அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? – (11)

ஜனவரி 01-15 2018

குளத்தில் மூழ்கி எழுந்தால் இளமை வருமா?

திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை! என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார். இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்! என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி திருவோடு தொலைந்துவிட்டது! என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தில் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார் என்கிறது இந்து மதம். வயதான கிழவனும் கிழவியும் குளத்தில் மூழ்கி எழுந்தால் இளைஞர்களாக ஆனார்கள் என்பது அறிவியலுக்கு ஏற்றதா? ஆக முடியுமா? இப்படி முட்டாள்தனமான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

காவிரியில் முழுக்குப் போட்டால் முடம் நீங்குமா?

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாள்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப் படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் முடமும் நீங்கியது என்கிறது இந்து மதம். கைகால் முடமானவர்கள் காவிரியில் மூழ்கி எழுவதால் முடம் நீங்கிவிடுமா? இது அறிவியலுக்கு ஏற்றதா?

தேவ மனிதப் படைப்புகள்

ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும் மிருகங்களையும், பறவைகளையும், மற்றுமுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும் நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்? அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை? இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார்.

மைத்ரேயரே; அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று. அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக, விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது. அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும் சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும். பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன், ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின. சதுர்முகப் பிரமனோ, இந்தத் தாவரங்கள் லோகவியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை; ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன.
பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும் ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள். அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று; பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்; சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார். ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று. அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால் மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாத்துவிக குணாதிக்கமும், ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய் உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு, ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய், உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான். இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும். அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும்.

(சொடுக்குவோம்)
 -சிகரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *