மோடி அரசின் பெரும் சாதனைகளில் ஒன்றாக அகமதாபாத் _ மும்பை அதிவேக ஜப்பானிய புல்லெட் ரயில் விடும் திட்டம் _ பல லட்சம் கோடி கடன் திட்டத்தில் ஜப்பானுடன் ஒப்பந்தம் கையொப்ப மிடப்பட்டுள்ளது!
நாட்டில் இன்னமும் அறிவிக்கப்பட்டு செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய இரயில் இணைப்புகள் திட்டங்கள் ஏராளம். அது மட்டுமா?
ஏற்கனவே உள்ள இரயில்துறை நட்டத்தில் இயங்குகிறது! _ கட்டணங்களை உயர்த்தியும்கூட.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயல்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் காலத்தில் ரயில்வே பட்ஜெட்டிலிருந்து பொதுபட்ஜெட்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி லாபத்தைத் தரும் அளவுக்கு சிறப்பாக நடத்திக் காட்டினார்!
சரக்கு ரயில் கட்டணம் தவிர, எந்தக் கட்டண உயர்வும் அவரது காலத்தில் கிடையாது. ஏராளமான புதிய வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் திட்டங்களைச் செய்தார். ஏழை, எளிய சுமைதூக்கும் பாட்டாளிகளை இரயில்வே ஊழியராகவே ஆக்கி வரலாறு படைத்தார்!
ஹார்வேர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை லாலுவை அழைத்து இந்த மாற்றம் _ ரயில்வேத் துறை வெற்றி பற்றி விளக்கிப் பேசிடக் கேட்டு மகிழ்ந்து, வியந்தனர்!
ஆனால், இப்போது மோடி ஆட்சியில் முதல் நாள் சிவசேனையிலிருந்து விலகி அடுத்த நாள் பா.ஜ.க.வில் சேர்ந்த சுரேஷ் பிரபுவை ரயில்வே அமைச்சராக்கினார்கள்.
அவரது அறிவிப்புகள்தான் அபாரம்! செயலில் அவரது தோல்வியை அவரே ஒப்புக்கொண்டு பதவி விலகல் கடிதம் தந்த நிலை கண்கூடு!
பிறகு, “வாலு போச்சு; கத்தி வந்தது டும் டும்’’ என்பதுபோல, இப்போது மோடியின் உள்ளார்ந்த வட்ட அமைச்சர் ஒருவரை _ ஆர்.எஸ்.எஸ்.காரரை ரயில்வே அமைச்சராக்கி உள்ளார்!
இந்தப் புல்லட் ரயில் இப்போதைக்குத் தேவையா? விரைவு ரயில் வந்தால், வளர்ச்சி தானே பெருகும்; வியாபாரிகள் அவசரமாகப் பயணித்துச் சென்றால் வாணிபம் பெருகாதா என்று சிலர் மோடி மொழியில் கேட்கக் கூடும்.
அதற்குதான் விமானப் பயணம் _ அதுவும் ரயில் டிக்கெட்டைவிட மலிவாக (Cost Effective) கிடைக்கும்
நிலை உள்ளதே! வசதியானவர்கள் அதில் பயணம் செய்தால் நேரம், கட்டணம் எல்லாம் புல்லட் ரயிலைவிட குறைவுதானே? இதுபற்றி யோசித்தார்களா?
சாமானிய மக்கள் பயண வசதிகளை அதிகப்படுத்தினால் _ ரயில் பெட்டி கழிப்பறைகளில்கூட இன்னமும் முதல் ஏசி வகுப்பில்கூட, சங்கிலிபோட்டுக் கட்டிய குவளைதான்!
அவ்வளவு அறிவு நாணயம் மிதக்கும் பாரதநாடு இது!
இம்மாதிரி எளிய மக்கள் வாழ்வு, பயணத்திற்கு ஏராளம் வசதி செய்வதை விட்டு இப்படி ‘புல்லட்’ ரயிலை விடுவோம் என்றால், அது கட்டை வண்டி பொருளாதாரத்தை ‘ரோல்ஸ்ராய்ஸ்’ அரசாங்கமாக நடத்தும் கூத்தாகவே முடியுமே தவிர வேறு இல்லை!
பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம்; புதிய வேலைவாய்ப்புகள் 2 கோடி பேருக்குத் தருவோம் என்று கூறிய வாக்குறுதிகள் காற்றில்.
பழைய (அய்.டி) வேலைவாய்ப்புகளேகூட இழப்பு. பல பொறியியல் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் மூடிடும் பெருமையான(?) வளர்ச்சி.
இந்நிலையில் புல்லட் ரயில் திட்டங்கள் ஒப்பந்தங்கள் என்றால் இந்தக் கடன்சுமை, இப்போதைய தலைமுறையையும் தாண்டி, வரும் தலைமுறைகளின் தலையிலும் விழுமே! இதுபற்றி யோசித்தது உண்டா?
– கி.வீரமணி,
ஆசிரியர்.