நாகத்தை நம்பாதே!

ஜனவரி 01-15 2018

பள்ளி மாணவர்களின் விடுதிக்கு அருகிலேயே சிறிய அளவிலான கோயிலைக் கட்டி முடித்துவிட்டான் செல்வம். விடுதிக்கு அருகில் அய்ந்து செண்ட் அளவிற்கு புறம்போக்கு நிலம் இருந்தது. அதில் ஒரு தனிப் பயிற்சி நிலையம் அமைத்து இலவசமாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் நினைத்துக் கொண்டிருந்தான். மதியழகன் ஆசிரியர் பயிற்சி முடித்தவன். ஆனால், மதியழகனை முந்திக்கொண்டு அந்த இடத்தில் கோயிலைக் கட்டிவிட்டான் செல்வம். அவனுக்குத்தான் ஊரில் ஆதரவு அதிகம். பஞ்சாயத்துக்காரரான இராஜதுரையும் அவனுக்கே ஆதரவளித்தார்.

“மாணவர்கள் பள்ளி சென்று படித்தால் போதாதா? டியூஷன் சென்டர் வேறு வேணுமா?’’ என எதிர்க்கேள்வி கேட்டு மதியழகனுக்கு ஆதரவாக இருந்த சிலரையும் தன் வழிக்குக் கொண்டுவந்து விட்டார்.

கோயில் கும்பாபிஷேகம் பெரிய அளவில் நடைபெற்றது. சிவானந்த அடிகளார் என்பவர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் பெரிய ஆசிரமத்தை அமைத்து வேள்வி, யாகம், குறி சொல்லுதல் போன்ற செயல்களைச் செய்து வந்தார். அவரின் ஆசிரமத்திற்கு நிறைய கிளைகள் உண்டு. அதன் சார்பாக கோயில்கள் கட்டப்படும். அதில் ஒரு கிளைதான் இந்தக் கோயில்.

கிளைகளுக்கும், கோயில்களுக்கும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அவர்களின் பணி மக்களை ஒன்று திரட்டி சென்னை ஆசிரமத்திற்கு அடிக்கடி அழைத்து வரவேண்டும். மக்கள் குறி கேட்க வேண்டும். அதற்குக் கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வருமானத்திற்கேற்றவாறு பொறுப்பாளர் களுக்குக் கமிஷன் தரப்படும்.

அன்று கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டு கிளம்பத் தயாரானார் சிவானந்த அடிகள். பல பெண்கள் அவர் கால்களைக் கழுவி அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டனர். காசு பணங்களை காணிக்கையாக அவர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பெரிய தட்டில் போட்டனர். தட்டு நிரம்பி வழிய வழிய செல்வத்திற்கு ஒரே மகிழ்ச்சி. வருமானத்திற்கேற்ப நிறைய கமிஷன் கிடைக்குமல்லவா?

“எல்லோரும் என்னைப் பாருங்க!’’ என்று கூறியபடி கைகளை உயர்த்தினார் சிவானந்த அடிகள். உயர்த்திய கைகளிலிருந்து விபூதி கொட்டியது. அதை மக்களுக்குக் கொடுத்து நெற்றியில் பூசச் செய்தார். வெறுங்கைகளால் விபூதி வரவழைத்ததைப் பார்த்த அந்தப் பாமர மக்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர்.

“ஓம் காளி’’, “தும்காளி’’ எனக் கத்தினார்.

உண்மையிலேயே கடவுள் சக்தியால் விபூதி வரவழைப்பதாக அவர்கள் நம்பினர். இதையெல்லாம் பார்த்த மதியழகன் மனம் நொந்தான்.

சில நாள்கள் சென்றன. ஒருநாள் செல்வம் கோயிலுக்கு மேல் ஒரு உயர்ந்த கம்பம் நட்டு அதில் இரண்டு ஒலிபெருக்கிகளைக் கட்டினான். சிவானந்த அடிகளைப் புகழ்ந்து பாடும் பாட்டுகளை போட்டுத் தள்ளினான். அது தேர்வு நேரம். விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மதியழகன் ஒருநாள் கோயிலுக்கு வந்து செல்வத்தைப் பார்த்தான்.

“பசங்க படிக்கிறாங்க. நாளைக்குப் பரீட்சை எழுதப் போறாங்க. இப்படி சத்தத்தோடு பாட்டுப் போட்டா அவங்க எப்படிப் படிப்பாங்க. பாட்டை நிறுத்து’’ என்றான் மதியழகன்.

“ஓம் காளி, நீ நாசமா போயிடுவே. சாமி பாட்டையா நிறுத்தச் சொல்ற! உன்னால ஊருக்கே கேடு வந்து அழிஞ்சுடும் போலருக்கே. டியூஷன் சென்டர் கட்ட முடியலைங்கிற கோபத்தில இப்படி பேசறீயா?’’ எனக் கோபத்துடன் பொறிந்து தள்ளினான் செல்வம். தன் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட நினைக்கிறானே என மிகவும் ஆத்திரப்பட்டான்.

அப்போது நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சில மாணவர்களும் மதியழகனுக்கு ஆதரவாக அங்கு வந்தனர்.

“ரேடியோ போட்டு கத்தி எங்க படிப்பைப் பாழாக்காதீங்க’’ என்று அவர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் படித்த இளைஞர்கள் சிலரும் மதியழகன் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்தனர். ஆனாலும், பக்தி அவர்கள் கண்களை மறைத்தது.

நாள்கள் கடந்தன. செல்வத்திற்கு சிவானந்த அடிகள் மூலம் நல்ல கமிஷன் கிடைத்தது. அந்த ஊர் மட்டுமல்லாது அக்கம் பக்கத்து ஊர்களிலும் சென்று கல்வி அறிவில்லாத பாமர மக்களை பக்தியின் பெயரால் ஏமாற்றி அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வந்தான்.

சென்றவர்கள் பணம் கட்டி குறி கேட்டார்கள். இருந்தாலும் நாள்கள் செல்லச் செல்ல மக்களுக்கு சிவானந்த அடிகள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. காரணம் அவர் சொன்னது எதுவுமே நடக்கவில்லை.

இதையறிந்த செல்வம் ஏதாவது அற்புதங்கள் செய்தாலொழிய இழந்துவரும் செல்வாக்கை ஈடுசெய்ய முடியாது என்பதை நன்குணர்ந்தான். அப்போது அவனுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் இரவு ஒரு நாகப்பாம்பு கோயிலுக்குள் வந்து சாமி சிலையின் மீது நின்று படமெடுத்து ஆடியது. அது போதாதா! ஊரையே கூட்டிவிட்டான் செல்வம்.

“இதோ பாருங்க, நாகதேவதையே வந்துட்டுது. எல்லாம் ஓம் காளி சக்திதான். எல்லோரும் கும்பிடுங்க’’ என்று மக்களிடம் கூறி அவர்களை பக்தி மயக்கத்தில் மூழ்கடித்தான். மக்கள் அனைவரும் பால், முட்டை எனக் கொண்டுவந்து வைத்து பயபக்தியுடன் கும்பிட்டனர். பக்தி வியாபாரம் பெருகிறது.

அது மிகவும் வயதான பாம்புபோலும். பாதுகாப்பான இடம் என நினைத்து அங்கேயே தங்கிவிட்டது. உண்மையிலேயே மிகப் பெரிய பாம்பு. இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி நன்றாக வசூல் வேட்டையில் இறங்கினான் செல்வம். தனக்கு நிறைய சக்தி வந்துவிட்டதாகப் பரப்புரை செய்து சுரம், தலைவலி என்று வந்தவர்களுக்கு நோயை நீக்குவதாகக் கூறி வேப்பிலை அடிப்பது, விபூதி கொடுப்பது போன்ற செயல்களில் தீவிரமாக இறங்கினான். ஆங்கில மாத்திரைகளை நன்கு பொடி செய்து அதை வீபூதியில் கலந்து நோயாளிகளை உட்கொள்ளச் செய்தான்.

இதையெல்லாம் அறிந்த மதியழகன் மிகவும் வருந்தினான். கோயிலுக்கு அருகில் குழந்தைகள் எல்லாம் விளையாடுகிறார்களே, பாம்பு கடித்துவிட்டால் என்னாவது என்று யோசிக்கலானான்.
முடிவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து பாம்பைப் பிடிக்க முடிவு செய்து தகவலும் கொடுத்துவிட்டான். தீயணைப்புத் துறையினரும் வந்து விட்டனர். ஆனால், செல்வம் பாம்பைப் பிடிக்கக் கூடாது எனத் தகராறு செய்து ஊரைக் கூட்டிவிட்டான். பாம்பு இருக்க வேண்டிய இடம் காடுதான் என்று மதியழகன் சொன்னதை யாரும் கேட்கவில்லை.

“நாக வேத¬தையே கோயிலுக்கு வந்திருக்கு. இந்தச் சண்டாளன் அதைப் பிடித்துக் கொல்ல நினைக்கிறான். விடாதீங்க’’ எனக் கத்தினான்.

மக்களில் பலரும் அவனுக்கு ஆதரவாக இருந்ததைக் கண்ட தீயணைப்பு வீரர்களும் செய்வதறியாது திகைத்தனர். “இந்த ஊரில் இனிமே யாரும் ஆஸ்பத்திரிக்குச் செல்லக் கூடாது. எல்லா நோயையும் நானே தீர்ப்பேன். ஓம்காளி சக்தி எனக்கு எல்லா மகிமையும் கொடுத்திருக்கா. இந்த நாகதேவதை யாரையும் கடிக்காது. கடித்தால் என்னிடம் வாங்க. எந்தப் பாம்பு கடித்தாலும் கவலைப் படாதீங்க. யாரும் இனிமே இந்த ஊரிலேயிருந்து ஆஸ்பத்திரி வாசலையே மிதிக்க வேணாம். நான் விபூதி கொடுத்தா எல்லாம் சரியாயிடும்’’ என்று பித்துப் பிடித்தவன் போல் கூவிக்கொண்டே கோயிலுக்குள் சென்று விபூதித் தட்டை எடுக்கப் போனவன் நிலைதடுமாறி விழுந்தான். இவன் விழவும் பாம்பு அந்த இடத்திற்கு ஊர்ந்து வரவும் சரியாகவே இருந்தது. மறுவினாடி அவன் காலை நாகப்பாம்பு கொத்தாகக் கடித்தது.

“அய்யோ! அம்மா!’’ என்று கதறியபடியே வெளியே ஓடிவந்தான் செல்வம்.

மக்கள் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அதற்கு முன்பே தீயணைப்பு வீரர்களும் வெளியேறிவிட்டனர். மதியழகன் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தான்.

தன்னாலேயே சரியாகிவிடும் என மக்கள் நினைத்தனர். செல்வத்திற்கு உண்மையிலேயே சக்தி இருப்பதாகப் பலர் நம்பினர். ஆனால், சிறிது நேரத்தில் செல்வத்தின் வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. கண்கள் சொருகின. நாக்கு குளறியது. அவனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. இதைக் கண்ட மதியழகன் அங்கு ஓடிவந்தான்.

அவனைக் கண்ட செல்வம், “ஆஸ்பத்திரி… ஆஸ்பத்திரி…’’ என முனகினான். நிலைமையை உணர்ந்த மதியழகன் உடன் ஆம்புலன்சை வரவழைத்து செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

ஒரு வாரம் கடந்தது. செல்வம் முற்றிலும் குணமடைந்தான். மருத்துவமனையிலிருந்து வெளிவந்தவுடன் நேராக மதியழகன் இல்லம் சென்றான். மதியழகன் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு. இனி மக்களை ஏமாற்ற மாட்டேன்’’ எனக் கண்கலங்கியபடியே கூறினான் திருந்திய செல்வம்.
                                                                                                                    – ஆறு.கலைச்செல்வன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *