(தந்தை பெரியாரின் கொள்கைகளில் தலையாயது ஜாதி ஒழிப்பு – காந்தியார் தீண்டாமை ஒழிப்பில் மட்டும்தான் ஈடுபட்டார்கள். வர்ணாஸ்மர தர்மத்தை ஆதரித்தார்கள். ஆனால் நம் தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே அரசமைப்புச் சட்டத்திலிருந்து தீண்டாமை யை அகற்றுவது மட்டும் போதாது. ஜாதி (caste) என்ற சொல்லையும் நீக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். இக்கருத்தை எதிரொலித்து 1930 களிலேயே காங்கிரஸ் இயக்கத்தவரான சுபாஸ் சந்திர போஸ் எழுதிய கட்டுரை 26.10.1930 குடியரசில் வெளியாகியுள்ளது. அவர் ஒரு பார்ப்பனர் அல்லர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கையுடையவன். அதுசம்பந்தமாக என்னாலான பிரச்சாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் என்ற கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்கு அறிகுறியாகும். சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கின்றார்களே ஒழிய சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்டவனல்ல. நாம் எல்லோரும் ஒன்று என்றால் மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருக்கலாகாது.
எந்தக் காரணத்தைக் கொண்டு இந்த ஜாதி உண்டாக்கப்பட்டதோ, அது சுதந்திர இந்தியாவுக்குப் பொருந்தியதல்ல, சண்டை செய்வதற்கு ஒரு வகுப்பார் மட்டுந்தான் தகுதியும் பொறுப்புமுள்ளவர்களென ஒதுக்கிவைப்பது இக்காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அதுபோலவே ஒரு வகுப்பார்தான் கல்வி கற்கும் சாதனங்களுக்குத் தகுதியுடையவர்களென ஒதுக்கிவைப்பதும் பொருந்தாததாகும். வியாபாரம் செய்ய மற்றொரு ஜாதியார் மட்டுந்தான் தகுதியுடையவர்களெனக் கூறுவதும் அதுபோலவே முடியாததும் பொருத்தமற்றது மாகும், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் கல்வி கற்கவும், சண்டை செய்வதில் பழகவும், சுதந்திரமாகத் தன்னுடைய ஜீவனோபாயத்தைச் சம்பாதிக்கவும் வேண்டிய வசதிகள் இருக்கவேண்டுமென்று நவீன இந்தியா எதிர்பார்க்கிறது.
ஆரியசமாஜ், பிரம்ம சமாஜ் போன்றவைகள் ஜாதிவேற்றுமையை ஒழிப்பதில் மதிக்கத் தகுந்த சேவை செய்து வருகின்றதனாலும் இக்காலத்தில் நமக்கு வேண்டியது எதுவெனில், ஹிந்து சமூகத்திலுள்ள வைதிக வகுப்பாரை இந்த நவீன கொள்கைக்கு மாற்ற வேண்டியதே யாகையால் இந்த வைதிக கோஷ்டியாரின் மனப்பான்மையை மாற்றுவதில் ஆரிய சமாஜமும், பிரம்மசாமாஜமும் அவ்வளவு வேலை செய்யமுடியாதென்றே எண்ணுகிறேன். வைதிக கோஷ்டியிலுள்ள அங்கத்தினர்களே அவர்களைத் திருத்துவதில் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டியது. மனித சரித்திரத்தைப் படித்ததிலிருந்து கலப்பு மணமும், மாகாண கலப்பு மணமும், ரத்தக்கலப்பை உண்டாக்குவதோடு, இந்திய ஜாதிக்கும் நாகரிகத்திற்கும் ஓர் புதிய சக்தியையும் வேகத்தையும் உண்டாக்குமென்று நம்புகிறேன்.
– குடிஅரசு 26.10.1930 பக்கம் 17
தகவல் – மு.நீ.சிவராசன்