காட்டுமிராண்டித்தனங்கள்

பிப்ரவரி 16-28

 

-தந்தை பெரியார்

 

மனித சமுதாயம் தோன்றிய நாளில் இருந்த மாதிரியே இன்றும் இல்லை. அது நாளுக்கு நாள் மாறுதல் அடைந்து வருகிறது- இந்த விசேஷத்துவம் மனித ஜீவராசிக்கு மட்டும் தான் உண்டு. மற்ற பறவை, மிருகங்கள் முதலியவை எல்லாம் 2,000 வருடங்களுக்கு முன்னதாக எப்படி இருந்தனவோ, அதைப் போலத்தான் இன்றும் இருக்கின்றன. 2,000 வருடங்களுக்கு முன் வேட்டி கட்டாத சிங்கம் இன்று வேட்டிக் கட்டிக் கொள்ள வில்லை. அன்று பார்த்த நிலைமைக்கு அழிவில்லாமல் மற்ற ஜீவராசிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால், மனிதன் மட்டும் நாளுக்கு நாள் மாறுதல் அடைந்து கொண்டே இருக்கிறான். காரணம், மனிதனுக்குச் சிந்திக்கும், ஆராயும் சக்தி இருக்கிறது. அதனால் தான் மனிதன் வேகமாக மாறுதல் அடையவும், வசதி செய்து கொள்ளவும் முடிகிறது.

இத்தனை அறிவு படைத்த மனித சமுதாயத்தில் உலகத்தின் மற்ற பல பாகங்களில் இல்லாத மாதிரியான காட்டுமிராண்டித் தனங்கள் இந்த நாட்டிலே இன்னமும் இருக்கின்றன; இங்கிலாந்திலே இல்லாத பார்ப்பான், ஜெர்மனியிலே இல்லாத பறையன், அமெரிக்காவிலே இல்லாத சூத்திரன், இங்கே  – இந்த நாட்டிலே கடவுளின் பேரால், மதத்தின் பேரால், சாஸ்திரத்தின் பேரால் இருக்கிறான்.

2,000 வருடங்களுக்கு முன்னும் நாம் சூத்திரர்கள்தான். பஞ்சமர்கள்தான். இவ்வளவு நாகரிக காலத்திலும் நாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள்தான்; இதிலே எந்தவிதமான மாறு தலும் இல்லை; காரணம் என்னவென்றால், நாம் நம்முடைய சிந்தனையை ஒரு துறையில் மட்டும் உபயோகிக்கவே கண்டிப்பாக மறுக்கிறோம். கடவுள், மதம், சாஸ்திரம் என்பவற்றின் பேரால் என்ன சொல்லப்பட்டாலும், அது எதுவாக இருந்தாலும் கொஞ்சங்கூட யோசிக்காமல் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்கிறோம். கடவுளின் பேரால் சாணியை சாமி என்றாலும், மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் _- பஞ்ச கவ்யம் குடித்தால் புண்ணியம் என்றாலும், வெறும் வெத்துச் சாம்பலை திருநீறு, அதைப் பூசினால் பாபங்கள் பறந்து போய்விடும் என்றாலும் நம்புவதற்குத் தயாராய் இருக்கிறோம். அதுபோலவே கற்தச்சன் அடித்து வைத்த குழவிக்கல்லை தெய்வம், கடவுள் என்று சொன்னாலும் ஏன்? எதற்கு? இப்படித் தானா? என்று நடப்புகளுக்குக் கட்டுப்படுகிறோம். அந்த மாதிரி அந்த அறையிலே மட்டும் அறிவைச் செலுத்தக் கூடாதபடி செய்து விட்டார்கள். அதாவது ஆராய்ச்சியைச் செலுத்தினால் நரகம்தான் கிடைக்கும் என்று கூறி வைத்து விட்டார்கள். அதனால் நம் முட்டாளும், நமக்கேன் என்று போகிற போக்கிலே கன்னத்திலே அடித்துக் கொண்டு பார்ப்பானுக்குத் தட்சணை கொடுத்து விட்டுப் போய்விடுகிறான்.

மேல் நாட்டவர்கள் ஓடும் ரயில், பஸ், பறக்கும் ஏரோப்பிளேன், நீரில் மிதந்து செல்லும் கப்பல் மற்றும் இதுபோன்ற எத்தனை எத்தனையோ வசதிகளை ஒலிபெருக்கி, ரேடியோ, டெலிபோன், டெலிவிஷன், மின்சார விளக்கு – அதில் லட்சம், 10 லட்சம் காண்டல் பவர் என்பதாகவெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு போகிறார்கள்.

மற்றும் நேற்று சொன்னார்கள், கெட்டுவிட்ட ஒரு பகுதி – ஒரு புற இருதயத்தை ஆபரேஷன் செய்து எடுத்து விட்டு மனிதன் சவுக்கியமாய் இருக்கும்படிச் செய்கிறார்கள் என்றும் மற்றும் இதுபோன்ற எத்தனையோ அற்புதங்களையெல்லாம் செய்கிறார்கள் என்றும் இன்னும் சொல்லுகிறார்கள். மனிதனுடைய விஞ்ஞான வளர்ச்சி மனித சமுதாயத்துக்கு இறப்பே இல்லை என்கிற மாதிரியில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. நோய் வந்து உடல் நிலை சீர்கெட்டால் தானே மனிதன் சாகிறான். ஆதலால் நோயே வராமலோ அல்லது வந்த நோயைக் குணப்படுத்தி விட்டாலோ மனிதன் சாக வேண்டிய அவசியம் என்ன? என்கிற மாதிரியில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருநாள் சாப்பாட்டுக்கு இவ்வளவு செலவும் பலவித வகையறாதிகள் என்கிற மாதிரி நிலைமையில்லாமல் எல்லா சத்துக்களையும் மிளகு அளவுள்ள ஒரு மாத்திரையில் அடக்கி, அந்த மாத்திரை ஒன்றும் சாப்பிட்டால் போதும் என்கிற மாதிரியில் வரப் போகிறது. இவ்வளவு தூரம் நாட்டில் விஞ்ஞானமும், அறிவும் வளர்ந்திருக்கிறது. இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறதே, அதன் மூலம் பலப்பல புதுப் புதுப் பொருள்கள், வசதிகள் கண்டுபிடிக்கப் பட்டு இன்றைய தினம் நம்முடைய நடப்பிலும், உத்தியோகத்திலும் அனுபவிப்பிலும் வசதியாக இருக்கிறதே; இவற்றில் ஏதாவது ஒன்றைக் கூட நாம் கண்டுபிடிக்கவில்லை; நம்மால் கண்டு பிடிக்கப்பட்டது என்று ஒன்று கூட இல்லை. எவனோ, எந்த நாட்டானோ கண்டு பிடித்துக் கொடுத்ததை சும்மா நாம் அனுபவித்துக் கொண் டிருக்கிறோமே ஒழிய, நாமாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை.

நாம் கண்டுபிடித்தவையெல்லாம் மேலே ஏழு லோகம், கீழே ஏழு லோகம், சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூன்று கடவுள்கள், அவர்களுக்குப் பெண்டாட்டிமார்கள், வைப்புகள், கூத்திகள், கலியாணம், குடும்பம், பிள்ளை குட்டிகள், குட்டி சாமிகள்; பெரிய சாமிகள், பல லட்சம் கடவுள்கள், பல கோடி தேவர்கள் என்பதுதான் நம்முடைய அறிவு போட்டி போட்டுக் கொண்டு இந்த காட்டுமிராண்டித் தனத்திலே சொல்கிறதே தவிர, மனிதன் வாழ்வு பற்றியோ, அதன் மகத்தான பெருமையைப் பற்றியோ சொல்லவேயில்லை; நீங்கள் பழைய புராணங்களையும், கடவுள், மத, சாஸ்திரங் களையும் எடுத்துப் பார்த்தீர்களானால் இமயமலையோடு உலகமே முடிந்து விட்டது என்றுதான் இருக்கும். அதற்கு மேலே ஒன்றும் சொல்லப்பட்டிருக்காது; இமயமலையைப் பார்த்தால் அதிலே படர்ந்து நிற்கிற பனி சூரிய வெயிலிலேயே வெண்மையாகக் காட்சியளிக்கக் கண்டு அதை வெள்ளி மலையாக்கி, வெள்ளியங் கிரியாக்கி, சிவக்கடவுள் வாசம் செய்வது அங்கேதான், கைலயங்கிரி அது என்று சொல்லி விட்டான். அதற்கு மேலே அவன் புத்தி போகவேயில்லை. அந்த மத காலத்தில் புத்தி அவ்வளவு தான் என்றால், உலகத்தைப் பறந்து சுற்றுகிற இந்தக் காலத்திலும் அதே கையலயங்கிரி கடவுள் க்ஷேத்திரம் என்று கருதுகிறவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதோ தெரியவில்லை.

உலகமெல்லாம் வேகமாக வளர்ந்து வரும்போது சந்திர மண்டலத்தில் குடியேற முடியுமா? உயிர்களை உண்டாக்க முடியுமா? சாகாமல் தடுக்க முடியுமா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, அதிலே ஓரளவுக்கு வெற்றியும் அடைந்திருக்கிற காலத்திலா நாம் ஒரு சாண் குழவிக்கல்லை ஒரு டன் பாரமுள்ள விறகு அடுக்கி அதற்குப் பெயர் தேர் என்று சொல்லி 400, 500 பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டு திரிவது? கடவுளுக்குக் கல்யாணம், தேவடியாள் வீட்டுக்குக் கூட்டிச் செல்லுவது போன்ற திரு விழாக்களை நடத்திக் கொண்டு இருப்பது? இத்தகைய காட்டு மிராண்டித்தனத்திலேயே … இன்னமும் இருப்பதா?

இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பாடுபடுகிற ஒரு ஜாதி பட்டாளி மக்கள் ஜாதி – கீழ் ஜாதி – பஞ்சம ஜாதி பாடுபடாமல் ஊரான் உழைப்பிலேயே சாப்பிடுகிற ஜாதி – பிராமணன் – உயர்ந்த ஜாதி மகன்? இதுவா நம் நிலைமை? இப்படியேதானா இருக்க வேண்டும்? இந்த மூடத்தனங்களும், காட்டுமிராண்டித் தனங் களும் நிலையாக இருப்பது பார்ப்பானுக்கு லாபமாக இருக்கலாம். அவனுடைய வாழ்வுக்கு – லாபத்துக்கு வசதியாக இருக்கலாம். அதனால் அவன் வேண்டுமானால் – பார்ப்பான் வேண்டு மானால் இந்தக் கல்லுச்சாமி கடவுள்களைக் கட்டிக் கொண்டு அழலாம்? நம் பிரகஸ்பதிகளும்கூட சேர்ந்து கொண்டு ஏன் ஜே போட வேண்டும்?

வேண்டுமே! இந்தச் சாமிகளாலும், கடவுள்களாலும் இந்த நாடு ஒரு இஞ்சு முன்னேறியது என்று சொல்ல வேண்டுமே! ஒரு இழவும் பிரயோசனமில்லை; பணமும், புத்தியும் பறி போவதைத் தவிர இந்தக் காலத்தில் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?

(26.2.1953 அன்று திருமால்பூரில்

தந்தை பெரியார் முழக்கம் – விடுதலை 27.2.1953)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *