேதனையெல்லாம் உள்ளபடியே உங்களுடைய உள்ளத்து உணர்வுகளாக இன்றைக்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கட்டுப்பாடுதான் இந்த இயக்கத்தின் கவசம். இந்த இயக்கத்தினுடைய கோடு. கட்டுப்பாட்டை மீறிச் செல்லுகின்றவர்களுக்கு இந்த இயக்கத்தில் இடமே கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்த விரும்புகிறேன்.

மருத்துவமனையிலே கடைசி நேரத்திலே எனக்கு ஜன்னி வந்து உளறுகிற கட்டம் ஏற்பட்டாலும்கூட அப்போதும் சாதி ஒழிக என்றுதான் சொல்வேனே தவிர, இனநலம் ஓங்குக! என்று சொல்வேனே தவிர, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று சொல்வேனே தவிர, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் என்று சொல்வேனே தவிர, சமூகநீதி ஓங்க வேண்டும் என்று சொல்வேனே தவிர, இனமானம் ஏற்க வேண்டும். அந்தக் கொடி பறக்க வேண்டும். அது இறக்கப்படக் கூடாது என்று சொல்லித்தான் ஜன்னியிலேகூட, பிதற்றி இறுதி மூச்சு அடங்கும் வரை – அடங்குற நேரத்திலே என்னுடைய கண்கள் மூடப்பட்டாலும்கூட – அப்படித்தான் என்னுடைய ஜன்னி இருக்குமே தவிர, பணம் சேர்க்கவில்லையே, என்னுடைய மனைவிக்கு ஏற்பாடு செய்யவில்லையே, என்னுடைய பிள்ளைகள் என்ன கதியிலே இருக்குமோ என்று நினைக்க மாட்டேன்.

நான் இல்லறத்திலே இருக்கிற துறவறவாதியாகி நீண்டகாலமாகிறது என்பதை மாத்திரம் இந்த நேரத்திலே உங்களுக்குப் பணிவன்போடு சொல்லுகின்றேன். என்னுடைய  குடும்பத்தைப் பொறுத்தவரையில் நான் துறவறத்துக்காரன். உங்களைப் பொருத்த வரையிலே _ உங்கள் பார்வையில் நான் இல்லறத்துக்காரன்.

ஏனென்றால், தந்தை பெரியாரிடத்திலே பாடம் பெற்றோம் என்று சொன்னால் _ இந்தப் பாடத்தைப் பெற்றவனுக்கு _ என்னுடைய அறிவு ஆசானுக்கு என்ன மரியாதை? ஒரு எதிர்ப்பு வந்தக் காரணத்தால் நான் கோழையாகி விட்டால் எனக்கு மாத்திரம் இழிவல்ல; நான் எந்த இடத்திலே பிறந்தேனோ என்னுடைய ஆசானுக்கு இழிவு என்று நினைக்கிறேன். உணர்வுபூர்வமாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தேன்.

கழகத் தோழர்கள் பலரும் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார்கள். அவர்களை அடக்கிட தத்துவார்த்தமான வார்த்தைகளை எடுத்துக்கூறி அமைதிப்படுத்தினேன். மாநாட்டில் முதல் தீர்மானம் தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்கள் மறைவுக்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், “என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்ற சீரிய உறுதியுடன் அமைதியான முறையில் சென்ற நான்கு ஆண்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் பம்பரம் போல் சுழன்று தொண்டுப் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்பதையும், மாநாட்டில் தெரிவித்ததோடு இன்னும் பல தீர்மானங்களையும், எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுமையை _ பார்ப்பன ஆதரவை _ தமிழின விரோதப் போக்கை நாடெங்கும் விளக்கி கூட்டங்கள் _ மாநாடுகள் _ சுவரெழுத்து _ துண்டுப் பிரசுர விநியோகங்கள் போன்றவை செய்திடவும் எம்.ஜி.ஆர் ஆட்சியின் மீது கண்டனத் தீர்மானமும் அதன் விளக்கமாக அமைந்தது.

