-சிகரம்
பாடல் பாடினால் பாம்பு நஞ்சு அகலுமா?
அப்பூதியடிகள் தம் திருமனைவியாரை நோக்கி, “திருநாவுக்கரசர் திருவமுது செய்ய இசைந்தது நாம் செய்த தவப்பயனேயாகும்; இது சிவபெருமான் திருவருளினால் வந்தது; இதன் மூலம் நாம் கடைத்தேறுவோம்’’ என்று தம்மில் கூறி மகிழ்ந்துகொண்டு திருவமுதினைச் சமைக்கத் தொடங்கினார். அறுசுவை பொருந்திய தூய நற்கறிகள், திருவமுது முதலியவற்றை ஆக்கினார்; ஆண்ட அரசுகள் திருவமுது செய்வதற்குரிய பரிகலத்துக்காக தமது மக்களுள்ளே மூத்த திருநாவுக்கரசினை நோக்கி, “வாழையின் நல்லதொரு குருத்தினை அரிந்து கொண்டு ஓடிவா’’ என்று விரைந்து அனுப்பினார்.
மூத்த திருநாவுக்கரசை அரவம் தீண்டுதல்
“நல்ல தாய் தந்தையர் ஏவ அதன்படி நான் இப்பணி செய்யும் பேறு பெற்றேன்’’ என்று மூத்த திருநாவுக்கரசு உள்மகிழ்ந்து விரைந்து தோட்டத்தினுள் நுழைந்தான்; பெரிய வாழையின் செழிய குருத்தினை அரியும்போது பாம்பு ஒன்று அவன் வருந்திச் சோரும்படி அங்கையில் தீண்டிக் கையினில் சுற்றிக் கொண்டது. தீக்கண்களுடன் காணப்பெற்ற அப்பாம்பினைக் கீழே உதறி வீழ்த்திவிட்டுப் பதைப்புடனே, “இத்தீய விடத்தின் வேகத்தால் நான் கீழே வீழா முன்னர் அரிந்த இக்குருத்தினைச் சென்று கொடுப்பேன்’’ என்று விடத்தின் வேகம் பின்னுற மிக வேகமாக வருத்தத்துடன் ஓடிவரும்போது, “பாம்பு தீண்டிய செய்தியினைத் திருநாவுக்கரசர் திருவமுது செய்வதற்கு இடையூறாகும்படி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’’ என்று உட்கொண்டு, திருந்திய மனத்துடனே செழுமனையின்கண் புகுந்தான். அழிக்கும் விஷமானது முறையே மேல் ஏறி ஏழாம் வேகம் தலைக்கொண்டது; அப்போது பற்களும் கண்களும் மேனியும் கருநிறமடைந்து, சொற்கள் தடுமாறின; உயிர் நீங்கும் நிலைவந்தும் அதனை விடாமற் கொண்டு மூத்த திருநாவுக்கரசு வாழைக் குருத்தைத் தாயார் கையில் கொடுத்து விட்டுக் கீழே வீழ்ந்தான். மயங்கி வீழ்ந்த மூத்த புதல்வனை அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் உற்று நோக்கினர்; கையினில் உதிரம் சோரும் வடுவையும், உடலின் குறிகளையும் கண்டு, “விடந்தீண்டியதனால் இறந்தான்’’ என்று துணிவு கொண்டனர்; அதனால் மனத்துளக்கம் சிறிதுமின்றித் திருநாவுக்கரசர் திருவமுது செய்வதற்குரிய உபாயத்தை எண்ணினார். பெறலரும் புதல்வனைப் பாயினுள் வைத்து மூடி வீட்டின் பின்புறத்திலுள்ள முற்றத்தினிடத்து ஒரு புடையில் மறைத்துவைத்து, “இது சிறிதும் தெரியாவண்ணம் அமுது செய்விப்போம்’’ என்று துணிவுகொண்டு, திருநாவுக்கரசரை நோக்கிப் பெரும் வியப்பினோடு அப்பூதியடிகள் விரைந்து வந்தார்.
திருநாவுக்கரசர் அமுது செய்ய எழுந்தருளுதல்
திருவமுது செய்யக் காலந்தாழ்க்காமல் இன்னடிசில், கறியமுது முதலியவற்றை அழகுற ஒருபால் அமைத்து வைத்துக் கொண்டு அதன்பின் அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் முன்வந்து வணங்கி, “தேவரீர் திருவமுது செய்து எமது குடிமுழுதும் உய்யும்படி ஆட்கொள்ள வேண்டும்’’ என்று வேண்டிட திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு, எழுந்து அடியிணை விளக்கிக் கொண்டு, வேறோர் ஆசனத்தேறிப் பரிகலம் திருத்தி அமைப்பதற்கு முன்னர், அவ்வாசனத்தில் அமர்ந்து தாம் திருவெண்ணீற்றினைச் சாத்தி, அடிமைத் திறத்தில் நின்ற அப்பூதியடிகளுக்கும் அவர் மனைவியார்க்கும் திருநீற்றி¬னை அளித்து, ஏனைப் புதல்வர்ககும் அளிக்கும்போது, “இவர்க்கு மூத்த பிள்ளையையும் திருநீறு சாத்தற்குக் காட்டுவீராக!’’ என்றார்.
அதனைக் கேட்ட அப்பூதியடிகள் நிகழ்ந்த செயல்கள் ஒன்றினையும் உரையாமல், “இப்போது இங்கு அவன் உதவான்’’ என்றனர்.
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
“காதலால் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும்; முன்னே
மேதகு பூதி சாத்த’’
என்றலும் விளைந்த தன்மை
யாதுமொன் றுரையார் “இப்போது
இங்கவன் உதவான்’’ என்றார்.
அவ்வுரை கேட்டபோதே திருநாவுக்கர சருடைய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் தோன்றியது. அப்பூதியடிகளைப் பார்த்து, இவ்வுரையினை என் உள்ளம் பொறாது; அவன் என்ன செய்தனன்? இதற்கொன்றுண்டு; நீர் உண்மையினை விரித்து உரையும்’’ என்றார். அதற்கு அப்பூதியார் உடல் நடுங்கிப் பயந்து,”பெரியவர் அமுது செய்தருளும் இப்பெரும் பேறு பிழைக்க வருவதும் என்னோ’’ என்று உட்கொண்டு விரித்துரையாராயினும், அப்பெரியார் வினவும்போது உண்மையை உரைக்க வேண்டும் என்ற சீலத்தினாலே மனம் வருந்திப் பரிவொடு வணங்கி மைந்தற்கு உற்றதைப் பகர்ந்தார்.
விடந் தீர்த்துப் பிள்ளையை எழுப்புதல்
அதனைக் கேட்ட திருநாவுக்கரசர், “நீர் மொழிந்த வண்ணம் நன்று! இவ்வாறு செய்தவர் இவ்வுலகில் யாவர் உள்ளார்?’’ என்று கூறி, முன்னே எழுந்து சென்று உயிர் நீங்கிய அப்பிள்ளையின் சவத்தினைக் கோயிலின்முன் கொண்டுவரச் செய்து சிவபெருமான் அருளும்படி அதனை நோக்கி, “ஒன்று கொலாம்’’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கி அருளினார். தீயவிடத்தால் உயிரிழந்த மூத்த திருநாவுக்கரசு விடம் நீங்கி உறங்கி எழுவானைப்போல எழுந்து திருநாவுக்கரசருடைய திருவடிகளை வணங்கினான்.
இறந்துபோனவர்கள் மீண்டும் எழுந்தார்கள் என்பது அறிவியலா?
கருவூரில் ஆட்சிபுரிந்த சோழ நாயனாரின் பட்டத்து யானை மதங்கொண்டு, பாகர்களுக்கும் அஞ்சாது எதிர்பட்டோரைத் தாக்க முயன்றது. எல்லோரும் அலறியடித்து ஓட, அங்கு நின்ற சிவகாமியாண்டார் கையிலிருந்த பூக்கூடையின் பூக்களை நிலத்தில் அள்ளி வீசியது.
இதைக் கண்ட சிவகாமியாண்டார் ஓலமிட, அங்கு வந்த எறிபத்த நாயனார் யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்த, யானை துடிதுடித்து சிறிது நேரத்தில் இறந்தது. அதன்பின் அங்கு வந்த பாகர்களையும் வாளால் வெட்டிக் கொன்றார்.
பட்டத்து யானைக் கொல்லப்பட்டது அறிந்த மன்னன் அங்குவர, எறிபத்த நாயனார் நடந்ததைத் கூறினார். உடனே மன்னன் என்னையும் கொல்லுங்கள் என்று தம் உடைவாளைக் கொடுத்தான்.
மன்னனின் பற்று கண்டு எறிபத்த நாயானார், தன் செயலுக்கு வருந்தி தன் கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றார்.
இவற்றைக் கண்ட இறைவனின் அசரீரு ஒலிகேட்டது. அதன்பின் கொலை செய்யப்பட்டு இறந்த யானையும், பாகர்களும் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்கிறது இந்து மதம்.
வெட்டப்பட்டு, இரத்தம் முழுக்க வெளியேறி இறந்துபட்ட யானையும், மனிதர்களும் மீண்டும் உயிர்பெற்று எழ முடியுமா? அறிவியல்படி அது முடியவே முடியாது. ஆனால், உயிருடன் மீண்டும் எழுந்ததாய்க் கூறும் இந்து மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்)