அமெரிக்காவில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி முடிவடைந்த உலக பளு தூக்கும் வாகையர் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இருபத்து மூன்று வயதான மீராபாய் சானு, 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தின் ‘நோங்பாக் காட்ச்சிங்’ கிராமத்தைச் சார்ந்த ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் தொடக்கக் கல்வியை பயின்றிருக்கிறார்.
“அவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு விடுமுறை நாளில் டி.வி.யில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்றதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துதான் என் மகளுக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது’’ என்கிறார் மீராபாய் சானுவின் தாயார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அடுத்து தன் கிராமத்திற்குப் பக்கத்திலிருந்த பளு தூக்கும் பயிற்சி மய்யத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மீராபாயின் கோச் பால், முட்டை, இறைச்சியை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கட்டளை இட்டுள்ளார்.
ஆனால், மீராபாய் வீட்டின் வறுமையால் அவரால் பால்கூட வாங்கி பருகமுடியாத சூழல் இருந்ததால் “கோச்’’ சொன்னதை அப்படியே உணவில் சேர்த்துக்கொண்டதாக அவரிடம் பொய் சொல்லிவிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் 11 வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டிகள், மணிப்பூர் மாநிலம் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் தேசிய அளவிலான சப் ஜுனியர் போட்டியில் முதலிடம் பெற்றார். இதனால், பட்டியலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தங்கி பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் பளு தூக்குதலில் தன்னுடைய ரோல் மாடலான குஞ்சரணி தேவியை முதல்முறையாக நேரில் பார்த்துள்ளார் மீராபாய். குஞ்சரணி தேவியின் ஆலோசனை, சிறப்புப் பயிற்சியால் தேசிய போட்டிகளிலும் அசத்தியதால், 2014இல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் வெற்றிபெற்று ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். பிரேசில் நாட்டில் ‘ரியோ ஒலிம்பிக்’ பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தும் டாப் 10 இடங்களில் ஆறாம் இடம் பிடித்ததால் ரியோவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியதாகிவிட்டது.
ஆனாலும், கொஞ்சம்கூடச் சோர்வு கொள்ளாமல் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் கோச் குஞ்சரணி தேவி வழிகாட்டுதலின் பேரில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார்.
அதன் பலனாகக் கடந்த அக்டோபர் மாதத்தில் 193 கிலோ தூக்கி சாதனை படைத்து உலக பளு தூக்குதல் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்குபெற தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடந்த பளு தூக்குதல் இறுதிப் போட்டியில் தன்னுடன் மோதிய தாய்லாந்து வீராங்கனை துன்யா 193 கிலோ தூக்க, அடுத்ததாக வந்த மீராபாய் ஒரே மூச்சில் 194 கிலோவை தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றிருக்கிறார். கர்னம் மல்லேஸ்வரி ‘சிட்னி ஒலிம்பிக்கில்’ பெற்ற வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்தப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழ்மைச் சூழலிலும் முயற்சியும் கடுமையான பயிற்சியும் மேற்கொண்டு சாதனை நிகழ்த்தியிருக்கும் ‘மீராபாய் சானு’’வை மனதார வாழ்த்துவோம்.