கே: நடிகரின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்புலமாக பா.ஜ.க. இருக்கிறது என்ற நிலையில் அதை முறியடிக்க பிரச்சாரம் முன்னெப்போதையும் விட வேகமாக அமையுமா?
– – —கெ.நா.சாமி, சென்னை-72
ப: ‘மோடியின் முதல்வர் வேட்பாளர்’ என்று அந்த நடிகரைப் போட்டுள்ளது ‘ஜூனியர் விகடன்’ வார ஏடு. பெரியார் மண்ணில் ஒப்பனையுடன்கூடிய ஹிந்துத்துவ மாயமான் வந்தால் விரட்டியடிக்க வேண்டிய உணர்வுதானே எரிமலை வெடிப்பதைப்போல வெடிக்கும்.
கே: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை அகற்றப்படும்’’ என்கிறாரே மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே?
– நெய்வேலி க.தியாகராசன்,கொரநாட்டுக்கருப்பூர்
ப: பார்ப்பன வாய்க்கொழுப்பு _ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அம்பலப்படுத்திவிட்டு பிறகு அவமானத்தைச் சுமந்து மன்னிப்பும் கேட்டார் நாடாளுமன்றத்தில்!
கே: பாபர் மசூதி போன்று தாஜ்மகாலுக்கும் சிக்கல் வருமா?
– – இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
ப: இது 2018_1992 அல்ல. நினைவில் வையுங்கள்!
கே: தங்களின் ‘வாழ்நாள் சாதனை’யாக எதைக் கருதுகிறீர்கள்?
– – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: எதையும் நான் ‘வாழ்நாள் சாதனை’ என்று கருதவில்லை; அனைத்தும் வாழ்நாளின் சாதாரணங்கள் _ பணியின் பகுதிகள், ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணம்! அவ்வளவே!
கே: ஆர்.எஸ்.எஸ். முன்பு மோடியை முன்னிறுத்தியதுபோல, தமிழகத்தில் தற்போது இரஜினியை முன்னிறுத்தி ஊடக உதவியோடு மக்களை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உண்மையா?
– ——- இல.சங்கத்தமிழன், செங்கை
ப: முதல் கேள்விக்கான பதிலே இதற்கும்!
கே: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு தமிழகத்திற்கு துக்கப் புத்தாண்டுச் செய்தியாக அமைந்துள்ளது’’ என்று இயக்குநர் கவுதமன் பேட்டியை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப: இனஉணர்வும், பெரியார் ஊட்டிய பகுத்தறிவும் ‘ஆத்மா’ புரட்டை அம்பலப்படுத்தியது போலவே இதிலும் இருக்கும். ஒரே அடியான ஒப்பாரி தேவையில்லை. எந்த நோயும் நிரந்தரமாகிவிடாது.
கே: “பெயர் அளவில்தான் கூட்டாட்சித் தத்துவம். ஆனால், தமிழர்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது’’ என்று நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கி.சாரதா, திண்டிவனம்
ப: 50 எம்.பி.க்களை வைத்துள்ள கட்சி இப்படி வாய்ச்சவடால் விட்டால் போதுமா? தன்மான உணர்வை வெடித்தால் பறிக்கப்படும் உரிமைகள் மீண்டும் மாநிலத்திற்குக் கிடைக்குமே!
கே: மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு மாநில உரிமைகளை அறவே பறிக்கும் முயற்சியா?
– – க.பார்த்தசாரதி, நுங்கம்பாக்கம்
ப: மாநில உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை. மருத்துவர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
கே: நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 7%க்கும் கீழ் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு மோடி அரசின் தோல்வியைக் காட்டுவதுதானே?
– – ப.ஆறுமுகசாமி, வேலூர்
ப: இந்த உண்மை மூன்று பேர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும், தெரியும். அம்மூவர்: 1. பிரதமர் மோடி, 2. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 3. அமித்ஷா பி.ஜே.பி தலைவர்.