வெற்றி விழா!
“கோயபல்சுகளின் குருநாதர்களும் -_ 2ஜி அலைக்கற்றை தீர்ப்பும்’’ என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் 1.1.2018 மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
இச்சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து…
“2ஜி அலைக்கற்றை வழக்கு இராசா, கனிமொழி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட வழக்கு அல்ல, தி.மு.க., திராவிட இயக்கத்தின் மீது அவதூறாகப் பழிபோட்டு அழிப்பதற்காகன திட்டமிட்டச் சதியாகும்.’’
“சிஏஜி (CAG) எனும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஊகங்களின் அடிப்படையில் இழப்புகள் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்பட்டதாக பத்திரிக்கை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கின. என்றாலும், 1552 பக்கங்களில் தீர்ப்பளித்து நீதிபதி ஓ.பி.ஷைனி நீதியை நிலைநாட்டி யுள்ளார்.’’
“பார்ப்பனர்கள், முதலாளிகள் கூட்டுச் சதியே இவ்வழக்கு. இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள ஆ.இராசா தவறே இழைக்காமல் 15 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழி ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.’’
“ஆரியம் திட்டமிட்டுப் பழிச்சொல் பரப்பியது. இறுதியில் இவ்வழக்கில் ஆரியம் தோற்றது. திராவிடமே வென்றது. தொடர்ந்து ஆரியச் சதிகளை முறியடிப்போம்’’ என்று சூளுரைத்து சிறப்புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
வெளியீட்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய, “டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்’’ நூல் வெளியீட்டு விழா 3.1.2018 மாலை 7 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை
இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில், திருச்சியில் நடைபெறவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டுக்காக ரூ.50,000 அன்பளிப்பாக வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் அவர்கள் ஆசிரியரிடம் அளித்தார்.
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன்
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.எஸ்.மோகன் அவர்கள் தனது தலைமையுரையில், “தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய, “டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்’’ என்ற நூல் சிறந்த நூல் என்று தீர்ப்பு வழங்குகிறேன்.’’
“டாக்டர் அம்பேத்கர், “இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன்’’ என்றார். சொன்னதைச் செய்து காட்டவும் செய்தார். உலகில் பல மதங்கள் உண்டு. ஆனால், எந்த மதத்திலும் தீண்டாமை என்ற கொடுமை கிடையவே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது.’’
“எல்லோரும் சமமானவர்கள் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், சமுதாயத்தில் அந்த நிலை உண்டா என்று கேட்டவர் டாக்டர் அம்பேத்கர்.’’
மேலும், டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தனது உரையில் உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார்.
புத்தக வெளியீட்டு விழா
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்’ என்ற நுலை வெளியிட எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
“மகாராட்டிரத்திலே சமூகப் புரட்சி செய்த மகாத்மா ஜோதிபாபுலேயின் மனைவி சாவித்திரி புலே பிறந்த நாளில் இந்த நூல் வெளியீட்டு விழா நடப்பது பொருத்தமானது.’’
“திராவிடர் இயக்கம் என்பது வாசக சாலைகள் மூலம் வளர்ந்ததாகும். படி என்று சொல்வதுதான் திராவிடர் இயக்கம்.’’
“பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன், அது எனது விருப்பமோ அல்லது தேர்வோ அல்ல. ஆனால், இறக்கும் போது நான் ஒரு ஹிந்துவாக சாகமாட்டேன் என்பது உறுதி’’ என்று பல மேடைகளில் முழங்கியவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அம்பேத்கரைப் பற்றி மேலும் பல அரிய செய்திகளை பேராசிரியர் அவர்கள் உணர்வு பொங்கப் பேசினார்.
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
டாக்டர் அம்பேத்கர், ‘புத்தா அண்ட் தம்மா’ என்ற நூலினை வெளியிடுவதற்குத் தேவைப்பட்ட 50 ஆயிரம் ரூபாய்க்காக பிரதமர் நேருவை அணுகியதும் நேரு, டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைக் கை காட்டியதும், இராதாகிருஷ்ணன் கண்டு கொள்ளாததும் எத்தகைய கொடுமை!
இந்துச் சீர்திருத்தச் சட்டம் (Hindu Code Bill) ஒன்றைக் கொண்டுவர சட்ட அமைச்சராக இருந்த நிலையில் அம்பேத்கர் ஆர்வமுடன் முயற்சித்தபோது பிரதமர் நேரு அவர்கள் நடந்து கொண்டவிதம் அம்பேத்காரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
திட்டக்குழுவில் பொருளாதாரத்தைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் உறுப்பினர்களாக இருக்கும்பொழுது பொருளாதாரத்தில் பல பட்டம் பெற்றத் தன்னை பிரதமர் நேரு நியமிக்காதது குறித்து அம்பேத்கருக்கு ஏற்பட்ட வருத்தம் என அம்பேத்கர் வாழ்வில் நடைபெற்ற மூன்று சோக நிகழ்வுகளை நினைவூட்டினார்.
தமிழ்நாட்டில் ‘ஆன்மிக அரசியல்’ என்பது மதச் சார்பின்மைக்கு விரோதமானதே! “பெரியாரியம் _ அம்பேத்காரியம் தத்துவ ஆயுதம் கொண்டு முறியடிப்போம்’’ என்று ஆணித்தரமாய் எடுத்துரைத்தார் எழுச்சித் தமிழர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீமரமணி
“எழுச்சித்தமிழர் சகோதரர் திருமா அவர்கள் தனது அரசியல் நிலைப்பாட்டை இந்த மேடையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த வகையில், இது மிகவும் சிறப்பானது.
அகில இந்தியத் தலைவர்களில் அதிகமாகச் சந்தித்து உரையாடி, கருத்துரையாடிய இரு தலைவர்கள் உண்டென்றால், தந்தை பெரியாரும்_அண்ணல்அம்பேத்கருந்தான்.
அவர்கள் இரண்டு பேரும் கருத்தில், பண்பாட்டில் மிகவும் உயர்ந்தவர்கள் என்று பெரியார்_அம்பேத்கர் கொள்கைகளை மிகத் தெளிவாய் எடுத்துரைத்தார்.
உரையின் இறுதிப் பகுதியில் ஆன்மிகம் என்ற பெயரால் படமெடுத்து ஆடும் விஷப் பாம்பின் பல்லை, பெரியார்_அம்பேத்கர் கொள்கை வழி நின்று பிடுங்குவோம்’’ என்று கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியபொழுது அரங்கமே ஆர்ப்பரித்தது.
நன்றியுரை
தமிழகக் காங்கிரசின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், வரியியல் அறிஞர் இராசரத்தினம், திராவிடர் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்த கூட்டத்தோடு நடைபெற்ற நிகழ்ச்சி திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூற இரவு 9.30 மணிக்கு நிறைவுற்றது.