நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்

அக்டோபர் 16-31

 

 

 

பெரியார் ஈ.வெ.ரா.விடம் பாதிக்கப்பட்டோர் நேரில் அளித்த முறையீடு

சுயமரியாதை சங்கத் தலைவர் ராமசாமி பெரியார் அவர்களுக்கு, அடியில் கையொப்பமிட்ட எங்களுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டுமாய்க் கோருகிறோம். இன்றைய தினம் ‘விடுதலை’க்கு மறுப்பு என்ற துண்டு நோட்டீஸ் கொடுத்தார்கள். 28.12.1938இல் நீடாமங்கலத்தில் உடையார் அய்யா பங்களாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். மாநாடு கலைந்து சாப்பாட்டுக்கு போய் சமபந்தி போஜனம் செய்தோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே எங்களோடு கூடயிருந்த தவஸ்காயத்தை பரிமாறினவர் குடுமியை பிடித்து அடிக்க ஆரம்பித்த உடன் நாங்களெல்லோரும் கலைந்து விட்டோம்.

மாநாடு நடந்த மறுதினம் அநுமந்தபுரம் பண்ணை ஏஜண்ட் கிருஷ்ணமூர்தி அய்யர் அவர்கள் சந்தான ராமசாமி உடையார் அவர்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டு எங்களோடு சாப்பாட்டில் கலந்துகொண்ட ஆறுமுகம், தவஸ் மாணிக்கம், தவஸ்காயம் முதலியவர்களையும் இன்னும் சில பேர்களையும்  தலையை ஒரு பக்கம் சிரைத்தும் சாணிப்பாலை வாயில் ஊற்றியும் அடித்து துன்புறுத்திவிட்டார்கள்.

இந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தை காங்கிரஸ் காரரும் அவமானபடுத்தி வருகிறார்கள். நாங்கள் இந்தக் கொடுமை யிலிருந்து எங்களை மீட்பதற்கு தங்களைத் தவிர வேறொருவரும் இல்லையென்றே எண்ணும்படியான நிலைக்கு வந்துவிட்டோம். ஆகவே, தங்களுடைய வாழ்நாளிலேயே எங்களுடைய விமோசனத்தை அடையும் மார்க்கத்தை காண்பிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம்.

பி.சாமியப்பன்     (கையெழுத்து)
பி.உத்தராசி            ’’
ம.கோவிந்தசாமி        ’’
வை.வீரமுத்து        ’’
முருகையா            ’’
சாமியப்பன்            (ரேகை)
பேச்சிமுத்து            ’’
(‘விடுதலை’ -19.1.1938)

நீடாமங்கலத்துக்கு நீதி

நீடாமங்கலத்தில் 28.-12.-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்ட தற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4, 5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4, 5- மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15ஆம் தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதிபரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர்களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.
இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவதென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக் கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப் பட்டதென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ் காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டியதில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லுகிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் வி.ஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் – இந்தக் கமிட்டியார் உடனே புறப்பட்டுப் போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப்பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க  பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.

எனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா? பொய்யா? என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்தமான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத்துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.

(‘குடிஅரசு’ – தலையங்கம்  – 19.06.1938)

முடிவுரை

நீடாமங்கல வன்கொடுமை குறித்து இதுகாறும் தொகுத்துக் கொண்ட கருத்துகளின் சாரமானது விவாதங்களை எழுப்பும் பல கேள்விகளாக நம் முன் விரிகின்றது. இவ்விவாதங்களின் கருத்தியல் நீட்சி, திராவிட இயக்கம், தாழ்த்தப்பட்டோர் ஆகிய இரு தரப்பினரிடையே உள்ள உறவுநிலை குறித்து இன்று நிலவிவரும் _ பெரும்பாலும் எதிர்மறை நோக்கிலானதாகவே காணலாகும் _ கருத்துப் பகிர்வுகளுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை அளிப்பதாக அமைகின்றது.

சுயமரியாதை இயக்கமே நீடாமங்கலம் வன்கொடுமை நிகழ்வுகளை முதன்முதலில் தக்க ஆதாரங்களுடன் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவந்தது. மேலும், அரசியல், சமூகம், பண்பாடு, சட்டம் ஆகிய தளங்களில் அவை குறித்த விவாதங்களை மேற்கிளப்பியது. வன்கொடுமை வெளிப்பட்டுவிட்டதால் உயிர் அச்சத்திற்குள்ளாகியிருந்த தாழ்த்தப்பட்டோரை நீடாமங்கலம் _ அனுமந்தபுரம் பகுதியிலிருந்து மீட்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்கியதும் இவ்வியக்கமே.

கிராமப்புற நிலவுடைமை நுகத்தடியின் சுமை தவிர வேறு உலகைக் காணும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு (தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் மற்றும் சிலர்) ஈரோடு, சேலம், தூத்துக்குடி போன்ற தொழில் வணிகம் வளர்ந்த நகரங்களில் உருவாகியிருந்த மனித உரிமைகளுக்கான _ ஒப்பீட்டு அளவிலான _ வெளிகளை அறிமுகப்படுத்தியது இவ்வியக்கம்.

மீட்கப்பட்ட மூவருள் ஆறுமுகத்தை பெரியார் ஈ.வெ.ரா. தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும், அவருக்கு காவல் துறையில் அரசுப் பணி பெற்றுத் தந்ததாகவும் தற்போதும் அவரது வாரிசுகள் சென்னையில் வாழ்வதாகவும் களத் தகவல்கள் (கா.அப்பாசாமி, நீடாமங்கலம், 7.3.2011) கூறுகின்றன. தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் இம்மூவருள் முன்னிருவரும் நீடாமங்கலம் பகுதியில் எண்ணிக்கை மிகுந்த பள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள்; ஆனால், பின்னவரைப் பொறுத்து அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி ஒன்றில் பிறந்திருந்தாலும் அவரது ஜாதி (பள்ளர்களுக்கு முடித்திருத்தும் தொழிலை மேற்கொள்வோர்) எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மை என்பதால் அவரின் வாழ்வுக்கு மற்ற இருவரையும் விடக் கூடுதல் பாதுகாப்பை வழங்க பெரியார் ஈ.வெ.ரா. எண்ணியிருக்கலாம்.

இவ்வன்கொடுமை குறித்து, தாழ்த்தப்பட்டோர் தலைவர்களைப் பொறுத்தமட்டில் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.சிவஷண்முகம் பிள்ளை மட்டுமே அங்கு இதுபற்றிக் கேள்வி எழுப்பினார்; அதற்கு அரசின் அக்கறையற்ற ஒரு பதிலையும் பெற்றார்.

தேசிய அளவில் இயங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகள் ஏதும் இதுகுறித்த செய்திகளை வெளியிடாததால் இவ்வன்நிகழ்வு டாக்டர் அம்பேத்கரின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை.

வன்நிகழ்வு நடைபெற்ற அதன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அறியப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகந்நாதம் போன்றோர் பொதுத்தளத்தில் இதுகுறித்து ஏதும் பேசாமல் மவுனமாகவே இருந்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வசித்துக் கொண்டிருந்த வி.அய்.முனிசாமி பிள்ளை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான குழந்தை வேலுப்பிள்ளை நயினார் போன்றோர் வன்முறை நிகழ்ந்ததை மறுத்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நிலையையே எடுத்திருந்தனர்.

இவ்வன்நிகழ்வு குறித்துத் தாழ்த்தப்பட்டோர் தரப்பில், பொதுவெளியில், பொருட்படுத்தத்தக்க அளவில் எழுந்த ஒரு எதிர்வினை என்பது எம்.பாலசுந்தரராஜ், வி.ஜெயராஜ், எஸ்.சி.பாலகிருஷ்ணன் போன்றோரின் முன்னெடுப்பில் தேவேந்திர வேளாளச் சங்கத்தினரால் நீடாமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘கள விசாரணையும் அதன் தொடர்ச்சியாக வன்முறை நிகழ்ந்தது உண்மை’ என அவர்கள் அளித்த அறிக்கையுமே ஆகும்.

மேற்குறித்தவற்றை ஏற்கனவே கண்டுள்ளோம். இந்நிலையில் தாழ்த்தப்பட்டோரின் பெருந்தலைவர்கள் இவ்வன்நிகழ்வு குறித்து ஏன் பேசாமல் இருந்தனர், அவர்களின் இம்மவுனத்திற்குப் பின்புலமாக விளங்கிய சமூக _ அரசியல் கருத்து நிலை யாது? என்ற கேள்விகள் எழுகின்றன.

தேவேந்திர வேளாளர் சங்கத்தின் தலைவர்களைப் பொறுத்து அவர்களுள் தமிழகம் தழுவிய அளவில் பரவலாக அறியப்பட்டிருந்தவர்கள் என எவரும் இல்லை என்பதே அன்றைய களநிலை. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரில் ஏறத்தாழ அனைவருமே தேவேந்திர வேளாளராகவே இருந்தார்கள் என்பதும் இவர்களுள்ளும் கணிசமானோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் இங்கு கருதத்தக்கனவாகும். இந்நிலையில் எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்ற பொது ஜனநாயகச் சூழலின் நடுவே, கண்டுவரும் இக்களநிலைகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்துபோன பலவீனங்களாகவே கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பலவீனங்களைச் சமன் செய்வதாகவே சு.ம. இயக்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டியுள்ளது.

பார்ப்பனியக் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த சமூக அரசியல் நிறுவனங்களோடு நேர் மோதலைப் பின்பற்றுவதே திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியப் போக்காகும். இதன் மறுதரப்பாக இவ்வியக்கத்தின் மீது எழும் விமர்சனங்களுள் ஒன்று, பார்ப்பனரல்லாத உள்ளூர் ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைகளை இவ்வியக்கம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதாகும். இந்நிலையில், நீடாமங்கல வன்கொடுமையைப் பொருத்து பார்ப்பனரல்லாத உள்ளூர் ஆதிக்க சாதிகளின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவ்வியக்கம் ஆற்றிய எதிர்வினைகள் இவ்விமர்சனம் குறித்து வரலாற்று வழியிலமைந்த மீள்நோக்கு நிலையை முன்வைக்கின்றது.

நீடாமங்கல வன்நிகழ்விற்குச் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய திராவிட இயக்கத்தின் மற்றொரு முக்கியக் கூறு, வாக்கு வங்கி சார்ந்த தேர்தல் அரசியலில் இறங்கியது. இதன் பின்னர், தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக, நீடாமங்கல வன்நிகழ்வு குறித்து ஆற்றியது போன்ற உடன்பாடான எதிர்வினைகள் இவ்வியக்கத்தின தரப்பில் குறைந்து வந்ததைக் கவலையோடு நோக்க வேண்டியுள்ளது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் எல்லாத் தரப்பினருக்கும் இத்தகைய நிலை பொருந்தக்கூடியதே என்பதாக அமையும் அமைதிகாண் முறைகள் திராவிட இயக்கத்தின் தனித்தன்மைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்துவிடும்.

பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் அவற்றின் உட்கூறுகளாக ஜாதி மதத்தைத் தாண்டி சிந்திக்கின்ற _ செயல்படுகின்ற ஜனநாயக சக்திகளை உருவாக்கி, அவற்றைத் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க _ செயல்பட வைத்ததே திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியத் தனித்தன்மையாகும். அதேவேளை தாழ்த்தப்பட்டோர் தரப்பில், அவர்கள் மீதான ஒடுக்குமுறை நிகழும்போது அமைதி காப்பதும், ஒடுக்குமுறைக்கு ஆதரவான வகையில் எதிர்நிலை எடுப்பதுமான சில போக்குகளையும் இனங் காண்கிறோம். எனவே, இத்தகு வரலாற்றுப் புரிதலுடன் பார்ப்பனரல்லாதாரில் உள்ள ஜனநாயக சக்திகளும் தாழ்த்தப்பட்டோரில் உள்ள பெரும்பான்மையினரும் கைகோக்கும்போதுதான் சமூக விடுதலை என்பது சாத்தியமாகும். நீடாமங்கல வன்கொடுமை நிகழ்வின் ஊடாகக் காணலாகின்ற சுயமரியாதை இயக்கம்  மற்றும் தாழ்த்தப்பட்டோரின் உறவுநிலை தரும் புரிதலும் படிப்பினையும் இதுவேயாகும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *