நான்கு சண்டைகள், ஐந்து பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், அருவெறுப்புச் சிரிப்புகள் இருந்தால்தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்கிற பொய்த் தோற்றத்தை முறியடித்திருக்கும் அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வைத்த நம்பிக்கையால் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபுவும், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபுவும் மிகுந்த துணிச்சலோடு வென்றிருக்கிறார்கள்.
தாயின் கருவறையின் இருட்டைக் கிழித்துக் கொண்டு இந்தப் பேருலகில் காலடி வைக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் தன் தந்தையின் நெஞ்சம்தான் எட்டி உதைத்து விளையாடக் கிடைக்கும் முதல் பள்ளித் திடல். அந்த விளையாட்டின் அடுத்த நகர்வாகத் தந்தையின் தோள்களில் ஏறித் தேர்வலமாக இந்தப் புவிப்பந்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கும் ஒவ்வொரு மகளுக்கும் தன் தந்தைதான் முதல் கதாநாயகன். அந்தக் கதாநாயகனே ஒரு காலத்தில் விரட்டியடித்துவிட்டால்! அந்தப் பிஞ்சுப் பெண் என்ன செய்வாள்?
தங்குவதற்குத் தோழியின் உதவியை நாடுகிறாள். உண்டு பிழைப்பதற்கு ஒரு திருநங்கையின் உதவியைப் பெறுகிறாள். துன்பத்தை மறப்பதற்கு ஒரு சாமியாரை நம்புகிறாள். இந்தப் பயணத்தில் அவள் சந்திக்கும் கசப்பான நிகழ்வுகளைச் சொல்லிவிட தொலைக்காட்சி நிறுவனத்தைச் சென்றடைகிறாள். சொல்வதெல்லாம் உண்மை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஏழைக் குடும்பப் பெண்களின் இல்வாழ்க்கை ஏமாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் காசு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டைப் பதிவு செய்கிறது படம். ஆனால், அது மட்டுமேயல்ல படத்தின் கரு. இது மனிதத்தால் குளிர்விக்கும் அருவி அங்கு அவள் பேசிடும் வசனத் தீப்பொறிகள் தமிழ்த் திரையுலகம் இவ்வளவு காலம் பேசிவந்த பொய்ப் பெருமைகளை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. அனைத்து மாயைகளையும் உடைத்து உணர்ச்சிக் குமுறல்களை எரிமலையாக்கியிருக்கிறாள் அருவி.
– சி.சரவணன்