ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 16-31

கே:    சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனநிலையிலும் பஞ்சமி மற்றும் உபரி நிலங்கள் உரியவர்களுக்குக் கிடைக்காதது ஏன்?

                – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

ப:    மனம் இருந்தால்தானே மார்க்கம் உண்டு. ஆட்சி அதிகாரம் உயர்ஜாதி என்ற வர்ணாசிரமப் பார்ப்பனர்களிடம் இருப்பதால் இத்தகைய அலட்சியப் போக்கு!

கே:    மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தும் இதுபோன்ற புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டுவராதது வெட்கப்படத் தக்கதல்லவா?

                – சி.தி.மணிகண்டன், பரனூர்

ப:    ஆம்; நிச்சயமாக _ வாக்கு வங்கிக்காக சமரசம் செய்த நிலை. எப்படியோ, சுயமரியாதைத் திருமணச் சட்டம் மற்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்  சட்டம் -_ தி.மு.க.வால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்.

கே:    ‘தேசியம்’, ‘பார்ப்பனியம்’ இவ்விரண்டிற்குமிடையே உள்ள தொடர்பு என்ன?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    ஒன்றுக்கே இரண்டு பெயர்கள். அவ்வளவே! ‘தேசியமயமாக்கப்பட்ட’ என்றால் ‘பார்ப்பன மயமான’ என்பதுதானே உரிய பொருள்? புரிகிறதா?

கே:    இரண்டு திராவிடக் கட்சிகளையும் (தி.மு.க., அ.தி.மு.க.) மூட்டை கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தால் தவிர, தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என, தமிழருவி மணியன் கூறியது குறித்து தங்கள் கருத்து?

                – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:    அத்தகைய “பச்சோந்தி’’ சந்தர்ப்பவாதிகளைப் பொருட்படுத்தி கேள்விகேட்டு, எனது நேரத்தை வீணாக்காதீர்கள் _ தயவு செய்து!

கே:    ‘தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நேர்மையாக நடக்க வாய்ப்புள்ளதா?

    – ம.வேல்விழி, காஞ்சி

ப:    அவர் டெல்லியால்தான் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்; அடுத்து அவர் பா.ஜ.க.வில் இருந்து வந்துள்ளவர்! பின் எப்படி…?

கே:    ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில் தசரா பண்டிகையை முன்னிட்டு பஜ்ரங்தள் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

    – பெ.குமரவேல், மதுரை

ப:    எரியும் நெருப்பை அணைப்பதை விட்டுவிட்டு அதற்கு நெய்யூற்றும் அதிபுத்திசாலித்தனம் இது! தேவையற்ற ‘சீண்டல்கள்’ ஆகும்!

கே:       நடிகர் கமலகாசனின் ஒவ்வொரு பேச்சும் அரைவேக்காட்டின் அடையாளங்களா? அல்லது பூணூல் பாசத்தின் மோசடிகளா?

    – வே.சத்திநாதன், நாமக்கல்

ப:    சர்க்கரைப்பூச்சு பூசிய வழவழாகொழகொழா பேச்சுகள்! அவரது அடையாளத்தை நாடு விரைவில் காணுவது உறுதி! நடிப்பு வேறு; அரசியல் வேறு!

கே:    சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி, முதுகலைப் படிப்புகளுக்கு இந்தி விருப்பப் பாடமாக, வரும் கல்வியாண்டு முதல் இருக்கும் என்று அறிவித்துள்ளதன் பின்னணி என்ன?

    – அய்ன்ஸ்டின் விஜய், சோழன்குறிச்சி

ப:    சென்னைப் பல்கலைக்கழகம் _ தமிழ்நாடு அரசினால் மான்யம் அளிக்கப்படும் (அரசு சார்புடைய) பல்கலைக்கழகம். தமிழ்நாடு அரசின் கொள்கை ‘இருமொழிக் கொள்கை’ என்பதை ஏனோ அவர் மறுத்து இந்த தேவையற்ற விபரீத விளையாட்டில் ஈடுபடுகிறார் என்பது நமக்குப் புரியவில்லை. யாரைத் திருப்திப்படுத்த இம்முயற்சியோ?

கே:    தி.க.வோடு இணைந்து சமூகநீதிக்காக போராடிவரும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களின் பேச்சுகளை, “கூட்டணி உளரல்கள்’’ என்று விமர்சிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளின் வயிற்றெரிச்சல் பற்றித் தங்கள் கருத்து என்ன?

    – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    தங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளதே! ‘பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல்’ என்பது மூக்கும் சளியும் போல!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *