அய்யாவின் அடிச்சுவட்டில்…….

செப்டம்பர் 01-15

எதிரிகள் அளித்த விளம்பரம்

– கி. வீரமணி

30.9.1973  அன்று மதுரை தமுக்கம் கலை அரங்கில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாடு, சுதந்திரத் தமிழ்நாடு பெறுவதற்கு சிறைத் தண்டனைகூட ஏற்போம் என்று கூறுமளவிற்கு கருஞ்சட்டைப் படை மாநாட்டில் லட்சோபலட்சம் மக்கள் கூடியிருந்தனர்.  மாநாடு தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் டாக்டர் நாவலர், போக்கு வரத்துத்துறை அமைச்சர் திரு. பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் கழகக் கொடியை நான் ஏற்றி வைத்து துவக்க உரை நிகழ்த்தினேன், விழாக்குழுத் தலைவராக திரு.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் பொறுப்பேற்றார்.  விழாவில் தந்தை பெரியாரின் உருவச் சிலையை கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்தார்கள்.

மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன என்பதைத் தமது உரையில் குறிப்பிட்டார்கள் (விடுதலை – 2.10.1973). இந்த மாநாட்டின் நோக்கமெல்லாம் நமது மக்களைக் கூட்டி வைத்து அவர்களை நாட்டுப் பிரிவினைக்குப் பக்குவப்படுத்துவது தான்.  வெள்ளைக்காரன் சமுதாயத்தில் சிறு மாறுதல்களைச் செய்தபோது பார்ப்பான் எதிர்க்க ஆரம்பித்தான்.  பார்ப்பான் ஆட்சிக்கு வந்தபோதுகூட நான் சொன்னேன், பார்ப்பான் ஆட்சியைவிட வெள்ளைக்காரன் ஆட்சிமேல் என்று கூறினேன்.  சுதந்திர நாளை துக்க நாள் என்று பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டேன்.  சுதந்திரம் அடைந்து நடைபெற்ற முதல் தேர்தலிலேயே காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டினோம்.

காமராசர் காங்கிரஸ் பேரால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் நம் பிள்ளைகளுக்குக் கல்வி வசதி தாராளமாகக் கிடைத்த காரணத்தால் ஆதரவு கொடுத்தோம்.  காமராசரோ பெரிய பதவிக்குப் போய்விட்டார், காரியமும் கெட்டுப்போய்விட்டது.  எனவே, இன்று நமக்கு வேண்டியது எல்லாம் சமுதாய விடுதலை, அதற்குத் தேவையானது சுதந்திரத் தமிழ்நாடு.

சுதந்திரத் தமிழ்நாடு கேட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று விதித்து இருக்கிறார்கள். சட்டம் கடுமையானதுதான், இருந்தாலும் ஏற்க வேண்டியதுதான்.  நம்முடைய இழிவு நீங்க வேண்டும் என்றால் நம் உயிரை, உடைமையை, சுயநலத்தை எல்லாம் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.  விழாவில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டதாவது;

தன் மரியாதையைக் காக்கத் தெரியாதவர் சமுதாயத்தின் மரியாதையைக் காக்க முடியாது.  பெரியார் அவர்கள் இந்த நாட்டில் தன் மரியாதை காத்து நாட்டின் மரியாதையையும் காத்து வருகிறார்.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மூடநம்பிக்கை ஓரளவு ஒழிந்து இருக்கிறது.  அதற்கு அடிப்படைக் காரணம் பெரியார் அவர்களின் அயராத தொண்டே ஆகும் என்று குறிப்பிட்டார்கள்.

விழாவில் அமைச்சர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் திராவிட இயக்கத்தின் காரல்மார்க்ஸ் பெரியார் என்று குறிப்பிட்டார்கள். பெரியார் அவர்கள் சமுதாய சமதர்மம் வேண்டும் என்று கூறுகிறார்கள், வெறும் பொருளாதாரப் பொதுவுடைமை மட்டும் நமக்குப் பரிகாரம் அளித்துவிடாது.  பெரியார் அவர்களின் சமுதாயப் பொதுவுடைமைதான் நமக்கு நிரந்தரப் பரிகாரத்தைக் கொடுக்க வல்லதாகும் என்று குறிப்பிட்டார்கள்.

திராவிட இயக்கத்தின் காரல்மார்க்சாக பெரியார் அவர்கள் விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் பொது வாழ்க்கைக்கு ஒரு இலக்கணமாக – வழிகாட்டியாக இருக்கக் கூடியவர் என்று புகழாரம் சூட்டினார்.

விழாவில் நான் உரையாற்றியபோது விரிவான உரையை நிகழ்த்தினேன். அதில், தனிநாடு கேட்டது சட்டவிரோதமாக இருக்கலாம், ஆனால் நியாய விரோதம் இல்லை, மனிதன் மனிதனாக, சுயமரியாதை பெற, இழிவு ஒழிய, எந்தச் சட்டவிரோதத்தையும் நாம் மேற்கொள்ளத் தயார். அதற்காக, தூக்குமேடை ஏறவும் தயங்க மாட்டோம் என்று கூறினேன். 11, 12.05.1946இல் மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டை எதிரிகள் திட்ட மிட்டுக் கொளுத்தியதோடு மட்டுமல்ல, வீண்பழி வேறு நம்மீது சுமத்தினார்கள்.

மாநாட்டுக்கு வந்த கருஞ்சட்டைத் தோழர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று பெண்களை எல்லாம் கையைப் பிடித்து இழுத்தார்கள் என்றெல்லாம் பழிவேறு தூற்றினார்கள். இந்த 27 ஆண்டுகளில் நம்மை எதிர்த்தவர்கள் எவ்வளவு தேய்ந்துபோய் இருக்கிறார்கள் – நாம் எவ்வளவு வலுப்பெற்று இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டு, மதுரை மாநாடு கொளுத்தப்பட்ட நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் ஒரு கட்டுரையை எழுதினார்கள்.  மரண சாசனம் என்று அதற்குத் தலைப்புக் கொடுத்தார்கள்.  அதில் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டார்கள்.  நான் வியாதி கண்டு சாகவில்லை – இந்த இன இழிவு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டபோது சாகடிக்கப்பட்டேன் என்று சொல்லும் வண்ணம் ஒவ்வொருவரும் கடமையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். நம் வாழ்வின் குறிக்கோள் இன இழிவு ஒழிப்பே என்று ஒவ்வொரு திராவிடத் தோழனும் மரண சாசனம் எழுதிவைத்திட வேண்டும் என்று எழுதினார்கள்.  இன்றைக்கு அந்த மரண சாசனம் தேவைப்படுகிறது.

இன்றைக்குக் கருஞ்சட்டைப்படை முன்பு இரண்டு கடமைகள்: ஒன்று, தனிநாடு அடைவது, இன்னொன்று, இப்பொழுது நடைபெறுகின்ற தமிழர் இன உணர்வு ஆட்சியைக் காப்பாற்றுவது.  இரண்டும் நமது இருவிழிகள் போன்றதாகும் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.

விழாவானது மதுரை படைத்த எழுச்சிகாவியம் என்றே கூறுமளவிற்கு மதுரை மாநகரில் அதே கருப்புச்சட்டை மாநாடு இன்றைக்கு இருபத்தேழு ஆண்டுகள் ஓடவிட்டு ஆரியபுரியினரின் அடிவயிற்றில் எல்லாம் அச்சம் வெடித்துச் சிதற சரித்திரச் சிறப்போடு நடைபெற்றது.  விழாவில்  கழக நிருவாகிகளான மதுரை நகர தி.க. தலைவர் ஓ.வி.கே நீர்காத்த லிங்கம், பெங்களூர் திருமதி விசாலக்குமி சிவலிங்கம், நாகர்கோயில் கழகத் தோழர் பெருமாள், கணேசன், தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் தோலி.ஆர். சுப்பிரமணியம், கா.மா. குப்புசாமி, கு.கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்ட தி.க. செயலாளர் தியாக அரசன், தூத்துக்குடி சண்முகம், அருப்புக்கோட்டை எஸ்.எஸ். கருப்பையா, மேற்கு இராமநாதபுரம் மாவட்ட தி.க. செயலாளர் பொன்னுசாமி, திருவாரூர் கே. தங்கராசு, வே. ஆனைமுத்து, வடாற்காடு மாவட்ட தி.க தலைவர் ஏ.டி. கோபால்,  திருவண்ணாமலை கண்ணன் ஆகியோரும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், தி.க. தோழியர்கள், தோழர்கள் உள்ளிட்ட பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். கழக சரித்திர ஏட்டில் மதுரை கருப்புச்சட்டை மாநாடு ஒரு புதிய அத்தியாயம் படைத்தது.

திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, தமிழின வரலாற்றிலேயே வைர மணி எழுத்துகளால் பொறிக்க வேண்டிய புகழ் பெற்ற மான உணர்வு பொங்கும் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு 8.12.73 சனிக்கிழமை சென்னை பெரியார் திடலில் கோலாகலமாகத் துவங்கியது.  மாநாட்டை ஒட்டி பெரியார் திடல் எங்கும் காரிருளில் செவ்வொளி மின்னினாலன்ன கழகக் கொடி தோரணங்கள் உற்சாகமாகப் பறந்த வண்ணம் இருந்தன.

கொள்கை முரசு முழங்கும் கழகக் கொடி பேனர்கள் பூந்தமல்லி சாலையிலும் (தற்போதுள்ள பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை), ரண்டல்ஸ் சாலையிலும் (தற்போதுள்ள ஈ.வெ.கி.சாலை)விண்ணில் பறந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டிருந்தன.

ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக இன இழிவுச் சகதியிலே தலைப்பிரட்டைகளாக அழுந்திக் கிடந்த தமிழரினம் தலைதூக்க வந்துதித்த வைக்கம் வீரராம் நமது அய்யா அவர்களின் வாழ்நாளிலேயே சூத்திரத் துர்நாற்றத்தை வீசி எறிய வீராவேசத்தோடு புறப்பட்ட வீரர் கூட்டப் பெரும்படை காலை முதற்கொண்டே பெரியார் திடலினை வலம் வர ஆரம்பித்துவிட்டது.  சென்னை மாநகரின் எத்திசை நோக்கினும் கருஞ்சட்டைப் பட்டாளத்தின் சந்தடிக் கனல் தெறிக்க ஆரம்பித்துவிட்டது.  குடும்பம் குடும்பமாக கொள்கைக் குடும்பங்கள் வாழ்வா சாவா என்று முடிவுகட்டும் போராட்டத் திட்ட மாநாட்டிற்குக் குவிந்துவிட்டனர்.  பார்ப்பனப் பத்திரிகையாளர்களும் விபீடணக் கூட்டமும் வாலாட்டிப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்ட கழகத் தோழர்கள் போராவேசம் கொண்டதுபோல் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் சகல பகுதிகளிலிருந்தும் அலை அலையாக அணி திரண்டு வந்த கழகத் தோழர்களையும் குடும்பத்தினரையும் கண்டு அய்யா அவர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள். நன்கொடைப் புத்தகங்கள் பெற்றுச் சென்ற கழக முக்கியஸ்தர்கள் தத்தம் பகுதிகளில் திரட்டிய நன்கொடைகளை எல்லாம் அய்யா அவர்களிடம் குவித்துக் குவித்து, தத்தம் பகுதிகளில் போராட்டம் நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தினை அய்யா அவர்களிடம் எடுத்துச் சொல்லிய வண்ணமாகவே இருந்தனர்.

அய்யா அவர்கள் என்ன திட்டம் தரப்போகிறார்கள், அந்தத் திட்டம் எதுவாக இருக்க முடியும் என்பதை அறிவதிலும் – அத்திட்டம் எதுவாக இருப்பினும் அதை நிறைவேற்ற எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற வீரநம்பிக்கை மின்னும் பார்வையுடனும் கருஞ்சட்டை மறவர் பட்டாளம் பெரியார் திடலில் திரண்டு வழிந்துகிடந்தது.

சரித்திரச் சிறப்பு வாய்ந்த தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நான் வரவேற்புக் குழுத் தலைவர் என்ற முறையில் வரவேற்புரை நிகழ்த்தினேன், (விடுதலை 8.12.1973). அதில் தமிழர் சமுதாயத்தின் ஒரே பாதுகாவலராம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில், நமது இயக்க வரலாற்றில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தும் பாடிவீடாக -_ பாசறையாகத் திகழும் இம்மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் சிற்றூர் பேரூர் முதலிய ஊர்களிலிருந்தும், தமிழ்நாட்டிற்கு அப்பால் பல மைல் தொலைவிலிருந்தும் வந்து கூடியுள்ள அனைவரும் ஒன்றுகூடும் வகையில் கூட்டப்பட்டுள்ள இம்மாநாடு தமிழர் சமுதாயத்தினைப் பல்லாயிரம் ஆண்டுகளாக விடாப்பிடியாகப் பிடித்துள்ள சமுதாய  இழிவினை ஒழிக்கத் திட்டம் தீட்டும் மாநாடு.  கொண்ட லட்சியத்திற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்றுள்ள சிங்கக் கூட்டம், செயல் மறவர் கூட்டமாக இம்மாநாடு அமைந்துள்ளது என்பது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தரவிருக்கும் அரிய செயல் திட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கும் வகையில் தொடங்கியுள்ளது.

இம்மாநாட்டிற்கு நாம் விளம்பரப்படுத்தியதைவிட நம் இன எதிரிகளான பார்ப்பனர்கள் செய்த விளம்பரம் அதிகம்.  சட்டசபையில் இம்மாநாடு குறித்துப் பேசி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு சென்று இந்த மாநாட்டிற்குரிய முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டிய அவர்களுக்கும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

கழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அய்யா அவர்கள் அறிவித்து, அவர்களே முன்னின்று நடத்திய மாநாடு – சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தினை உள்ளடக்கி, ஒரு பெரும் பந்தலும் முன்பகுதியில் போடப்பட்டது. தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்றே அதற்குப் பெயர் கொடுத்தார் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். ஒரு மாநில மாநாடாகவே அது நடந்தது.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *