குரல்

செப்டம்பர் 01-15

  • ஒரு பெண்ணுக்குக் கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய சிக்கலான நடைமுறையாக அதுவே இருப்பது சங்கடம்தான். திருமணத்தை ஒரு சௌகரியமாக நினைத்தால், நீ அதற்கு நேர்மையாக இருக்க வேண்டும், அல்லது அதிலிருந்து வெளியேற வேண்டும். அதிலேயே இருந்துகொண்டு எல்லாத் தவறுகளையும் செய்ய முனைந்தால் குற்றமே நிகழும்.

    திலகவதி அய்.பி.எஸ்., மேனாள் காவல்துறை உயரதிகாரி

  • இரண்டு மாதத் தாமதத்தை ஈடுகட்ட விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்துவது, சிறப்பு வகுப்புகளைத் திணிப்பது என்று மாணவர்களின் பளுவைக் கூட்ட அனுமதிக்கக் கூடாது. வேண்டுமானால், அரசுத் தேர்வை ஒருமாதம் தள்ளி நடத்தலாமே தவிர, தங்கள் தவறுகளுக்கான பொறுப்பைக் – குழந்தைகள் தலையில் சுமத்தக் கூடாது

    பேராசிரியர் அ. மார்க்ஸ்

  • 1:20 என்கிற விகிதத்தில் ஆசிரியர் நியமனம், 85 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே படிப்பதால், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஸ்மார்ட் போர்டு, எல்.சி.டி. புரொஜெக்டர் போன்ற துணைக் கருவிகளை அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவது ஆகியவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!

    பேராசிரியர் சிவக்குமார், முன்னாள் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர்

  • விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள இலங்கை அரசு முன்வர வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது என்பதுபற்றி சர்வதேச நாடுகள் அனைத்தும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இதை நினைவில் வைத்து இலங்கை அரசு செயல்பட வேண்டும்.

    மார்க் டோனர்,அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர்

  • சாதாரண மக்கள் குற்றங்கள் செய்தால் அவர்களுக்குச் சாதாரண தண்டனை வழங்கினால் போதும். ஆனால், அதே குற்றத்தை போலீசார் செய்தால் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். தங்கள் கடமையை மறந்து அவர்கள் குற்றம் செய்வதால் கடுமையான தண்டனை விதிப்பதுதான் நியாயம்.

    மக்களைப் பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. ஆனால், கூலிப்படையினராக மாறி அப்பாவி மக்களை போலீசே என்கவுன்டர் என்ற பெயரில் கொன்றால் அவர்களை மன்னிக்க முடியாது.

    இதுபோன்ற கொலைகளை அரிதிலும் அரிதான குற்றச் செயல்களாகக் கருத வேண்டும். போலி என்கவுன்டர்களில் தொடர்புடைய போலீசாருக்கு மரண தண்டனை விதித்து அவர்களைத் தூக்கில் போடவேண்டும்.

    மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி, உச்ச நீதிமன்றம்

  • உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது ஒரு வாளியில் கோயில் பாயாசம் எடுத்துச் செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத்தான் அனைவரும் கருதினர். உண்மையில் அந்த வாளியில் கோயில் பொக்கிஷங்களை எடுத்துச் சென்றுள்ளார்.

    இதைத் தடுத்த பூசாரிமீது மன்னர் வெந்நீரை ஊற்றிக் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விசயத்தைப் பூசாரியே என்னிடம் தெரிவித்துள்ளார்.

    அச்சுதானந்தன், மேனாள் முதலமைச்சர், கேரளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *