தமிழ்த் திரையுலகம் இதுநாள்வரை இப்படி ஒரு கதாநாயகியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! பட்டுப்புடவை அல்லது பாவாடை தாவணி, நீண்ட கூந்தல், அதில் நிறைய மல்லிகை சூடியோ அல்லது மாடர்ன் உடைகளில் அலட்டிக் கொண்டோதான் தமிழ் கதாநாயகிகளைப் பார்க்க முடியும். மிஞ்சிப் போனால் கதாநாயகி சுயசார்புடன் தனித்து வாழ்பவராகவோ, அல்லது தமக்கு அநீதி இழைத்த வில்லன்களைப் பழிவாங்கும் கதாப் பாத்திரத்திலோ நாம் பார்த்து இவர்தான் முற்போக்குப் பெண் என நினைத்திருக்கிறோம். ஆனால், முதன்முதலில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ‘எய்ட்ஸ்’ நோயோடு ஒரு கதாநாயகி என்றால் அது நம் ‘அருவி’தான்!
இந்த அசாத்திய துணிச்சலுக்காகவே ‘அருவி’ இயக்குனர் அருண்பிரபுவை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதாவது, “தமிழ்நாட்டில் மலையாளம் பேசும் பிராமணராக வாழ்வதைவிட, எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து விடலாம்’’ என்ற ரீதியில் இருந்தது அவரின் ட்வீட்!
தமிழ்நாடு அந்த அளவுக்கு பார்ப்பனர்களுக்கு ஒவ்வாமை பூமியாக இருக்கிறது. தமிழர்கள் எய்ட்ஸ் நோயாளிகளை மதிக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்றால் அந்த வெறுப்புக்கு என்ன காரணம் என்று லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது சொந்தக்காரர்களும் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வேண்டும். ‘அருவி’ படத்தில் லஷ்மி கோபாலசாமி பார்ப்பனப் பாஷையில் பேசும்போதெல்லாம் திரையரங்கில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறதே! ஏன் என்று அக்ரஹாரம் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த அளவுக்கு பார்ப்பனர்களை வெறுக்கும் தமிழர்கள் என்ன அவ்வளவு கொடூரமான வர்களா? ஈவு இரக்கமற்றவர்களா? ‘அருவி’ படத்தில் இருந்து பார்ப்பனர்கள் இந்த கேள்விகளை தங்களுக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும்.திரைப்படம் என்ற வகையில் ‘அருவி’ ஒரு சிறந்த படம் _ கருத்தளவிலும் சரி, படமெடுக்கும் விதத்திலும் சரி. அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகி அருவியை மூன்று பேர் பாலியல் வல்லுறவு கொள்கிறார்கள். அதில் ஒருவர் ‘கார்ப்பரேட் சாமியார்!’ காவி உடையணிந்த சாமியார்களிடம்கூட மக்கள் இப்போதெல்லாம் உஷாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த நவீன கார்ப்பரேட் சாமியார்களின் கண்ணிவெடிப் பேச்சில் பலரும் சிக்கிச் சீரழிகின்றனர். தன்னுடன் வல்லுறவு கொண்ட இந்த மூன்று பேரையும் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்றவொரு டிவி நிகழ்ச்சிக்கு வரவழைக்கிறார் கதாநாயகி அருவி. அதில் ஒருவர் அருவி வேலைபார்த்த தையல் நிறுவனத்தின் முதலாளி. இவர்தான் இப்படி குற்றமே செய்யவில்லை என்று மறுக்கிறார். இன்னொருவர், அருவியின் தோழியுடைய தந்தை _ இவர், தான் செய்த தவறுக்காக வருந்துகிறார். இந்த இரண்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மூன்றாவது ஆளான அந்தச் சாமியார் _ தான் செய்த செயலை நியாயப்படுத்தும் வகையில் _ சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி தத்துவார்த்த விளக்கம் கொடுக்கிறார் பாருங்கள்! இதுதான் பார்ப்பனீயம், இதற்குப் பெயர்தான் ஆன்மீகம். இவற்றைத் தோலுரித்துத் தொங்கவிட்டிருக்கிறார் அருண் பிரபு!
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளையும் எய்ட்ஸ் நோயாளியையும் நல்ல கண்கொண்டு பார்த்து, அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மாறாக அவர்கள் நேசிக்கப்பட, ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனுக்கும் பாடம் நடத்தியிருக்கிறது ‘அருவி’.
இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி தமிழ்ச் சமூகத்தின் 100 ஆண்டுகால முற்போக்கு அரசியலின் வெளிப்பாடு! இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலை பெரியார் இங்கே வெளியிட்டார். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு தொடர் செயல்பாடு தமிழ் மண்ணில் நிகழ்கிறது _ அதன் விளைவுதான் ‘அருவி’ போன்ற கதாநாயகியை தமிழர்கள் வெறுக்காமல், தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
டி.வி.யில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பும் தமிழர்களின் சமீபத்திய தடுமாற்றத்தின் மீது சம்மட்டி அடி அடித்திருக்கிறது அருவி.
டிவி நிகழ்ச்சிகள் எப்படி உருவாகிறது, அவற்றின் பின்னணி என்ன என்பதையெல்லாம் எக்ஸ்ரே எடுத்துக்காட்டியிருக்கிறது ‘அருவி!’ குறிப்பாக, டிவி தொகுப்பாளர்கள் எல்லாம் ஏதோ மிகப்பெரிய அறிவாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அருவியை பார்த்துத் தெளிவுபெற வேண்டும்.
‘அருவியாக’ நடித்திருக்கும் பெண் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எய்ட்ஸ் நோய் உக்கிரமடைந்த நிலையில் படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும் காட்சியும், அவருக்கு திருநங்கை ஒரு பக்கத்துணையாக இருப்பதும் பார்வையாளர்களின் பாறை மனதையும் உருக்கிவிடும். பெண்கள் குறித்து சமுதாயத்தின் பொதுபுத்தியில் உறைந்திருக்கும் எல்லாவித கட்டுப்பாடுகளையும் அடித்து நொறுக்கி இருக்கிறது அருவி! அச்சம், நாணம், பயிர்ப்பு, கற்பு, ஒழுக்கம் முதலிய கற்பிதங்களுக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறது அருவி!
பார்ப்பன இயக்குனர்களால் மட்டுமே படங்களில் குறியீடுகளை லாவகமாகப் புகுத்த முடியுமா என்ன? அருண் பிரபுவும் பலக் குறியீடுகளை சாமர்த்தியமாக ‘அருவியில்’ புகுத்தியிருக்கிறார்.
எல்லாவற்றிற்றும் மேலாக, தவறு செய்தவர்கள் எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என்ற சமுதாயத்தின் பொதுப் புத்தியை கேள்விக்குட்படுத்தி _ தவறு செய்தவர்களுக்கு மனந்திருந்தி வாழும் வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் மனிதநேயம் என்று உரத்துச் சொல்லியிருக்கிறது அருவி!
சிறைச்சாலைகளின் நோக்கமும்கூட கைதிகளை தண்டிப்பது அல்ல. அவர்களை நெறிப்படுத்தி, மனந்திருந்தி வாழ வழிச்செய்வதுதான். அந்த வகையில் ‘அருவி’ இதுவரை வந்த முற்போக்குப் படங்களில் தனித்துவம் பெற்றிருக்கிறது.