Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

வாழ்ந்துகெட்டவன்

நிரம்பி வழிகிறது அணை
சொட்டு ஈரமில்லை
கன்னடனுக்கு

செவிடன் காதில்
ஊதிய சங்காய்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

வயிறுமுட்ட ஊட்டிய காவிரித்தாய் மார்பு வற்ற
சவலப் பிள்ளையானது
படுகை வாழ்வு

எமக்கான டிஎம்ஸி நீரைக்
கேட்க நாதியற்று
அரசன் ஆண்டியானதுபோல்
முப்போகம்
ஒரு போகமாகி
காத்திருக்கிறோம்
நிவாரணம் பெற.
பி. செழியரசு, தஞ்சை

பள்ளங்களே சவக்குழியாய்

கௌசிகனின் சாபத்தால்
கல்லாகிப் போன அகலிகை
இராமனின் கால்தூசுபட்டு
பெண்ணாகி எழுந்தது
பழைய இராமாயணம்!

அகழ்வாராய்ச்சியினரின் வரலாற்றுத் தூசுகளால்
பாபர் பள்ளிவாசல்
இராமர் கோயிலாக மாறுவது
புதிய இராமாயணமா?
கிணறு தோண்டினால்
பூதம் வருமாம்!
பூதங்களின் ஆசைகளுக்காக
அயோத்தியைத் தோண்டினால்
என்ன வரும்?

மறைந்திருத்து
கொல்லப்பட்ட வாலி
மறையாது இன்னும் பழிதீர்க்க
படுத்துக்கிடக்கலாம்

வேள்வி செய்ததால்
தலை துண்டிக்கப்பட்ட
சம்பூகன்
சதித்திட்டத்தோடு
சமயம் பார்த்து
காத்துக் கிடக்கலாம்!

பத்துத் தலை இராவணன் வெட்டிய தலைகளோடும்
உருவிய வாளோடும்
உறங்காது
விழித்திருக்கலாம்!

வெட்டி வீழ்த்தப்பட்ட
அரக்கர்கள்
கோபக் கனலோடும்
கொலை வாளோடும்
வீறு கொண்டு
எழுந்திருக்கலாம்!

நாத்திகம் பேசி
நாத்தழும் பேறி
நரகத்திற்குப் போனவர்களின் கபால ஓடுகள் ஒன்றுசேர்ந்து
பேயாட்டம் போடலாம்!
கூனி
கைகேயி
சூர்ப்பனகை
கூட்டணி சேர்ந்து
சூழ்ச்சி வலை பின்னியிருக்கலாம்!

இன்னும்
இன்னும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகால
பகை நெருப்புகள்
கனலாய் கொதிக்கலாம்!

மணல் திட்டுகளை
இராமர் பாலமென
வார்த்தை ஜாலம் காட்டும்
மணல் குதிரைகளே!

எதற்கும்
கொஞ்சம் பாதுகாப்பாகப்
பள்ளம் தோண்டுங்கள்
நீங்கள் தோண்டும்
பள்ளங்கள்
உங்களுக்கே
சவக்குழியாய் மாறக்கூடும்!
– மன்சூர், புதுச்சேரி

விற்கப்படுவாய்

தெரிவதில்லை

எச்சங்கள்
உச்சியில்

தீர்த்தது
மயானம்
மதக் கலவரம்

கனவு
வல்லரசு
பங்காளிச் சண்டை

கற்பழிப்பில்
பாதிரியார்
பாவமன்னிப்பு

புதிய வாகனம்
முதல் விபத்து
எலுமிச்சை

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று
அடிமைத் தமிழன்

அடங்கமறு
அத்துமீறு
கருவறை

பலனில்லை
கோவிந்தா கோவிந்தா
அல்லேலுயா

தடி, முக்காடு
பூச்சித் தாத்தா
சங்கரா மடம்

அர்ச்சனைக்கு
ஆண்குறியா?
ஆரியத் திமிர்

கட்டுப்படுகிறது
மடந்தைகள் கூட்டம்
நல் மேய்ப்பர் ஆலயம்

கூடுகிறது
அர்ச்சனை
தட்சணை

புனிதமாகியது
மூத்திரக்கல்,
ஹைவேஸ் அம்மன்

குனிந்துவிடுகிறது
பெண்ணினம்
தாலி

முன்னுரிமை
முதல் முட்டாள்களுக்கு
சிறப்பு தரிசனம்

வேதனை
மலம் அள்ளும் கைகள்
ஆயுத பூஜை

விருந்துண்டு
மருந்தில்லை
போ – போ…

இரைக்காக
இறை
மதம்

விழித்திரு விற்கப்படுவாய் தமிழா!
புதுவை ஈழன்