“அனிதா’’ -_ அனைவர் மனதிலும் அண்மையில் ஆழமாய்ப் பதிந்த பெயர். அனுதாபத்தாலல்ல, அளவு கடந்த பாசத்தால், அவர் செய்த தியாகத்தின் மீதான மதிப்பால்!
தொடக்கப் பள்ளியில் அவர் பயின்ற காலந்தொட்டே மருத்துவர் ஆகவேண்டும் என்ற இலக்கை ஏக்கமாகவே கொண்டு, அதற்காகவே அவர் ஒவ்வொரு நாளும் அளவற்று உழைத்தார். மருத்துவர் ஆவதற்குரிய மதிப்பெண்களையும் பெற்றார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், தனக்குரிய இடஒதுக்கீடுகூட தேவையில்லாமல், பொதுப் போட்டியிலே மருத்துவராய் தேர்வு பெறும் அளவிற்கு 196.75 கட்ஆப் மதிப்பெண் பெற்று சாதித்திருந்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், மூட்டைத் தூக்கிப் பிழைக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் இதைச் சாதிப்பது என்பது எளிதன்று.
அவர் முப்பெரும் தடைகளை மோதித் தகர்த்தே இதைச் சாதித்திருக்கிறார்.
ஜாதிப் பின்னிலை, வறுமை, பெண்மை என்ற மூன்று தடைகளையும் தாண்டி வென்றார்.
ஆதிக்கவாதிகள் ‘நீட்’ என்ற மோசடி மூலம் அனிதாவின் சாதனைகள் அனைத்தையும் செல்லாக் காசாக்கினர். மருத்துவப் படிப்பிற்கு முதல் நிலைத் தகுதி பெற்றிருந்த ஒரு பெண்ணை மருத்துவப் படிப்பிற்கே தகுதியில்லை என்று ஒதுக்கித் தள்ளினர்.
ஆரியப் பார்ப்பனர்களின் கையாளாய் நின்று, அவர்களின் ஆதிக்கத்தை ஒவ்வொன்றாய் அமுல்படுத்திவரும் மோடியின் மத்திய அரசு, உயர்ஜாதிக்காரர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சாதகமான சட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதற்கு உச்சநீதி மன்றமும் தொடர்ந்து துணை நின்று வருகிறது.
மதவாத பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ்.சின் அடித்தளத்தில் இயங்குவதால், ஆரியப் பார்ப்பன சனாதனக் கொள்கைகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. மக்களின் எழுச்சிகளை உச்சநீதிமன்றத்தின் உதவியோடு, தகர்த்து தான் நினைப்பதைச் சாதித்து வருகிறது.
இதற்கு ‘நீட்’ தேர்வு செயல்படுத்தப்பட்ட அணுகுமுறையே நல்ல எடுத்துக்காட்டு. கீழ்க்கண்ட கேள்விகள் உண்மைகளை இழுத்து வெளிக்கொண்டு வர உதவும்.
மருத்துவம் படிக்கத் தகுதியானவர்களைக் கண்டறிய ‘நீட்’ தேர்வு தகுதித் தேர்வாக நடத்துகிறார்கள்.
இதுபற்றி முதல் கேள்வி; முக்கியமான கேள்வி:
மருத்துவம் படிக்கத் தகுதியான மாணவர்களைக் கண்டறிய ‘நீட்’ தேர்வு சரியான முறை என்பதை எந்த ஆய்வின் மூலம் அல்லது எந்த விவாதத்தின் மூலம், அல்லது எந்த மருத்துவ வல்லுனர்களின் பரிந்துரையின்படி உறுதி செய்தார்கள்?
இரண்டாவது கேள்வி:
மருத்துவத் தகுதித் தேர்வுக்கு சிபிஎஸ்சி பாடத் திட்டம்தான் சரியானது, மாநிலத்தில் உள்ள சமச்சீர் பாடத் திட்டம் அல்லது மற்ற பாடத் திட்டங்கள் சரியில்லை என்று எந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தார்கள்?
மூன்றாவது கேள்வி:
வேறு வேறு பாடத் திட்டங்கள் இந்தியா முழுக்க நடப்பில் உள்ள நிலையில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டும் தேர்வு நடத்தி, கேள்விகள் கேட்கப்பட்டால் மற்றப் பாடத்திட்டத்தில் மட்டும் பயின்ற மாணவர்களால் எப்படி அக்கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியும்?
நான்காவது கேள்வி:
நாடு முழுக்க ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு, மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்களைத் தயாரித்து வழங்கியது ஏன்? குறிப்பாக தமிழ் மொழியில் கடினமான வினாத்தாளும், குஜராத்தி மொழியில் எளிமையான வினாத்தாளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது ஏன்?
அய்ந்தாவது கேள்வி:
12 வருடங்கள் படித்துப் பெற்ற கல்வி அறிவை அறவே புறக்கணித்துவிட்டு, ஒரு சில வாரங்கள் ‘நீட்’ தேர்வு பயிற்சியால் பெற்ற அறிவின் அடிப்படையில் மட்டும் ‘நீட்’ தேர்வு நடத்துவது எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? அப்பயிற்சியில் கூறப்படும் செய்திகள்தான் மருத்துவருக்கான தகுதியைத் தீர்மானிக்கும் என்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டதா?
ஆறாவது கேள்வி:
‘நீட்’ தேர்வு பயிற்சி நகர்ப்புறத்தில் உள்ள வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் கிராமப்புற ஏழை மாணவர்கள் எப்படிப் பயிற்சி பெற முடியும்? எப்படித் தேர்வை எழுத முடியும்?
ஏழாவது கேள்வி:
நாடு முழுக்க ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு, பாண்டி ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களித்தது ஏன்? அது சரியா? நியாயமா? நேர்மையா? நீதியா?
எட்டாவது கேள்வி:
சென்ற ஆண்டு விலக்கு அளித்த மத்திய அரசு, இந்த ஆண்டு விலக்கு அளிக்க உறுதி கூறிவிட்டு பின் ‘பல்டி’ அடித்து மறுத்தது பச்சைத் துரோகம், அநியாயம், அக்கிரமம் அல்லவா? தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பது சிக்கலை உருவாக்கும் என்றால் சென்ற ஆண்டு விலக்கு அளித்தது எப்படி? இது கடைந்தெடுத்த சந்தப்பவாதம் அல்லவா?
ஒன்பதாவது கேள்வி:
உச்சநீதிமன்றம் நீட் பிரச்சினையில் உயர்நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறி, ஆதிக்க உணர்வோடு, தான் மட்டுமே வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறியது ஏன்?
மதுரை உயர்நீதிமன்றம் எழுப்பிய நியாயமான கேள்விகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்காமல் அவற்றை அறவே ஒதுக்கித் தள்ளியது ஏன்? அது எப்படி நீதியாகும்?
பத்தாவது கேள்வி:
‘கல்வி’ ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் போது, மாநிலத்தின் சட்டத்தினை அறவே புறக்கணித்து மத்திய அரசின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அநீதி அல்லவா? சட்டத்திற்கு எதிரானது அல்லவா?
மேற்கண்ட எதையும் பரிசீலிக்காமல் மத்திய அரசின் முடிவை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்லவா?
மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் இவற்றிற்கு பதில் அளிக்க வேண்டும்! பரிகாரம் காண வேண்டும்! இல்லையேல் உச்சநீதிமன்றத்தின் மீது மக்கள் அறவே நம்பிக்கை இழப்பர் என்பதோடு, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் அது கேட்டினை உருவாக்கும்.
மாநில உரிமைகளை அறவே பறித்து, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகளைத் தகர்க்கும் இந்த ஆதிக்க நிலை மக்கள் புரட்சிக்கே வழிவகுக்கும்! மாணவர்களின் போராட்டம், மக்கள் போராட்டமாக பரிணாமம் பெற்றுத் தீவிரமடையும். அப்படியொரு நிலை வந்து விலக்களிப்பதற்கு மாறாய் இப்போது விலக்களித்து மாநில உரிமையை, மாணவர் நலனைக் காப்பதே சரியாகும்!
காங்கிரஸ் கட்சி ஆட்சியில், ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டபோது, ‘நீட்’ தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையினை, ஆரிய ஆதிக்க பிஜேபி அரசு மாற்றி, எல்லா மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கியது ஏன்? இது சூத்திரர்களை உருவாக்கும் சூழ்ச்சியல்லவா?
அவ்வாறு கட்டாயமாக்கியது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது அல்லவா?
மத்திய அரசும், மாநில அரசும் செய்த தப்பிற்கு, குற்றத்திற்கு, சதிக்கு, மோசடிக்கு, அநீதிக்கு இலட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோவது எவ்வகையில் ஏற்புடையது?
1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று, கட் ஆப் மதிப்பெண் 196.75 பெற்ற தாழ்த்தப்பட்ட சமுதாய கிராமப்புற ஏழைப் பெண்ணுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டதை மனசாட்சியுள்ள யாராவது சரியென்பார்களா?
அப்பெண் உச்சநீதிமன்றத்திற்கே சென்று தன் நியாயங்களை, உரிமைகளை, நிலைகளை எடுத்துக்கூறிய பின்பும், அதை அறவே புறக்கணித்து, கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு வழக்கை மாநில அரசின் வாதத்தினை இறுதியாகக் கேட்காமல், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விரைவாக ஒருதலைப் பட்சமாக மத்திய அரசின் நிலைப்பாட்டை மட்டும் கேட்டு தீர்ப்புத் தருகிறார்கள் என்றால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உளச்சான்றும், நீதி மேலாண்மையும் கேள்விக்குரியதாகி மக்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டன என்பதே உண்மை!
‘நீட்’ தேர்வு என்ற சதித் தேர்வு இல்லையென்றால், இடஒதுக்கீடு கூடத் தேவையில்லாமல் பொதுப் போட்டியிலேயே மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகக் கூடிய உயர் தகுதிடைய தாழ்த்தப்பட்ட பெண் அனிதாவிற்கு ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்காது என்ற நிலையில் அவர், தன் இரத்தத்தால் கோரிக்கை எழுதி எல்லோருக்கும் அனுப்பி வைத்தார், பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு கொடுத்தார்.
இறுதியில் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டார். எதிலும் அவருக்கு நியாயம் கிடைக்காத நிலையில் 17 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்றதும் உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டாமா?
அப்பெண்ணின் நியாயமான, சட்டரீதியான, சமூக நீதியின்பாற்பட்ட உணர்வு ஓட்டங்கள் என்ன என்பதை பரிசீலிக்க முன்வர வேண்டாமா? இன்னும் எத்தனையோ தகுதியுள்ள மாணவர்கள் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டு அவர்களும் வாழ்வை வெறுக்கும் நிலை உள்ளபோது, தாங்கள் வழங்கிய தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டாமா?
தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் சார்ந்து விசாரித்து, மாநில அரசின் கல்வி உரிமையைக் காக்க வேண்டாமா?
நீதி வழங்க வேண்டிய உச்சநீதிமன்றமே, நியாயங்களை முழுமையாய்ப் பரிசீலிக்காமல், மாநிலப் பாடத்திட்டம் மூலம் பயின்று மதிப்பெண் பெற்றோருக்கும், ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் பெற்றோருக்கும் பாதிக்காத வகையில் மாநில அரசின் பரிந்துரையினை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தும், அதுபற்றிய அக்கறை ஏதுமின்றி தீர்ப்பு வழங்கினால் மக்கள் யாரிடம் சென்று நியாயம் பெற முடியும்?
அனிதா மூட்டிய அறத்தீ அழிக்க வேண்டிய அநியாயங்களை அழித்தே தீரும். அறத்திற்குப் புறம்பான ஆதிக்கம் செலுத்துவது மத்திய அரசாக இருப்பினும் உச்சநீதிமன்றமாக இருப்பினும், அந்த ஆதிக்கத்தை அனிதா மூட்டியுள்ள அறத்தீ அழித்தே தீரும்!
அனிதா தன் மூச்சைக் கொடுத்து சமூக நீதியின் உயிரைக் காத்திருக்கிறார்.
சமூகநீதியைக் காக்க, பெரியார் மண்ணில், தங்கள் உயிரைக் களத்தில் பலியிட ஆயிரக்கணக்கில் உள்ளனர் என்பதை ஆதிக்கவாதிகள் மனதில் கொள்ள வேண்டும்!
கல்வியை வணிக மயமாக்கி, ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழலும், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை, உரிமையைப் பறித்தால், அனிதா மூட்டிய அறத்தீ அணையாது; பற்றிப் படர்ந்து, அழிக்க வேண்டியவற்றை அழித்து சமூகநீதியை நிச்சயம் நிலைநாட்டும். மாணவர் எழுச்சியை, மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்க நினைத்தால், அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமையும்!
எனவே, மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் ‘நீட்’ தேர்வை மறுபரிசீலனை செய்து, விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களித்து சமூக நீதியையும், மாநில உரிமைகளையும், மாணவர்கள் நலனையும் காலம் தாழ்த்தாது காக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
ஆட்சி, சட்டம், திட்டம், நீதிமன்றங்கள் எல்லாம் மக்களுக்காகவே!
பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் என்பது, மக்களாட்சியில் மகத்தான சக்தியாகும். அதற்கு எதிராய் செய்யப்படும் எதுவும் மக்களாட்சித் தத்துவத்திற்குக் கேடானதாகும்.
இதுபோன்ற சிக்கல்களில் அரசை விட நீதிமன்றங்களே அதிகப் பொறுப்புடனும், நியாயத்துடனும், விழிப்புடனும் செயலாற்ற வேண்டும்!
எனவே, உச்சநீதிமன்றம் காலம் தாழ்த்தாது உடன் தமிழக மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்று தேர்வு பெற்ற மாணவர்களின் நியாயமான நிலைக்கு மதிப்பளித்து தீர்வு காண வேண்டியது அவசியம்! அவசரம்!