நான் உண்மை பத்திரிகை வாங்கிப் படித்து வருகின்றேன். கேள்வி-_பதில் பகுதி சிறப்பாக உள்ளது. சில கட்டுரைகள் மெய்மறக்கச் செய்கின்றன.
மேலும், நீங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது நானும் தாவரவியல் (Botany) படித்துக் கொண்டிருந்தேன்.
கோகலே ஹாலில் நீங்கள் பேசும் பொழுதெல்லாம் ஹாலே மாணவர்களால் நிரம்பி வழியும்.
திரு. அண்ணா அவர்களை விடுதி ஆண்டு விழாவிற்கு (Hostel Day) வரவழைத்து மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது பேச்சாற்றலைக் கேட்க வழி வகுத்தவரும் நீங்களே.
தந்தை பெரியாரைக் கண்டு மகிழவும், அவரது பேச்சைக் கேட்டு இன்புறவும் (சிதம்பரம் பஸ் ஸ்டாண்டு அருகில் பேசினார்கள்) வழிவகுத்துத் தந்தவரும் நீங்களே. அய்யா அவர்களின் பேச்சில் பெரிதும் கவரும் வார்த்தை வெங்காயம். இதை மறக்க முடியுமா?
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மக்க-ளுக்குப் பணிபுரிய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கின்றேன். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.
இ. வஜ்ரவேலு, கோவை – 2
உண்மை ஜூலை 1-15, 2011 படித்தேன். ஆர்.எஸ்.எஸ்., புதுடில்லியில் கல்வி வள்ளல் காமராசர் அவர்களை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து உயிரோடு கொளுத்தத் திட்டம் போட்டது என்ற பயங்கரமான செய்தி மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அய்.நா. விசாரணை அவசியம் என்று இங்கிலாந்து அரசு வற்புறுத்துகிறது.
இந்தியா…. ?
காமராசர் அவர்களின் சிந்தனைத் துளிகளை என் ஏட்டில் எழுதி வைத்திருக்கிறேன்.
பெரியாரை அறிவோமா? அறிந்துகொள்ள முடிகிறது.
அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்த் அவர்கள் தனது மகனையும் மகளையும் உதவிப் பேராசிரியர்களாகத் தேர்வு செய்துவிட்டு அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று சொல்கிறார்.
அப்படியானால் அந்தப் பிள்ளைகளின் அப்பா யார்?
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
உண்மை இதழில் ராம்தேவின் உண்மை விவரங்கள் அறிந்தேன். யோகா குறித்து திரு. திக்விஜய் சிங் அவர்களின் கூற்று முற்றிலும் உண்மையே.
யோகா என்ற பதத்தைப் பயன்படுத்தத் தகுதியற்ற பலர் யோகா விற்பனையில் ஈடுபட்டு பொதுமக்களின் பொருள், காலம் சிந்தனைத் திறன் இவற்றைச் சுரண்டுகிறார்கள் என்ற உண்மையை, உண்மை பத்திரிகையின் மூலமாக நிரூபிக்க வேண்டுகிறேன்.
ஆர். பத்மதாஸ் உண்மை ஆகஸ்ட் 1_15, 2011 படித்தேன். ஓ – அமெரிக்காவில் நிறவெறிப் போராட்ட வெற்றிகள், ஆசிரியருக்கு ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூக நீதி விருது, உலகப் பகுத்தறிவாளர் புதிய மாந்தநேயர் கிரெக் எப்ஸ்டின் அனைத்தும் சிறப்பாக இருந்தன. அன்புடன் பாராட்டுகிறேன். நன்றி! வணக்கம்.
எஸ். சதாசிவம், அமெரிக்கா
(மின்னஞ்சல் மடல்)