(இயக்க வரலாறான தன்வரலாறு – 194)
பொருளாதார அடிப்படை கூடாது
என்று நேரு உறுதியாய்க் கூறினார்!
மஞ்சை வசந்தன்-கலையரசி திருமணம்
01.06.1982 அன்று காலை சிதம்பரம் ஏ.வி.சி.திருமண மண்டபத்தில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன்_கலையரசி வாழ்க்கை இணை ஏற்பு விழா நிகழ்வு நடைபெற்றது. நான் திருமணத்தை நடத்தி வைத்தேன். கல்வியாளரும் மேனாள் பள்ளிக் கல்வி இயக்குநரும், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தலைமை வகித்துப் பேசியபோது, “ஆசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் இளம்வயதிலே ஒரு பெரிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய நூலுக்கு மறுப்பு எழுதி அவரைத் தோல்வியுறச் செய்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. மஞ்சை வசந்தன் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ நூலைப் படித்ததால் தான் அவருடன் எனக்குத் தொடர்பும் பற்றும் ஏற்பட்டது. இந்த முதிர்ந்த வயதிலும் தனிமையாக ரயிலில் பயணம் செய்து வந்து இந்தத் திருமண நிகழ்வில் நான் கலந்து கொண்டதற்குக் காரணம் அவர் மீதான அந்தப் பற்றுதான். தாலி இல்லாமல், சடங்குகள் இல்லாமல் இந்தத் திருமணம் நடைபெறுவதை எல்லோரும் வியப்பாகப் பேசுகிறார்கள். இதனால் ஏதாவது பாதிப்பு வருமோ என்றுகூட சிலர் அஞ்சலாம். நான் அந்தக் காலத்திலே தாலியில்லாமல் திருமணம் செய்து கொண்டவர் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.
எனது தலைமையுரையில், “மணமகள் கலையரசி திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த அத்திப்பட்டு துரைசாமியின் மகள், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் தங்கை மகள். தந்தை பெரியாராலும், என்னாலும் மிகவும் நேசிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மஞ்சை வசந்தன் பக்திமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் 24 வயதிலே ‘அர்த்தமற்ற இந்து மதம்’ என்ற மறுப்பு நூலை, பதில் கூறமுடியாத அளவிற்கு சவால் விட்டு எழுதியவர். குடும்பச் சூழலை பகுத்தறிவுச் சிந்தனையால் மாற்ற முடியும் என்பதற்கு இவர் நல்ல எடுத்துக்காட்டு. பக்தி மட்டுமல்ல, ஜாதி பற்றுக் கொண்ட குடும்பத்தில் வந்தவர்கள்கூட அதை மறுத்து வாழ முடியும்!
‘அர்த்தமற்ற இந்து மதம்’ நூலுக்கு அணிந்துரை பெற அவர் என்னை 1979இல் சந்தித்ததுதான், என்னுடன் அவரின் முதல் சந்திப்பு. அந்த ஆண்டே சென்னை பெரியார் திடலில் பெரியாரியல் பயிற்சி முகாமில் கலந்து பயிற்சி பெற்று, பல மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து நடைபயணமாக, ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்துகொண்டே தஞ்சைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில்தான் அவரது ‘அர்த்தமற்ற இந்து மதம்’ நூல் என்னால் வெளியிடப்பட்டது. மஞ்சை வசந்தன் நூல் மலேசியாவிலும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் ஆற்றல்மிக்க எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், திராவிட இயக்கத்தின் சொத்து’’ என்று குறிப்பிட்டேன். திருமண நிகழ்வில் ஆர்.கோபாலகிருஷ்ணன், என்.வி.இராமசாமி, கனகசபைப் பிள்ளை, வாசீகம் பிள்ளை, தீத்துக்குடியார் பூ.அ.காசிநாதன், பூந்தோட்டம் பொன்.கோவிந்தசாமி, கதிர்விசுவலிங்கம், தலைமையாசிரியர் துரை.இராமலிங்கம், புலவர் அமிர்தலிங்கம், டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, மாவட்டச் செயலாளர் கனகசபாபதி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள்.
திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டுக்காக 450 கிலோ மீட்டர் கடக்கும் சென்னை மாவட்ட கழக இளைஞரணி சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதனை 03.06.1982 அன்று துவக்கி வைத்து உரையாற்றினேன்.
இந்த ஏற்பாட்டைக் கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறேன். தந்தை பெரியார் மறைவிற்குப் பின்னும் இந்த இயக்கம் எந்த நிலையில் எழுச்சியுடன் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமே இளைஞர்களின் எழுச்சிதான்.
நமது இயக்கம் சமுதாயப் புரட்சி இயக்கம், பல்லாயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு உரிமையைப் பெற்றுத்தர புறப்பட்ட இயக்கம். அத்தகைய ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இயக்கத்தின் செயல்முறைகளில் பிரச்சாரம்தான் மிக முக்கியமானது.
இப்பொழுது நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணத்தின் நோக்கம் நமது மாநில மாநாட்டைப் பற்றி பொதுமக்களிடையே விளக்கவும், மாநாட்டிற்கு தமிழின மக்களை அழைக்கவும்தான் என்பதாகும் என்று விளக்கினேன்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் பழம்பெரும் சுயமரியாதை வீரருமான காஞ்சி சி.வி.எம்.அண்ணாமலை, மனோகரன் போன்றோர் கலந்துகொண்டனர். துவக்கத்தில் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் த.வீரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
காலையில், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 59ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் திடல்வந்த அவரை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பிறகு தந்தை பெரியார் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் உரையாடினோம்.
06.06.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “ஆபத்து தலை தூக்குகிறது’’ என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் ஊர்வலம் நிறைவு விழா அழைப்பிதழை வெளியிட்டிருந்தோம். ஆர்.எஸ்.எஸ். உடற்பயிற்சிகளுக்கு தடை போடப்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அறிவித்த வாக்குறுதிகள் எங்கே போயிற்று? இந்தப் பயிற்சி முகாமில் _ எதற்குப் பயிற்சி தரப்படுகிறது?
தமிழ்நாட்டில் “மண்டைக்காடுகள்’’ நடந்த பிறகு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சேலத்தில் 25 நாள்கள் பயிற்சி முகாமை நடத்தி முடித்திருக் கிறார்கள்! அதன் அழைப்பிதழைத்தான் இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.
இன்னும் எத்தனை “மண்டைக்காடுகளை’’ தமிழகத்தில் உருவாக்குவதற்கு திட்டமிடப் படுகிறது? எல்லாவற்றுக்கும் மேலாக காஞ்சி சங்கராச்சாரியே இதில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக எடுத்துக்காட்டவே இந்தச் செய்தி.
இது 07.06.1982 ‘இந்து’ ஏட்டில் அப்படியே வெளிவந்துள்ளது.
“He (Shankaracharya) felt that the special facility for performing Abisekam and Archana by people themselves to idol of Lord Muruga which would be carried in the van, would help since caste differences”
இதன்படிப் பார்த்தால் யாரும் பூசையைச் செய்யலாம். அர்ச்சனை செய்யலாம் என்று சங்கராச்சாரியார் ஒப்புக்கொண்டுவிட்டார்.
இப்படிச் சொல்வது சங்கராச்சாரியார் நமது வழிக்கு வந்துவிட்டார். வேறு வழியில்லாமல் என்பதைத் தெளிவாக உலகுக்கு உணர்த்து வதேயாகும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.
திருச்சியில் 12, 13.6.1982 ஆகிய இரு நாள்களிலும் நடைபெறும் திராவிடர் கழக மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் நாள் மாநாடு திராவிடர் கழக மாநாடு, இரண்டாம் நாள் மாநாடு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு. இம்மாநாட்டில் அகில இந்திய சார்பில் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், டி.பி.யாதவ், சந்திரஜித் யாதவ் எம்.பி., ஜெய்பால்சிங் கஷ்யப் எம்.பி., ஏ.சக்கரபாணி எம்.எல்.சி., ராம்விலாஸ் பாஸ்வான் எம்.பி., எஸ்.என்.டி.பி.யோகத்தைச் சார்ந்த (கேரளம்) திரு.சுவர்ணகுமார் (தலித் இயக்கத் தலைவர்), கர்நாடகம் வி.டி.ராஜசேகர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
தமிழர்களின் உரிமைக்காகவும் வாழ்வுக்காகவும் பாடுபட்டு வரும் திராவிடர் கழகம் திருச்சி நகரையே வளைத்துப் போட்டு கொள்கை விளக்கம் செய்முறைத் திட்டத்தை (Demonstration) மேற்கொண்டதோ என்றுதான் எவரையும் பிரமிக்கச் செய்தது. இரண்டு நாள் மாநாடுகளிலும் நான் சிறப்புரை ஆற்றினேன். வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் ஆகியோரின் எழுச்சி உரைகளுக்குப் பின்னால், மாநாட்டின் முத்தாய்ப்பாக நான் உரையாற்றினேன்.
நமது மக்களை ஜாதிகளாகப் பிரித்து வைத்ததன் விளைவு பெருங்கூறுகளாக நம் மக்கள் பிரிவதுடன் ஒருவருக்கொருவர் மிகவும் சகோதர பாசத்துடன் மனிதநேயத்துடன் வாழ வேண்டியதற்குப் பதில் பிற்படுத்தப்பட்டவரும் தாழ்த்தப்பட்டவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் போக்கு கண்டு இம்மாநாடு கவலை கொள்ளுவதோடு அனைத்துக் கட்சி, மக்களும் இப்படி நிகழா வண்ணம் தடுப்பு முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு, சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. சில முக்கிய தீர்மானங்களை மட்டும் பார்த்து, அதனை விளக்கியும் உரையாற்றினேன்.
இந்திய அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு சமூக _ கல்வி அடிப்படை பற்றிய தீர்மானத்தை விளக்கினேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர பொருளாதார (Economically) அடிப்படை கூடாது என்பதை சீர்தூக்கிப் பார்த்த பின்பே முடிவு செய்யப்பட்ட முடிவாகும். பண்டித நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற மேதைகளால் சமூகநீதிக் காவலர்களால் முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை உடைக்க அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள “பொருளாதார அடிப்படை’’ (Economic Basis) என்பது தவறான அணுகுமுறை என்பதால் இதற்கு எந்த அரசானாலும் இணங்கவே கூடாது என்பதையும் இந்த மாநாட்டில் விளக்கினேன்.
மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரையில் சொல்லப்பட்டிருக்கும் 27 சதவீத இடஒதுக்கீடு என்பதும்கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மிகக் குறைந்த சதவீத இடஒதுக்கீடுதான். அதை 20 ஆண்டுகளிலே மறுபரிசீலனை செய்யலாம் என்று கமிஷன் அறிக்கையில் கூறியிருப்பது எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் உடன்பாடு இல்லை; காரணம் என்னவென்றால் அய்யாயிரம் ஆண்டுகாலமாக அடிமையாக இருந்து இருக்கின்றோம். எத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் படிக்க ஆரம்பித்தோம்? பெரியார் பிறந்து இருக்காவிட்டால் நான் எம்.ஏ., பி.எல். ஆகியிருக்க முடியுமா? எங்கேயாவது ஒரு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். இன்னொரு நண்பர் (டாக்டர்) ஆளாகியிருக்க முடியுமா?
இன்னொரு நண்பர் இந்த வகுப்புரிமை இல்லையானால் பேராசிரியராக ஆயிருக்க முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டும்! ஆகவேதான் 20 ஆண்டுகாலம் என்பதே குறைவு. எனவே, மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கல்வி உத்தியோகம் கிடைக்கும் காலகட்டம் வரவேண்டும்; அதுவரை இந்த இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும். அய்யா அவர்கள் நீண்டகாலமாக அதைத்தான் சொன்னார். இந்திய அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்படுகிறது. பெரியாருடைய முயற்சியினால், அதிலே பொருளாதார அடிப்படை என்று போடவேண்டும் என்று கேட்கிறபோது, கூடாது என்று எடுத்துச் சொல்லுகின்ற நிலை ஏற்படுகிறது. Constituent Assembly Debates என்கிற பகுதியிலிருந்து, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராகவும், ஒரு பக்கத்திலே அமர்ந்திருக்கிறார். பண்டித நேரு அவர்கள் ஒரு பக்கத்திலே அமர்ந்திருக்கின்றார்.
அப்போது பொருளாதார ரீதியாகவும் என்ற வார்த்தையைப் போட வேண்டும் என்று மற்றவர்கள் அங்கே வற்புறுத்துகிறார்கள். அப்படி வற்புறுத்துகிற நேரத்தில் நேரு அவர்கள் என்ன சொல்லுகிறார்? பொருளாதார ரீதியில் என்பதை போடக்கூடாது என்று நேரு அவர்கள் திட்டவட்டமாகத் தெளிவாக நிராகரித்து விட்டார்கள். அந்த 340ஆவது பிரிவின்கீழ் மண்டல் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் மறைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு 3.9.1973 அன்று ‘விடுதலை’யிலே கட்டுரை ஒன்றை எழுதினார். அந்தக் கட்டுரையில் உயர் சாதியினர் பொருளாதார கண்ணோட்டத்தை ஆதரிப்பேன்? என்று சில பேர் சொல்லுவான். ஜாதி அடிப்படையிலே இருக்கலாங்களா? ஜாதியெல்லாம் ஒழிய வேண்டுமாயிற்றே என்று மேலோட்டமாக இந்த இடத்திலே பேசுவார்கள். ஜாதி ஒழிய வேண்டும் என்பார்களே தவிர முதலில் பூணூலை ஒழித்துக் கட்டுவார்களா? இப்படி சமூகரீதியான, சட்டரீதியான வரலாற்றுச் சம்பவங்களை விரிவாக மாநாட்டில் விளக்கிப் பேசினேன்.
திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையில், அகில இந்திய பிரச்சினையை தமிழகத்திலிருந்தே தீர்த்து வைக்கக்கூடிய பெருந்தலைவர்களாகத்தான் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் விளங்கினார்கள்.
அகில இந்திய தலைவர்களிலே ஒருவர் என்று மதிக்கப்பட்டாலும்கூட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டை முன் வைத்துத்தான் அகில இந்திய பிரச்சினைகளை ஆராய்ந்தார் என்பதை நாம் மறப்பதற்கில்லை.
ஒரு செய்தியை இங்கே எடுத்துக் காட்டுகிறேன். அது 1974ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நாங்கள் எல்லோரும் அமைச்சர்களுடைய வரிசையிலே அமர்ந்திருந்த நேரத்திலே -_ இங்கே வீற்றிருக்கின்ற மன்னையும் அன்பிலும் அமைச்சர்களாக இருந்த காலகட்டத்தில் நாவலரும், பேராசிரியரும் அமைச்சர்களாக இருந்த காலகட்டத்தில் ஒரு பட்டியலை நான் சட்டமன்றத்திலே படித்தேன். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திரு.ஹண்டே அவர்கள், என்னைப் பார்த்து கடுஞ்சொற்களைக் கூறவேண்டும் என்பதற்காக ‘இந்தச் சர்க்கார் மூன்றாந்தர சர்க்கார்’ என்றார்!
உடனே, நான் எழுந்து சொன்னேன், “ஹண்டே அவர்கள் சொன்னது தவறு; திருத்தம் தேவை; இது மூன்றாந்தர சர்க்கார் என்று சொன்னார், அல்ல; இது நாலாந்தர சர்க்கார். பிராமண _ க்ஷத்திரிய _ வைசிய _ சூத்திர என்று சொல்லப்படுகின்ற நான்கு பிரிவுகளில் சூத்திர மக்களுக்காக சூத்திர மக்களால் ஏற்படுத்தப் பட்ட சூத்திர சர்க்கார் இந்தச் சர்க்கார் என்று சொன்னேன். சொன்னால் மாத்திரம் போதுமா? எப்படிச் சூத்திர சர்க்கார் என்பதை விளக்க வேண்டும் என்பதற்காக சில உண்மை விவரங்களைச் சொன்னேன்’’ என்று பல முக்கிய வரலாற்றுத் தகவல்களை கலைஞர் அவர்கள் எடுத்துக் கூறினார்.
உத்திரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்பால்சிங் காஷ்யப் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரையில், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்காக தமிழகத்தில் இவ்வளவு சக்திவாய்ந்த இயக்கம் நடப்பதை நேரில் கண்டபோது நான் மிகவும் வியப்பு அடைந்தேன். உள்ளம் பூரித்துப் போனேன்.
எனது தொகுதியிலே 25,000 பார்ப்பனர்கள் ஓட்டு இருக்கிறது; அதில் ஒரு ஓட்டுக்கூட எனக்குக் கிடைக்கவில்லை; எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள்தான். எனவே, அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது தான் எனது நாடாளுமன்றத்தின் கடமை. எல்லா சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொன்னால், திராவிடர் கழகம் வகுப்பு வாதத்தைத் தூண்டுகிறது என்கிறார்கள்.
எனவே, பெரியார் தந்த சுடரை தூக்கிப் புறப்படுவோம். அந்தச் சுடர்தான் இந்தியாவுக்கே வழிகாட்டப் போகிறது! தமிழர் தளபதி வீரமணி அவர்களே, நீங்கள் இனி தமிழர் தளபதி அல்ல; பாரத தளபதி! உங்களை வரவேற்க _ வடமாநிலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்; வடமாநிலங்களுக்கு வழி காட்டுங்கள், எங்களுக்கு வழி காட்டுங்கள்; பீகாரிலும், உ.பியிலும், அரியானாவிலும், பஞ்சாபிலும், இன்னும் பல மாநிலங்களிலும் லட்சக் கணக்கான மக்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள். நான் மீனவ வகுப்பைச் சார்ந்தவன். அதனால் சூத்திரன் படிக்கக் கூடாது என்று திரிபாதி என்ற பார்ப்பன ஆசிரியர் என்னை பள்ளிக் கூடத்திலே இருந்து வெளியேற்றினார். அந்தக் கொடுமை இனியும் நடக்கக் கூடாது!’’ என்று உணர்வுபூர்வமான உரையை நிகழ்த்தினார்.
பீகார் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆற்றிய உரையில் இந்தியாவில் ஜாதியின் ஆதிக்கம் பற்றி _ நமது மேடைகளில் பேசியபோது அரிய கருத்துகளை பஸ்வான் அவர்களும் அப்படியே தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். தந்தை பெரியார் பிறக்காத மண்ணிலிருந்து வந்த ஒரு இளைஞர் சமுதாயத்தைப் பற்றி இப்படிச் சரியான கோணத்தில் சிந்தித்திருக்கிறாரே என்ற வியப்பும் மகிழ்வும் ஏற்பட்டது.
இளைஞர்களின் உள்ளத்திலே பேரெழுச்சியை ஏற்படுத்திய அந்த அனல் பறக்கும் இந்தி உரையை தமிழ்நாடு தலித் இயக்கத் தலைவர்களிலே ஒருவரான ஏழுமலை அவர்கள் மொழிபெயர்த்தார்.
“ஒடுக்கப்பட்ட மக்கள் நாம் 85 சதவீதம் இருக்கிறோம்; இடஒதுக்கீடு என்பது நமது உரிமை! நாம் போய் 15 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதிக்காரர்களிடம் பிச்சை கேட்கலாமா? நமது உரிமைக்கு நாம் பிச்சை கேட்கும்போது பார்ப்பனர்கள் சொல்கிறார்கள், ‘நீங்கள் கலவரம் செய்கிறீர்கள்’ என்று! இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை _ அதை எடுத்துக்கொள்ள நாம் தயாராக வேண்டும்’’ என்று வீரம்செறிந்த உரையை ஆற்றினார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உரிமைக்காப்பு மாநாட்டில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஏ.கே.ஏ.அப்துல் சமது எம்.பி., அவர்கள் உரையாற்றினார். அப்போது அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னே பெரியார் சிந்தனை முத்துகள்; அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்; அவர் நடத்திய போராட்டம் அரை நூற்றாண்டுக்குப் பிறகுகூட அது தொடர்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. தமிழகத்தினுடைய நெஞ்சத் தாமரை என்று வருணிக்கக் கூடிய இந்த திருச்சி மாநகரில் நடக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுடைய பெருங்கூட்டம் என்று நான் நினைக்கிறேன் என்று ஏ.கே.அப்துல்சமது எம்-.பி குறிப்பிட்டார்கள்.
திருமதி டி.என்.அனந்தநாயகி அவர்கள் உரையாற்றுகையில், எந்த மாகாணத்திலாவது 50 சதவீதத்துக்கு மேலே பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு குறைக்கக்கூடாது.
இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியினர்கூட 9000 ரூபாய்க்கு மேலே போனால் முற்பட்டவர்கள் என்ற கொடுமையான ஒரு ஆணையைப் போட்ட பிறகு இதே சர்வகட்சி கூட்டம்தான் சகோதரர் வீரமணி அவர்கள் தலைமையிலே தமிழ்நாடு பூராவும் தீவிரமாக வேலை செய்து அந்த 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ஒழித்தது மாத்திரமல்லாமல், 50 சதவீதம் ஒதுக்கீடும் கிடைக்கப் பெற்றிருக்கின்றோம். அது பெரிய சாதனை. காது கேட்பவனிடத்திலே சங்கு ஊதினால் அது கேட்டுவிடும். ஆனால், செவிடன் காதிலே சங்கு ஊதுவது என்பது என்ன லேசான வேலையா? பெரிய சங்கை எடுத்து ஊதினார் வீரமணி.
செவிடங்காதிலேயும் அதுபோய் விழுந்து அந்த 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை மாறி, 50 சதவீதமாக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ஒதுக்கீடு என்ற நிலை ஏற்பட்டது.
இந்த மகத்தான வெற்றியை நாட்டுக்கு ஈட்டித் தந்தது திராவிடர் கழகமும் அதன் பொதுச் செயலாளர் திரு.வீரமணி அவர்களும்தான் என்று குறிப்பிட்டார்கள். மேலும் பல்வேறு சம்பவங்களை நினைவுபடுத்தி நீண்டதோர் உரையை நிகழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் முன்னாள் மத்திய கல்வித்துறை அமைச்சரும் பிகார் மாநிலத்து நாடாளுமன்ற உறுப்பினருமான டி.பி.யாதவ் அவர்களும், திராவிடர் கழக மாநாட்டில் மண்டல் குழு அறிக்கைப் பரிந்துரைகள் நிறைவேறும் வாய்ப்புகள் ஒளிமயமாகத் தெரிவதாகக் கூறினார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா.இராமநாதன் எம்.ஏ.பி.எல்., அவர்களும், பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்களும், கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களும் கழக நிர்வாகிகள் பலரும் உரையாற்றினர்.
திராவிடர் கழகத்தின் திருச்சி மாநில மாநாடு தமிழகத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்று நான் மாநாட்டிற்கு முன்பே எடுத்துச் சொன்ன கருத்து 100க்கு 100 உண்மையாகிவிட்டது என்பதை திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொள்ளாத நடுநிலை யாளர்கள் ஒப்புக்கொண்டுவிட்டனர்.
மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக கழகத் தாய்மார்களும், தங்கைகளும், பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கு இரவு பகலாக உழைத்த கழகத் தோழர்கள், இரண்டு நாள் மாநாட்டிலும் கட்டுப்பாடு குலையாமல் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை தமிழ்நாட்டுக்குள்ளேயே இருட்டடித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு, அவரின் கொள்கை விந்தியத்தையும் தாண்டி இமயத்திலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது என்பதை விளக்கிட இந்த மாநாடு எடுத்துக்காட்டு. அதற்கு உறுதுணையாக அனைவரும் உழைத்தனர். தீர்மானங்கள் மீதும் உரையாற்றினர்.
(நினைவுகள் நீளும்…)