“பழிவாங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமை முழக்கம் _ கருத்தரங்கம்’’ மற்றும் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 96ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அவரின் நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாக்களாக திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 18.12.2017 (திங்கள்) அன்று மாலை 6.23 மணிக்குத் தொடங்கியது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை யாற்றியதைத் தொடர்ந்து விழா நாயகர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன், தோழர் இரா.முத்தரசன் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் அவர்கள் எழுதிய ‘வாழ்க திராவிடம்’, ‘வளரும் கிளர்ச்சி’, ‘தொண்டா? துவேஷமா?’ ஆகிய மூன்று நூல்களை பேராசிரியர் அவர்களே வெளியிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவர் ஆற்காடு வீராசாமி அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். மேலும் அடுத்தடுத்த பிரதிகளை தமிழர் தலைவர், எழுச்சித் தமிழர், தோழர் முத்தரசன் பெற்றுக்கொள்ள நூல் வெளியீடு சிறப்புடன் நிறைவுற்றது. இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து 6.42 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கியது.
தோழர் இரா.முத்தரசன்
கருத்தரங்கத்தில் முதலாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் உரையாற்றும் பொழுது, “இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாகவே தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் நாங்கள். ஆனால், தற்போது உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் வெளிவந்த மரண தண்டனை தீர்ப்பை வரவேற்கிறோம். திரு.வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார். ஆனால், தற்போதுள்ள மத்திய அரசு இடஒதுக்கீட்டைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பார்ப்பனரல்லாதோருக்கு எந்தவித சலுகையும் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கில் மனு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்’’ என்று மதவாதக் கூட்டத்தினரின் மண்டையில் குட்டுவதைப்போல் பேசினார்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
“இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன் இதே பெரியார் திடலில் ஒரு மாணவனாக கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேராசிரியர் அவர்களின் மணிவிழாவில் ஒரு ஓரத்தில் நின்று கலைஞர் அவர்களின் சொற்பொழிவையும், பேராசிரியர் அவர்களின், “நான் ஏன் கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டேன்’’ என்ற எழுச்சியுரையையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று ஒரு ஓரத்தில் நின்றவன் இன்று பேராசிரியர் அவர்களுடன் மேடையில் இருந்து வாழ்த்தும் பேறு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞருக்கும் பேராசிரியருக்குமான தோழமை உயர்ந்த நட்பின் சான்று. யாராரோ கலைஞரிடமிருந்து விலகி எம்.ஜி.ஆர்.உடன் சென்றபொழுதும் இன்றுவரை திமுக.வோடும் கலைஞரோடும் உற்ற துணையாய் இருந்து தமிழருக்காக திராவிடர்களுக்காக உழைப்பவர் பேராசிரியர் அவர்கள்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூகநீதி அல்ல. தாழ்த்தப் பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கச் செய்வதே சமூகநீதி.
மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த 27 சதவீதம் இடஒதுக்கீடு எல்லாத் துறைகளிலும் முழுமையாக இன்றுவரை அமல்படுத்தப் படவில்லை’’ என உணர்ச்சிபொங்க உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் உரையிலிருந்து…
“தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார். அவர்களையும் தாண்டி 96ஆம் ஆண்டில் பேராசிரியர் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிக்குரியது. நமது இனமானப் பேராசிரியர் நூறாண்டும் கண்டு நீடு நீடு வாழ்கவே!
திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கையான சமூகநீதி, இடஒதுக்கீடு, வகுப்புரிமை என்பதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டபொழுது, அதற்குத் தன்னுடைய தெளிவான விளக்கத்தை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்ன முதல் நூல் பேராசிரியர் அவர்கள் எழுதிய ‘வகுப்புரிமை’ நூல்தான்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையும், பேராசிரியர் பிறந்த நாளும் எதிர்பாராமல் வரலாற்றில் ஒன்றாகிப் போன ஒன்று. ஈரோட்டுப் பள்ளிக்கூடம்தான் _ குருகுலம்தான் எங்களுக்கெல்லாம் சிறப்பு. ஆகவே, அந்த ஈரோட்டில் பேராசிரியருக்கு மணிவிழாவை எடுத்த பெருமை திராவிடர் கழகத்திற்கு உண்டு.
எங்களுக்கெல்லாம் பெருமை என்னவென்றால் பேராசிரியர் அவர்களின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதுதான். பேராசிரியர் அவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்’’.
“தமிழகத்தில் மாண்புமிகுக்களால் வரலாறு மாறவில்லை. மானமிகுக்களால் மட்டுமே மாறி இருக்கிறது.’’
மேலும் கலைஞர்_பேராசிரியர் தோழமை, பேராசிரியரின் தனித்தன்மைகள், சமூகநீதி, இடஒதுக்கீடு போன்றவைகள் பற்றியும் மிக நேர்த்தியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பேராசிரியர் க.அன்பழகன்
விழா நாயகர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றுகையில்… “மத்தியில் ஆளும் பாஜக அரசு திராவிடர்கள், திராவிட இனம் தலைதூக்கக் கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளது. மக்கள் மனதை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறினாலும் அவர்களது உள்மனதில் சிந்தனை வேறுவிதமாக உள்ளது. நாம் திராவிடர் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது’’ என்று முத்தாய்ப்பாய் முழங்கினார்.
நன்றியுரை:
இந்த விழாவிற்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சி தொண்டர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப்புரையை திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் வழங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றிகூற முப்பெரும்விழா 8.30 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
தனது பிறந்த நாளை முன்னிட்டு இனமானப் பேராசிரியர் பெரியார் திடலுக்கு வருகை தந்து பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார்
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், 19.12.2017 காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியருக்கு பயனாடை அணிவித்து, நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பேராசிரியருடன் வருகை தந்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நூல்களை வழங்கினார். தந்தை பெரியார் நினைவிடம் பகுதியில் இனமானப் பேராசிரியர் பிறந்த நாளையொட்டி மரக்கன்று ஒன்றையும் நட்டார். பேராசிரியர் அவர்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு, தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வருகை தந்தனர்.