சோதிடம்

அக்டோபர் 16-31

 

 

பரமசிவம் சோதிட நிலையத்துக்கு ரகுபதி வந்து சேர்ந்தபோது காலை பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

மூன்று மணி நேர பேருந்துப் பயணம் களைப்பு தட்டினாலும், பேருந்து நிலையத்தில் இறங்கியதும், பரமசிவம் சோதிட நிலையம் என்றதும், ஆட்டோக்காரன் சரியாக பதினைந்து நிமிடத்தில் சோதிட நிலைய வாசலுக்குக் கொண்டுவந்துவிட்டான்.

பரமசிவம் சோதிட நிலையம், கடந்த பத்தாண்டு காலமாகவே, நகரின் நம்பர் ஒன் சோதிட நிலையமாக இருந்து வருகிறது.

உள்ளூர்வாசிகளைவிட, வெளியூர் ஆசாமிகள்தான் இங்கு வந்து, லாட்ஜில் ரூம் போட்டுக்கொண்டு சோதிடம் பார்த்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு முக்கியமான வி.அய்.பிக்கள், அரசியல்வாதிகள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என சோதிடத்தை நம்பும் ஒரு கூட்டம் பரமசிவம் சோதிட நிலையத்துக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

சோதிட நிலையத்தின் வாசலில், ரகுபதி ஆட்டோவை விட்டு, இறங்கியதுமே வாங்க… வாங்க.. என வாயில் வெற்றிலை பாக்கு சகிதம், சோதிட நிலைய ஏசண்ட் ஏகாம்பரம் சிரித்த முகத்தோடு ரகுபதியை வரவேற்றான்.

ரகுபதியும் பதிலுக்குப் புன்னகையை வீசிவிட்டு, சோதிடம் பார்க்கணும். சென்னையிருந்து வருகிறேன்.
“சார்.. சோதிடம் பார்க்கணும்னா, நீங்க ஏற்கனவே, பதிவு பண்ணியிருக்கணும். உங்க பேரைப் பதிவு செய்தீர்களா?’’

“இல்லையே… இந்த பார்மாலிடியெல்லாம், எனக்கு தெரியல. என்னுடைய நண்பன்தான் சொன்னான். நேரா போனா போதும். சோதிடம் பார்த்துடலாம்னு. அத நம்பித்தான் புறப்பட்டு வந்துவிட்டேன்.’’

“சரி, உங்க பேரு அட்ரஸச் சொல்லுங்க.’’

“அதெல்லாம் நான் சொல்ல முடியாது. உங்க பாஸ்தான் எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைப்பாருன்னு சொல்றாங்க. அவரே கண்டுபுடிக்கட்டும்.’’

“சார், உங்க பேரையாவது சொல்லுங்க.  அப்பதான் உங்க பேரைப் பதிய முடியும். பேரு இல்லாம எப்படி பதிய முடியும்?’’ ஏசண்ட் ஏகாம்பரம் கேட்டான்.

“தம்பி, நீங்க என்னா சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலயே, நேரா போயி, நான் சோதிடருக்கு நேரா உட்காரப் போறேன். அவர் என் பேரு, என்னோட ஊரு, என்னைப் பத்திய ஜாதகம் எல்லாத்தையும் சொல்லப் போறாரு. அதுக்கு எதுக்கு என் பேரு?’’ ரகுபதி, ஏகாம்பரத்தை பதிலுக்குக் கேட்டான்.

“சார், நீங்க நினைக்கிற மாதிரி, இன்னைக்கு எங்க அண்ணனைப் பார்க்க முடியாது. நாளைக்குத்தான் பார்க்கலாம். ஏன்னா, நேத்து வரைக்கும் பேரப் பதிவு செஞ்சவங்களுக்குத்தான் இன்னைக்கு சோதிடம் பார்க்குறாரு, நீங்க பேரை பதியாததாலே இன்னைக்குப் பார்க்க முடியாது. போயிட்டு அடுத்த வாரம் வாங்க.’’

“தம்பி, கோபிச்சுக்காதீங்க. எனக்கு இந்த விபரம் தெரியாது. வேறு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுப்பா.’’

“வேனுன்னா ஒன்று பண்ணுங்க. நீங்க வேனும்னா, இங்க எங்காவது ரூம் எடுத்துத் தங்குங்க. நாளைக்குப் பத்து மணிக்கு மேல வாங்க. பார்ப்போம். இந்தாங்க. இந்த லாட்ஜ்ல தங்குங்க. வசதியா இருக்கும்’’ என்று லாட்ஜ் விசிட்டிங் கார்டை ரகுபதியிடம் ஏகாம்பரம் கொடுத்தான்.

“சரி, தங்குறேன். எனக்கு சோதிடம் பார்க்க நீதான் ஏற்பாடு செய்யணும்’’ என்று பரிவுடன் ரகுபதி கேட்க.
ஏசன்ட் ஏகாம்பரம், “சார், நீங்க ஒன்றும் பயப்படாதீங்க. நாளைக்கு சோதிடம் பார்க்க நான் ஏற்பாடு செய்றேன். பயப்படாம போங்க. ரூம்ல தங்கி ரெஸ்ட் எடுங்க’’ என்று பல்லைக் காட்டியவாறே சிரித்தான்.

ரகுபதியும், அவனது அங்க அசைவுகளைப் புரிந்துகொண்டு, அய்ம்பது ரூபாய் நோட்டை எடுத்து ஏகாம்பரத்திடம் நீட்டினான்.

ஏகாம்பரம் பதிலுக்கு, “நிச்சயமா எங்க பாஸ நீங்க நாளைக்குப் பார்த்துடலாம்’’ என்றான்.

ஏகாம்பரம் கொடுத்த விசிட்டிங் கார்டில் உள்ள லாட்ஜில் ரகுபதி அறை எடுத்து தங்கிக் கொண்டான். லாட்ஜ் வசதியாக இருந்ததால், ஏகாம்பரத்தின் மீது ரகுபதிக்கு ஒரு நம்பிக்கை வந்தது.

ரகுபதிக்கு, ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தாலும், சோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. இந்த சோதிடர் பிரமாதமாகச் சொல்கிறார், என்று அவனது நண்பன் சொன்னதால், அப்படி என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளத்தான் இங்கு வந்திருக்கிறான். அதுவும் சோதிடர் தன்னிடம் சோதிடம் பார்க்க வருபவர்களின் பெயர், முகவரி மற்றும் குடும்ப விபரங்களை சொல்கிறார் என்று கேள்விப்பட்டுத்தான் ரகுபதி வந்திருந்தான். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விக்குறியும் ரகுபதியின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

இரவு டிபன் சாப்பிட்டுவிட்டு, உறங்கியவன் மறுநாள் காலை, எழுந்து குளித்து முடித்து காலை உணவையும் முடித்துக் கொண்டு ஏசண்ட் ஏகாம்பரத்தை கைபேசியில் தொடர்பு கொண்டான்.

ஏகாம்பரமும், “சார்… புறப்பட்டு வாங்க… உங்களுக்கு, சாருகிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டேன். காலை 9.00 மணிக்கே, நீங்க பார்த்துடலாம்.’’

“இதோ புறப்பட்டுட்டன்…’’ என்று ரகுபதியும் லாட்ஜ் அறையைக் காலி செய்துவிட்டு, சூட்கேஸை எடுத்துக்கொண்டு பரமசிவம் ஜோதிட நிலையத்துக்குப் புறப்பட்டு வந்தான்.

சோதிடர் பரமசிவத்திடம், ரகுபதியைக் காட்டி, “இவர்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறார். நேத்தியே இங்க வந்துட்டார். அப்பாயிண்ட்மெண்ட் இல்லாததால் நேத்தி உங்களப் பார்க்க முடியல. உங்ககிட்ட மட்டும்தான் ஜோதிடம் பார்க்கணும்னு பிடிவாதமாக இருக்கார்.’’

“வணக்கம். வாங்க, இப்படி உட்காருங்க’’ என்று சிரித்த முகத்தோட சோதிடர் பரமசிவம் ரகுபதியை இருகரம் கூப்பி வரவேற்று உட்கார வைத்தார்.

“வணக்கம்ங்க…’’ என்று பதிலுக்கு ரகுபதியும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தவாறு, உட்கார்ந்தான். சோதிடம் பார்க்கும் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. அறையில் நறுமணம் மிகுந்திருந்தது.
“ஏகாம்பரம், சாரோட கைரேகையைப் பதிவு செய்து கொண்டாப்பா’’ பரமசிவம் ஏகாம்பரத்திற்குக் கட்டளையிட்டார்.

ஏகாம்பரம் ரகுபதியின் கைரேகை முழுவதையும் கறுப்புமை தடவி, ஒரு வெள்ளைத்தாளில் ஒத்தி எடுத்தான். “சார்… கைய, இந்தத் துணியில் துடைச்சிட்டு ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க’’ என்று சோபாசெட் ஒன்றை ரகுபதிக்குக் காண்பித்தான் ஏகாம்பரம்.

அடுத்தடுத்து ஒரு அரை மணி நேரத்தில் பத்து நபர்களுக்கு இது மாதிரி கைரேகை ஒத்தி எடுக்கும் வேலை நடைபெற்றது. இடையிடையே வந்திருந்தவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.

அப்படி, இப்படி என ஒரு மணிநேரம் கடந்துவிட்டது. சரியாக பனிரெண்டு மணிக்கு, “சார், வாங்க’’ என்று சோதிடர் பரமசிவம் ரகுபதியை அழைத்தார்.

“உட்காருங்க..’’. அறையில், பரமசிவமும், ரகுபதியும் மட்டுமே இருந்தனர்.

ரகுபதியின் கைரேகை பேப்பருடன், பரமசிவன் தரையில் சம்மனங்கட்டி அமர்ந்திருந்தார். எதிரே ரகுபதி அமர்ந்திருந்தான்.

“சார், உங்க பேரு, ‘ஆர்’ல ஆரம்பிக்கும். சென்னையிலிருந்து வந்திருக்கீங்க, சரிதானா?’’

“ம். சரி.’’

“நீங்க, ரியல் எஸ்டேட் பிசினஸ் பன்றீங்க. உங்க, ஒரே பையன் வெளிநாட்டுல வேலை பார்க்குறான். உங்க பொன்னு ஒன்று காலேஜ்ல படிச்சுட்டு இருக்கு. சரியா? உங்க பிசினஸ் ஏகமா போயிட்டிருக்கு. உங்களுக்கு எந்தக் குறையும் வராது. மனைவி மக்களோடு உங்க வாழ்க்கை ரொம்பவே நல்லா இருக்கு. உங்களுக்கு ஆடம்பரம் பிடிக்காது. தெய்வீக பலம் உங்ககிட்ட இருக்கு. உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொன்னமாரி உங்களோடு பேரு ரகுபதி. சரியா?’’ பரமசிவம், இப்படியெல்லாம் சொன்னதும் ரகுபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

“சோதிடர் நல்லா பவர்புல்லான ஆள்தான். நாமகூட சந்தேகப்பட்டோம்.’’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ரகுபதி. “ரொம்ப நன்றி சார், உங்க பீஸ்’’ என்றான்.

“ஏகாம்பரம், சாருகிட்ட பீஸ் வாங்கிட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பு’’ என்றார் பரமசிவம்.

ரகுபதியிடம், ஏகாம்பரம் அய்யாயிரம் பெற்றுக்கொண்டான். தனது செலவுக்கு ஆயிரமும் வாங்கிக் கொண்டான்.

“சார், எப்ப வேணாலும் நீங்க இங்க வரலாம். இங்க நான் எப்பவுமே இருப்பேன்’’ என்று ஏகாம்பரம், ரகுபதியிடம் தெரிவித்து அனுப்பி வைத்தான்.

“நான் புறப்படறேன்’’ என்று ரகுதியும், ஊருக்குப் புறப்பட்டுவிட்டான்.

அன்றிரவு, ஜோதிடர் பரமசிவமும் ஏசண்ட் ஏகாம்பரமும் பேசிக்கொண்டனர்.

“டேய் ஏகாம்பரம், எப்படிடா, அந்த ஆள்கிட்ட அவ்வளவு விபரத்தையும் சேகரிச்ச?’’

“அது ஒன்னுமில்லைன்னா, வழக்கம்போல நம்மளத் தேடி சோதிடம் பார்க்க வர்றவங்க, உங்க மச்சானோட லாட்ஜிலதான் தங்க வைப்போம். அதுமாதிரிதான் இந்த ரகுபதியையும், நம்ம லாட்ஜ்ல தங்க வைச்சு, அவரோட விலாசத்தோட மத்த விபரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்லி மேனேஜர்கிட்ட அட்வான்ஸா போன் பண்ணிச் சொல்லிட்டேன். லாட்ஜ்ல கொடுக்கிற விபரமெல்லாம், நம்மகிட்ட வந்து சேருதுன்னு யாருக்குத் தெரியப் போவுது.’’ என்றான் ஏகாம்பரம்.

சரி, சரி. வர்ற பார்ட்டிங்ககிட்ட எசகு, பிசகு பண்ணிடாமப் பார்த்து நடந்துக்குங்க. அப்புறம் நம்ம தொழிலுக்கே ஆபத்து வந்துடப் போவுது என்று சோதிடர் பரமசிவம் ஏசண்ட் ஏகாம்பரத்தை எச்சரிக்கை செய்தார்.

நன்னிலம் இளங்கோவன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *