“திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்’’

ஜனவரி 01-15 2018

தந்தை பெரியார் ஒரு திருமண நிகழ்வில் திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி.

அய்யாவிடம் ஒருவர் கேட்டார், திருமணம் கிரிமினல் குற்றம் என்றால், எல்லோரும் ஒப்புக்கொள்வார்களா அய்யா? என்று கேட்டார்.

ஏன், இதில் என்ன கஷ்டம் என்று அய்யா கேட்டார்; ஒரு மனைவி உயிரோடு இருக்கும்பொழுது, இன்னொருவரை திருமணம் செய்தால், தவறு என்று அவரை கைது செய்தார்களா இல்லையா? அது கிரிமினல் குற்றமா – இல்லையா? என்று கேட்டார். கேள்வி கேட்டவர், ஆமாம் அய்யா என்று ஒப்புக்கொண்டார். “லிவ்விங் டுகெதர்’’ (Living together); இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம்; இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்; சங்கடம் ஏற்பட்டால் பிரிந்துவிடுவோம்; நண்பர்கள் பிரிந்து விடுவதில்லையா? எஜமானனை விட்டு வேலைக்காரன் பிரிந்து போகிறான்; வாழ்நாள் முழுவதும் அவன் அங்கேயே வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? திருமணம் என்றால் என்ன? சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைக்க வேண்டும்; நம்மைவிட்டுப் போகாத வேலைக்காரி கிடைக்க வேண்டும், அதுதான் மிக முக்கியம். அதற்குத்தானே இவர்கள், திருமணம் புனித கட்டு; கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இன்றைக்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றனவா?

ஆகவேதான், மற்றவர்கள் ஏற்கிறார்களோ, இல்லையோ, பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. அந்த சமூக விஞ்ஞானிக்கு, விஞ்ஞானத்தை அப்பொழுது ஒப்புக்கொள்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதுபற்றி கவலையில்லை. அவர் உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டால், உருண்டைதான் – காரணம் அது அறிவியல் அடிப்படையிலானது; நீ ஒப்புக்கொண்டாலும் உருண்டைதான், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உருண்டைதான்.

எந்திரங்கள் பற்றி காந்தியார் கருத்தும் பெரியாரின் தொலைநோக்கும்!

காந்தியார், இயந்திரங்கள் பிசாசுகள் என்று எழுதினார். உடனே, தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும் போது முன்பு, தொடர்ச்சியாக கட்டுரை எழுதியிருக்கிறார். இயந்திரத்தினுடைய பெருமை, இயந்திரம் எவ்வளவு சிறப்பானது. தொழிற்புரட்சிக்கே அதுதானே அடிப்படை. இயந்திரம் கூடாது என்றால், மனிதனுக்கு அபிவிருத்தி கூடாது என்று அர்த்தம் என்றார் பெரியார்.

“இயந்திரங்களை எல்லாம் பேயின் அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக் காலம், மக்களுக்குக் காட்டுமிராண்டி உணர்ச்சி பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும் அல்லது முதலாளித் தன்மையின் சூழ்ச்சிப் பிரச்சார காலம் என்றே சொல்ல வேண்டும்.’’  “உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத் தன்மையும், சூழ்ச்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும், அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது. அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத் தன்மையும், புத்தியையும், அனுபவப் பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்து வருகின்றன.’’

இயந்திரங்கள் பேயின் தன்மை என்று பலர் சொல்லி பிரச்சாரத்துக்கு ஆதாரமாய் எடுத்துக்காட்டப்படும் அத்தாட்சி என்னவென்றால், இயந்திரமானது குறைந்த நேரத்தில் அதிகமான சாமான்களை உற்பத்தி செய்து விடுகின்றதால் வேலை செய்து பிழைத்துத் தீரவேண்டிய ஜனங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுகின்றது என்றும், அதனால் பல பேர் பட்டினி கிடக்க நேரிடுகின்றதென்றும் சொல்லப்படுவதாகும்.

இப்படிப்பட்ட கொள்கையை உடையவர்கள் அவ்வளவு பேரும் மனிதரில் ஒருசாரார் (பெரும்பாலோர் கடவுள் சித்தாந்தத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ) தூங்க வேண்டிய நேரம் போக, மற்ற வாழ்நாள் அவ்வளவும் பாடுபட்டே -சரீரத்தால் கஷ்டப்பட்டே ஜீவித்து வாழ வேண்டியவர்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டே பேசுகின்ற வர்களாயிருக்கின்றார்களே ஒழிய வேறில்லை.’’

“உலகத்தில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாகமான நாடுகள் இயந்திரப் பெருக்கு ஏற்பட்டு இயந்திரப் பெருக்கு இல்லாத நாட்டின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் பொங்கும் நாடுகளாகவே ஆகி வருகின்றன. என்றாலும் அங்கெல்லாம்கூட ஜனங்களுக்கு வேலையில்லா கஷ்டம் இருந்துதான் வருகின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.

ஆனால், மேற்குறிப்பிட்ட மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்காக இயந்திரங்கள் காரணமென்று கருதி அதற்காக இயந்திரங்களை எல்லாம் பேயின் தன்மை என்று சொல்லி அப்பேயை ஓட்டுவதற்கு ராட்டினத்தை உடுக்கையாய்க் கொண்ட ஒரு பூசாரியால் இயந்திரங்களை உடைத்துக் குப்பையில் போட்டுவிட்டு, சரீரத்தால் (கைராட்டினத்தால்) பாடுபடும் படியான வழியை யாரும் பின்பற்றவில்லை.’’
“இயந்திரங்கள் ஏற்பட்டதன் பயனாய் ஜனங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலைத் தன்மையை அது ஒழித்ததே தவிர, பண வருவாய்த் தன்மையை அது ஒழித்துவிடவில்லை.
வேலை இல்லாதவர்களுக்காகப் பரிதாபப்பட்டு மனம் இரங்கித் துக்கப்படும் மக்கள், தொழிலாளிகளுடைய உரிமையை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முயலாமல், தொழிலாளிகளின் உரிமையைக் கொள்ளை கொண்டு போகின்றவர்களிடம் கருணையும் தயவும் வைத்து, (முதலாளியை) அவர்களைச்  சும்மா விட்டுவிட்டு அந்த முதலாளியை ஒழிப்பதற்காகப் பட்டினி கிடந்து “விரதத்துடன்’’ விரட்டிக் கொண்டு போகும் தொழிலாளியைத் தடுத்து, அவன் கையில் ராட்டினத்தைக் கொடுத்து உட்கார வைப்பதென்றால் இது தொழிலாளிகளை வஞ்சிப்பதாகுமா? அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதாகுமா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.

“விவசாயத்திற்கும், இயந்திரமென்றால் விவசாயத்தை ஒரு கைத்தொழில் முறை போலவே பாவித்து விவசாயத்தில் உள்ள சகல வேலைகளுக்கும், அதாவது, உழுதல், விதைத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுப்பு அறுத்தல், தாம்பு அடித்துத் தான்யமாக்கி மூட்டையில் போட்டுத் தைத்தல் ஆகிய காரியங்களை இயந்திரங்கள் மூலமாகவே செய்விப்பதாகும்.

இயந்திரங்களைத் துவேசிக்கின்ற ஒவ்வொருவரும், முதலாளி ஆதிக்கத்திற்கு அடிமையாகவோ அல்லது முதலாளித்துவத்தை அறியாத ஞான சூன்யர்களாகவோ இருக்கின்றவர்களே தவிர, சிறிதாவது தொழிலாளி சரீரத்தினால் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் நிலைமையைக் கண்டு இரக்கப்படத் தகுதி உடையவர்களல்ல வென்பதே நமது பலமான அபிப்பிராயமாகும்.’’

கிரேன் இயந்திரத்தால், எத்தனையோ பேர் தூக்கவேண்டியதை, ஒரு இயந்திரம் அனாயசமாக தூக்கி வைக்கிறதே; பெரிய பெரிய கண்டெய்னரை எல்லாம் தூக்கி வைக்கிறதே; இன்றைக்கு மனிதன் உடலுழைப்பு செய்தால், எவ்வளவு காலம் ஆகும்; மனித உழைப்பு வீணாகும். ஆகவே, பகுத்தறிவினுடைய சிந்தனை, அறிவியல் சிந்தனை, இயந்திரங்களைப் பெருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

வங்கிகளில் கணினியைக் கொண்டு வந்தார்கள். 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக கணினியை வங்கிகளில் புகுத்தி னார்கள். உடனே கம்யூனிஸ்ட் நண்பர்களே, முற்போக்குச் சிந்தனையுள்ள நண்பர்களே என்ன சொன்னார்கள் என்றால், கணினி வந்தால் பல பேருக்கு வேலை போய்விடும்; ஆகவே இதனை எதிர்க்கவேண்டும் என்று எழுதினார்கள். தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து, உடனே நீங்கள் விடுதலையில் எழுதுங்கள்; கணினியை எதிர்க்கக்கூடாது; கணினி வந்தால் வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள், அது தவறு; அது வந்தால்தான் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதுங்கள் என்று சொன்னார்.

ஆனால், இன்றைக்கு கணினிதான் உலகத்தில், எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. பெரியாருடைய தொலைநோக்கு என்பதிருக்கிறதே, அது வெறும் அறிவின் கூர்மையைக் காட்டுவதற்காக அல்ல; சமுதாயத்தை முன்னேற்றப் பாதையிலே கொண்டுவரவேண்டும்; சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவரும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய தொலைநோக்கு ஏற்பாடுகளாகும்.

(தொடரும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *