– தமிழோவியன்
‘நீட்’ தேர்வும் விளைவுகளும் ஆலோசனைக் கூட்டம்
ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 27.01.2018 சனியன்று மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ‘நீட்’ தேர்வும் விளைவுகளும் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்களின் ஆலோசனைக் கூட்டமும், தீர்மான நிறைவேற்றமும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
‘நீட்’ தேர்வும் விளைவுகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகள் கூறியவர்கள் வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட்ஸ் கட்சி செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக அமைப்புச் செயலாளர் அ.வந்தியத்தேவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி அ.பாக்கியம், மனிதநேய மக்கள் கட்சி ப.அப்துல் சமது, தமுமுக குணங்குடி ஆர்.எம்.அனிபா, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி எம்.ஜெய்னுல் ஆபிதீன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்த பேராயர் எஸ்றா சற்குணம், எஸ்.டி.பி.அய் அமீர் அம்சா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக வெளிவுறவுச் செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல கழகச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.குமாரதேவன்.
தீர்மானங்கள்:
1. மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு மனதோடு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
2. மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையம் என்று உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.
3. உயர் மருத்துவக் கல்வி இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
4. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
5. இவற்றையெல்லாம் முன்னிறுத்தி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திங்கள்கிழமை காலை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
6. அரசியல் கட்சிகளின், சமூக அமைப்புகளின் மாணவர்கள், இளைஞர்கள், அமைப்பினர் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூகநீதிப் பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வது என்றும், முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சனி காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 5.2.2018 அன்று காலை மாவட்டத் தலைநகரங்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றியவர்கள்
சென்னையில் கிளர்ந்து எழுந்த மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், சிபிஅய் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், காங்கிரசு மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந்திய சமூகநீதி இயக்க நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் ஏராளமானவர் பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை:
“நாடு முழுமைக்கும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும். மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இது கருணையோ, சலுகையோ அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசின் உரிமையாகும்.
மாநில உரிமை, ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கட்சி, ஜாதி, மத பேதங்களின்றி ஒரே உணர்வு படைத்த மேடை இது. ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெரும்வரை கலையாத மேடை இது.
1.6 விழுக்காடு மட்டுமே சிபிஎஸ்இ படிப்பவர்கள். 98.4 விழுக்காடு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின்படி படிக்கிறார்கள். ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற அரசமைப்புச் சட்டத்தின்படி உரிமை உள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையில் விரும்பாத மாநிலங்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உள்ளது.
தமிழ்நாட்டில் எதிர்ப்பே இல்லாமல் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வருகின்ற திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.
முதுநிலை மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நூறு விழுக்காடு இடம் அளிக்கப்பட வேண்டும். பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு அளிக்கப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்து மாணவர்களின் கிளர்ச்சி தொடரும். மக்களின் போராட்டங்களைக் கொண்ட வீதிமன்றங்களைப் போல், நீதிமன்றங்களிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் வழக்குத் தொடுப்போம். வெற்றி பெறுவோம். உரிமைகளை நிலைநாட்டுவோம். இவ்வாறு ஆசிரியர் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கொடிகளுடன் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டதோடு ஏராளமான பொதுமக்களும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உணர்ச்சி மிகுந்து முழக்கமிட்டனர். இறுதியில் திராவிடர் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் செம்மையுடன் நிறைவுற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்ததைப் போலவே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.