வள்ளுவர் ஆண்டை முன்னிடு !

ஜனவரி 16-31

 

 

 

 

ஆண்டு; தமிழர் ஆண்டு… திரு

                வள்ளுவர் பெயரைப் பூண்டு

யாண்டும் பரவும் ஆண்டு… இன்றே

எழுந்த துணர்வு மூண்டு!

 

இத்தரைப் போற்றும் தமிழில்… பொங்கி

                இன்றும் வளரும் தமிழில்

“சித்திரை முதலாம் இழிவு… இடை

                சேர்ந்த ஆரியக் கழிவு!’’

 

ஆண்டு பலமுன் தோன்றி… மிக

                ஆழ அடிக்கால் ஊன்றி

நீண்டு படர்ந்த பெருமரம்.. தண்

                நிழல் நிறையத் தருமரம்!

 

வந்தார் போவார் தங்கவும்… கீழ்

                வாகாய் உணவைப் பொங்கவும்

தந்த உரிமை கொன்றனர்… பின்

                தமிழே தன்னடி என்றனர்!

 

தமது மொழியை வளர்த்திட… செந்

                தமிழைத் தாழ்த்தித் தளர்த்தனர்

தமது மக்கள் வாழ்ந்திட… பொய்த்

                தழையும் கதைகள் சூழ்ந்தனர்!

 

சிறுக சிறுக மாற்றினர்… நம்

                சிறப்புத் தமிழைத் தூற்றினர்

“பெறுக துறக்கம்’’ என்றனர்… பாருள்

                பிடுங்கிக் கழுகாய்த் தின்றனர்!

 

எல்லாம் மாறிப்போயிற்று – தமிழ்

                இறையும் கருங்கல் ஆயிற்று

கல்லாத் தமிழர் பெருகினர் – நட்ட

                கல்லை வணங்கி வருகினர்!

 

எங்கோ ஒருவன் விழித்தான் – நமை

                ஏய்ப்போர் செயலைப் பழித்தான்

பொங்கித் தமிழுணர்வு எழுந்தது – அப்

                புல்லர் பிழைப்பும் விழுந்தது!

 

இருந்த சிறப்பைக் காட்டியும் – உடன்

                இழந்த மதிப்பை ஈட்டியும்

விருந்தைத் தமிழில் வழங்கிடும் – புகழ்

                வென்றி முரசே முழங்கிடும்!

 

அனைத்தும் மலரும் ஞான்றிலே – தம்பி

                ஆண்டு முறையுந் தோன்றவே

வினையின் தூய்மை உன்னிடு – திரு

                வள்ளுவராண்டை முன்னிடு!

–  தரங்கைப் பன்னீர்ச்செல்வன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *