வட ஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடுகள் 25.04.1982 அன்று வேலூர் கோட்டைவெளி – ஆற்காடு இளங்குப்பன் பந்தல், பூட்டுத்தாக்கு சாமிநாதன் ஆகியோர் நினைவரங்கத்தில் திராவிடர் இளைஞர் இன எழுச்சி மாநாடும், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாடும், இன எழுச்சிப் பேரணியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. வட ஆற்காடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.டி. கோபால் அவர்கள் தலைமையில் சத்துவாச்சாரி தி.க. தலைவர் ஆர்.கணேசன், ரங்காபுரம் எம்.சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்க இரு மாநாடுகளிலும் சிறப்புரையாற்றினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் 1957இல் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். தேசியம் பேசும் தமிழா! இந்த நாட்டில் நீ பிராமணன் முடி திருத்தகம், பிராமணன் லாண்டரி, கொலுத்து வேலை தோதாத்திரி அய்யங்கார், மரவேலை மகாதேவசர்மா, மாடுமேய்க்கும் மாதவராவ், பிணம் சுடும் பிச்சுமணி தீட்சிதர், ஏர் உழும் ஏகாம்பரம் அய்யர்கள், நடவு நடும் நாகலட்சுமி சுப்புணி அய்யர், சாணம் எடுக்கும் விசாலம் சீனுவாச சாஸ்திரி இவர்களில் யாரையாவது பார்த்ததுண்டா? என்று இந்தக் கேள்வியை எப்போது கேட்டார் தெரியுமா?
இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று தந்தை பெரியார் உள்பட பலர் போராடியதால் 1909இல் மிண்டோ – மார்லி சீர்த்திருத்தத்தின் விளைவாக இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களில் ஆங்கிலேயர் நியமித்தனர். இதன் விளைவாக இந்தியர் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால் அவர்கள் யார்? அவ்வளவு உத்தியோகங்களையும் பெற்றவர்கள் இந்தியர்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களே அல்லவா?
இதைக் கண்டு வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி.தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியை பனகல் அரசர், டாக்டர் நடேசனார் ஆகியோர் ஒத்துழைப்புடன் துவங்கினர்.
ஒரு சமுதாயம் உடல் உழைப்பு வேலையைச் செய்ய வேண்டும் என்றும், மற்றொரு சமுதாயம் உடல் உழைப்பில்லாமல் அடுத்தவன் உழைத்ததைக் கொண்டு உண்டு வாழ வேண்டும் என்றிருந்த நிலையைப் பார்த்து தமிழ் இனத்தவர்கள் சிந்திக்க வேண்டும் என்றுதான் முதலில் சொன்ன கேள்விகளை தந்தை பெரியார் கேட்டார்.
அதே கேள்வியை இன்றும் அதாவது 25 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்று ஊர்வலத்தில் கேட்டோம்.
நிலைமை ஏதாவது மாறியுள்ளதா? நாணமுள்ள பார்ப்பனர்கள் பதில் சொல்வார்களா?
“அப்படி என்ன அவர்கள் கக்கூஸ் எடுக்க வேண்டும், விவசாயம் செய்ய வேண்டும், கல் உடைக்க வேண்டும்’’ என்று நமக்கு ஆசையா?
இதைத்தான் கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் கேட்டார், அதன் பின் அறிஞர் அண்ணா கேட்டார், கலைஞர் கேட்டார். இவர் ஆட்சியில் தான் முதல் தமிழன் வீராசாமி என்பவர் தலைமை நீதிபதியாக வந்தார். தாழ்த்தப்பட்ட தமிழன் வரதராசன் முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்தார், இன்று உச்ச்சநீதிமன்ற நீதிபதியாகவும் ஆகிவிட்டார்.
அதனால்தான் ஏமாந்து நின்ற எந்தெந்தப் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகள் எதிர்த்தனவோ அவ்வளவும் கட்சி என்று பாராமல் காமராசரையும், பேரறிஞர் அண்ணாவையும் டாக்டர் கலைஞரையும் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் எதிர்த்தார்கள்.
2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் காலம் தொட்டு திருவள்ளுவர், காந்தி, ஜோதிபாபூலே, நாராயணகுரு, லோகியா, விவேகானந்தர் யாராக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இப்படி எல்லாவகையிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் எதிர் நடவடிக்கையாக பார்ப்பனர்கள் நம் இன மக்களையே தூண்டிவிட்டுத் தங்கள் ஆதிக்கத்தை நிலைபடுத்திக் கொள்ளும் முயற்சிகளை, மனிதப்பற்று தவிர எவ்விதப் பற்றும் இல்லாத திராவிடர் கழகம்தான் எதிர்த்து வெற்றியடைய முடியும் என்று பல்வேறு வரலாற்று ரீதியான சம்பவங்களை விளக்கி உரையாற்றினேன்.
கழக அமைப்புச் செயலாளர் கோ. சாமிதுரை எம்.ஏ.பி.எல்., அவர்களும், ஆற்காடு வீராசாமி எம்.எல்.சி. அவர்களும், கழகத் தோழர்களும் உரையாற்றினர். எனக்கு எனது எடைக்கு மும்மடங்கு ஒரு ரூபாய் நாணயங்களை கழகத் தோழர்கள் தந்து மகிழ்ந்தனர். மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்க்கிறாரா? அல்லது ஆதரிக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்திட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் தனித் தன்மையைக் குறித்திடும் வகையிலும் தமிழர்களுக்கு சிறப்பு செய்யும் வகையிலும் பெயர் சூட்டப் பெற்ற – ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகளையும் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டிலும், கழகக் குடும்பத்தினர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 28.04.1982 முதல் 30.04.1982 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில், விழாத் துவக்க உரையை டாக்டர் கலைஞர் அவர்களும், சிறப்புரையை நானும் ஆற்றினோம்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றியபோது, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பெரியார் அவர்களிடத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்களிடத்திலும் கொண்டிருந்த அன்பு இன்னமும் கொண்டிருக்கின்ற கொள்கைப் பற்றும் என்னை வியப்பிலே ஆழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், புரட்சிக்கவிஞர் அவர்கள் பெரியார் அவர்களுடைய கொள்கைகளை, பேரறிஞர் அண்ணா அவர்களின் எண்ணங்களை கவிதை வடிவிலே நாட்டிற்குத் தந்தவர்கள் என்று குறிப்பிட்டார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மாலையில் இன்னிசையுடன் தொடர்ந்தது. பொன். இலம்போதர பாகவதர் தொடக்கத்தில் புரட்சிக்கவிஞரின் பாடல்களை இனிமையாகப் பாடி, மக்களை அழைத்து அரங்கில் அமர வைத்தார். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சைதை எஸ்.பி.தட்சிணா மூர்த்தி வரவேற்புரையுடன், பெரியார் பேருரையாளர் புலவர் ந. இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நான் சிறப்புரை நிகழ்த்தினேன். விழாவில் டாக்டர் மா.செல்வராசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் பேசும்பொழுது பாரதிவிழா என வெளிச்சம் போட்டு நடத்தப்படும் விழாக்களின் போலித் தனத்தையும், பொருள் விரயத்தையும் சுட்டிக்காட்டி பாரதிதாசன் பொதுவுடைமைச் சிந்தனைகளை விரிவுபடுத்தியும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
சென்னை மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் அ.குணசீலன் நன்றியுரையாற்றினார்.
மூன்றாம் நாள் நிகழ்விலும் நான் கலந்து கொண்டு “ஓடப்பர்’’ என்ற பொருளில் உரை நிகழ்த்தினேன். உரையின் துவக்கத்தில் நாம் வலியுறுத்தி வந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது நமக்கு _ ஓடப்பர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி!! என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பலத்த கர ஒலிக்கிடையே அறிவித்தேன். இறுதியாக தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள், புரட்சிக்கவிஞர் அவர்கள் பற்றிய ஆழமான ஆய்வு இலக்கிய உரையை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்த்தினார்கள். பொதுமக்கள், கழகத் தோழியர்கள், தோழர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டிருந்தார்கள்.
‘மே’ முதல் நாள் உலகத் தொழிலாளர் உரிமை பெற்ற நாள்! தமிழ்நாட்டில் ‘மே’ தினத்தின் தனிச் சிறப்பை மக்கள் மத்தியில் வெகுவாக எடுத்து வைத்த பெருமை நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும் அய்யாவின் சுயமரியாதை இயக்கத்தின் முதுபெரும் சிந்தனையாளர் வரிசையில் முன்னின்ற மா.சிங்காரவேலர் அவர்களையும் சாரும். தொழிலாளர் விடுதலை நாளான ‘மே’ முதல் 01.05.1982இல் புதுவை மாநில திராவிடர் கழகம் புதுவையில் முப்பெரும் விழாக்களை நடத்தி புதுமை கண்டது. அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
ஏராளமான பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு திருமதி அனுசியா துரைசாமி தலைமை தாங்க, பவானியம்மாள் முன்னிலை வகிக்க, தி,மு.க. மணிமாறன் எம்.எல்.ஏ., மூர்த்தி எம்.எல்.ஏ., முஸ்லீம் லீக் தலைவர் சாசாலி மறைக்காயர், புதுவை மாநிலத் தலைவர் கலைமணி, துணைத் தலைவர் காரைக்கால் சிவம் போன்ற கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
02.05.1982-இல் துறையூர் நடேசன்_- தனலட்சுமி ஆகியோரின் செல்வி தமிழரசிக்கும், அழகாபுரி சுப்பிரமணியம்_லட்சுமி ஆகியோரின் செல்வன் கந்தசாமி எம்.ஏ. அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஏற்பு விழா மேட்டுப்பாளையம் ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி யுரையாற்றினேன். என்னுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் து.ப.அழகுமுத்து, அய்யாக்கண்ணு, ராஜமாணிக்கம், மனோகரன், ராமஜெயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்பாக மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ‘சிறுநாவலூர்’ என்ற சிறிய கிராமத்தில் ப.க. தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கூடி நிற்க கழகக் கொடியை நான் ஏற்றி வைத்து கொடி மரத்தின் பீடத்துக்கான அடிக்கல்லை நாட்டி சுருக்கமான உரை நிகழ்த்தினேன்.
திருச்சி_திருவெறும்பூர் பாய்லர் ஆலையில் தலைவிரித்தாடும் பார்ப்பன மலையாளி ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகம் 02.05.1982 அன்று நடத்திய மிகப்பெரிய பேரணியை நான் கொடி அசைத்து துவக்கி வைத்தேன்.பேரணியைத் துவக்கி வைத்து, இப்பேரணியின் அவசியத்தை சுருக்கமாக விவரித்து ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டினை எடுத்து வைத்து உரையாற்றினேன். மிகப் பெரிய பேரணியாக நடைபோடத் தொடங்கியது.
தஞ்சை பேரா. வீரபாண்டியன், வழக்குரைஞர் அருளரசன், மதுரை தமிழரசன், ப.க. அமைப்பாளர் இராவணன், இளைஞர் அணி அமைப்பாளர் அசோகன், ஊட்டி தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். துவாக்குடியில் தொடங்கிய ஊர்வலம் கைலாசப்புரம் வழியாக பெல் தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பின் பல தெருக்களையும் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 04.05.1982 அன்று சென்னை பெரியார் திடலில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மண்டல் குழுவின் அறிக்கையை பாரளுமன்றத்தில் வைக்கப் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு அயராது பாடுபட்ட எனக்குப் பாராட்டு தெரிவித்தும், கால தாமதமானாலும் அக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்த பிரதமர் இந்திராவுக்கும், உள்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவில், மாவட்டச் செயலாளர்கள் அடையாறு கோ. ரங்கநாதன், ஆ.கணேசன், அர.சிங்காரவேலு, சைதை எம்.பி.பாலு, சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் எம்.கே.காளத்தி, சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி, க.பலராமன், அ.தியாகராசன், மாவட்டத் தொழிலாளரணித் தலைவர் செ.ஏழுமலை, செயலாளர் அ.குணசீலன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாப்பம்மாள், ஹேமலதா தேவி, மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மாநில மகளிரணி அமைப்பாளர் கா.பார்வதி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். 05.05.1982 அன்று காலை பெரியார் திடலில், புதுவை முதுபெரும் சுயமரியாதை வீரர், பெரியார் பெருந்தொண்டர் பொ.தனசேகரன் அவர்கள், என்னைச் சந்தித்து தந்தை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். நான் அவர்களிடம் நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்.
சுயமரியாதைச் சுடரொளி காஞ்சி கலியாண சுந்தரனார் மறைந்த செய்தி கேட்டு இரங்கல் செய்தியை விடுதலையில் 05.05.1982 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.
காஞ்சி கலியாண சுந்தரம் அவர்கள் அண்ணாவின் நெருங்கிய நண்பர், அய்யாவின் அடிநாள் இயக்கத் தொண்டர்_தோழர். ஆனால். அவரது தனித்தன்மை வெகு ஆழமானது. இயக்கம் எதிர்ப்புப் புயலைச் சந்தித்த நேரத்தில் கடுமையாக உழைத்த சுயமரியாதைப் போர்வீரர் அவர்.
புதுவைத் ‘தொழிலாளர் மித்திரன்’ ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், இவர் புரட்சிக்கவிஞர், பெருமாள், ‘அவுக்கா’ சைகோன் ராஜமாணிக்கம், புதுவை ம.நோயல், பொன். இராமலிங்கம் முதலிய பெரியார் இயக்க அடிநாள் பெரியவர்களிடம் தொடர்பு கொண்டவர். அவரை கடலூரில் நான் சிறுவனாக இருந்தபோது எனது ஆசான் ஆ.திராவிடமணி அவர்கள் என்னை இயக்கத்தில் ஈடுபடுத்திய காலத்திலிருந்தே அறிவேன்.
ஒரு சுயமரியாதை வீரர் மறைந்தார் என்பதை சுட்டிக்காட்டி அந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தேன்.
திருச்சியில் 8, 9.5.1982 ஆகிய நாட்களில் பார்ப்ப னர்களின் மாநில மாநாடு நடை பெற்றது. அதில் அவர்கள் நிறை வேற்றிய தீர்மானங்கள் பார்ப்பனர்களுக்குச் சரியான தலைமை இல்லை என்பதையும், குழப்பத்தின் மொத்த உருவங்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதும் தமிழ்நாட்டை ஆளும் எம்.ஜி.ஆர் அரசின் ஆசியோடு இம்மாநாடு நடைபெற்றுள்ளது என்பதையும், அம்மாநாடு சம்பந்தமாக வந்துள்ள செய்திகளை வைத்து நான், 10.05.1982 அன்று விடுதலையின் இரண்டாம் பக்கத்தில் “திருச்சி பார்ப்பனர் மாநாட்டின் கோலமும் ஓலமும்!’’ என்று தலைப்பிட்டு அறிக்கையை வெளியிட் டிருந்தேன். அதில், திராவிடர் கழகம் அதனைச் சார்ந்த இயக்கங்களையும் சட்ட விரோத, தேசத்துரோக பிரச்சாரத்தையும் நடவடிக்கையும் கருத்தில் கொண்டு பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வன்செயல்களைத் தடை செய்வதற்கான தக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை மாநாடு கேட்டு கொண்டதைக் கண்டித்தும், திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற அம்மாநாட்டுத் தீர்மானத்தைக் கண்டித்தும் அதில் எழுதியிருந்தேன்.
திராவிடர் கழகம், அதனைச் சார்ந்த இயக்கங்கள் எந்த வகையில் சட்ட விரோத தேசத் துரோகப் பிரச்சாரம் _- நடவடிக்கைகளில் ஈடுபட்டன? ஈடுபடுகின்றன? என்று அதில் வினா எழுப்பியிருந்தேன்.
இதனைத் தொடர்ந்து 14.05.1982 அன்று “மண்டல் அறிக்கையும் மறைந்துள்ள சூழ்ச்சியும்’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். மண்டல் கமிஷன் தனது விரிவான, விளக்கமான, அறிக்கையைத் தந்து, நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு அவ்வறிக்கை 30.04.1982 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து பார்ப்பன ஏடுகள் எதிர்த்து எழுதுவது; அதன் செயலாக்கத்தை தடுத்து நிறுத்த முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ஏடு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னரே மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று _ மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரை இன்ன தென்று தெரியாத நிலையிலேயே ஒரு தலையங்கம் தெளிவாக எழுதிற்று என்றால் பார்ப்பனர்களின் எண்ணம், கருத்து எத்தகையது என்று எல்லோரும் அறிந்துக் கொள்ளலாம் என்று விளக்கி எழுதியிருந்தேன்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநாட்டில் நான் பேசிய பேச்சு குறித்து பம்பாய் தலித் தோழர் ஒருவர் (எனது கருத்தினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தவறியதின் விளைவாக) ஒரு கடிதத்தை தோழர் வி.டி.ராசசேகர் அவர்களுக்கு அனுப்ப அவர் எனக்கு அதை அனுப்பியிருந்தார். அக்கடிதம் பற்றி விளக்கம் அளித்து, 18.05.1982 அன்று ‘விடுதலை’யில் “டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்டமும்’’ என்ற தலைப்பு. அதில், நமது தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சில பேர்களுக்கு நாம் சில சரித்திர உண்மைகளை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக் காட்டும்போது, நம் இயக்கத்தினை அவர்கள் பிழைபட உணர்ந்துள்ள காரணத்தால், அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மறுத்து, நாம் ஏதோ அம்பேத்காரை குறைத்து மதிப்பிடுபவர்கள் என்று அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தவர்கள் போல் ஆகி விடுகிறார்கள்.
நம்மைவிட அவர்பால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளவர்கள் வேறு எவரும் இருக்கவே முடியாது. ஏனென்றால் வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கும் போது, சட்டத்தில் செய்யப்பட்ட சதிகளை விளக்கினால், அது கண்டு அறிவு வயப்பட மறுப்பது எவருக்கும் அழகல்ல என்று அதில் விளக்கினேன்.
திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து 20.05.1982 அன்று திருச்சியில் ஆலோச னைக்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதில் நான் கலந்துகொண்டு, திட்டங்கள் _- யோசனைகளை விளக்கி உரை நிகழ்த்தினேன். பார்ப்பனர்கள் மாநாடு நடத்துகிறார்கள் என்றால் அதில், பெல் பார்ப்பனரிலிருந்து, வேதம் ஓதும் பார்ப்பனரிலிருந்து, கம்யூனிஸ்டு, காங்கிரஸ் பார்ப்பான் வரை ஒன்று சேர்கிறான் அல்லவா? அதைப் போல திராவிடர் கழக மாநில மாநாடு என்றால், அதில் கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் எல்லாம் ஒன்று சேரும் பொது உணர்வுள்ள மாநாடு என்பதைக் காட்ட வேண்டும். திராவிடர் கழகம் என்பது பெரியாரோடு போய்விட்டது என்ற கருத்திற்கு இடம் கொடுக்காமல் பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் உருவாக்கிய இயக்கம் மேலும் வலுப்பெற்று ஒட்டுமொத்தமான தமிழர்களின் உரிமைக்கு பேராதரவாக விளங்கும் பேரியக்கமாக வளர்ந்திருக்கிறது என்பதை நமது இன எதிரிகளும் அரசுகளும் உணரும் அளவுக்கு நமது மாநாடு எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்றும், இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு நம் மீது உள்ள ஆத்திரத்திற்கெல்லாம் அடிப்படைக் காரணமானது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான், – ‘ரிசர்வேஷன் தான் என்பதை விளக்கி, ஆலோசனைகளை கழகத் தோழர்களிடத்தில் விளக்கியிருந்தேன். அது மாநாட்டு வெற்றிக்குப் பேருதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
21.05.1982 அன்று மாலை ஆந்திர அரசாங்க மேலவைத் தலைமைக் கொறடா ஏ.சக்கரபாணி எம்.எல்.சி (இ.காங்கிரஸ்) பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர் சுப.சீதாராமன் அவருடன் வந்தார். பெரியார் திடல் வந்தவுடன் அய்யா அவர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்பு நான் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்று அய்யா அவர்கள் அருங்காட்சியகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தை எல்லாம் சுற்றிக் காட்டினேன். பின்னர் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைப் பற்றியும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஏ.சக்ரபாணி, நான், சு.ப.சீதாராமன் ஆகியோர் நீண்ட நேரம் விவாதித்தோம். இவ்விவாதத்தின் போது பேராசிரியர் கவிமணி, பேராசிரியர் ரங்கநாதன், நீலகண்ட பிள்ளை (குமரி), எஸ்.எஸ். செல்வம், இலட்சுமணப் பிள்ளை, தமிழாசிரியர் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன் (குமரி), தேவகி ஆகியோரும் உடன் இருந்தனர்.
