கெப்ளர்-90

ஜனவரி 01-15 2018

நமது சூரியக் குடும்பத்தைப் போலவே, விண்வெளியில் மற்றொரு சூரியக் குடும்பம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் கண்டுபிடித்துள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூரியக் குடும்பத்தில் ‘கெப்ளர்-90’ என்றழைக்கப்படும் சூரியனை (நட்சத்திரத்தை) 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. எனினும் 8 கிரகத்திலும் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரியக் குடும்பம் பூமியிலிருந்து 2,545 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்ஸாஸ் விண்வெளி ஆய்வாளர் கூறும்போது, “கெப்ளர்-90’ நட்சத்திரக் கூட்டம், நமது சூரியக் குடும்பத்தை ஒத்துள்ளது. சூரியனுக்கு அருகில் மிகச் சிறிய கிரகங்களும், வெளியில் மிகப் பெரிய கிரகங்களும் உள்ளன. இந்தச் சூரியக் குடும்பத்தில் பூமியைப் போலவே பாறைகள் நிறைந்த ஒரு கிரகம் (கெப்ளர்-90மி) உள்ளது. ஆனால், அந்தக் கிரகம் சூரியனை 14.4 நாள்களில் சுற்றிவருகிறது. மேலும், மிகவும் வெப்பத்துடன் அந்தக் கிரகம் உள்ளது. அங்கெல்லாம் செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது’’ என்றார்.

அந்தக் கிரகத்தில் சராசரியாக 800 டிகிரி பாரன்ஹீட் (426 செல்சியஸ்) வெப்பம் நிலவுவதாக நாசா கணித்துள்ளது. இது நமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்துள்ள புதன் கிரகத்தில் நிலவும் வெப்பநிலைக்கு நிகரானது என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சூரியக் குடும்பம் கூகுளின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி போன்றவற்றின் உதவியுடன் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *