Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உதவிடுவோம்! மகிழ்ந்திடுவோம்!

குடங்குடமாய் பாலெடுத்து
குழவிக்கல்லுக்கு ஊத்துறீங்க!
குடிக்கப்பாலு கிடைச்சிடாம
குடிசைப்பிஞ்சு அழுவுதுங்க!

விதவிதமாய் படையலிட்டு
வெறுங்கல்லுக்கு படைக்கிறீங்க!
வெறும்வயித்த பிசைஞ்சிக்கிட்டு
வெகுசனங்க துடிக்குதுங்க!

மலர்கள்சூட்டி நகைகள்பூட்டி
மாரியம்மன வணங்குறீங்க!
மணமாகாத ஏழைக்கன்னிகள்
மனசுவெடிச்சு தவிக்குதுங்க!

வரியைப்போட்டு நிதியைச்சேர்த்து
வகையாய்கோயில் கட்டுறீங்க!
வசதியில்லை குடிசைக்கட்ட
வறியமக்கள் வாடுதுங்க!

தேவையில்லா வேலையெல்லாம்
தேடியோடி செய்யாதீங்க – இல்லாத
தேவலோகம் சொர்க்கலோகம்
தேடினாலும் கிட்டாதுங்க!

கடவுள்கடவுள்’னு சொல்லிக்கிட்டு
கண்டதெல்லாம் பண்ணாதீங்க!
கஷ்டப்படுற மக்களுக்குதவி
கண்ணியமா வாழ்ந்துடுங்க!

– தமிழோவியன், கடலூர்

தீந்தமிழர் கண்விழிக்கப் பெரியார் வந்தார்!

எத்துணையோ மதக்குரவர் இருந்தார் இங்கே
    என்றாலும் தீண்டாமை ஒழிய வில்லை!

எத்துணையோ கற்றவர்கள் வாழ்ந்தார் இங்கே
    என்றாலும் அறியாமை நீங்க வில்லை!

எத்துணையோ அறநெறியார் உரைத்தா ரிங்கே
    என்றாலும் இங்குள்ளோர் எழவே இல்லை!

தித்திக்கும் திராவிடத்துப் பெரியார் வந்தார்!

    தீந்தமிழர் கண்விழித்தார்! வாழ்வில் வென்றார்!

– புலவர் பெ.செயராமன், கல்லக்குறிச்சி