வடஆற்காடு மாவட்டம் தோக்கியம் (கந்திலி) கிராமத்தில் 22.05.1982 அன்று நடைபெற்ற டி.எம்.பெருமாள் அவர்களின் செல்வன் மாணிக்கம், தோக்கியம் டி.ஆர்.பசவன் அவர்களின் செல்வி சுகுணா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் என் தலைமையில் நடைபெற்றது.
பெரியார் பயிற்சிப்பள்ளி முன்னாள் மாணவர் ஆசிரியர் கே.வெள்ளையப்பன் வரவேற்புரை ஆற்ற, விழாவிற்கு நான் தலைமை தாங்கினேன். அப்போது, இந்தத் திருமணம் மிகவும் சிறப்பானது. பல சுயமரியாதைக் கொள்கை திருமணங்களில் நான் கலந்து கொண்டது உண்டு. ஆயினும் கிராமப் பகுதியில் கலந்துகொண்டதில் மிகவும் பெருமைப் படுகிறேன். இங்கே திருமணப் பத்திரிக்கையை அச்சிட்டு இருக்கிறார்கள். ‘வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம்’ என்று மட்டும் இல்லை. இந்தத் திருமணப் பத்திரிக்கையை வைதீக உள்ளம் படைத்தவர்கள் பிரித்துப் பார்த்தாலே கையில் மின்சாரம் தாக்கியதுபோல் கீழே போட்டு விடுவார்கள். இதிலே “திருமணம் காலை
9:-10 மணி’’ என்று போட்டு, அடைப்புக்குள் “இராகுகாலம் நிறைந்த’’ என்றும் போட்டிருக்கிறார்! இவர்களுக்கு ராகுகாலத்தில் நம்பிக்கை இல்லை. அப்படி இருப்பதாக நம்புகிற மக்களுக்கு அதில் நல்ல காரியம் செய்யக் கூடாது என்று கருதும் மக்கள், தெளிவு பெற இங்கே செயல்மூலம் அதைச் செய்து காட்டுகிறார்கள்.
கருப்புச் சட்டைக்காரர்கள் செய்வதைத்தான் சொல்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.
சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளும் பலரும் என்னிடத்தில் வந்து தேதி வாங்க வரும்பொழுது ‘முகூர்த்த நாள்’ என்பதை, மாதத்தில் ஒரு பத்து நாட்கள் இருக்கும். அந்த நாள்களைக் குறித்துக் கொண்டு என்னிடம் வந்து இதில் ஒரு தேதியை உங்கள் வசதிப்படி தாருங்கள் என்பார்கள். இந்த மணவீட்டார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வந்து உங்கள் வசதிக்கு ஏதேனும் தேதி தாருங்கள் என்கிறார்கள். நானும் இன்றைய தேதியைக் கொடுத்தேன். எனவே இந்தத் திருமணத்திற்கு 100க்கு 100 மதிப்பெண் தருகிறேன் என்று கூறி மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி எடுக்கச் சொல்லி நடத்தி வைத்தேன்.
தமிழ்நாட்டு வானொ லிகளில் மீண்டும் ‘ஆகாஷ்வாணி’ புகுத்தப்பட்டதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து 25.05.1982 அன்று “ஆகாஷ்வாணியா? மாறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டு அதில், இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்ற நேரு வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவதா?
தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இது குறித்து இன்னமும் மவுனமாக இருக்கலாமா? இருப்பது நல்லதா? நமக்குள்ளே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இம்மாதிரி தமிழ்நாட்டின் தன்மானத்திற்கும் உரிமைக்கும் ஆபத்து _ பட்டப்பகலில் – வருகையில் விரைந்து அரசின் சார்பில் தங்களது வன்மையான கண்டனத்தை (மென்மையான அல்ல) தெரிவிக்க வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பியும், இது குறித்து கழகத் தோழர்களுடன் ஆலோசித்து போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.
பிரதமர், ஒலிபரப்புத்துறை அமைச்சர், தமிழக முதல்வருக்கு ‘தந்தியை’ அனுப்பியிருந்தோம்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தகுதி திறமைப் புரட்டுகளை விளக்கி 26.05.1982 அன்று உரையாற்றினேன். வெள்ளம்போல் திரண்டிருக்கிற தமிழ்ப் பெருமக்களிடையே தந்தை பெரியார் அவர்கள் எந்த சமூக நீதிக்காக தன்னுடைய ஒரு நூற்றாண்டு வாழ்க்கையிலே, ஏறத்தாழ 70 ஆண்டுகள் போராடிப் போராடி இந்தச் சமுதாயத்திலே மிகப் பிரமாண்டமான சமூக மாறுதலை உருவாக்கினார்களோ அந்தக் குரல் தந்தை பெரியார் அவர்களுடைய மறைவுக்கு பிறகு எங்கே இருந்து கேட்க ஆரம்பித்து இருக்கின்றதென்று சொன்னால் வடபுலத்தில் இருந்து கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பார்ப்பன நண்பர்கள் வீதிக்கு வந்து இருக்கிறார்கள். பார்ப்பனர்கள் அவர்களுடைய மகளிரோடு வீதிக்கு வந்து மாநாட்டிலே கூட அவர்கள் தாறுமாறாக கோஷங்களை எழுப்புகிறார்கள். காரணம் என்னவென்று நீங்கள் சிந்திப்பீர்களானால், தனிப்பட்ட முறையிலே நமக்கும் அவர்களுக்கும் எந்தத் தகராறும் கிடையாது, எந்தப் பிரச்சினையும் கிடையாது. பின் ஏன் அவர்கள் திராவிடர் கழகத்தை மையப் படுத்துகிறார்கள்.
திராவிடர் கழகத் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டனாக இருக்கிற என்னைப் போன்றவனை அவர்கள் குறிவைக்கிறார்கள் என்றால் அதற்கு மூல காரணம் என்ன? தந்தை பெரியார் அவர்களுடைய மறைவிற்குப் பின்னால் இந்த இயக்கம் இருக்காது; என்று பார்ப்பனர் நம்பினர். இன்றைக்கு என்ன சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது?
ரூபாய் 9000 சித்து விளையாட்டுகள் மக்களின் எழுச்சி முன்னால் பொடிப் பொடியாக ஆகக் கூடிய அந்தச் சட்டம் வந்தது.
தந்தை பெரியார் அவர்கள் மனக்குகையில் சிறுத்தை எழுந்த காரணத்தால் தான் இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் கம்யூனல் ஜி.ஓ பெற்று படித்துக் கொண்டிருக்கி றார்கள். பெரியார் மனக்குகையில் சிறுத்தை எழாவிட்டால் நமக்கு மாத்திரம் அல்ல, இந்தியாவில் இதர பூபாகத்து மக்களுக்கு கூட படிக்க உரிமை கிடையாது;
உத்தியோக உரிமை இல்லை என்ற அளவிற்கு வந்தது. நீண்டகாலமாக நம்முடைய சரித்திரத்திலே வகுப்புவாரி உரிமை என்பதற்கு வழிக்காட்டியே தமிழ்நாடுதான். வகுப்புவாரி உரிமை சிஷீனீனீuஸீணீறீ யிustவீநீமீ என்பதற்காக துவக்கப்பட்டதுதான் நம்முடைய இயக்கமே. இப்படி பல்வேறு சமுதாய ரீதியான வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி நீண்டதோர் உரையை அன்று மதுரைக் கூட்டத்தில் ஆற்றினேன். மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்கிட அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினேன்.
கழக மாநாடு நடத்துவது போல மக்கள் கூடியிருந்தார்கள், கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
29.05.1982 ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம் டாக்டர் எஸ்.வி.முருகேசன்_பாப்பம்மாள் ஆகியோரது செல்வன் வளையாபதி, செங்கை மாவட்டம் அச்சிறுபாக்கம் டாக்டர் எஸ்.நடராசன்_ராசம்மாள் ஆகியோரது செல்வி வெற்றிசெல்வி _ இவர்களின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா செங்குந்தபுரம் மணமகன் இல்லத்தில் நடைபெற்றது.
டாக்டர் இராமாமிர்தம் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் கே.அருணாசலம் எம்.ஏ., தலைமை ஏற்றார். நான் ஒப்பந்த உறுதிமொழியை எடுக்கச் சொல்லி வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தேன். விழாவில் பொதுமக்களும், கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
29.05.1982 அன்று விடுதலையின் முதல் பக்கத்தில், “கழகக் குடும்பத்தினர்களே! பார்ப்பனர் சவாலை ஏற்போம்; சந்திப்போம் திருச்சியில்! குடும்பத்தோடு வாருங்கள்! உங்கள் தொண்டன்’’ என்று முக்கிய வேண்டுக்கோள் ஒன்றை வெளியிட்டிருந்தேன்.
31.5.1982 அன்று பெண்ணாடத்தில் நடைபெற்ற மே தின விழா பேரணி _ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். திராவிடர் கழகம் _ திராவிடர் கழகத்தின் பணி இன்னமும் தேவைப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
பார்ப்பனர்கள் ‘பிராமண சங்கம்’ என்ற பெயராலும், ‘விஸ்வ இந்து பரீட்ஷத்’ (க்ஷிபிறி) என்ற பெயராலும், ‘இந்து முன்னணி’ என்கிற பெயராலும், ஆர்.எஸ்.எஸ். என்கிற பெயராலும், ‘ஆலயப் பாதுகாப்பு கமிட்டி’ என்ற பெயராலும் உருவத்தை மட்டும் அவ்வப்போது மாற்றிக்கொண்டேயுள்ளது. தங்களது ஆதிக்கக் கொடியானது என்றென்றைக்கும் பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்களே அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பேரணி ஒரு எச்சரிக்கை!
‘பிராமணர்’களால் தான் ‘இந்தியா’ என்று சொல்லுகின்ற பெருமை ஏற்பட்டிருக்கிறது; பிராமணர்களை அடக்க எந்தக் கூட்டமாவது நினைத்தால் நிச்சயமாக முடியாது, என்றெல்லாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கி அவர் பேசுகிறார் என்றால் அ.தி.மு.க.விலே இருக்கிற தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கும் எங்களுக்கும் சண்டை கிடையாது. ஏனென்றால் நீங்கள் அத்தனை பேரும் எம்.ஜி.ஆர் அல்ல! அத்தனை பேரும் வீரப்பன் அல்ல! அத்தனை பேரும் திருச்சி சவுந்தரராசன் அல்ல! அண்ணா எழுதிய ஆரிய மாயையை முதலிலே படித்துப் பாருங்கள்!
தமிழர்களைக் கேவலப்படுத்திப் பார்ப்பான் பவனி வருகிறான். பதவிக்காக, விளம்பரத்திற்காக பல்லிளித்து இந்த இனத்தைக் காட்டிக் கொடுத்த பார்ப்பானுக்கு பராக்கு சொல்ல தமிழின விபீஷணர்கள் செல்கிறார்கள் என்றால் தமிழர்கள் துப்புகிற எச்சிலிலே நீங்கள் மிதக்க நேரிடும் மறந்துவிடாதீர்கள்! என்று எச்சரிக்கை செய்து விளக்கி உரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)