கே: மேற்குவங்க மேனாள் முதல்வர் தோழர் ஜோதிபாசு அவர்கள் பிரதமராக வர இருந்ததை அப்போது அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களே விரும்பவில்லை என்று தோழர் தா.பாண்டியன் அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய செய்தியைப் பற்றி?
-க.தமிழ்மணி, தியாகராய நகர்
ப: மறுக்கப்படமுடியாத உண்மை. மூத்த செயலாளரான சுர்ஜித் அவர்களே முதல் எதிர்ப்பாளராக இருந்து அவர் பிரதமர் ஆவதைத் தடுத்தார் என்பது உண்மையே!
கே: காவிரி நீர்ப் பிரச்சினை பற்றி சுப்ரமணிய சுவாமி கூறுகின்ற கருத்தும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்தும் முரண்பாடாக உள்ளதே?
– வே.செம்பருத்தி, தாம்பரம்
ப: அரசியல் புரோக்கர் சுப்பிரமணியசாமி பா.ஜ.க.வில் இப்படி ஏதாவது உளறுவதற் காகவே, அவரை பா.ஜ.க. உள்ளே சேர்த்து, ‘மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி அண்மையில் தமிழிசை உட்பட இப்படி அவதிப்பட்டுக் கொண்டுள்ளார்கள்! பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடு பெயர் போனது என்று கூறுவது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?
கே: நடிகர்கள் நிறைந்த அரசியல் களமாக தமிழ்நாட்டு அரசியல் மாறுவது ஆரோக்கியமானதா?
– – தி.மோகனசுந்தரம், வேலூர்
ப: இது ஒரு சீசன். அவ்வளவுதான். பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் மாதிரி இது பதவிக் காய்ச்சல் சீசன். கெட்டபின்பு ஞானம் தானே வரும்!
கே: பா.ஜ.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்போது ஒவ்வொன்றாக விலகுவது அக்கட்சி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா?
– -மா.சிவக்குமார், திண்டிவனம்
ப: 56 அங்குல மார்பளவுடைய பிரதமர் மோடி _ உலகிலேயே மார்தட்டிய பிரதமர்களைக் கூடப் பார்த்துள்ளோம்; மார்பளவினை ‘மார்க்கெட்டிங் பொருளாக தேர்தலில் ஆக்கிய’ நமது பாரதப் பிரதமர் மொழியில் “கவுண்ட் டவுன் தொடக்கம், ஆரம்பம்’’ என்று சித்தராமய்யா பெங்களூருவில் கூறியுள்ளாரே!
கே: இந்திபேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
– ——- தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்
ப: தமிழ்நாட்டு உரிமைகளை வென்றெடுக்க முதுகெலும்புள்ள ஒரு மாநில அரசு வரும்வரை இந்த அவலம்தான்! ‘விவசாயி இளைச்சா எருது மச்சான் முறை கொண்டாடும்’ என்பார்கள்.
கே: தமிழக அரசியல் கட்சிகளில் ஒத்த கருத்துடையோராயினும், ஓரணியில் இணைவதற்குத் தடையாக இருப்பது எது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: அரசியல்! அரசியல்! பதவி! வாக்குவங்கி! _ போதுமா?
கே: நான் தந்தை பெரியாரின் கொள்கை வழியைத் தொடர்ந்து கடைபிடிப்பவன். வயது 79. என் போன்றோருக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப: தொடர்ந்து கொண்டே இருங்கள்; சீரிளமைத் திறன் வியந்து செயல்பட வாய்ப்பு வளரும்!
கே: நாம் ‘நீட்’ தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். ‘நீட்’ நிறுத்தப்பட தீர்மானம் இயற்றிய தமிழக அரசின் அமைச்சரே ‘நீட்’ தவிர்க்கப்பட முடியாது. மாணவர்கள் ‘நீட்’டுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறாரே?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப: தீர்மானம் அல்ல _ சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘மசோதா’(ஙிவீறீறீs)க்கள். இப்படிப்பட்ட போக்கில் தவறான நம்பிக்கை, தோல்வி மனப்பான்மையை _ மாணவர், பெற்றோர், ஆசிரியர் _ ஊடகங்கள் அனைவரிடத்திலும் விதைக்கும் அபாயம் உண்டு!
கே: சங்கராச்சாரி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தபோது கண்டனம் தெரிவிக்காத தமிழ் விரோத ஆரியப் பாசம் கொண்ட நடிகர்களின் (ரஜினி, கமல்) வேஷம் வெட்டவெளிச்சமானது பற்றித் தங்கள் கருத்து?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: ஒப்பனைகளோடு நிரந்தரமாக _ நீண்டகாலம் _ வாழ முடியாது என்பது இயற்கை விதி அல்லவா?