அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி 3 (1969)
தந்தை பெரியார்
அண்ணா அவர்களின் படத்தினைத் திறந்து வைப்பது அவருக்குப் பெருமை செய்யவோ அல்லது அப்படத்திற்குப் பூசை செய்வதற்காகவோ அல்ல. பின் எதற்காக என்றால், அவரது கருத்துகளைப் பரப்பவும், அவரது கருத்துகளை மக்களைப் பின்பற்றச் செய்யவுமேயாகும்.
அண்ணா இடத்தில் உள்ள சிறப்பு என்ன? இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல எவருமே சாதிக்கவில்லையே! அதுபோல் ஒருவர்கூடத் தோன்றவில்லையே! மனிதனுக்கு அறிவுதான் முக்கியமே தவிர, சாஸ்திர, சம்பிரதாயங்கள் தேவையில்லை என்று சொன்னவர், அதன்படி நடந்து காட்டியவர் அண்ணா ஆவார்கள். ஜாதி இல்லை; கடவுள், மதம், சாஸ்திரம், – காந்தி, காங்கிரஸ், – பார்ப்பான் ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காக 1926-இல் தோற்றுவிக்கப்பட்டது சுயமரியாதை இயக்கமாகும்.
அதுவரை சகலமும் பார்ப்பான் என்றுதான் இருந்தது. இந்தக் கொள்கையோடு அந்தக் காலத்தில் இயக்கம் ஆரம்பித்தபோது எங்கள் மீது செருப்பு – கல் – சாணியெல்லாம் விழும். ஓட ஓட அடிப்பார்கள். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வந்ததால்தான் இன்றைய தினம் அந்தக் கருத்துள்ள ஆட்சியே அமையும்படியான நிலை ஏற்பட்டு விட்டது. ஒரு நாட்டையே திருப்பி அந்தக் கொள்கையுள்ள ஆட்சி அமையும்படியாயிற்று.
இந்தியாவிலேயே இப்படிப்பட்ட நாத்திக ஆட்சி கடவுள், மத, சாஸ்திர சம்பந்தமற்ற ஆட்சி எங்குமே இல்லையே. இப்போது தெரியுமே அண்ணாவின் சிறப்பு. துருக்கியில் கமால்பாட்சா ஆட்சிக்கு வந்தபோது அரசு அலுவலகங்களில் எதற்காக குரான் வாசகங்கள் என்று அழிக்கச் சொன்னார்? அதுபோன்று அண்ணா அவர்கள் அரசு அலுவலகங் களிலிருந்து கடவுள் படங்களை அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டார்.
மனிதனுக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பதை விளக்கும் வகையில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கினார்.
ஆட்சியில் நானே இருந்தால்கூட செய்ய முடியாத காரியங்களையெல்லாம் அண்ணா அவர்கள் செய்திருக்கின்றார்கள். புதிய கருத்துகளைப் பரப்பி புதிய உலகத்தை உண்டாக்கியவர் அண்ணா ஆவார்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாகத் தொண்டாற் றியவர்கள். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு என்னவென்றால், நாங்கள் மக்களிடையே ஓட்டுப் பெற்று பதவிக்குச் செல்வதில்லை என்ற கொள்கையுடையவர்கள். அண்ணா அவர்கள் ஓட்டுப் பெற்று பதவிக்குச் சென்று மக்களைத் திருத்த வேண்டுமென்ற கருத்துடைய வராவார்கள். மக்கள் மடையர்களாக இருந்தால்தான், மூடநம்பிக்கையாளர்களாக இருந்தால்தான் தாங்கள் வாழ முடியும் என்கின்ற காரணத்தால் பார்ப்பனர்கள் நமது கருத்துகளை மக்களிடையே பரவ விடாமல் தடுத்து விட்டனர்.
பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பனருடைய பத்திரிகைகள். தமிழன் பத்திரிகை எல்லாம் நம் பத்திரிகை ஒன்றைத் தவிர, மற்ற பத்திரிகைக்கார னெல்லாம்தான் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற நினைப்பில்தான் இருந்து கொண்டு பத்திரிகை நடத்துகின்றானே தவிர, தான் தமிழன் என்ற நினைப்பில் பத்திரிகை நடத்தவில்லை.
அதனால் நமது கருத்து பரவ வேண்டிய அளவிற்குப் பரவாமல் இருக்கிறது. நமது கருத்துகளை எவ்வளவோ இருட்டடித்தாலும் அது மக்களிடையே நல்ல அளவிற்குப் பரவிய காரணத்தால்தான் இந்த ஆட்சி அமையப் பெற்றிருக்கின்றது. நாடு இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை இனி யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திகனல்ல. அவனுக்கு முன் பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டைக் குறை சொல்கிறவனும் நாத்திகனேயாவான்.
மனிதனுக்கு 100, 200 வருஷங்களுக்கு முன்னிருந்த கடவுள் நம்பிக்கை இப்போது கிடையாது, கடவுள் நம்பிக்கைக் குறைய குறைய மனித அறிவு வளர்ச்சியடைந்து கொண்டு போகிறது. அதன் பயன்தான் இந்த விஞ்ஞான அதிசய அற்புத சாதனைகளாகும். மனிதன் தன் அறிவைக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்ததன் பலனாகத்தான் மனிதனின் சராசரி வயது வளர்ந்து கொண்டு போகிறது. மனிதனின் அறிவும் வளர்ச்சியடைகிறது.
மற்ற உலகிலுள்ள மனிதனைப் போன்று நமது நாட்டிலுள்ள மனிதன் வளர்ச்சி யடையாமல் போனதற்குக் காரணம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் – பெரியோர்கள் என்று நம்பிக் கொண்டிருந்ததாலேயேயாகும்.
இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் உலகத்திலுள்ள நாடுகளில் நமது நாடுதான் காட்டுமிராண்டி நாடு, அயோக்கியப் பார்ப்பான் நம்நாடுதான் ஞானபூமி என்பான். எங்கு முட்டாள்கள் இருக்கின்றானோ, அதுதான் பார்ப்பானுக்கு ஞானபூமியாகும்.
100-க்கு 5 பேரே படித்திருந்த நம் மக்கள் இன்று 100-க்கு 50 பேர் படித்தவர்களாகி விட்டார்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின் மனிதன் சிறு இயந்திரத்தை உடலில் பொருத்திக் கொண்டு தானாகவே பறக்க ஆரம்பித்து விடுவான். இன்று மணிக்கு 6,000 மைல் வேகத்தில் மனிதன் பறக்கின்றானா? இல்லையா?
இன்றைய ஆட்சியிலிருக்கின்ற எல்லா மந்திரிகளும் இல்லாவிட்டாலும் தலைமை யிலிருப்பவர்கள் பகுத்தறிவுக் கொள்கை கொண்டவர்களாவார்கள். இந்த ஆட்சி இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டு மென்றால் சாம்பலடித்துக் கொண்டு போகிறவனையெல்லாம் பிராசிகியூட் செய்ய வேண்டும்; நாமம் போட்டவனையெல்லாம் பிடித்துத் தண்டிக்க வேண்டும்; இந்தக் கோயிலுக்குள் இருக்கிற கல்லையெல்லாம் உடைத்து ரோட்டிற்குப் போட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
(9.2.1970 அன்று புதுவை மாநிலம் திருநள்ளாற்றில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை _ – விடுதலை, 31.3.1970)