மாநாட்டில் தந்தை பெரியார் உருவம் பொறித்த “வெள்ளிக் கேடயம்’’ வழங்கப்பட்டது. கேடயத்தின் நடுவில் அய்யா உருவமும் கேடயத்தின் ஓரங்களில் இரு பக்கமும் யானையின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில், மகளிரணி அமைப்பாளர், மானமிகு க.பார்வதி கணேசன், மதுரை மாவட்ட இளைஞரணித் தலைவர் மதுரை மகேந்திரன், திமுக இலக்கிய அணிச் செயலாளர் திருவில்லிபுத்தூர் ச.அமுதன், பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், பேராசிரியர் ந.இராமநாதன், வேலா_இராசமாணிக்கம், கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, கழக அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் கழகக் குடும்பத்தினர் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டார்கள் என்பது இன்றுவரை என் நெஞ்சத்தை விட்டு நீங்காது நினைவு இருக்கிறது.

சென்னைக்கு அருகிலுள்ள மாங்காடு கோயிலில் நடைபெற்ற “சமபந்தி போஜன’’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கூறிய கருத்துக்கு ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் 17.08.1982 அன்று “முதலமைச்சரின் தனிப்பட்ட கருத்து’’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட் டிருந்தேன். “தனித் தொகுதி கூடாது என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் என்று அம்பேத்கர் கோரினார். ஜின்னா, பெரியார் போன்றவர்களும் தனித் தொகுதி வேண்டும் என்றார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

“தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும்.’’ தனித் தொகுதி கூடாது என்று சொந்த முறையில் தாம் கருதினாலும், அனைவருக்கும் சமமான வாய்ப்பு உருவாக்கப்படும் வரை தனித் தொகுதிகள் இருக்க வேண்டும். இதில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய பகுதி என்னவென்றால் தனிப்பட்ட முறையில் அவருக்கு இடஒதுக்கீடு (Reservation)  என்ற சமூகநீதிக் கொள்கையில் அறவே நம்பிக்கை இல்லை; இதற்கு அவர் எதிர்ப்பானவர் என்ற பேருண்மையை அவர் முன்பு ‘குமுதம்’ ஏட்டில் வெளியிட்டது போலவே இப்போது வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் என்பவர் ஒரு அரசின் ஆட்சித் தலைவராக இருக்கையில் அவரது ஆட்சி செய்கின்ற _ நடத்துகின்ற அல்லது கடைபிடிக்கின்ற ஒரு திட்டத்தில் சொந்த முறையில் நம்பிக்கையில்லாது, மற்றவர்களுக்காக தாம் இதைச் செய்கிறேன் என்று கூறுகிறார் என்றால், இதைவிட உலகமகா விசித்திரம் வேறு உண்டா? என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

20.08.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நமது வேண்டுகோள் அறப்போர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமளித்து முக்கிய அறிக்கையை நமது “வேண்டுகோள் அறப்போரும் _ அறநிலைய அமைச்சர் விளக்கமும்’’ என்ற தலைப்பில் பல்வேறு செய்திகளை எடுத்து விளக்கியிருந்தேன். அதில், செய்தியாளர்களிடையே அமைச்சர் வீரப்பன் பேசும்பொழுது, “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் இந்திய அரசியல் சட்டத்தின் 25(1)வது பிரிவிற்கு சட்டத் திருத்தம் கொண்டு வருவதை வற்புறுத்தி, தமிழக முதல் அமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பிரதமருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கடிதம் எழுதவிருக்கிறார் என்றும், மகராசன் கமிஷனின் பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு இது அவசியம் தேவை என்றும் நீதிபதி தலைமையிலான குழு சிபாரிசுகள் அடிப்படையில் அந்தத் திருத்தம் அவசியம் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துக்கூற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் சட்டபூர்வமாக தடுத்துள்ள நிலையில் அரசியல் சட்டத்தை திருத்தாமல் எல்லோரையும் சாதி இன வேறுபாடின்றி அர்ச்சகர்களாக நியமிக்க வாய்ப்பில்லை என்பதை இதன்மூலம் உணரலாம் என்ற அமைச்சர் அவர்களின் இந்த பதில் நமக்கு முழுமையாகத் திருப்தி அளிக்கவில்லை என்றபோதிலும், இந்த அமைச்சர், முதல் அமைச்சர் ஆகியோர் இதற்கு முன்பு தாம் எடுத்த நிலைகளிலிருந்து (ஷிtணீஸீபீ) இதன்மூலம் வேறுபட்டு, நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்று பதிலளித்துள்ள தன்மை அவர்களது நிலையில் நல்ல மாற்றத்தை உருவாக்கி யிருப்பதால் ஓரளவு அதனை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அரசியல் சட்டத் திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டுவர, மத்திய அரசிடம் கோராமலேயே தமிழக அரசால் இதனைச் செய்திட முடியும். எப்படி எனில், கேரளாவில் தேவசம் போர்டார் ஏற்பாடு செய்யப்பட்டதைப்போல, இங்கும் ஒரு தனி அரசு ஆணை (நி.ளி.) கொண்டுவந்தே இதனைச் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

21.08.1982 அன்று ஆகஸ்ட் 28ஆம் நாளை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாள் என்று நடத்திட வேண்டும் என்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் நான் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

 

21.08.1982 அன்று மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த கழகக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். ஜாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டு போராடி வருவதுதான் திராவிடர் கழகம். சாதியை ஒழிப்பது மட்டுமல்ல; சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் ஒழிக்க தந்தை பெரியார் போராடினார்.

தந்தை பெரியார் முதலிலே இழி ஜாதியினர் என்று சொல்லப்பட்டவர்களுக்கு தெருவிலே நடக்க உரிமை வேண்டும் என்று போராடினார்.

இழிசாதியினர் படிக்க உரிமை இல்லை என்ற நிலை இருந்தபோது _ அவர்களுக்குப் படிக்க உரிமை வேண்டும் என்று போராடினார். சாதி என்ற விஷநாகத்தை தனது கைத்தடியால் பெரியார் அடித்தார். வீதிகளிலே ஓடிய அந்த நாகம் _ கல்வி நிலையங்களிலே ஓடிய அந்த நாகம் _ பெரியார் கைத்தடிபட்டு ஓடி _ இப்போது கோயில் கர்ப்பக்கிரகத்துள்ளே போய்ப் பதுங்கிக் கொண்டு படமெடுத்து நிற்கிறது! எனவே அந்த சாதி விஷநாகத்தை அடித்து _ அதன் விஷத்தை முறிக்கும் வரை நமக்கு ஓய்வேயில்லை என்று குறிப்பிட்டுப் பேசினேன்.

 

21.08.1982 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை என்.கிருஷ்ணன் இல்ல மணவிழா திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மணவிழாவிற்கு நான் முன்னிலை வகித்தேன். கி.ஆ.பெ.விசுவநாதன், டாக்டர் மா.நன்னன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். இந்த மணவிழாவிலே நான் உரையாற்றும்போது, இந்த மண விழாவிலே மணமக்களுக்கு அதிக அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு மணமகன் ஒரு நல்ல சுயமரியாதை எண்ணம் கொண்ட பகுத்தறிவுவாதியாக இருக்கக்கூடிய இளைஞராவார்.

இவ்வளவு பெரிய விழாவிலே நண்பர் கிருஷ்ணன் அவர்கள் மிகுந்த முயற்சியோடு கலைஞர் அவர்களையும் எங்களைப் போன்றவர்களையும் அழைத்தது மணமக்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்பதற்காக அல்ல. அதை தனியாகக்கூட சொல்லச்சொல்லி வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.

இன்னமும்கூட இந்த மணமுறையைக் குறை சொல்லக் கூடியவர்கள் நாட்டிலே உலவிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இதை ஒரு பிரச்சார முறையாக ஆக்கியிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாங்களெல்லாம் நீண்ட நேரம் உரையாற்றினால் தான் அதற்கு சுயமரியாதைத் திருமணம் என்று பெயர் அல்ல என்று குறிப்பிட்டேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *