நூல்: மனித குலம் வளர்ந்த விதம் (அம்பு முதல் அணுகுண்டு வரை)
ஆசிரியர்: சக்திதாசன் சுப்பிரமணியன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண்:77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. தொலைபேசி: 044 – 24896979
பக்கங்கள்: 128 விலை: ரூ.100/-
என்ன கண்டோம்?
நீண்ட தூரம் வந்துவிட்டோம். இப்போது சிறிது திரும்பிப் பார்ப்போம். இதுவரை என்ன கண்டோம்?
இந்தப் பூமியைப் பனி மூடியிருந்தது. பிறகு விலகியது. இப்படி நான்கு முறை நிகழ்ந்தது. முதல் பனி, சுமார் அய்ந்து லட்சம் வருஷங்கள் முன்பு விலகியது. இரண்டாவது பனி, சுமார் நான்கு லட்சம் ஆண்டுகள் முன்பு விலகியது. மூன்றாவது பனி, சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் முன்பு விலகியது. நான்காவது பனி, சுமார் முப்பத்தி அய்யாயிரம் ஆண்டுகள் முன்பு விலகத் தொடங்கியது; பல ஆயிரம் ஆண்டுகள் வரை விலகிக் கொண்டேயிருந்தது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் முன்பு முற்றும் விலகியது. பூமி இன்றைய நிலையை அடைந்தது.
இவ்விதமாகப் பனி மூடுவதும் விலகுவது மாயிருந்தபோது என்ன நிகழ்ந்தது? பிராணிகளில் பல மாண்டன; பனி தாங்க முடியாமல் உயிர்விட்டன. ஆனால் சில பிராணிகள் மாத்திரம் எப்படியோ உயிர் தப்பின.
உயிர் தப்பிய பிராணிகளிலே சில, பின்னங்கால்களால் நடந்தன; நிமிர்ந்து நின்றன. முன் கால் இரண்டையும் கைமாதிரி உபயோகித்தன. இவற்றிற்கு ‘புரோ கான்ஸல்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள் அறிஞர்கள். ‘பிரைமேட்ஸ்’ என்றும் சிலர் சொல்கின்றனர்.
இந்தப் பிராணிகளிலிருந்து இரண்டு வம்சங்கள் தோன்றின. ஒன்று குரங்கினம்; மற்றொன்று மனித குலம்.
நாட்டுப் புறங்களிலே நம்மவர்கள் சொல்வார்கள். ஓமம் _ சக்களத்தி ஓமம் என்பார்கள். சக்களத்தி ஓமம், பார்வைக்கு ஓமம் போலவேயிருக்கும். ஆனால், ஓமத்தின் காரமும் மணமும் இரா.
இதே மாதிரி மனித குலமும் குரங்கினமும் தோன்றின. தோன்றிய காலத்திலே மனிதன் குரங்கு போலவேயிருந்தான். ஆனால், வால் மாத்திரமில்லை. குரங்கு முகம், மனித உடல், உடம்பு முழுதும் அடர்த்தியான உரோமம். இத்தகைய தோற்றமளித்தான் மனிதகுலத்தின் மூதாதை.
மேலெழுந்த விதமாகப் பார்த்தால் நாம் ஒப்புக் கொள்ளவே மாட்டோம். மனித குலத்தின் மூதாதை என்று சொல்லப்படும் அந்த மிருகத்தை நமது முன்னவனாக ஏற்றுக் கொள்ளவே மாட்டோம். ஆனால், அறிஞர் உலகம் ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்து முடிவு கண்டிருக்கிறது. முடிவு என்ன? இத்தகைய மிருகமே மனித குலத்தின் மூதாதை என்பதுதான்.
தொடக்கத்திலே இந்த மனிதன் என்ன செய்தான்? உணவு தேடித் திரிந்தான். மண்ணைத் தோண்டுவான்; கிழங்குகளை அகழ்ந்து எடுப்பான்; தின்பான். இப்படி அவன் அந்தக் காடுகளிலே திரிந்தான்.
அவனுடன் இன்னும் பல மிருகங்களும் தோன்றின. புலி, காட்டெருது, யானை இவற்றின் மூதாதைகள். இவற்றின் மத்தியிலே வசித்தான் மனித குலத்தின் மூதாதை.
மிருகங்கள் ஒன்றுடன் ஒன்று போரிட்டன; கிழித்தன; கொன்றன; தின்றன. இவற்றின் மத்தியிலே மனிதன் வாழ்வது எப்படி? நிமிஷத்துக்கு நிமிஷம் ஆபத்துதான். உயிருக்கு ஆபத்து. எருதுகள் துரத்தின; யானைகள் விரட்டின; புலிகள் பாய்ந்தன; கொன்றன; தின்றன. மாய்ந்தனர் சிலர்.
மனிதக் கூட்டம் ஒன்று திரண்டது. கொம்புகளை எடுத்தது. மிருகங்களை விரட்டியது. வெற்றி கண்டது. இதுவே மனித குலத்தின் முதல் ஆயுதமாயிற்று. அதுதான் கொம்பு.
இப்போது மனிதக் கூட்டம் பயமின்றித் திரியலாயிற்று. கொம்புடன் திரிந்தது. அந்தக் கொம்பின் உதவியால் கிழங்குகளைத் தோண்டித் தின்றது. மிருகங்களை விரட்டியடித்தது.
இவ்விதம் உணவு தேடித் திரிந்து கொண்டிருந்தபோது ஆற்றின் கரையிலே கூரிய கல் ஒன்றைக் கண்டான் மனிதன். அதன் உதவியால் பிராணிகளைக் குத்தினான்; கொன்று கிழித்தான்; தின்றான். கல் அவனது இரண்டாவது கருவியாயிற்று.
நீண்ட நாள் வரையில் ஆற்றின் ஓரமாகக் கற்களைத் தேடித் திரியத் தொடங்கினான். உணவு தேடுவதும், கற்களைத் தேடுவதுமே அவனுக்கு நாள் முழுதும் சரியாயிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் என்ன செய்தான்? கல்லினால் கூரிய ஆயுதம் செய்யத் தொடங்கினான். அந்த ஆயுதங்களினாலே பிராணிகளைக் கொன்று தின்றான்.
சில காலம் சென்றது. இதுவும் சங்கடமாயிற்று. பிராணிகள் அவன் கையில் சிக்காமல் ஓடின. நீளமான கொம்புகளிலே கூரிய கல் கருவிகளைக் கட்டினான். பிராணிகளைக் குத்திக் கிழித்தான். இப்படிச் சில காலம் சென்றது.
மீண்டும் பனி வந்தது. அவனால் குளிர் தாங்க முடியவில்லை. அங்குமிங்கும் ஓடினான். காட்டிலே ஓரிடத்திலே தீப்பற்றி எரிந்தது. அங்கே சென்றான். குளிர் காய்ந்தான். அது சுகமாயிருந்தது. அந்த மரக் குச்சிகளை எடுத்து வந்தான். தேய்த்தான். நெருப்பு மூட்டத் தெரிந்துகொண்டான். இப்படிச் சில காலம் சென்றது.
மறுபடியும் உணவு கிடைப்பது அருமையாயிற்று. பிராணிகள் அருகின. அவற்றைத் துரத்திச் செல்வதும் கொல்வதும் கஷ்டமாயிற்று. புதியதோர் கருவி தேவை. மனிதன் வில்லை வளைத்தான். அதன் உதவியால் எட்டி நின்றபடியே பிராணிகளை அடித்தான். கொன்றான். இப்போது பிராணிகள் நிறையக் கிடைத்தன. அவற்றை வைப்பதற்கும் இருப்பதற்கும் இடம் தேவை.
மனிதன் மலைப்பக்கம் சென்றான். குகைகளில் வசித்தான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றன. தொடக்கத்திலே காணப்பட்டது போல இல்லை மனிதன். இப்போது அவன் பல கருவிகளை உபயோகிக்கத் தொடங்கினான். கல்கருவி, கொம்பு, ஈட்டி, வில் முதலிய கருவிகள். குளிர் காயத் தீ.
