பெரியார் விருது – 2018

பிப்ரவரி 1-15

தமிழ்ப் புத்தாண்டு – திராவிடர் திருநாள்
காட்சியும் – மாட்சியும்

மஞ்சை வசந்தன்

கலை நிகழ்ச்சிகளை பல்கலைச் செல்வர் மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தால், 24ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, ‘திராவிடர் திருநாள்’ பண்பாட்டு விழாக்கள் பெரியார் விருது வழங்கும் நிகழ்வுடன் 2018 ஜனவரி 15, 16 ஆகிய நாள்களில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சி (15.1.2018)

கலை நிகழ்ச்சிகள்:-

முதல் நாள் நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் மகிழ்வுடன் தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளை பல்கலைச்செல்வர் மு.கலைவாணன் தொடங்கி வைத்தார். பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து பறையொலி முழங்க மயிலாட்டத்துடன் ஊர்வலமாகப் பெரியார் திடலுக்கு மகிழ்ச்சி பொங்க குதூகலத்துடன் ஏராளமானவர்கள் வந்து திராவிடர் திருநாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வழி நெடுகிலும் கழகக் கொடிகளுடன் கரும்பும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. உணவு அரங்கங்கள், சிறுவர்களைக் கவரும் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளுடன் பெரியார் திடல்  விழாக்கோலம் பூண்டிருந்தது.

தமிழ் இசை வரலாறு – ஒளிப்படக் கண்காட்சி

தமிழிசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சியை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் தொடங்கி வைத்தார்.

தமிழ் இசை ஒளிப்படக் கண்காட்சியை தமிழக கலை இலக்கிய அணிச் செயலாளர் மானமிகு எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் திறந்து வைத்தார். விழாவுக்கு வருகைதந்த பலரும் தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சியையும், பல்வேறு வகைகளில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இசைக் கருவிகளையும் கண்டும் இசைத்தும் மகிழ்வுற்றனர்.

பண்ணிசை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லசிவம் குழுவினரின் பண்ணிசை நிகழ்ச்சியில் தமிழ் இசை, இசை மரபு, இசை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் அக்குழுவினரின் தமிழ்இசை பார்வையாளர் களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது. வேலு ஆசான் கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் பெரிதும் ஊக்கத்துடன் பறையிசைக்கேற்ப ஆடினார்கள்.

எம்.ஆர்.ராதா அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் படத்திறப்பு மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மானமிகு த.க.நடராசன் வரவேற்புரையாற்றினார். மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள் அறிமுகவுரை யாற்றினார். மானமிகு கா.அமுதரசன் இணைப்புரை வழங்கினார்.  வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையுரை யாற்றினார்.

படத்திறப்பு

 

 

மறைந்த அறிஞர்கள் பேராசிரியர் பு.இராசதுரை, கவிக்கோ அப்துல்ரகுமான் ஆகியோரின் படங்களை  தமிழுர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் பு.இராசதுரை ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து அவர்களின் சாதனைகளை, பெருமைகளை எடுத்துரைத்தார்.

பெரியார் விருது

முதல் நாள் நிகழ்ச்சியில் (15-1-218) பெரியார் விருது பெற்ற பெருமக்கள் ஆசிரியர் அவர்களுடன்..

கவிஞர் செவ்வியன், ‘மக்கள் செல்வன்’ திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கோபி நயினார், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பித்து, தந்தை பெரியார் முழு உருவச் சிலை, இயக்கப் புத்தகங்களுடன் ‘பெரியார் விருது’ வழங்கினார்.

விருது பெற்றவர்களின் சாதனை விளக்கப் படம் அவர்கள் விருதுபெறும் முன் திரையிடப்பட்டது. விருது பெற்ற அனைவரும் உணர்ச்சி பொங்க ஏற்புரை நிகழ்த்தினர்.

ஈரோடு தமிழன்பன்

பெரியார் விருது பெற்றவர்களின் உரையைத் தொடர்ந்து பகுத்தறிவுக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாராட்டுரையாற்றினார். அப்போது, “மனித சமூகத்துக்கு அறிய பல கோட்பாடுகளை அளித்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் பேச்சும் எழுத்தும் சிறந்த இலக்கியங்கள். தந்தை பெரியாரே விருது அளித்துப் பாராட்டுவதைப் போல் தமிழர் தலைவர் விருது அளித்து பெருமைப்படுத்தி வருகிறார். ‘பெரியார் விருது’ பெற்ற நான் இன்று பெரியார் விருது பெறுபவர்களைப் பாராட்டும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்’’ என்றார்.

தமிழர் தலைவர் பாராட்டு

கவிஞர் ஈரோடு தமிழன்பன், இசைக் கருவிகளை காட்சிப்படுத்தி செயல் விளக்கங்களை அளித்த கோசை நகரான் சிவக்குமார், தமிழ் பண்ணிசை நடத்திய பேராசிரியர் நல்லசிவம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வேலு ஆசான் குழுவினர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து இயக்கப் புத்தகங்கள் வழங்கிச் சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பல் துறைகளில் சாதனையாளர்களாகத் திகழும் ஆற்றலாளர்களை பெரியார் திடல் தோளில் தூக்கிப் பாராட்டும் என்றும், ‘பெரியார் விருது’ அளிக்கப்படுவதன் நோக்கம், விருதுக்கு பல்துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதனைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை

கழகத் தோழர்கள் மட்டுமல்லாது பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர், பல்துறை அறிஞர்கள், குடும்பம் குடும்பமாய்ப் பொதுமக்கள் என ஆர்வத்துடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் தோழர் வை.கலையரசன் நன்றி கூறினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி (16.01.2018)

மறைந்த தமிழுறிஞர் மணவை முஸ்தபா, இயக்குநர் மணிவண்ணன் ஆகியோரின்
படங்களைத் தமிழுர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். 

திராவிடர் திருநாளின் இரண்டாம் நாளில் குடும்ப விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பெரியார் பிஞ்சுகள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மணமாகாதவர்கள், மணமானவர்கள், இணையர் எனப் பல்வகையினருக்கும் விளையாட்டுப் போட்டிகள், கடவுள், மதம், ஜாதி ஒழிக்கப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் பானை உடைப்புப் போட்டியில் பலரும் பங்கேற்று பானையை சுக்குநூறாக உடைத்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெரும் உற்சாகத்துடன் பலரும் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சிகள்

பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் கலை நிகழ்ச்சிகளை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தோழர் ஓவியா பறையொலி எழுப்பித் தொடங்கி வைத்தார். அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவினரின் பறையொலி முழங்க இளைஞர்கள், பெண்கள், மழலையர் குதூகல ஆட்டங்களுடன் ஊர்வலமாக வந்து பெரியார் திடலில் எராளமானவர்கள் எழுச்சிமிக்க திராவிடர் திருநாள் விழாவில் பங்கேற்றனர். பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் சார்பில் பறையொலிக்க இருபால் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், தீப்பந்த சிலம்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இசைக்கருவிகள் கண்காட்சி

விழாவுக்கு வருகைதந்த பலரும் காணும் வகையில் தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சி, இசைக் கருவிகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் சிறப்பாக தனிதனி அரங்குகளில்

ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எம்.ஆர்.ராதா அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் திராவிடர் திருநாளில் படத்திறப்பு மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பத்திரிகையாளர் மானமிகு கோவி.லெனின் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி அவர்கள் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரையாற்றினார்.

படத்திறப்பு

இந்நிகழ்ச்சியில் மணவை முஸ்தபா, இயக்குநர், நடிகர் மணிவண்ணன் ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து அவர்களின் சாதனைகளை, சிறப்புகளை எடுத்துரைத்தார்.

விருது வழங்கும் விழா

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் (16-1-2018) பெரியார் விருது பெற்ற பெருமக்கள் ஆசிரியர் அவர்களுடன்…..

திரைப்பட நடிகர் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், மாரத்தான் வீரர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சைதை மா.சுப்பிரமணியன், இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், ஓவியர் அபராஜிதன், கவிஞர் சல்மா ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் முழுஉருவச் சிலை, இயக்கப் புத்தகங்களுடன் ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டினார்.
விருதுபெற்ற அனைவரின் சாதனை விளக்கப்படம் திரையிடப்பட்டது. விருதுபெற்ற அனைவரும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்கள்.

பெரியார் விருது பெற்ற தலைவரின் ஏற்புரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் உணர்வுபொங்க சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை

திராவிடர் திருநாள் _ இரண்டு நாள்கள் நடைபெற்ற அத்துணை நிகழ்ச்சிகளும் இணையத்தில் நேரலை செய்யப்பட்டு சிறப்பு பெற்றன. நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாகப் பங்கேற்ற பலராலும் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் குடும்ப உணர்வுடன் மகிழ்ச்சியாய் உற்சாகமாய் ஒற்றுமையாய் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.

விழா முடிவில் பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

பெரியார் விருதுபெற்ற பெருமக்களின் ஏற்புரை

கவிஞர் செவ்வியன்

“என் உயிரே! தாயே! தமிழே உன்னை வணங்குகிறேன். நான் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் இன்று வழங்கப்பட்ட இந்தப் பெரியார் விருதானது எனது வாழ்வில் நான் பெற்ற மிகவும் உயர்ந்த சிறப்பான விருது என்று கருதுகிறேன். இதுவரை சொல்லும் செயலும் முரண்படாமல் வாழ்ந்திருக்கிறேன். இனிமேலும் நான் இறக்கும்வரை அதைக் கடைப்பிடிப்பேன் என்று கூறிக்கொள்கிறேன். இன்றுள்ள சமுதாய அமைப்பை மாற்றுவதற்கு திருவள்ளுவர், காரல்மார்கஸ், அய்யா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மூவருடைய கொள்கைகளை நாம் மக்களிடையே பரப்ப வேண்டும். அவை மட்டும்தான் இந்த சமுதாயத்தை மாற்ற முடியும் என்று துணிவான கருத்து உடையவன் நான். நீங்களும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.  ‘சிங்கப்பூரில் திராவிடர்க் கழகம்’ என்ற நூலை நான் எழுதினேன். பெரியார் அவர்கள் சிங்கப்பூர், மலேசியாவில் பேசிய பேச்சு,  கழகத்தின் வளர்ச்சி என்னைப் பெரிதும் கவர்ந்தன. மலேசிய திராவிடர் கழகம் என்னை அழைத்துக் கொண்டுபோய் 27 நாள்கள் மலேசியாவில் தங்கச் செய்து ஒவ்வொரு நாளும் காலையில் ஊர் சுற்றுவதும் மாலையில் கூட்ட நிகழ்ச்சிகளை நடத்துவமாக மிகவும் என்னைச் சிறப்பித்தார்கள்.

அந்த நிகழ்ச்சி இன்றும் என்னை மகிழ்ச்சியுறச் செய்கிறது. எழுத்துக்கும் செயலுக்கும், சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாதவர்களாக எழுத்தாளர்கள் மாறுவார்களானால் இந்தச் சமுதாயத்தை மிகவும் சீக்கிரம் மாற்றமுடியும். இந்தியாவில் ஒரு பொதுவுடமைச் சமுதாயம் அமையும். இதை யாராலும் மாற்ற மறுக்க முடியாது.’’

‘பறைஇசைக் கலைஞர்’ வேலு ஆசான்

“எல்லோர்க்கும் வணக்கம். நான் அதிகம் மைக்கில் பேசியது கிடையாது. பறையிசையில்தான் பேசுவேன். பறையிசையை தப்பு என்று சொல்கிறார்கள். அது தவறான சொல். பறையென்பதே சரியானச் சொல். ஆட்டம் தனியே ஆடலாம் பறையிசை வாசித்துக்கொண்டு ஆடமுடியாது. மிருதங்கம் வாசிப்பவர்கள் மற்றவர் பாடினால்தான் வாசிக்க முடியும். ஆட்டமும் இசையும் என இரண்டும் கொண்டது பறைதான். நாங்களும் ‘தாம் தீம் தோம்’ என்று அடித்திருந்தால் ஒருவேளை மதிப்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கலைக்கு ஈடு எந்தக் கலையும் கிடையாது. இதிலும் கர்நாடிக் முறையில் நான் வாசிப்பேன். என் முதல் விருது மதுரையில் 1995இல், 1996இல் வாங்கினேன். முதல் சர்டிபிகேட் பெரியார் திடலில் வாங்கினேன். இந்த விருதை எனக்கு அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த விருதை எனக்கு அளித்துப் பெருமைபடுத்திய ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றி! வணக்கம்!’’

ஓவியர் ஹாசிப்கான்

“அனைவருக்கும் வணக்கம்! ‘சமூகம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்’ என்கிற சிந்தனை பெரியாரை கொஞ்சமேனும் படிப்பவர்களுக்கு வந்தே தீரும். கலை மக்களுக்கானது. தமிழ் கலை இலக்கிய சூழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனக்கு முன்மாதிரியாக இருப்பவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் பெயரில் கிடைக்கும் இந்த விருதினை நான் கர்வமாகவே நினைக்கிறேன். நன்றி!’’

இயக்குநர் கோபி நயினார்

“தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த விருதைப் பெற்ற பிறகு எந்தப் படைப்பாளியும் பின்வாங்க முடியாது. இது பெரியாரின் சிலையல்ல. பெரியாரின் இதயம். இது என் இதயத்தோடு சேர்ந்து ஒலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இது ஒலிக்கும் வரை சமரசமற்ற வாழ்க்கையை மக்களிடம் நேர்மையுடன் சென்றடையச் செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி! தமிழ்த் திரைப்படம் குறித்து நாம் அதிகமாக அக்கறை செலுத்த வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். தமிழ்த் திரைப்படம் என்பது சமகாலமாக மக்களிடம் கொண்டு செல்லும் செயல் பாட்டிற்கு எதிரான ஒரு திரைப்பட இயக்கமாக மாறி இருக்கிறது.

ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்ன செய்ய நினைக்கிறதோ மக்களை எப்படிச் சீரழிக்க நினைக்கின்றதோ அதனுடைய மிகப் பெரிய ஒரு ஏஜன்டாக தமிழ் சினிமா செயல்படுகிறது. குறிப்பாக இந்திய சினிமாக்கள். தமிழ் சினிமா அதில் முக்கியமானது. தமிழர்களுடைய பண்பாட்டின் மீதும், தமிழ்ப் பெண்ணின் மீதும், குழந்தைகளின் மீதும், இளைஞர்கள் மீதும் அவர்களின் எதிர்ப்பை அரசியல் கனவை ஒரு திரைப்படக் கனவாக மாற்றி வணிக முதலாளிக்கான ஆசையைக் கட்டமைப்பதில் வேலை செய்கின்ற பல்வேறு நோக்கம் கொண்ட அமைப்புகளில் தமிழ்ச் சினிமாவும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்தச் சினிமாவை மக்கள் சினிமாவாக மாற்ற வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், அயோத்திதாச பண்டிதர், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் சமூகத்தில் பல புரட்சிகளை செய்திருக்கின்றனர்.

இந்த தலைவர்களின் கொள்கைகளைப் பேசும் விதமாகத்தான் ‘அறம்’ திரைப்படத்தை நான் இயக்கி இருக்கிறேன். சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம் அல்ல. உழைக்கும் மக்கள் ஓய்வு நேரங்களில் பார்க்கக்கூடிய அர்த்தமுள்ள ஒன்றாய் அது இருக்க வேண்டும்.  தந்தை பெரியாரின் கொள்கைகளை மறுப்பதென்பது புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை மறுப்பதற்கு இணையானது. ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்கு பெரியாரே நுழைவாயில். அந்த நுழைவாயிலின் வழியாகத்தான், அம்பேத்கரை அடைய முடியும். என்னைப் போன்ற கலைஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் பெரியாரின் கொள்கைகளை தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதைக் கூறி பெரியாரை எப்போதும் என் நெஞ்சில் நிறுத்தி என்னுடைய எல்லா படைப்புகளையும் பெரியாரின் சிந்தனைகளோடு மக்கள் பிரச்சாரமாக ஆக்குவேன் என்றுக் கூறி இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி இந்த பெரியார் விருதினை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி

“அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வணக்கம். எங்கு சென்றாலும் என் இஷ்டத்திற்கு பேசி விடுவேன். பகுத்தறிவாளர்கள் மத்தியில் பேச சற்று பயமாகவே இருக்கிறது. இந்த விருதை இன்று இங்கு வாங்குவதில் பெருமை கொள்கிறேன்.  சக மனிதனைப் பிரித்து வைக்கும் சமூகத்திலிருந்து மக்களை மீட்டெடுத்த மிகப் பெரிய போராட்டத்தை வழிநடத்திய மிகப் பெரிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று நான் எப்போதும் எல்லா இடங்களிலும் இனி சொல்லுவேன். என் நண்பர்களின் ஜாதியும் மதமும் நான் தெரிந்துகொள்ள விரும்பியதே இல்லை. என் இக்கட்டான சூழ்நிலைகளில் என்னுடன் நின்றது என் நண்பர்கள் மட்டும்தான். நான் பெரியாரைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.

இயக்குநர் – ஒளிப்பதிவாளர் செழியன்

“அனைவருக்கும் வணக்கம்! எனக்கு மிகவும் பெருமைக்குரியத் தருணம். ஒளிப்பதிவுக் கருவி என்பது அன்பு, கருணையோடு கூடுதலாக ஒரு கதையும் சொல்கிறது. குஜராத் கலவரத்தின் போது கை எடுத்து கும்பிட்டுக் கொண்டே அழுகிற ஒரு இஸ்லாமியத் தோழரின் புகைப்படம். இரண்டாம் உலகப் போரின்போது நிர்வாணமாக ஓடிவருகிற ஒரு வியட்நாம் சிறுமியின் புகைப்படம். தமிழீழ விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தம்பி பாலச்சந்திரனின் புகைப்படம் இன்றும் பல மடாலயங்களின் இரகசியங்களையெல்லாம் வெளிக்கொண்டு வருவது இந்த ஒளிப்பதிவுக் கருவிதான். அந்த வகையில் இத்தனை சிறப்புமிக்க ஒளிப்பதிவுக் கருவியை கையாள்வதிலும், இந்த விருது கிடைக்கப்பட்டதிலும் அதிலும் பெருமைக்குரிய ஆசிரியர் அவர்கள் கரங்களினால் பெருவதில் பெருமை கொள்கிறேன். இந்த விருதினை  நண்பர் சாக்ரட்டிசுக்கு நான் அற்பணிக்கிறேன். நன்றி! வணக்கம்!

ஓவியர் அபராஜிதன்

“அனைவருக்கும் வணக்கம்! நான் நவீன ஓவியராக கலை உலகத்திற்கும் தனிமனிதனாகச் சுதந்திரமாகச் சிந்தித்து அதை வெளிப்படுத்தக் -கூடிய ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்தது பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்தான்.

நான் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்குவதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்தான். 20 வருடத்திற்கான சாதனைப் பயணத்தில் சுயமரியாதையைச் சார்ந்தே நான் பணியாற்றியிருக்கிறேன். பெரியார் பெயரில் கிடைத்த இந்த விருது எனக்கு மிகப் பெரிய அர்த்தத்தையும் அங்கீகாரத்தையும் அளித்திருக்கிறது. வாய்ப்புக்கு நன்றி!

கவிஞர் சல்மா

“தந்தை பெரியாரின் பெயரில் ஒரு விருது! மனம் நெகிழ்ந்து ஒரு உணர்ச்சிகரமான  நிலையை உணர்கிறேன். நான் இந்த வெண்தாடிக் கிழவனின் புத்தகத்தை எடுத்தபொழுது _ மார்க்சின் புத்தகத்தைக் கையில் எடுத்தபொழுது நாசமாகப் போவாய் என்ற ஒரு மோசமான வசவோடுதான் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஏனென்றால் இந்தச் சமூகம் பெண்ணை எங்கே வைத்திருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வரையறுத்துக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்திலிருந்து பெண் என்பவள் தன்னுடைய உடலைப் பேண வேண்டும் _ கற்பைப் பேண வேண்டும் _ வீட்டிற்குள் இருக்க வேண்டுமென்று சமூகம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்தான் தந்தை பெரியார் சொல்கிறார், பெண் எப்படி இருக்க வேண்டுமென்று. என்னுடைய சமூகம் சொல்லித்தந்த எல்லாவற்றையுமே அடித்து நொறுக்கிய ஒரு மிகப் பெரியத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். குஜராத்தைச் சார்ந்த ஜிக்னேஷ் மேவானியிடம் மதம் மாறினால் ஜாதி போய்விடுமா என்று ஒருவர் கேட்டார். நாத்திகம் மட்டும்தான் ஏற்றத்தாழ்வு இல்லாமல் செய்யும் என்று ஜிக்னேஷ் மேவானி சொன்னார்.

இந்தச் சமூகத்தைப் பாதுகாப்பவர்களாக இன்றும் ஆசிரியர் அவர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் நினைவாகக் கிடைத்த இந்த விருதிற்கு தலைவணங்கி நன்றி கூறி விடைபெருகிறேன். வணக்கம்!’’

‘இன்னிசை ஏந்தல்’ திருபுவனம் ஆத்மநாதன்

“என்னுடைய வாழ்க்கையிலே இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். நான் நிறைய சிலப்பதிகாரம், புறநானுற்றுப் பாடல் மற்றும் வள்ளலாரின் பாடல்களை பாடியிருக்கிறேன். வள்ளல் பெருமான் புரட்சியான பாடல்களை நிறைய எழுதி இருக்கிறார். அதையெல்லாம் யாரும் பாடுவதில்லை. ஆனால், நான் பல மேடைகளில் துணிச்சலாகப் பாடிவருகிறேன். இந்த விருதைப் பெருவதில் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘மாரத்தான் வீரர்’ சைதை மா.சுப்ரமணியன்

“இன்றைக்கும் நேற்றைக்கும் பல துறைகளில் ஏதாவது ஒரு வகையில் சிறிய அளவிலேனும் சாதனை புரிந்தவர்களை பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் விருது வழங்கிப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

2004ஆம் ஆண்டு தமிழினக் காவலர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழி சிறப்பை பெற்றுத் தந்தார் என்பதற்காக கவிஞர் வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். அந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற எனக்கு விபத்து ஏற்பட்டு வலதுகாலில் பலத்த சேதம் ஏற்பட்டது. மருத்துவர்கள் நீ இனி சம்மணம் போட்டு உட்கார முடியாது, ஓட முடியாது என்றார்கள். ஆனால், என்னுடைய தன்னம்பிக்கையினால் நடக்க, ஓட பயிற்சி செய்து 2014இல் பாண்டிச்சேரியில் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டேன். மாரத்தான் ஓட்டத்திலும், அரசியலிலும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும்கூட, இன்று பெற்ற தந்தை பெரியார் விருது உண்மையிலேயே என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

இயக்குநர் – நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

“அனைவருக்கும் வணக்கம்! தந்தை பெரியார் அவர்களையே கடவுளாக வணங்கி என் பேச்சைத் தொடங்குகிறேன். கடவுள் என்று நான் சொன்னது இசையமைப்பாளர் ஆத்மநாதன் சொன்ன அந்தக் கடவுள் இல்லை. ‘கட உள்’ _ கடந்து உள்ளே செல். உன்னைக் கடந்து உள்ளே செல். இந்தச் சராசரி அறிவைக் கடந்து பகுத்தறிவு என்ற நுண்ணிய அறிவுக்குச் செல்லக்கூடிய அந்தப் பகுத்தறிவுப் பகலவன், அந்தப் பகுத்தறிவுக் கடவுள். அந்தக் கடவுளை வணங்கி என் பேச்சைத் தொடங்குகிறேன். நாம் எல்லோரும் பெரியார் வழி நடந்து அவரின் கொள்கை வழி வாழவேண்டும். பெண் விடுதலை அடைந்தால்தான் சமூகத்தில் நல்ல விஷயங்களை நாம் பார்க்க முடியும். எனது பெயரின் முன்பு மானமிகு என்று அழைப்பிதழில் போட்டிருந்தது எனக்கு மிகவும்  பிடித்திருந்தது.

நான் கருப்பு உடை நிறைய அணிவேன். சட்டையில் கருப்பு இருப்பது முக்கியமல்ல. சிந்தனையில் கருப்பு இருக்க வேண்டும். சமூகப் பார்வைக்கு கண்ணாடியாகவே விளங்கியவர் தந்தை பெரியார். அவரின் தத்துவத்தை மனதில் வைத்திருக்கிறேன். தந்தை பெரியார் எனக்கும், என் மகளுக்கும், எனது பேரனுக்கும் தந்தை பெரியார்தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை யுகங்கள் ஆனாலும் சமூகத்துக்கு அவர் தந்தை பெரியார்தான். கி.வீரமணி அவர்களின் முதலெழுத்தை நான் தமிழ் ‘கி’யாகப் பார்க்காமல் ஆங்கில ரிமீஹ்-யாகப் பார்க்கிறேன். பெரியார் ஆரம்பித்த இந்த அமைப்பைக் கட்டிக் காப்பாற்றி அதை ஒரு பொக்கிஷமாய்ப் புதையலாய்ப் பெட்டகத்தில் பாதுகாத்து வைத்திருக்கும் சாவியாகப் பார்கிறேன்.

எனக்கு இதுவரை கிடைத்த விருதுகளை யெல்லாம் நான் தோலுக்கும் கழுத்துக்கும் கிடைத்த மாலையாகவும் பெரியார் விருதை தலைக்குக் கிடைத்த கிரீடமாகவும் பார்க்கிறேன்.  அவரின் கொள்கை வழி நாம் அனைவரும் வாழவேண்டும். இந்த விருதினை எனக்கு வழங்கிய அனைவருக்கும் குறிப்பாக ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *