21-ஆம் நூற்றாண்டு
– தி.ப.குடி. பத்மா சீனிவாசன்
வாங்க… வாங்க… புரோக்கரய்யா, எங்க ரொம்ப நாளா காணும்? நடராசன் ஆவலோடு கேட்க, அது வந்துங்க பல வேலையா வெளியூர் போய்ட்டேன்.
நேத்துதான் வந்தேன். இவுங்க காலையில வந்து, சேதிய சொன்னாங்க. அதான் நம்ம பொண்ணப் பாத்திட்டுப் போலாம்னு வந்தேன்.
புரோக்கர் புன்னகையோடு சொன்னார். அதுக்கென்னங்க, பாத்தா போச்சு. பெண்ணின் தந்தை நடராசன் மகிழ்வோடு சொன்னபோது, புரோக்கர் மாப்பிள்ளை வீட்டாரை அறிமுகப்படுத்தினார்.
வணக்கங்க… என்று மாப்பிள்ளையின் அப்பா நடராசனைப் பார்த்துச் சொன்னதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் நடராசனுக்கு வணக்கம் சொன்னார்கள்.
சரிங்க… பொண்ணப் பாக்கலாமே, மாப்பிள்ளையின் தந்தை கேட்க,
ஜோடிச்சிப் பாக்கணுமா? அல்லது சாதாரணமா பாக்கணுமா? நடராசன் கேட்டதும் மாப்பிள்ளை வீட்டார், சாதாரணமா பாத்தா போதுங்க என்று ஒரே குரலில் சொன்னார்கள்.
நடராசன் உள்ளே சென்று சேதியைச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரோடு பேசிக் கொண்டிருந்தார். கதவு அருகில் நின்று கொண்டு, என்னங்க பொண்ண வரச் சொல்லட்டா? பெண்ணின் தாய் கேட்டார், ம்ம்… ம்ம்… வரச்சொல் என்று நடராசன் சொன்னார்.
எவர்சில்வர் லோட்டாவில் தண்ணீரை எடுத்துக்கொண்டு தலையைக் குனிந்தபடியே பெண் வந்து, எல்லோரும் அமர்ந்திருந்த டேபிளின் மேல் வைத்துவிட்டு, ஒரு ஓரமாக நிற்கும்போது, மாப்பிள்ளையின் அப்பா கேட்டார்.
உன் பேரன்னம்மா?
தங்கங்க…
நல்ல பேருதான். சரிம்மா… என்ன படிச்சிருக்கிற… எம்.ஏ.ங்க
இதுவரை பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, எம்.ஏ.ன்னா, மேஜர் என்ன? என்றார்.
சோஷியாலஜி… நிதானமாகப் பதில் சொன்னாள் தங்கம்.
இதைக் கேட்ட மாப்பிள்ளையின் அப்பா சரிம்மா… நீ, உள்ளே போ என்றார்.
சரிங்கய்யா புரோக்கரே, மாப்பிள்ளைகிட்ட பொண்ணு புடிச்சிருக்கான்னு கேளுங்க?
புரோக்கர் கேட்பதற்கு முன்பே சரி என்பதுபோல் தலையாட்டினார்.
பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் புடிச்சிருக்கான்ணு கேளு. உள்ளேயிருந்த தன் மனைவியிடம் கேட்கச் சொன்னார் நடராசன்.
புதுப் பொண்ணும் சரி என்பதற்கு அடையாளமாகத் தன் தலையை ஆட்டினாள்.
ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருக்கு, மேற்கொண்டு நாம் பேச வேண்டியதுதான் என்று மாப்பிள்ளையின் அப்பா சொன்னார்.
நடராசன் கேட்டார், மாப்பிள்ளை என்ன வேலை பாக்குறாரு – சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கலாமா?
ஓ…. பேஷா தெரிஞ்சிக்கலாம் மாப்பிள்ளை பேங்க்ல அக்கவுண்ட்டெண்ட்டா இருக்காரு, சம்பளம் பதினெட்டாயிரம் என்று மாப்பிள்ளையின் அப்பா நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார்.
பொண்ணு என்ன வேல பாக்குதுங்க? இது மாப்பிள்ளையின் கேள்வி.
பொண்ணு டீச்சராயிருக்குங்க… நெளிந்தபடி சொன்ன நடராசன், கல்யாணத்துக்கு நீங்க பொண்ணு வீட்லயிருந்து என்ன எதிர்பாக்கிறீங்க….? என்றார்.
ரொம்ப எதிர்பாக்கலைங்க. ஒரு இருபது பவுன் நகை போட்டுடுங்க. அதோடு ஒரு கார் வாங்கிக் கொடுத்திடுங்க, மத்தபடி ஊர்ப் பழக்கவழக்கப்படி சீர் செனத்தியெல்லாஞ் செஞ்சிடுங்க. மாப்பிள்ளையின் அம்மா இதைச் சொன்னதும் நடராசன் யோசிக்க ஆரம்பித்தார்.
என்னங்க…? யோசிக்கிறீங்க. எப்படியாவது செஞ்சிடுறோம் என்று பெண்ணின் தாய் சொல்லிக்கொண்டிருக்கும் போது புதுப்பெண் தங்கம் வெளியே வந்து,
நான் ஒன்னு கேட்கட்டுங்களா? என்றாள்.
கேளும்மா….
வரதட்சணையெல்லாம் கேக்கிறீங்க. இவ்வளவு கேக்கிறீங்களேன்னு கேட்டா, எல்லாம் ஒங்க பொண்ணுக்குதான் – அவுங்க குடும்பம் நடத்தத்தான்னு சொல்வீங்க, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்த இவ்வளவும் பெண் வீட்டாரே கொடுக்கணும்னா, அந்தக் குடும்பத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் என்ன செய்வீங்க.
மாப்பிள்ளை வீட்ட நான் வந்து பாக்கணுங்க என்றாள் தங்கம். என்னம்மா…?
இப்படிச் சொல்ற.. ஆமாங்க – இது நவீன காலங்க. மாப்பிள்ளை வந்து எங்க வீட்டப்பாத்து, ஊர் எப்படி – ஜனங்கள் எப்படி – போக்குவரத்து எப்படின்னு தெரிஞ்சிக்கிறார்ல, அப்படி ஒரு பொண்ணு தெரிஞ்சிக்க வேணாமா?
அப்படிச் செய்யக் கூடாதும்மா என்றார் மாப்பிள்ளையோட அம்மா. ஏங்க… செய்யக் கூடாது?
அது சாஸ்திரப்படி தப்புமா
சாஸ்திரம்னா என்னங்க…
அதாவது, நாள் நட்சத்திரம் பார்த்து ராகு காலம், எமகண்டம் இதெல்லாம் பாத்துதாம்மா செய்யணும்.
நாள்ன்னா…? எல்லாம் ஒரே நாளாதாங்க இருக்கு, ஞாயிற்றுக் கிழமைக்கும் – திங்கள் கிழமைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டாங்க?
ஞாயிற்றுக் கிழமைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் திங்கள் கிழமைக்கு இருபத்து மூன்று மணி நேரமுமாவாயிருக்கு. எல்லா நாளுக்கும் இருபத்து நாலு மணி நேரம்தான் இருக்குங்க.
நீ என்னம்மா சொல்ற?
நல்ல நாள், ராகு காலம், இதெல்லாம் இல்லேன்னு சொல்றியா?
ஆமாங்க. ராகு காலமெல்லாம் பகல் பொழுதுலதான் வரும்னு கணக்குப் பண்ணி வச்சிருக்காங்க. ராகு காலங்கிறது வெள்ளையா இருக்குமா? இல்ல, கருப்பா இருக்குமா?
அப்போ.. நீ சாமி கும்பிட மாட்டியா? மாப்பிள்ளையின் அம்மா கேட்டார்.
சாமிதாம்மா நம்மள கும்புடணும். ஏன்னா? அதுக்குக் கோயில் கட்டி குளம் வெட்டி ஆறு கால பூசைய நாமதானே போடுறோம். அதனால அதுதாம்மா நம்மள கும்புடணும் _ நன்றி சொல்லணும்.
பூசையெல்லாம் சாமிக்குச் செஞ்சா அது கடவுளுக்குச் செஞ்சது மாதிரிம்மா என்ற மாப்பிள்ளையின் அம்மாவின் பதிலைக் கேட்ட தங்கம் மேலும் தொடர்ந்தாள்.
சாமிக்குச் செஞ்சா… கடவுளுக்குச் செஞ்சது மாதிரின்னு சொல்றிங்க. ஒங்க கருத்துப்படியே வருவோம்.
காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, இதெல்லாம் பெண் தெய்வங்கள்தானே?
ஆமா, அதுக்கென்ன? மாப்பிள்ளையின் அம்மா தயக்கத்தோடு கேட்டார்.
இதையெல்லாம் பூசை பண்ணும்போது குளிப்பாட்டுவது ஆம்பள பூசாரிதானே, துணியை எல்லாம் அவுத்துட்டு, அங்க தொட்டு, இங்க தொட்டுக் குளிப்பாட்டும்போது, அந்தப் பொம்பள சாமிக்கெல்லாம் கூச்ச நாச்சம் இருக்காதா?
அப்படி பொம்பள சாமியின் மர்ம உறுப்பைத் தொடுவதையும் பெண் சாமியின் மர்ம உறுப்பைத் தொடுவதா எடுத்துக்கலாமா? ஏம்மா? அய்ந்து வயதுப் பொண்ண அதன் தகப்பனே குளிப்பாட்ட முடியாதே. இதெல்லாம் எப்படிம்மா?
தங்கம் கேட்ட கேள்வியால் தளர்ந்து போன மாப்பிள்ளையின் அம்மா கொஞ்சம் கோபத்தோடு நீ என்ன பெரியார் கட்சியா? என்றார். ஆமாங்க, உண்மையைச் சொன்னா பெரியார் கட்சிங்கிறீங்க?
அவுங்கதான் இப்படிப் பேசுவாங்க என்றதும் தங்கம் அப்படியில்லீங்கம்மா… பக்தி வந்தால் புத்தி போகும்னு, பெரியார் சொன்னாரு, அதையே கொஞ்சம் விளக்கமா,
பக்தி வந்தால் புத்தி போகும் – பெரியாரைச் சுத்தி வந்தால் புத்தி வரும்னு நான் சொல்றேன்.
தங்கத்தின் விளக்கத்தால் தடுமாறிய மாப்பிள்ளையின் அம்மா மாப்பிள்ளையைப் பார்த்து என்னடா தம்பி, இந்தப் பொண்ணு இப்பவே இந்தப் போடு போடுதே, கல்யாணம் ஆன பிறகு எப்படிடா பேசும்?
நல்லாதாம்மா பேசும். உண்மையைத்தான் அந்தப் பொண்ணு சொல்லுது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.