-மஞ்சை வசந்தன்
திராவிடர்_ஆரியர் போர் திரைவிலகி வெளிப்படத் தொடங்கிவிட்டது.
அணையப்போகும் நெருப்பும், நிற்கப்போகும் எஞ்சின் ஓசையும் ஓங்கி எழுந்தே ஒடுங்கும்!
ஆரிய பார்ப்பன ஆட்டமும் இப்பொழுது அந்த நிலையில்தான் ஆர்ப்பரித்து எழுகிறது!
ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற இறுமாப்பில் எகிறிக் குதிக்கிறார்கள்!
உலகம் ஒத்துக்கொண்ட டார்வின் அறிவியல் கருத்தையே அகற்றிவிட்டு, கடவுள் உலகைப் படைத்தார் என்றக் கட்டுக்கதையை புகுத்த முயல்கின்றனர்.
பசுமாட்டு மூத்திரத்தை ஊட்டச்சத்து தரும் பானம் என்று பருகச் சொல்கிறார்கள்!
செத்த சமஸ்கிருதத்தை சிம்மாசனத்தில் ஏற்ற மொத்த முயற்சியும் செய்கிறார்கள்.
கருவுற்ற பெண்கள் அசைவ உணவு உண்ணக்கூடாது என்று கட்டளைப் போடுகிறார்கள்.சைவ உணவை அரசின் உணவாக ஆக்கிவிட்டார்கள்.காதல் மணத்தையும், சாதி மறுப்பு மணத்தையும் கண்டாலே காலிகள், கூலிகள் மூலம் மோதிச் சிதைக்கிறார்கள்.
அடித்தட்டு மக்கள் உயர்கல்வி கற்க முடியாமல் அனைத்துத் தடைகளையும் போட்டு வருகிறார்கள்.
சில்லரை வணிகர்களை, சிறுதொழில் செய்பவர்களை அறவே அழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளை வளரவிட்டு, மீண்டும் சூத்திர வர்க்கத்தை சூழ்ச்சியாய் உருவாக்குகிறார்கள்.
எதிர்கால இளைய சமுதாயம் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும்படி, புராண குப்பைகளைப் பாடப் பொருளாக்குகின்றனர்.
அனைத்துத் துறைகளிலும் உயர் அலுவலர்களாக ஆரிய பார்ப்பனர்கள் அமர்த்தப்படுகின்றனர்.
இந்து என்ற உணர்வை ஊட்டி, 97% இந்துக்களை ஏமாற்றி அவர்களை அடிமைப்படுத்தி, 3% ஆரிய பார்ப்பனர்கள் அனைத்து ஆதிக்கத்தையும் அப்பட்டமாகச் செய்து வருகின்றனர்.
நீதித்துறை, கல்வித்துறை, ஆட்சிப் பணித்துறை, வங்கி, இரயில்வே, அஞ்சல்துறை என்று எல்லாத் துறைகளிலும் தங்களை முழுமையாக, முதன்மையாக நுழைத்துக் கொண்ட ஆரிய பார்ப்பனர்கள், எஞ்சியிருக்கும் கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றி, ஆதிக்கம் செலுத்தவும், அதன் சொத்துக்களை சுருட்டிச் சாப்பிட்டு ஏப்பம் விடவும் எத்தனிக்கின்றனர்; அதற்கான யுத்தத்தையும் தொடங்கிவிட்டனர்.
ஆரிய பார்ப்பனர்கள் அயல்நாடுகளிலிருந்து பிழைக்க வந்தவர்கள். தமிழரிடம் பிச்சை யெடுத்துப் பிழைத்தவர்கள். பிறகு சடங்குகள் மூலம் வருவாய் பெற்று வாழ்ந்தவர்கள். இறுதியாக கோயில்களில் நுழைந்து வாழ்வுக்கு வழித்தேடிக் கொண்டார்கள்.
தமிழர்கள் மண்ணின் மக்கள். கோயில்கள் எல்லாம் தமிழர்களின் உடமைகள், உரிமைகள். கோயிலின் இடம் தமிழர் உடையது; கோயிலுக்கான பொருள் தமிழருடையது; கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள். கோயிலுக்கான நிலங்களைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். கோயில்களில் ஆரிய பார்ப்பனர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை; உரிமையானவை எவையும் இல்லை.
ஒரு சொம்பு தண்ணீரை கலசத்தில் ஊற்றிவிட்டு கோயில் தங்களுக்கே உரியது என்கின்றனர். கோயிலுக்கு உரிமையானவனை கோயில் கருவறையுள் வராதே, கடவுளைத் தொடாதே என்கின்றனர்.
இன்றளவும் தமிழர்களை கருவறையுள் விடாது கட்டுப்பாடு காத்து வருகின்றனர்.
கோயில்களுக்குச் சொத்தைக் கொடுத்த, நிலத்தைக் கொடுத்த தமிழர்கள் கோயில் நிர்வாக உரிமையைப் பெற்றிருக்கக் கூடாது. அதுவும் தங்கள் ஆதிக்கத்திலே வரவேண்டும் என்று சதி செய்தனர்.
நீதிக்கட்சியின் சாதனை
அவர்களுக்கு எதிராய் கோயிலின் உரிமையாளர்களான, கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் ஆளுகையில் கோயில்களைக் கொண்டுவர நீதிக்கட்சி ஆட்சி முயன்றது. பொதுவாகத் தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் சைவ, வைணவக் கோவில்கள் அதிகம். பழங்காலம் தொடங்கி இக்கோவில்களுக்கு வழிபடச் செல்லும் பயணிகளும் பக்தர்களும் தங்கள் நிலங்களையும் மற்ற உடைமைகளையும் அறக்கட்டளை களாக்கினர். உறுதியான தெய்வ பக்தியில் ஆழ்ந்திருந்த அவர்கள் இம்மையைச் செம்மை செய்ய அற்ககட்டளைகளை ஏற்படுத்தினர். கோவில்களன்றி மடங்களும், சமயம் சார்ந்த சிறிய அமைப்புகளும் வழக்கமாக உள்ள குரு _ சீடர் முறையில் இயங்கின. சமய ஈடுபாடுள்ள மக்கள் இத்தகைய மடங்களுக்கு அறக்கட்டளைகளை உருவாக்கினர். அவற்றுள் சில பெருமளவில் வளர்ந்து வளம் சேர்ந்தன. இம்மடங்களும் கோவில்களும் எப்பகுதியில் இருந்தனவோ அங்கே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு பல்வகைச் சமூக நிகழ்வுகளை நடத்துகின்ற மையங்களாகவும் அவை விளங்கின.
இப்படியே பல ஆண்டுகள் செல்ல, கோவில்கள் தென்னிந்திய உள் சமூக அமைப்பில் மகத்தான அதிகாரமுள்ள நிறுவனங்களாக வளர்ந்தன. எனவே, மத்திய கால ஆட்சியாளர்கள் கோவில்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்தனர். கோவில்களின் நிதிகள் தணிக்கை செய்யப்பட்டன. கோவில்களை ஆய்வு செய்வது என்பது அரசுக்குப் பெருமைப்பாடான பணியாயிற்று. ஆகவே, அரசு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது. பின்னாளில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கோவில் நிதிகளின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். சென்னை மாகாண அரசின் 1817ஆம் ஆண்டுச் சட்டம் VII ஆவது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவின்யூ போர்டுக்கு வழங்கியது.
ஆனால், அறங்காவலர்களால் இம்முறை ஏற்கப்படவில்லை. அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய மதங்களில் தலையிடுவதில்லை எனும் பொதுக் கொள்கை வகுத்துக் கொண்டு, கோவில்களின் நிர்வாகங்களிலிருந்து பிரிட்டிஷ் அரசு விலகிக் கொண்டது. இதற்கு மரபுப்படியான ஒப்புதலைச் சட்டமன்றம் வழங்கியதோடு 1863ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அறநிலையச் சட்டம் XXன்படி அரசின் நடுநிலைமையை வெளிப்படுத்தியது. இந்தச் சட்டப்படி அரசு எல்லாப் பொறுப்புகளையும் கோவில்களின் அறங்காவலர்களுக்கே வழங்கியது. இதுகுறித்து மக்களின் ஆழமான கருத்தை அறியவும், மேற்சொன்ன சட்டம் பற்றிய ஆய்வை வெளிப்படுத்தவும், அறக்கட்டளை களின் நல்ல நிர்வாகம் பாதுகாக்கப்படவும் 1874, 1876, 1884, 1894 ஆகிய ஆண்டுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தன்னலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. அரசோ மதத்தில் தலையிடுவது இல்லை எனும் கொள்கையால் சில விஷயங்களில் அதிகமாகக் கவலைப்படவில்லை.
பல ஆண்டுகளாகக் கோவில் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை. மிக மோசமான நிர்வாகச் சீர்குலைவுகள் நடைபெற்று வந்தன. அரசு மதத்தில் தலையிடுவதில்லை என்கிற கொள்கையைப் பின்பற்றியதால் அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டது. ஆனால், இந்திய அரசியல்வாதிகள் அரசின் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள். கோவில் பிரச்சினைகளில் அரசு தலையிட்டுத் தகுந்த சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தியது. எடுத்துக் காட்டிற்குக் கூற வேண்டுமானால் 1905ஆம் ஆண்டு பெல்லாரியில் கூடிய சென்னை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது.
‘இந்து அறக்கட்டளைகளில் நிர்வாகச் சீர்குலைவும், நிதிமோசடிகளும் மிக அதிகமாக உள்ளன. இம்மாகாணத்தில் இவற்றை யெல்லாம் சோதனை செய்யச் சட்டம் இயற்றப்பட்டும் இன்னமும் குறைகள் இருக்கின்றன. ஆகவே, தேவஸ்தான கமிட்டிகளின் உறுப்பினர்களை அளவாக நியமிக்கவும், கணக்குகளைப் பருவம்தோறும் வெளியிடவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது’’.
இத்தகைய போக்குகளில் அதிருப்தியுற்ற சில இந்து சமயத்தினர், ‘தரும இரட்சண சபை’ அல்லது ‘அறக்கட்டளைப் பாதுகாப்புச் சங்கம்’ எனும் பெயரில் 1907ஆம் ஆண்டு மதுரையில் ஓர் அமைப்பை உருவாக்கினர். இந்தச் சபை நிதிமோசடிகளை ஆய்வு செய்து கண்டறிந்தது. நீதிமன்றங்களுக்குச் சென்றது, குற்றம் செய்த அறங்காவலர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தரவேண்டுமென்றது. ஒழுக்கமற்ற அறங்காவலர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக இருக்கும் என நினைத்தது. கணக்குகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும் எனும் கோரிக்கை அடிப்படையில் ஒழுங்கற்ற நிர்வாகத்தைக் கண்காணித்தால், விரும்பிய விளைவு ஏற்படும் எனச் சபை உணர்ந்தது. இவற்றைத் தொடர்ச்சியாக மேற்பார்வையிட ஆய்வாளர்களைச் சபை நியமனம் செய்யலாம் எனத் தீர்மானித்தது. இத்தகைய நடவடிக்கைகள் நல்ல முடிவுகளைத் தந்தன என்பதைச் சபையின் நான்காம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிர்வாகச் சீர்குலைவுக்குக் காரணமானவர்கள் சபையின் செயல்பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
“தரும இரட்சண சபை”யின் நடவடிக்கைகளைச் சில பார்ப்பனர் அல்லாதார் சந்தேகமாகப் பார்த்தனர். எடுத்துக் காட்டிற்காகச் சொல்வதானால் மெட்ராஸ் மெயில் நாளேட்டில் (17.11.1916) ஒரு செய்தியாளர் ‘சமூகநீதி’ எனும் புனைப்பெயரில் அதன் ஆசிரியர்க்கு எழுதியபோது,
‘தரும இரட்சண சபையின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத அறங்காவலர்கள் உள்ள இடத்தில் பார்ப்பனர்களை நியமிப்பதற்காகத் தான் என்று பொதுவாகப் பேசப்படுகிறதே, இது உண்மையா?
என்று கேள்வி எழுப்பி இருந்தார். ‘சபையினுடைய நடவடிக்கைகள் பார்ப்பனர்களால் இயக்கப்பட்டன. ஆகவே, அதன் பலன் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும் விதத்தில்தான் நடவடிக்கைகள் அமைந்து உள்ளன. சீர்திருத்தம் உண்மையாக இருக்குமானால் அதன் பலன் ஒரு வகுப்புக்கு மட்டுமல்ல, எல்லா வகுப்பார்க்கும் கிடைத்திருக்க வேண்டும்’ என்றும் அவர் எழுதியிருந்தார்.
1917ஆம் ஆண்டு ஆகஸ்டில் கோவையில் கூடிய பார்ப்பனர் அல்லாதார் மாநாடு, இந்துமத அறக்கட்டளைகள் தமது நிதிகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதப் பள்ளிகளை உருவாக்குவதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அதே தீர்மானத்தில் அரசுக்கும் சமஸ்கிருதப் பள்ளிகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும், அந்த நிதிகளைப் பயன்படுத்தி ஆரம்பப் பள்ளிகளைத் திறக்குமாறும் பரிந்துரைத்தது. அம்மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் எல்லாம் சமஸ்கிருதப் பள்ளிகள் திறப்பதால் பார்ப்பனர் மட்டுமே பயனடைய முடியும் என்று குறிப்பிட்டனர்.
காலம் செல்லச் செல்ல அரசியல்வாதிகளால் மோசமான சூழ்நிலை உருவானதை அறிந்த மக்கள், அரசைத் தலையிடுமாறு கோரினர்.
நீதிக்கட்சியின் இரு அமைச்சரவைகள் (1920_23, 1923_26) இந்து அறநிலையச் சட்டத்தைக் கட்சியின் முக்கிய கவுரவப் பிரச்சினையாகக் கருதி நிறைவேற்றின. இது நீதிக்கட்சியை மிக மேன்மைப்படுத்திய சட்டமாகும். இச்சட்டம் நிறைவேற்றப்படுகிற போது சட்டமன்றத்தில் மிகப் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. கடைசியில் இச்சட்டம் பார்ப்பனர் _ பார்ப்பனர் அல்லாதாரிடையே பலப்பரிட்சையைத் தோற்றுவித்தது. இந்த மசோதா இரண்டு முறை நிறைவேற்றப்பட்டது. இதற்குச் சட்டமன்றத்தில் மட்டுமன்றி, சட்டமன்றத்திற்கு வெளியேயும் பார்ப்பனர் அல்லாதாரின் ஆதரவு நிரம்ப இருந்தது. இது பார்ப்பனர் அல்லாதாரிடையே இன உணர்ச்சியை வளரச் செய்தது. அதாவது திராவிடத் தேசியம் வளர்ந்து வருவதை அடையாளப்படுத்தியது.
இப்போது உள்ள இந்து அறநிலையத் துறையை கட்டுப்படுத்தும் சட்டம், பெரியாரின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1959இல், Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 என்ற சட்டமாக முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது.
பிறகு 1991இல் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில், இந்த சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து, பார்ப்பனரின் கோயில் கொள்ளையை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்து அறநிலையத் துறையின் வேலை
1. மிக மிக கூட்டமான கோயில்களில் பூசாரிகள் கன்னாபின்னாவென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே அழைத்துச் செல்வதைத் தடுப்பது.
2. முறையாக டிக்கட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது.
3. கோயில் உண்டியல் முதல் இந்தச் சிறப்பு தரிசன டிக்கட்டுகள், கோயிலைச் சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்தப் பணங்கள் கோயில் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் முறையாக செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது.
5. கோயிலுக்கு நிலங்கள், சொத்துகள் இருந்தால் அந்தக் குத்தகை, வாடகைப் பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது இவை போன்றவைதான் இத்துறையின் வேலை.
கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை செய்துவரும் நிலையில், அந்த நிர்வாகப் பொறுப்பையும் தாங்களே அபகரித்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நப்பாசையில் ஆரிய நரிகள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலைகின்றனர்.
அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்து அறநிலையத் துறையில் ஊழல் மலிந்து விட்டனவாம். எனவே, இந்து அறநிலையத் துறையே கூடாதாம். கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமாம்!
ஆரிய பார்ப்பனர்களின் இந்தக் கோரிக்கை எந்த அளவிற்கு அபத்தமானது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதா?
ஒரு துறையில் சீர்கேடு, ஊழல் என்றால் அதைக் களைந்து அதைச் சீர்செய்வதுதானே வழக்கம். மாறாக, சீர்கேடுள்ள துறையையே நீக்க முடியுமா?
உயர்கல்வித் துறையில் அண்மையில் சீர்கேடு, ஊழல் மலிந்து, கேவலமாய் கீழ்த்தரமாய் ஆகியுள்ளது. துணைவேந்தர் நியமனம் முதல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் நியமனங்கள் வரை கோடிக் கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் ஊழல் நடைபெற்று, துணைவேந்தரே துணியால் முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளியாய் காவல்துறையினர் பின்னே கைதியாய்ச் செல்கிறார். அந்தக் காட்சிகளை அன்றாடம் காட்டுகிறது தொலைக்காட்சி! அதற்காக உயர்க்கல்வித் துறையையே ஒழித்துவிட முடியுமா?
மருத்துவத்துறையில் மகத்தான ஊழல் அதற்காக மருத்துவத் துறையையே ஒழித்துவிட வேண்டுமா? ஒழித்துவிடத்தான் முடியுமா?
யாரிடம் ஒப்படைப்பது?
இந்து அறநிலையத் துறையை ஒழித்துவிட்டு, கோயில்களின் நிருவாகத்தை யாரிடம் ஒப்படைப்பது? ஆரிய பார்ப்பனர்கள் பதில் சொல்வார்களா? பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த பக்தரிடம், எந்த அடிப்படையில் ஒப்படைப்பது? அதற்கு என்ன தகுதி? அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி! இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆரிய பார்ப்பனர்கள் பதில் சொல்வார்களா?
திராவிட இயக்கங்கள் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, கோயில்களை அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று நிர்வகிக்கும் வகையில் இந்து அறநிலையத் துறையை அமைத்தது. ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது பொறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆரிய ஆதிக்கக் கூட்டம், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்திருப்பதால், அதை மாற்றிப் பார்க்கலாம், ஆரிய ஆதிக்கத்தை கோயில் நிர்வாக அரியணையில் ஏற்றிப் பார்க்கலாம் என்று நப்பாசையில் நாக்கை ஆட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
இந்துக்கள் நலன் என்பதெல்லாம் பார்ப்பனர் நலமே
இது தமிழர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலக்கட்டம். இந்துக்கள் நலனுக்காகப் பேசுவதுபோல் காட்டிக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்துக்கள் நலன் என்றால் ஆரிய பார்ப்பனர்கள் நலன்தானே!
கூட்டம் காட்டுவதற்கு, கோஷ்ட்டி சேர்ப்பதற்கு நம்மை இந்துக்கள் என்பர். கோயிலுக்குள் செல்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் அவர்களுக்கே உரிமை என்பர்; நம்மைச் சூத்திரன் என்பர்.
97% மக்களைச் சூத்திரன் என்று தாழ்த்திவிட்டு, நாமெல்லாம் இந்துக்கள் என்பது ஏமாற்று வேலையல்லவா?
உரிமையாளர்க்கும் ஒண்ட வந்தோர்க்கும் நடக்கும் போராட்டம்
இது பக்தர்கள் விவகாரம் என்று பார்ப்பனர்கள் தந்திரமாய் திசை திருப்புவர். இது பக்தர், நாத்திகர் பிரச்சினையல்ல. இது திராவிடர் ஆரியர் போராட்டம்! உரிமையாளர் களுக்கும் ஒண்ட வந்தவர்களுக்குமான போராட்டம்.
அனைத்தும் நம் மக்களுக்கு உரிமையானது என்னும்போது அவற்றின் நிர்வாகமும் நம்மிடம்தானே இருக்க வேண்டும்? அதை ஆரிய பார்ப்பனர்கள் கைப்பற்ற சதி செய்வதை சகிக்க முடியுமா?
கோயில் நிர்வாகம் என்பது பக்தி சார்ந்தது அல்ல. அது உரிமை சார்ந்தது. முதலில் இதில் புரிதலும் தெளிவும் வேண்டும்.
கடவுளை மறுக்கின்றவர்கள் இதை ஏன் கையில் எடுக்கிறார்கள்? ஏன் பேசுகிறார்கள் என்பது திசை திருப்பும் சூழ்ச்சி. கோயில் நிர்வாகத்திற்கு நாத்திகனும் வரி செலுத்துகிறான். நாத்திகனும் உரிமையுள்ளவன். நம்பிக்கை என்பது வேறு, உரிமை என்பது வேறு! நாத்திகனும் இந்துதான் என்று எழுதிவைத்துவிட்டு, நாத்திகர்கள் இதில் தலையிடலாமா என்பது அசல் பித்தலாட்டம் அல்லவா?
மடாதிபதிகள் மயக்கந் தெளியவேண்டும்!
இந்து என்பதிலும், கோயில் நிர்வாகம் என்பதிலும் மடாதிபதிகள் பலர் மயங்கி ஆரிய பார்ப்பனர்களுக்குத் துணைநிற்பது அறியாமை; புரியாமை. மடாதிபதிகள் தமிழர்கள்! அவர்கள் உரிமையும், மேலாண்மையும், சிறப்பும் ஆரியத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம்தான் இது. குன்றக்குடியார் இருந்தால் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்ற நோக்கில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
மடங்கள் வெறும் பக்திக்கும் பஜனைக்குமானவை மட்டுமல்ல. அவை தமிழன் காப்பிடங்கள், வளர்ப்பிடங்கள், பரப்பிடங்கள்! தமிழர் பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் பாதுகாப்பிடங்கள். பொருளாதாரத்தின் நிலைக்கலன்கள்.ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் தமிழ், தமிழர் பண்பாடு, கலைகளுக்கு எதிரானவர்கள். அப்படியிருக்க அவர்களுடன் கைகோர்ப்பதோ, களத்தில் நிற்பதோ, கருத்துக்களில் ஒத்துப் போவதோ மடத்தின் நோக்கிற்கும், தமிழர்க்கும் எதிரானது, கேடானது என்பதை ஆழ உள்ளத்தில் பதித்து மடாதிபதிகள் செயல்பட வேண்டும்!
ஓரணியில் நின்று வென்று காட்டுவோம்!
இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில் நிர்வாகத்தை மீட்டு இந்து பக்தர்களிடம் ஒப்படைப்போம் என்கின்றனர் ஆரிய பார்ப்பனர்கள். அப்படியென்றால் ஆலய நிர்வாகங்கள் இப்போது இந்துக்களிடம் இல்லாமல் இஸ்லாமியர்களிடமும், கிறித்தவர்களிடமுமா உள்ளது? எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை பாருங்கள்!
எனவே, தமிழர்கள், அவர்கள் பக்தர்களாயினும், நாத்திகர்களாயினும், மடாதிபதிகளாயினும், ஆட்சியாளர்களாயினும், ஊடகத்துறையினராயினும் அனைவரும் ஓரணியில் நின்று ஆரிய பார்ப்பனர் சூழ்ச்சியை முறியடித்து கோயில் நிர்வாகம் அவர்கள் ஆதிக்கத்தில் செல்லாமல், தடுத்து நம் உரிமையைக் காக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!