ஆசிரியர் பதில்கள்

ஜனவரி 01-15 2018

 

 

 

                                         வித்தையால் கொழுக்கட்டை வேகாது!

கே:    எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள், டிசம்பர் 6ஆம் தேதி கூறிய தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த பிறகும் சங்பரிவாரங்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நடத்துவதன் உள்நோக்கம் என்ன?

                       – – —ஆ.சிவசுப்ரமணியன், சிதம்பரம்

ப:        ‘எழுச்சித்தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் புகழைக் கெடுக்கவும், அவரை மிரட்டும் போக்கிலும் இப்படி செய்வதன்மூலம் சங்பரிவாரங்கள் ‘ஆப்பை அசைத்த பிராணி’’ போல் ஆவார்கள் இது உறுதி!

கே:    2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை மோடி அரசின் விளம்பரச் செலவு ரூ.3 ஆயிரத்து 755 கோடி. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

                – தா.கிருஷ்ணதாஸ், மதுரை

ப:    10 லட்சத்தில் சட்டை லண்டனில் தயாரித்து அணிந்துகொண்ட எளிமையின் சின்னம், ஏழைகளின் ஏந்தல் மோடியின் விளம்பரச் செலவு இவ்வளவுதானா? _ அவருக்கு இது பெருமை சேர்க்கவில்லையே!

கே:    நியாயவிலைக் கடை ஊழியர் பணிக்குப் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதா?

    – – வா.வேல்விழி, தஞ்சை

ப:    தேவையற்ற வடிகட்டல் இது! சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணமா? அசல் கேலிக்கூத்து இது!

கே:    குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை தாங்கள் எப்படிப் பார்க்கீறீர்கள்?

               – – தே.பெருமாள்சாமி, வேலூர்

ப:    குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி _ உண்மையில் செல்வாக்கைப் பெருக்கிய வெற்றி அல்ல; இமாச்சலப் பிரதேசத்தில் ஆண்ட கட்சி மீது படர்ந்த அதிருப்தி மேகங்கள் தோல்வி மழையாய்ப் பொழிந்தன! குஜராத் பாஜக வெற்றி என்பது தோல்விக்குச் சமமானது!

கே:    அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி தமிழ்நாட்டில் நுழைவதற்கு யார் காரணம்?

       – ——- நெய்வேலி க.தியாகராசன்,  கொரநாட்டுக்கருப்பூர்

ப:    திறமையற்ற, தெம்பற்ற, முதுகெலும்பு இல்லாத தமிழகத்தின் அ.தி.மு.க. ஆட்சியே!

கே:    தமிழகத்தில் இருபது ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி, அதன்பிறகு 50 ஆண்டுகாலம் திராவிட கட்சி ஆட்சி, தங்கள் மனதைத் தொட்ட நிகழ்ச்சி எது? மனதைத் தொட்ட “முதல்வர்கள் யார்? யார்?

           –  – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:    1. தந்தை பெரியாருக்கு தனது அமைச்சரவையே காணிக்கை என்று பிரகடனப்படுத்திய முதல் அமைச்சர் அண்ணாவின் நன்றி பீறிட்ட சட்டமன்ற அறிவிப்பும் முப்பெரும் சாதனைகளும். மனதைத் தொட்ட முதல்வர் குறுகிய காலத்தில் அறிஞர் அண்ணா.

    2. இருபது ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் (அ) குலக்கல்வி திட்டம் ஒழிப்பு, (ஆ) காமராசர் என்ற பச்சைத்தமிழர்.

கே:    பாஜக ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றுள்ள மகத்தான வெற்றி, வரும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்று கொள்ளலாமா?        
     
–  கெ.நா.சாமி, சென்னை

ப:        உள்ளாட்சித் தேர்தல்கள் எவருக்கும் எக்கட்சிக்கும் சரியான அளவுகோலோ அல்லது தேர்தல் பரோ மீட்டர்கள் ஆகா!

கே:    கலியுகம் முடிந்தாலும் பாழாய்ப்போன இடஒதுக்கீடு மட்டும் நாட்டில் நிச்சயம் ஒழியாது நாட்டைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்’’ என்று இனமலரான தினமலர் விஷம் கக்கியிருப்பது பற்றி?

 – வே.ஆறுமுகசாமி, தாம்பரம்

ப:    பார்ப்பானின் வயிற்றெரிச்சல் சமூகநீதி மீதுள்ள மனுதர்மப் பாய்ச்சலைக் காட்டுகிறது!

கே:    நாடு முழுவதும் பிஜேபி மதவாத அரசிற்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டிருந்தாலும் நடைபெறும் தேர்தல்களிலெல்லாம் பிஜேபி வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பது ஆட்சித் திறத்தாலா? சூழ்ச்சித் திறத்தாலா?

 – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    1. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்மை, 2. சூழ்ச்சித் திறம். இரண்டும்தான்.

கே:    “பார்ப்பனர்களை உறுப்பினராகவே சேர்க்க மாட்டோம்’’ என்று உறுதி கொடுத்து தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவராக ஒரு பார்ப்பனரை நியமிப்பதால் அது பொதுக்கட்சி ஆகிவிடுமா?

 – அய்ன்ஸ்டின் விஜய், உடையார்பாளையம்

ப:    ஒரு பார்ப்பனர் அல்ல; மற்றொரு காஞ்சிப் பார்ப்பனர் மாவட்டச் செயலாளராம்! என்ன விநோதம் பாரு; எவ்வளவு ஜோக்கு பாரு! வித்தைகளால் கொழுக்கட்டை வேகாது! விலா நோகச் சிரிப்புதான் வரும்!

கே:    மாட்டிறைச்சிக் கொலைக்குப் பிறகு தற்போது “லவ்ஜிகாத்’’ கொலை நடத்திய இந்துத்வா  வெறிச் செயல்களுக்கு முடிவுதான் என்ன?

            – – கி.மாசிலாமணி, மதுராந்தகம்

ப:    2019லோ (அல்லது அதற்கு முன் தேர்தல் வந்தாலோ) நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாட்சியை _ ‘வாஜ்பேய்’ அரசினை எப்படி வீட்டுக்கனுப்பினரோ அப்படிச் செய்வதுதான் ஒரே வழி!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *