கேள்வி : தங்கம் என்னும் உலோகம் பயன்படுத்தப்படாமல் கோயில்களில் முடக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா?
ந. அருட்கோ, சோளிங்கர்
பதில் : கடவுள்களாலேயே மக்களுக்குப் பயன் இல்லை என்னும்போது, கடவுளுக்காகப் பதுக்கப்பட்டுள்ள (பாதுகாப்பு என்ற பெயரில்) தங்கத்தினால் பயன் என்ன? துணிந்து அவைகளை கோல்டுகடன் பத்திரங்களாக கடவுளிடமே எழுதிக் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே!
கேள்வி : ஆண்டால் நாங்களே ஆளுவோம், இல்லையேல் எவரையும் ஆளவிட மாட்டோம் என நாடாளுமன்றத்தையே முடக்கும் பா.ஜ.க. – ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறதே. இது ஆளுங்கட்சியாக வந்தால்?
நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : அசல் ராமராஜ்யம் – சம்பூகன் வதம்தான்!
கேள்வி : இந்து மதத்தின் இழிவு ஜாதி அமைப்பில் அமைந்துள்ளதா? அல்லது பலதெய்வ சிலை வணக்கத்தில் அமைந்துள்ளதா?
இ. கிருபாகரன், சோளிங்கர்
பதில் : நிச்சயமாக ஜாதி அமைப்பில்தான் – ஜாதி அமைப்பு இல்லையென்றால் ஹிந்து மதமே இல்லை!
கேள்வி : அன்னை நாகம்மையாரின் நினைவிடம் எந்த ஊரில் எங்குள்ளது?
வெங்கட இராசா, ம.பொடையூர்
பதில் : தனியாக நினைவிடம் ஏதும் செய்யப்படவில்லை. ஈரோட்டில்தான் எரியூட்டப்பட்டார் – ஈரோடு பெரியார் மன்றமே அன்னை நாகம்மையார் நினைவுதானே!
கேள்வி : பா.ம.க. நிறுவனர் இராமதாசு திராவிட என்ற சொல்லால் நாம் அழிந்துவிட்டோம் என்றும், சமூக நீதியை நிலைநாட்டியது நாங்கள்தான் என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் நோக்கம் என்ன?
கி. செல்வராசு, திருத்தணி
பதில் : ஏமாற்றம் – விரக்திதான்! சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான்!
கேள்வி : உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களுக்குத் தண்டனை கொடுக்க சட்டத்தில் வழி உண்டா? – க. ராசன், நெய்வேலி,
பதில் : மத்திய அரசு (அரசியல்) சட்டம், கோர்ட் அவமதிப்புச் சட்டம் – ஆகியவற்றில் இடம் உண்டே!
கேள்வி : விவசாய உற்பத்தியின் வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் கணக்கிட்ட அரசு, தற்போது எந்தத் துறை உற்பத்தியின் வளர்ச்சியினை அடிப்படையாகக் கணக்கிட்டு நாட்டின் பொருளாதாரத் திற்குப் பின்பற்றுகிறது? – த. சுரேஷ், நாகர்கோவில்
பதில் : திட்டக்குழு – நீதித்துறையாருக்கே குழப்பமான செய்தி இது! எளியேன் எப்படிங்க விளக்க முடியும்?
கேள்வி : அரசியல் தரகன் சு. சுவாமி மைனாரிட்டிகளை தாய்மதம் திருப்பி, விருப்பப்பட்ட ஜாதியைத் தத்தம் தேர்வுசெய்து, தீவிரவாதத்தை வேரடிமண்ணுடன் சாய்க்கப் போவதன் பின்னணி என்ன? தயவுசெய்து விளக்கவும்.
– ஒலிச்செங்கோ ரெசினால்ட், நாகர்கோவில்
பதில் : ஆரியப் பைத்தியக்காரன் உளறல்களைப் பொருட்படுத்தி நேரத்தை வீணடிக்காதீர்!
கேள்வி : மக்களுக்கு ஆடு மாடுகளைக் கெ()டுத்து மாக்களாக்கும் அவாள் லட்சுமியைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி பற்றி அன்பான பதில் என்ன? – எம்.கே.கலைச்செல்வன், சிங்கிபுரம்
பதில் : புர்_ர்_ர்_புரட்சி! புரட்சி ஓங்குவதற்குப் புதிய வழி கண்டாகிவிட்டது!
கேள்வி : வறுமைக்கோடு என்பதென்ன? வறுமைக்கோட்டை ஆட்சியாளர்கள் அகற்றலாமல்லவா? – கே. செல்வன், சிங்கிபுரம்
பதில் : உம். அகற்றலாமே! அதைவிடப் பெரிய கோடு போட்டால் சின்னக் கோட்டை யாரும் கவனிக்க மாட்டார்கள். அது, தானே அகன்றுவிடுமே! பாரத் மாதாகீ ஜே!