சாதி மறுத்து மணம் புரிவோர்க்கு சரியான பாதுகாப்பு வேண்டும்!

அக்டோபர் 16-31

 

 

இதுவரை தமிழ்நாட்டில் _ அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் _ அண்மைக் காலத்தில் ஜாதி வெறி காரணமாக 82 ஆணவக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது வேதனையோடு வெட்கப்படவேண்டிய செயலாகும்.

இத்தகு கொலைகளைத் தடுக்கவும், சாதி மறுத்து மணப்போரைப் பாதுகாக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் ஆணைகளைப் பிறப்பித்தார்.

1.    ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்மாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர்பற்றிய பாதுகாப்பு முதலியன தருவதற்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படல் வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வோர் புகார் கொடுத்தால், அதன்மீது உடனடியாக விரைந்து செயல்படவேண்டும்.

2.    இதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்டச் சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெற வேண்டும்.

3.    கொலை மிரட்டலுக்குப் பயந்து தப்பி வருவோரைப் பாதுகாப்பதற்கென ஒரு தனி நிதியே (திuஸீபீ) ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை அப்படி தனியே வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களை காப்பதற்கென தனிக் காப்பகம் _ குடில் அமைப்பதற்கும், அவர்களது புதுவாழ்வு, புனர்வாழ்வு அமைவதற்கும் செலவிடப்படல் வேண்டும்.

4.    24 மணிநேரமும் தொடர்புகொள்ளக் கூடிய உதவிக்கரம் ஒன்றை உருவாக்கி, வரும் புகார்களைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும், அறிவுரை, ஆலோசனை வழங்குதல் வேண்டும்.

5.    ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய அதிகாரி அந்த ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பாதுகாப்புத் தருதல்வேண்டும்.

6.    தனிப் பிரிவுக்குத் தரப்பட்ட புகார்கள் உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

7.    எல்லாக் காவல் நிலையங்களிலும் மின்தொடர்பு Electronically through the crime and criminal Tracking Network and system (CCTNS) முதலியவற்றை தானே இயங்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8.    சம்பந்தப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைத் தேடி அலைவோரையும் கண்டறிந்து, தடுத்தல், பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை (கவுன்சிலிங்) அளிப்பது.

9.    எந்த அசம்பாவிதங்கள் நடை பெற்றாலும் அதற்குக் காவல்துறை அதிகாரிகளையே பொறுப்பாக்குவதோடு, அவர்கள் இக்கடமைகளிலிருந்து தவறினால், அதை மிகப்பெரிய ஒழுக்கத் தவறான நடத்தை என்று அறிவித்து அவ்வதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலாதேவியின் கணவர் திலீப் குமார் சமூக அமைப்புகளின் ஆதரவோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்றும், இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென்றும் 2015 ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.

மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூக நல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்புத் தனிப்பிரிவு செயல்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்தத் தனிப்பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கலப்புத் திருமணம் செய்பவர்கள் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கும் புகாரை விசாரிக்க குற்றப்ரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கலப்புத் திருமணம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்க 0452-2346302 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தமிழக அரசும், காவல் துறையும் முன்னுரிமையும் அதிக அக்கறையும் காட்டி விரைந்து, இவற்றை நிறைவேற்ற வேண்டும். கொலைக்குற்றம் புரிவோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

 – நேயன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *