இதுவும் கடந்து போகும்
ஜாதி, தீண்டாமைக் கொடுமை ஈழத்தில் எப்படியிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம். துணி வெளுப்பவர் மிதிவண்டியில் தன் மகளை அமர்த்தியபடி வீடுவீடாகச் சென்று கேட்டுக் கேட்டு துணிகளை வாங்கி வருவதில் தொடங்குகிறது கதை. ஒரு வீட்டில் தன் மகளுக்கு விக்கல் வந்துவிட்டதால் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் தேங்காய் சிரட்டையில் வருகிறது. சிறுமி அதில் குடிக்க மறுத்துவிடுகிறாள். அவமானப்பட்ட அந்தத் தந்தை மவுனமாக தன் மகளை அழைத்துக்கொண்டு திரும்புகிறார். அடுத்த காட்சியில் சிங்கள அகதிகளாக ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல். துணி வெளுக்கும் தொழிலாளிக்கும், தேங்காய் சிரட்டையில் தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கும் ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் ஜாதி வெறி நொறுங்கிப் போய், நாம் இருவரும் ஓரினம்தான் என்று எண்ணி தன் தவறை உணர்ந்ததுபோல தலை குனிகிறாள். இப்படி எத்தனையோ ஒடுக்குமுறைகளைத் தாண்டித்தான் வாழ்க்கை நகர்கிறது. “இதுவும் கடந்துதான் போகப் போகிறது’’ என்ற சோகமான ஆறுதலைத்தான் இயக்குநரால் சொல்ல முடிந்திருக்கிறது. எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் ஜோயல். Mand Style Creations வெளியிட J.Parthiban Jeno நிறுவனம் தயாரித்திருக்கிறது. 7.54 நிமிடம் ஓடுகிற இக்குறும்படத்தை Youtube- இல் காணலாம்.