பனிக்காலம் சென்றது. மீண்டும் உணவுப் பஞ்சம். மனிதன் குகையை விட்டு வெளியேறினான். குழந்தைகள், மனைவி முதலியோருடன் வனம் புகுந்தான். வனத்திலே ஏராளமான பிராணிகள் கிடைத்தன. அவற்றை வேட்டையாடினான். வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை நெருப்பிலே வாட்டினான். தின்றான்.
இப்போது அவனுக்கு இன்னும் பலம் ஏற்பட்டது. நாய் அவனது வேட்டைத் தோழனாயிற்று. ஆடு, மாடு, பன்றி முதலியவற்றை வளர்க்கத் தொடங்கினான்.
குகையை விட்டு வெளியேறிய கூட்டத்தினர் எல்லோரும் வனம் புகவில்லை. சிலரே வனம் புகுந்தனர். மற்றும் சிலர் ஆற்றின் கரைப் பக்கம் சென்றனர். ஆற்றிலே மீன் ஏராளமாயிருந்தது. மீன் பிடிக்கத் தொடங்கினான் மனிதன். மீனைத் தின்றான். கிழங்குகளைத் தின்றான். பழங்களைத் தின்றான். உயிர் வாழ்ந்தான்.
ஆற்றின் கரையிலே குடிசை அமைத்தான். அதிலே வாழ்ந்தான்.
ஆற்றின் கரையிலே வாழ்க்கை அமைதியாயில்லை. வெள்ளம் வரும். மனிதனையும் அவன் குடிசைகளையும் அடித்துக்கொண்டு போகும். அவன் தவிப்பான், துடிப்பான்.
முடிவில் வெள்ளத்தை வென்றான். அனுபவம் அவனுக்குக் கற்பித்தது. ஆற்றின் கரையிலே மரங்களை வெட்டி உயரமாக அடுக்கினான். மண்ணைக் கொட்டினான். உயர்த்தினான். அதன் மீது குடிசை கட்டினான். மரத்தினாலே சிறு படகு செய்து ஆற்று நீரிலே செல்லவும் அறிந்தான் மனிதன். இப்படிப் பல ஆண்டுகள் சென்றன.
அவன் மனைவி என்ன செய்தாள்? காட்டிலிருந்து பழங்களைக் கொண்டு வந்தாள். தானியங்களைக் கொண்டு வந்தாள்.
பழங்களைத் தின்றார்கள். கொட்டைகளை வெளியே எறிந்தார்கள். அந்தக் கொட்டைகள் முளைத்தன. மரமாயின. பூத்துக் காய்த்துப் பழுத்தன. அவற்றைப் பார்த்தான் மனிதன். மேலும் மேலும் பழச்செடிகளையும் மரங்களையும் பயிர் செய்யத் தொடங்கினான். இதே மாதிரி தானியங்களையும் பயிர் செய்யத் தொடங்கினான். நாளடைவில் பயிர்த் தொழில் பெருகிற்று. பெரும் அளவில் வளர்ந்தது. மனிதக் கூட்டமும் பெருகிற்று. ஆற்றோரங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கத் தொடங்கினார்கள். கூட்டங்கள் பெருகின. கிராமங்கள் தோன்றின. போக்குவரவு ஏற்பட்டது. வியாபாரம், கொள்ளை எல்லாம் அதிகரித்தன.
புதிய வாழ்வுக்குத் தக்கபடி மனிதன் புதிய கருவிகளைச் செய்தான். ஒருவருக்கொருவர் உள்ளக் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். பேச்சும் எழுத்தும் ஏற்பட்டன.
பயிர்த் தொழில் பெருகிற்று. சமுதாயம் ஏற்பட்டது. பருவகாலங்களை அறிந்தான் மனிதன். இப்படியாக மனித சமுதாயம் வளர்ந்தது. ஓராண்டல்ல. நூறாண்டுகள் அல்ல. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் முன்னேறியிருக்கிறான். அனுபவத்தின் மூலம் உணர்ந்து அறிந்து வளர்ந்திருக்கிறான்.
ஆகவே, இன்று மனிதன் நாகரிகம் பெற்றிருப்பது திடீரென்று ஏற்பட்டதல்ல. யூகத்தில் அறிந்தது அல்ல.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போராடிப் போராடி அவன் அறிந்ததாகும்; அடைந்ததாகும்.
அய்நூறு ஆண்டுகளில்…
சென்ற ஐநூறு ஆண்டுகளில் மனித குலம் வெகுதூரம் முன்னேறி விட்டது. அதற்குக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே.
இரும்பைக் கண்டுபிடித்தான் மனிதன்; வெடிமருந்தைக் கண்டுபிடித்தான். இரும்பும், வெடி மருந்தும் என்ன செய்தன?
பீரங்கிக்கும் துப்பாக்கிக்கும் இடம் அளித்தன. ஈட்டியும் வில்லும் பிடித்த மனிதன் இப்போது துப்பாக்கி ஏந்தத் தொடங்கினான்; பீரங்கியை உபயோகிக்கத் தொடங்கினான்.
நிலக்கரியைக் கண்டுபிடித்தான் மனிதன்; நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். இவை மேலும் முன்னேறச் செய்தன.
அச்சு இயந்திரமும், மின்சாரமும், ஆகாய விமானமும் கண்டுபிடித்தான் மனிதன். மேலும் முன்னேறினான். உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மனிதக் கூட்டம் நெருங்கியது.
உலகம் முழுதும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இப்போது அணு சக்தியைக் கண்டுபிடித்தான் மனிதன். அணுகுண்டு செய்துவிட்டான். உலகத்தையே ஆட்டி வைக்கிறான்.
மனித குலத்தின் எதிர்காலம்
மனித சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி? மனித குலம் முன்னேறுமா? அல்லது அழியுமா? அணுகுண்டு மனிதனை நிர்மூலமாக்குமா? இதுதான் இன்றைய கேள்வி.
ஆதிமுதல் மனித குலம் வளர்ந்த விதத்தை நோக்கினால் என்ன சொல்லத் தோன்றுகிறது. மனித குலம் அழியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.
நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய அந்த நாளிலே மனித குலத்துக்குச் சோதனை ஏற்படவில்லையா? ஏற்பட்டது. காட்டிலே இருந்த பெரிய விலங்குகள் மனிதனை அழிக்க முற்பட்டன. மனிதன் அழிந்தானா? இல்லை. அந்த மிருகங்களை அடக்கி வெற்றி கண்டான்.
பின்னே பனி அவனை வாட்டியது. கொன்று விடுவதுப்போல் பயமுறுத்தியது.பல பிராணிகள் இறந்தன. குளிர் அவற்றைக் கொன்றது. ஆனால், மனித குலம் அழிந்தாதா? இல்லை. தீயைக் கண்டு பிடித்தான்; மனிதன் குளிரை வென்றான். மனித குலம் வாழ்ந்தது; வளர்ந்து; முன்னேறியது.
ஆற்றின் கரையிலே வாழ்ந்த மனிதனை வெள்ளம் வாட்டியது. அழித்துவிடுவதுபோல் அச்சுறுத்தியது.
மனித குலமே பூண்டோடு நாசமாகுமோ என்று பயந்தான் மனிதன். மனித குலம் நாசமாயிற்றா? இல்லை. வெள்ளத்தை வென்றது. முன்னேறியது.
இப்படியாக மனித குல சரித்திரத்திலே பல சம்பவங்கள். மனித குலத்தையே நிர்மூலமாக்குமோ என்று பயப்படத்தக்க நிகழ்ச்சிகள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நாம் காண்கிறோம். எனவே அந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு பயங்கரமானவை என்றுணர முடியாதிருக்கலாம். ஆனால், அன்றைய தினம் வாழ்ந்த மனிதனுக்கு அவையெல்லாம் பயங்கரப் பிரச்சினைகளே.
எனினும் மனித குலம் அழியவில்லை. அழிக்க வந்ததை ஆக்க வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டான் மனிதன்.
இதுதான் கடந்த காலத்தின் உண்மை. எனவே, மனித குலத்தின் எதிர்காலம் பற்றி அஞ்சவேண்டியதேயில்லை.
அணு சக்தியை வெற்றிகொள்வான் மனிதன். அழிய மாட்டான். முன்னேறுவான்.