தேன் பற்றி தேனான செய்திகள்!-1

பிப்ரவரி 16-28

பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள் நேரடியாக கூட்டில் அடைத்து வைப்பதையே தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பூக்களில் இருந்து குளுகோஸை உணவாக அருந்தும் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒருவித திரவம்தான் தேன்.

தேனீக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையுள்ள சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பூக்களிலிருந்து இனிப்புத் துளிகளைச் சேகரிக்கின்றன. இவற்றைத் தனது வயிற்றில் செலுத்திச் சில வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. கடைசியில் அது தேனாகிறது.

தேனீக்களின் கடுமையான உழைப்பில் கிடைக்கும் தேனை மனிதர்கள் திருடினாலும் அதன் இனிப்புத் துளியைத் தேனாக மாற்றும் தொழில்நுட்பத்தை மட்டும் இன்றுவரை மனிதர்களால் திருட முடியவில்லை.தேனீக்களில் ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என மூன்று வகை உண்டு. வேலைக்காரத் தேனீக்கள்தான் இனிப்பைத் தேனாக மாற்றிச் சேமித்து வைக்கின்றன.

ராணீத் தேனீ சர்வ வல்லமை படைத்தது. ஒரு கூட்டில் ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணித் தேனீக்கள் உருவானால், தகுதியான ஒரு ராணித் தேனீயை மட்டும் விட்டு வைத்துவிட்டு மற்ற ராணித் தேனீக்களை வேலைக்காரத் தேனீக்கள் கொன்றுவிடும்.

எந்தவிதமான கலப்படமும் இல்லாத தூய்மையான தேனில் பல உயிர்காக்கும் காரணிகள் உள்ளன. பாலிபினால் (றிஷீறீஹ்ஜீலீமீஸீஷீறீ), ஃப்ளேவனாய்டுகள் (திறீணீஸ்ஷீஸீஷீவீபீs), புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் போன்றவை நிறைந் துள்ளன. எல்லா இயற்கை உணவுகளுடனும் இயற்கையாகச் சேரும் தேன், பல நோய்களிலிருந்து நம்மைக் காக்க உதவக்கூடியது. வணிகரீதியாகத் தேனில் பல கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பல வகையான இனிப்பு சிறப்புகள் மற்றும் சர்க்கரைப் பாகு, வெல்லப்பாகு, சோளப்பாகு போன்றவை கலக்கப்படுகின்றன. தேன் நல்ல தேனா… கலப்படமில்லாத தேனா? பரிசோதிக்க முடியும்.

கட்டைவிரல் சோதனை: ஒரு துளி தேனைக் கட்டைவிரலில் வைத்து, அது சிந்தினாலோ அல்லது பரவினாலோ உண்மையான தேன் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நீர் சோதனை: ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை நிரப்பி அதில் தேனை ஊற்ற வேண்டும். அப்போது தேன் தண்ணீரில் பரவினால் அது கலப்படத் தேன், நேரடியாக அடியில் சேர்ந்தால் உண்மையான தேன்.

தீக்குச்சி சோதனை: தீக்குச்சியை எடுத்து அதில் தேனைத் தொட்டுப் பற்றவைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். நன்றாக ஜுவாலைவிட்டு எரியும். கலப்படத் தேன் என்றால் எரியாது. கலப்படத் தேனில் ஈரப்பதம் இருக்கும்.

வினிகர் சோதனை: ஒரு டீஸ்பூன் தேனுடன் சிறிது நீர் சேர்த்து, அதில் இரண்டு மூன்று சொட்டு வினிகரைச் சேர்க்க வேண்டும். அப்போது அந்தக் கலவை நுரைத்தால் அது கலப்படத் தேன் என்று தெரிந்துகொள்ளலாம்.

மரங்கள், பூக்கள் போன்றவற்றில் இருந்து தேனை எடுக்கும் தேனீக்கள் நச்சு மலர்களில் இருந்து தேனை எடுக்காது என்பது ஆச்சர்யமான உண்மை. ஆம்… அரளி போன்ற மலர்களில் தேனீக்கள் தேன் எடுக்காது. எனவே, தேனில் நச்சுகள் இருக்குமோ அவை உடல் உபாதைகளை ஏற்படுத்துமோ என்ற வீண் அச்சம் தேவையில்லை. தேன் கெட்டுப்போகாத ஒரு பொருள்.

சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வில், உலகில் கிடைக்கும் நான்கில் மூன்று பங்கு தேனில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தேனில் எப்படிப் பூச்சிக்கொல்லிகள் என்கிறீர்களா? தேனீக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தையும் இனிப்புத் துளிகளையும் சேகரிக்கும்போது அவற்றுடன் அந்தச் செடியில் தெளிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகளையும் சேர்த்து எடுத்து வருகின்றன.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *