அறியலுக்கு அடிப்படை இந்துமதமா?

செப்டம்பர் 16-30

மனித முதுகில் பள்ளம் ஏன்?

மனிதர்களின் முதுகில் பள்ளம் இருப்பதை எல்லோரும் அறிவர். இந்தப் பள்ளம் ஏன்? இந்து மதம் கூறும் காரணம் என்ன தெரியுமா?

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அதன் கரைகள் பல இடங்களிலும் உடைந்து, ஆற்று நீர் வெள்ளமாக வெளியேறியது.

வெள்ளம் வடிந்தபின் அந்த உடைப்புகளை அடைக்க அரசன், வீட்டுக்கு ஓர் ஆள் கட்டாயம் வரும்படி ஆணையிட்டான்.

வந்தி என்ற புட்டு விற்கும் கிழவி வீட்டில் வேறு யாரும் இல்லை. அவள் மட்டுமே. எனவே, தன் பங்குக்கு அனுப்ப ஆள் இல்லாமல் தவித்தாள். அப்போது ஒரு கூலியாள் அங்குவர,
 
“அப்பா… என் குடும்பத்து ஆளாய் நீ செல்கிறாயா?’’ என்று கேட்டாள்.

“எனக்கு வயிற்றுக்குச் சாப்பிட புட்டு தந்தால் போகிறேன்’’ என்றான் அந்த ஆள்.

உடனே, கிழவி ஒரு தட்டு நிறைய புட்டு கொண்டு வந்து கொடுக்க, அதை அந்த ஆள் வாங்கி துணியில் முடிந்துகொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றான்.

அங்கு ஒரு மரத்து நிழலில் அமர்ந்து புட்டை வயிறு புடைக்கத் தின்றுவிட்டு அப்படியே மரத்து நிழலில் படுத்து உறங்கிவிட்டான்.

பணியைப் பார்வையிட வந்த மன்னன், இவன் வேலை செய்யாது படுத்து உறங்குவதைப் பார்த்து, கோபங்கொண்டு, தன் கையில் இருந்த பிரம்பால் அந்த ஆள் முதுகில் ஓங்கி அடித்தான்.

வேலையாளாக வந்தவன் சிவபெருமான் என்பதால் அவன் முதுகில் விழுந்த அடி அரசன் முதுகிலும் விழுந்தது. அங்கிருந்த அனைவர் முதுகிலும் விழுந்தது. உலகில் உள்ள அனைவர் முதுகிலும் விழுந்தது. அதனால்தான் மனித முதுகில் பள்ளம் வந்தது என்கிறது இந்து மதம். இது அறிவியலா?

ஒருவர் முதுகில் அடி விழுந்தால் அது உலகிலுள்ள அனைவர் முதுகிலும் எப்படி விழும்? இன்னும் சொல்லப்போனால், கருவிலுள்ள குழந்தையின் முதுகிலும் விழுந்தது என்கிறது இந்து மதம். இதெல்லாம் அறிவியலுக்கு உகந்த கருத்தா?

மேலும், சிவபெருமான் முதுகில் மன்னன் அடிப்பதற்கு முன் மனிதர்களின் முதுகில் பள்ளம் இல்லையா?
அதற்கு முன்னும் மனித முதுகில் பள்ளம் இருந்தது என்பதுதானே உண்மை?

அது மட்டுமல்லாமல் அந்த அடி அப்போது இருந்த மனிதர்களுக்கு விழுந்து முதுகில் பள்ளம் வந்தது என்றால், அதற்குப் பின்னாளில் கருவுற்று உருவான மனிதர்களின் முதுகில் எப்படி பள்ளம் வந்தது? காரணம் கூற முடியுமா? கற்பனைப் புராணங்களையெல்லாம் அறிவியலுக்கு அடிப்படை என்பது முட்டாள்தனமல்லவா?

குரங்குக்கு முகம் சிவப்பாய் இருப்பது ஏன்?

குரங்கின் முகம் சிவந்திருப்பதற்கு இந்து மதம் கூறும் காரணம் என்ன தெரியுமா?

ஒரு நாள் அனுமன் காலை நேரத்தில் கிழக்கு நோக்கிப் பார்க்கிறான். அப்போது சூரியன் செந்நிறத்தில் தெரிய, அதைக் கனிந்த பழம் என்று எண்ணி அதைக் கவ்விக் கடிக்கப் பாய்கிறான். அப்போது சூரியன் அவனது கன்னத்தில் சுட கன்னம் வெந்து சிவக்கிறது.

அதன் பின் குரங்குகளுக்கு எல்லாம் முகம் சிவந்துவிட்டது என்கிறது இந்து மதம்.

சூரியன் 9 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. அது ஓர் நெருப்பு உருண்டை. அதன் மீது குரங்கு பாய முடியுமா? பாய்ந்தாலும் முகம் மட்டும்தான் வெந்து போகுமா? குரங்கே சாம்பலாகாதா? ஒரு சாதாரண அறிவியல் அறிவுகூட இல்லாத முட்டாள்தனமான மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

தொட்டில் குழந்தை கதிரவனைக் கட்டிப் போடுமா?

பானுகோபன் என்பவன் சூரபதுமனின் பிள்ளை. அவனுக்கு எப்படி பானுகோபன் என்று பெயர் வந்தது என்று இந்து மதம் கூறுகிறது தெரியுமா?

பானுகோபன் குழந்தையாய் தொட்டிலில் படுத்திருந்தபோது, அவனது முகத்தில் சூரிய வெளிச்சம் பட, அவன் கண்கள் கூசின. உடனே அக்குழந்தை சூரியன் மீது கோபம் கொண்டு பாய்ந்து பிடித்து வந்து தன் தொட்டிலில் கட்டி விட்டதாம்.

பானு என்றால் சூரியன். சூரியன் மீது கோபம் கொண்டு பாய்ந்ததால் அவனுக்குப் பானுகோபன் என்ற பெயர் வந்ததாய் இந்து மதம் கூறுகிறது.

தொட்டில் குழந்தை எப்படிப் பாயும்? அதுவும் 9 கோடி மைல் தூரம் எப்படிப் பாயும்? சூரியன் எரித்துச் சாம்பலாக்கி விடாதா? அதை கொண்டு வந்து தொட்டிலில் கட்டினான் என்றால் எப்படி சாத்தியம்? சூரியன் பூமியைப் போல பல மடங்கு பெரியது. அப்படியிருக்கையில் அதை வீட்டுக்குள் கொண்டுவந்து எப்படிக் கட்ட முடியும்? இப்படி அறிவுக்கு ஒவ்வாத கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

அணில் முதுகில் கோடுகள் ஏன்?

இராமன் இலங்கைக்குச் செல்ல கடலில் அணை கட்டியபோது, அணில் தன் பங்குக்கு முதுகில் மண் சுமந்து வந்து கடலில் போட்டதாம். அதைக் கண்ட இராமன் அதன் முதுகில் தடவிக் கொடுக்க, அதனால் அணில் முதுகில் கோடுகள் வந்தன என்கிறது இந்து மதம்? இதுதான் அறிவியலா?

இராமன் தடவுவதற்கு முன் அணிலுக்கு முதுகில் கோடுகள் இல்லையா? அப்படியே இராமன் தடவியதால் கோடுகள் வந்தால் அந்த அணிலுக்குத் தானே வரமுடியும்? உலகிலுள்ள அணில்களுக்கெல்லாம் எப்படி கோடுகள் வரமுடியும்? கொஞ்சம்கூட அறிவுக்கு ஏற்பில்லாத கற்பனைகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருகிறாரா?

சூரியன் தேரில் காலையில் கிழக்கில் புறப்பட்டு மாலை மேற்கில் மறைந்து மீண்டும் காலையில் கிழக்கில் புறப்படுகிறார் என்கிறது இந்து மதம்.

தேர் என்பது வானத்தில் பறப்பதாயும், அது குதிரைகளால் இழுக்கப்படுவதாயும் சொல்கிறது இந்து மதம்.
குதிரைகளால் இழுக்கப்படும் தேர் நிலத்தில் அல்லவா செல்ல வேண்டும். வானத்தில் எப்படிச் செல்ல முடியும்? ஆகாயத்தில் பறக்கும் தேருக்கு குதிரைகள் எதற்கு?

தேரில் சூரியன் வந்தால் தேரும், இழுக்கும் குதிரையும் பொசுங்கிச் சாம்பலாகிவிடாதா?

சூரியன் பூமியைப் போல பல மடங்கு பெரியது என்னும்போது, அது எப்படி தேரில் அமர்ந்து வரமுடியும்? ஏழு குதிரைகள் எப்படி இழுக்க முடியும்? இதில் எதுவுமே அறிவுக்கு உகந்த செய்தியாக இல்லை. எல்லாம் முட்டாள்தனமான செய்திகள். அப்படியிருக்க இப்படிக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படை?

(சொடுக்குவோம்)

– சிகரம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *