சமீபத்தில் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 72ஆவது தேசிய சீனியர் ஆடவர் மற்றும் மகளிர் டென்னிகாய்ட் தொடரில் தங்கப் பதக்கம் வென்று சாதித்து இருக்கிறார் வேலூர் மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சார்ந்த பவித்ரா.
சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வமுடைய பவித்ரா பள்ளியில் படிக்கும்போது கோ_கோ, வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார்.
இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் பி.டி. மாஸ்டர் பாலாஜி அவர்கள், “நீ நல்லா உயரமா இருக்குற, அதனால டென்னிகாய்ட் விளையாட்டில் உன்னால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்’’ என்று சொல்லி தீவிரப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வானார். 10ஆம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவிலான ஜூனியர் போட்டியில் இரண்டாவதாக வந்தார்.
மாநில அளவிலான போட்டிகளில் ஜொலித்ததால் தேசிய அளவிலான போட்டிகளில் பவித்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 11ஆம் வகுப்பு படிக்கும்போது சேலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் வந்து சாதனைப் படைத்தார்.
பவித்ரா மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதை உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது சித்தேரி ஊர் மக்களும் பாராட்டு விழா நடத்தி, பரிசுகள் வழங்கிப் பெருமைபடுத்தியிருக்கிறார்கள்.
ஏழ்மை நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை நிகழ்த்தியிருக்கும் பவித்ராவுக்கு ‘எல் அண்ட் டி’ தொழிற்சாலையினர் கல்வி உதவித் தொகையும், இவர் அப்பாவுக்கு அந்தத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இண்டியன் ஆயில் நிறுவனமும் பவித்ராவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது.
“ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிகாய்ட் இல்லாதது வருத்தமளித்தாலும் உலக அளவில் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். விளையாட்டுத் துறை மட்டுமல்லாது நன்றாக படித்து அய்.பி.எஸ். ஆவதே என்னுடைய லட்சியம்’’ என்று பவித்ரா கூறியிருக்கிறார்.
தற்போது மதுரை வேளாண்மைக் கல்லூரியில் படித்துவரும் பவித்ரா சிறு வயதில் அடிக்கடி உடல்நலக் குறைவு, பள்ளிக் கூடத்திற்குக் கூட சரியாக செல்லமுடியாத நிலை, சரியாகப் படிக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கம், எப்பொழுதும் உடலளவிலும், மனதளவிலும் சோர்வு… இப்படியெல்லாம் இருந்தவர்தான். தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் இப்போது சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார். சாதனைகளுக்கு ஏழ்மை தடையாக இருக்க முடியாது என்பதைத் தனது சாதனைகளின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
பவித்ராவின் சாதனைகளை பாராட்டு அவரின் உயர்ந்த லட்சியங்களும் நிறைவேற உளமார வாழ்த்துவோம்!